காலத்தை திரும்ப சென்று காணத்தான் தோன்றியது. நான் அப்படி வந்திருக்க கூடாது. கனமற்று எல்லையற்று திரியும் சருகின் வலியோடு இப்போது செய்வதறியாது அங்கும் இங்கும் நடக்கிறேன். என்னால் எங்கும் என்னை பொருத்திக் கொள்ள முடியவில்லை. பிசாசின் சப்தங்களை செவியெங்கும் சொட்டுதலின் தாகத்தை நான் யாரிடமாவது பகிரத்தான் வேண்டும். சத்தமிட்டு பேச வேண்டும்.  தோப்புக்குள் இரவாகி தேடும் கிளிகளின் பாஷைகளை கொண்ட மனமே இன்று புறப்பட்டு. பேசு. வெடி. சிதறடி. தேவைகள் இருக்கும் பட்சத்தில்.....தேர்வுகள் தேