கீற்றில் தேட...

மாமனார் வீட்டிற்கு செல்லும் தருணங்களிளெல்லாம் பெரும்பாலும் அங்கே வாசலின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருக்கும் கடப்பாக்கல் திண்ணையில் அமராமல் எழுந்து வந்ததில்லை. தெருவின் மறுபுறம் கூட்டுறவு மற்றும் நியாய விலைக் கடைகளின் மிகப்பெரிய வளாகமென்பதால் சுற்றிலும் குத்துக் கல்லுக@ன்றி கம்பி வேலி போடப்பட்டிருக்கும். கேட்பாரற்று வளர்ந்து கனிந்து தொங்கும் பப்பாளி மரங்கள், காகிதப் பூச்செடிகள் , வேப்ப மற்றும் பூவரச மரங்கள், வேலியோரமாய் தேங்கிவிட்ட குப்பைகள், அதன் மேலே ஜன்னல் வழியாய் தூவிப்பட்ட டீக் கப்புகள், எல்லாம் தாண்டி வளாகத்தின் நினைவுச் சின்னமாய் கோபுரங்கள் சிதிலமடைய வர்ணங்கள் மங்கிய நிலையில் கையில் கம்புடன் தனிமையில் காந்தி சிலை.

திண்ணையில் அமர்ந்தபடி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். பகலென்றால் அவ்வழியே வரும் சிலர் “ரேசன்ல அரிசி போடுறாகளாய்யா.. பருப்பு போடுறாகளா..” என வினவுவதும், மண்ணெ;ணெய் டின்னுகளை கொஞ்ச நேரம் இருக்கட்டுமென வைத்துவிட்டுப் போவதுமுன்டு.

இந்தப்புறமான வீட்டின் பக்கவாட்டிலே வாசலின் இருமறுங்கிலும் கடப்பாக் கல் திண்ணையும், மாதளஞ்செடி ஒன்றும், கவுத்திப் போடப்பட்ட உரலும், கொஞ்சம் கற்குவியலும் கிடக்கும்

நேற்று மாலை அங்கே உட்கார்ந்திருந்த போது அந்த கற்குவியலின் ஊடே இரண்டு அம்மிக் கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் கிடப்பது தெரிந்தது. அந்த நேரம் அவள் டீ கொண்டு வந்து கொடுத்தாள்.

“ஏம்ப்பா இங்கபாரு அம்மி கெடக்குறத..!” ஆச்சரியமாய் கேட்டேன்.

 “ அது வரு~ம்பூரா இங்கனயேதான கெடக்குது..” பார்க்காமலேயே சொல்லிவிட்டுப் போனவளின் பதிலில் அம்மிகளுக்கும் நிகழ் காலத்திற்குமான உறவின் விரிசல் துல்லியமாகவே தெரிந்தது.

நானோ கண்ணிமைக்காமல் அவைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு விபரம் தெரிந்து அம்மா வீட்டிலே ஒரு அம்மி இருந்தது. அதை செதுக்கியவன் சிறந்ததொரு சிற்பக்கலை வல்லுனராகத்தானிருக்க வேண்டும்.மொத்தத்தில் அரை அடி உயரமிருக்கும். மேல்பரப்பு ஒன்றரை அடி நீளமும், பத்து அங்குலம் அகலமுமாயிருக்கும். நாலாப்புறமும் பக்க வாட்டுகளில் பாதியளவு கீழ்நோக்கி வளைவாக செதுக்கியும், மீதப்பகுதி ஒரு சம தூண் போலவுமிருக்கும்… அரைத்து அரைத்து தேய்ந்ததில் அம்மியின் மேல்புறத்தின் மையம் சற்று பள்ளமாகி இறங்கி ஏறும் தார்ச்சாலை போலவுமிருக்கும். பூமிக்கு நிலவைப்போல அதற்கு துணையாக உருளையாக இருமறுங்கிலும் பிடித்து அரைப்பதற்கு தோதுவாக ஒரு குலவிக்கல்லும் இருக்கும்.

அம்மா அதை கையாள்கிற லாவகமே தனிக் கலைதான். முதலில் நீரிட்டு கழுவும். அடுத்து தேங்காய் சில்லுகளை வைத்து நசுக்கி விட்டு நான்கு வீட்டிற்கு சத்தங் கேட்குமளவிற்கு டங்கு டங்கு டங்கு என தொடர் ஓசையில் குலவியால் மின்னல் வேகத்த்pல் அடிக்கும். அடுத்து தேவையான பொருட்களையிட்டு தண்ணீர் தெளித்து கிர்-கிர் கிர்-கிர் ரென இழுத்துப் பதமாய் அரைத்துவிட்டு இருதியில் கிண்ணத்தில் வழித்து எடுக்கும்.

அக்கம் பக்கத்திலிருப்பவர்களில் சிலரும் அவ்வப்போது எங்கள் அம்மியை இரவலாய் பயன்படுத்துவதுண்டு. “அடுத்த மாசங் கண்டிப்பா ஒரு அம்மிய வாங்கீரனும்ங்கா.. இந்த மனுசே நேரங்கெட்ட நேரத்துல தொவையலு வேணும், அது வேணும், இது வேணும்னு கே;ககுறாரா… சங்கடமாயிருக்கு…”

இந்த சம்பா~னையைத்தாண்டி எங்களின் அம்மி குறித்த வரலாறையும் கேட்டுவிட்டுப் போவார்கள்.

“ம்.. இது எங்க அய்யா ஏங்கல்யாணத்துக்கு சீதனமா குடுத்ததுல்ல… அப்பயே பதினஞ்சு ரூவாயாம்.. திம்மி நாயக்கம் பட்டியில இருக்க எங்க சின்னய்யாகிட்ட சொல்லி காசு குடுத்து அவரு எங்கயோ இருந்து வண்டி மாடு கட்டி தூக்கிட்டு வந்தார்னா பாத்துக்க… இப்பயெல்லா வாங்க முடியுமா? நூத்தம்பது ரூவாய்க்கி மேல வரும்…” அம்மா பெருமிதம் கொள்ளும்.

“நாளைக்கு ஒருத்தே வீட்டுல வாழப்போற புள்ள..” என்று சொல்லி தங்கச்சிக்கும் அப்போதே அம்மியைக் கையாள்கிற விதத்தை கற்றுக் கொடுக்கவும் துடிக்கும் அம்மா.

நான் ஆண் பி;ள்ளை என்பதால் எனக்கு அப்பயிற்சி கிடையாது. மாறாக உரலிலே மாவாட்டுகிற வேலையைக் கொடுக்கும். அதுவும் எப்போதாவது ஆடி, அமாவாசை, தீபாவளி, பொங்கல் மற்றும் இட்டிலி தோசை சாப்பிட ஆசைப்படுகிற நாட்களை ஒட்டித்தான் ஆட்டவேண்டி வரும்… அதிலும் பல தடைவ டிமிக்கி கொடுத்து ‘கிட்டி’ விளையாட ஓடிவிடுவேன்.

ஆனால் அம்மிதான் அனுதினமும் பயன்படும். ஆயுதத்திற்கு சாணை பிடிப்பது போல “அம்மி கொத்துரியா… அம்மி கொத்துரியா…” என கூவிக்கொண்டு உளி சுத்தியலைக் கையில் பிடித்தபடி ஆண்களும் பெண்களும்; அவ்வப்போது தெருவை சுற்றி வருவார்கள்.

வழுவழுப்பேறி அரைக்க சிரமம் தொற்றுகிற தருணங்களிள் அத்தொழிலாளர்களுக்கும் எங்கள் அம்மியில் வாய்ப்பு உண்டு. சுற்றிலும் ஒரு அங்குலம் இடம் வட்டு பார்டர் கட்டி கொத்துவார்கள். மையத்தில் அழகான இதழ் விரிந்த பூவும் அதைச் சுற்றி ஒரு வட்டமும் தென்பட அணைத்து பகுதிகளிலும் கொத்து விழுந்து புத்தம் புதிதாய் வெண்புள்ளிகள் தோன்றியிருக்கும். குலவியை மாத்திரம் தொடமாட்டார்கள்;;;: ஒரு வேளை உடைந்தாலும் உடையலாமாம்.

அவர்கள் கொண்டு வருகிற உளி சுத்தியலுக்கும், நுண்ணிய வேலைப்பாடுகளுக்கும் சேர்த்து அதற்கான கூலி வெறும் ஒரு ரூபாய்க்குள்ளே தானிருக்கும். அதிலும் பேரம் பேசுகிறவர்களும் உண்டு.

இருதியாக என் சித்திக்கு திருமணச் சீதனமாக ஆட்டுரலையும், அம்மியையும் கொடுத்துவர மாட்டு வண்டியில் எனது இளைய தாய் மாமனோடு சேர்த்து என்னையும் அனுப்பிவைத்தார் தாத்தா. இறக்கிவிட்டு வந்த சில நாட்களில் சித்தி மிக்ஸி வாங்கிவிட்டதாகச் சொன்னது. அதைத் தொடர்ந்து கிரைண்டரும் கூட… ‘பெரிய பெரிய பணக்காரவுக வீட்லயெல்லாம் இத வச்சுத்தே அரப்பாகலாம்’. சித்தி வீட்டிற்கு அவ்வப்போது படையெடுக்கும் உறவினர்களும் மெச்சக்கூடிய காட்சிப் பொருளானது அது. ‘நாமலும் கால காலத்துல இப்புடி வாங்கிப் போடனும்டியோவ்.. எவ விங்கு விங்குன்னு கையிலயே ஆட்டிக்கிட்டுக் கெடக்குறது..’

காலங்கள் உருண்டோட மிக்ஸி, கிரைண்டர் இல்லா இடமே இல்லையென்றாகிவிட்டது. அம்மிச் சத்தம் கேட்டு பல வருடங்களாகி விட்டது. ‘அம்மி கொத்துரியா’ என்ற குரலுக்குச் சொந்தக்காரர்களை காண முடிவதில்லை. அரசாங்கமும் ‘யூஸ் அன் துரோ’ மாதிரியான இலவச மிக்ஸி கிரைண்டர்களை விட்டு விலாசியதில் ஆங்காங்கே தப்பிப் பிழைத்திருந்த கொஞ்ச நஞ்ச அம்மி ஆட்டுரல்களும் குழி தோண்டிப் புதைந்து விட்டன.

அம்மா வீட்டு அம்மியும் இன்று எங்கு கிடக்கிறதென்று தெரியவில்லை. அங்கும் சமயலறையில் மிக்ஸி ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மாமனார் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கையில் என்றைக்குமில்லாமல் கண்களில் பட்டு என் கவனத்தை நெடுநேரமாய் ஈர்த்த அந்த அம்மிக்கற்களுக்கு விடை சொல்லும் நாளொன்றும் வந்தது.

அதேபோலொரு மாலை நேரம் அங்கே அமர்ந்திருக்கையில் துப்புறவுத் தொழிலாளர்கள் நாலைந்து பேர்; வாசல்களில் தென் பட்டவர்களிடம் ஏதொ சொல்லிக் கொண்டே தெரு வழியே நடந்து வந்தார்கள். அருகாமையில் வந்ததும்.. “அய்யா இந்த தொட்டி யர்ருது.. உரலு கல்லுகல்லா யாருது.. வேணுமின்னா எடுத்து ஒதுக்கி வச்சுக்கங்க.. தெருபூராம் கல்லு பதிக்கி போறதால ஒரு நா ரெண்டு நாள்ல ஜே.சி.பி வச்சு மட்டமா செதுக்கி அள்ளி வெள்யேத்தப் போறாக.. பாத்து எடுத்துக்கங்க..” என சொல்லி விட்டு நகர்ந்தனர்.

ஏற்கனே அவைகள் அப்புறப் படுத்துவதற்காகத்தான் வெளியே போடப்பட்டிருப்பதாகவும், கல்லுகள் கனமாகவும், நேரமும் தோதுவும் வாய்க்காததால் வருடக் கணக்கில் அடைந்து கிடப்பதாகவும், ஜே.சி.பி இயந்திரமே வந்து அப்புறப்படுத்தினாலும் நல்லதுதான், நமக்கு வேலை மிச்சமென்றும் மாமனார் வீட்டிலே சொல்லிவிட்டார்கள்.

மறுநாள் சனிக்கிழமை பிள்ளைகளுக்கும் பள்ளி விடுமுறை. காலை ஆறு மணிக்கெல்லாம் தடைபட்ட மின்சாரம் நெடுநேரமாவே வரவில்லை. விசாரித்ததில் மராமத்து பணி காரணமாக ஊர் முழுக்க இன்று மாலைவரை மின் தடை நீடிக்குமென்று சொன்னார்கள். ‘யூ.பி.எஸ்.’ பொருத்தியிருப்பவர்கள் பாடு பரவாயில்லை. அதுவும் மாலை வரை தாக்குப் பிடிக்குமா என்பது அவரவர் பொருத்தியிருக்கும் கருவிகளின் பலத்தைப் பொருத்துது.

காலையில் எழுந்து டீ போட்டதோடு சரி. ஒரு வேலையும் நடக்கவில்லை. முன்பே தெரிந்திருந்தால் அரசல் பொருட்களை அரைத்து வைத்திருப்பாள். வெரும் கஞ்சியும் ஊருகாயும் மட்டும்தான். ஊரே அமைதியில் மூழ்கியது.

பத்து மணி வாக்கில் அவள் தன் அம்மா வீடு வரை போய்வர வேண்டுமெனச் சொல்லவே அவளையும் பிள்ளைகளையும் ஏற்றிக்கொண்டு பைக்கில் மாமனார் வீடு நோக்கினேன்.

தெருமுனையைத் தொட்டதும் ஒரு ஆச்சரியம்!. “இங்கபார்ரா உலக அதிசயமா இருக்கே..” பார்த்துக்கொண்டே வாசருகே பைக்கை நிப்பாட்டினேன்.

கண்டு பிடிக்கப்பட்ட கற்காலச் சிலையொன்று கழுவி சுத்தம் செய்யப்பட்டு தொல்லியல் துறையின் ஆராய்ச்சிக்கு காத்திருப்பது Nபுhல கேடபாரற்று கிடந்த அம்மிகளில் ஒன்று கழுவி சுத்தம் செய்து கடப்பாக்கல் திண்ணையின் மேல் வைக்கப்பட்டது மல்லாமல் தெருவுக்காரப் பெண் ஒருத்தியின் பொற்கரங்களால் அதிலே மசால் அரவையும் அரங்கேறிக்கொண்டிருந்தது. முதாட்டி ஒருவரும் அரைக்கக் காத்திருந்தார்.

எதிர் பாராத மின் தடையால் ஏற்பட்ட சிரமம் காரணமாக, பக்கத்து வீட்டுப் பெண்களின் துரித ஆலோசனையின் பேரில் பல நாட்களாய் பயன்பாடாதிருந்த இந்த அம்மி இன்று மீண்டும் களம் கண்டிருப்பது தெரிய வந்தது.

சற்று நேரத்தில் மஞ்சள் நிற ஜே.சி.பி டர டர வென்ற சத்தத்துடன் தெருவில் மூக்கை நுழைத்தது.

“ஏய் என்னாங்கப்பா… ரெண்டு நா ஆகும்னு நேத்துத்தான சொல்லிட்டுப் போனாக.. எம்புட்டு சாமாங் கெடக்கு… அதுக்குள்ள வந்துட்டீக..” அரைக்கக் காத்திருந்த முதாட்டி பொருமித் தள்ளினார்.

“பெரியம்மா.. ஆபீஸரு சொல்றதத்தான நாங்க செய்ய முடியும்… படார்னு ஒதுங்க வச்சு விடுங்க, எங்களுக்கு மணிக்கணக்கு… முடிச்சுட்டு அடுத்த தெருவுக்குப் போகனும்…” சற்று நேரம் அவகாசம் கொடுத்தது வண்டி.

தெருவில் ஆங்காங்கே கிடந்த உருளையான தண்ணீர்த் தொட்டிகள், துவை கற்கள், சைக்கிள், பைக்குகளை பாதுகாப்பாக ஓரங்கட்ட, மாமனாhர் வீட்டின் பங்கிற்கு வீட்டுக்கு வெளியே போடப்பட்ட ஆட்டு உரலும், இரண்டு அம்மிக் கற்களும், குலவிகளும் ஆளுக்கொரு கையாகப் பிடித்து உருட்டியும், தூக்கியும் உள்ளே ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைக்கும் முயற்சி நடைபெற்றது. அதோடு கருங்கற்களுக்கு அடியில் கிடந்த அபூர்வமாக காணப்படும் ‘திருகை’ என்று சொல்லப்படும் நடுவில் துளையிடப் பட்டிருந்;த கனமான வட்டக் கற்கள் இரண்டும்.

“ஆமப்பா.. அப்புடி வையிங்க.. இத இப்புடி வையிங்க.. அதுக்குத்தே சொன்னே.. என்னைக்காயிருந்தாலும் தேவப்படும்னு.. பாரு காலங்காத்தால கரண்டு போச்சு, இந்தா ஆகிக்கிருச்சுல்ல… இல்லாட்டி பரவாயில்ல.. நம்ம பொருளுதான.. எதுக்கு வெளிய எறியனும்.. ஆத்தர அவசரத்துக்கு மருந்து கிருந்து ஆட்டிக்கலாம், என்னத்தவோ கொழம்பு தண்ணி, ரசங் கிசம் வைக்கிறதுக்கு ரெண்டு வெள்ளப்பூடு தக்காளி கிக்காளின்னு வச்சு அரைச்சுக்கலாம்.. போனப் பெறகு நெனச்சாலும் இப்புடி பொருளுகள வாங்க முடியுமா? இல்ல அதச் செதுக்குறவுகதே இருக்காகளா.. இப்புடியே ஒன்னொன்னா தொலச்சமுன்னா நமக்கும் பின்னும் பெறகு வார புள்ளைக ஆராய்ச்சி செய்யிறமுன்னு பூமிய தோண்டுறப்பதே இதுகல பாக்க முடியும். இப்ப கூட எங்கயோ ஒரு ஊருல தென்னந் தோப்பு பக்கந் தோண்டி, சட்டி பான சாமாஞ்சட்டு பட்டறை வாய்க்கா வரப்புன்னு கண்டுபிடிச்சு டி.வியில சொல்றாகளே அது மாதிரியாகிப் போகும்.. நம்ம பெரிசுக யாவகார்த்தமா முடிஞ்சளவுக்கு இதயெல்லாம் பத்தரப்படுத்தி வச்சுக்குவோம்ய்யா..” அரைக்க வந்த முதாட்டி அவரது முயற்சியில்தான் உரலும் அம்மியும் மறுபடியும் வீட்டுக்குள்ளே வந்ததாக பெருமிதம் கொண்டார்.    

- மொசைக்குமார்

   (9-04-2017 வண்ணக்கதிர்)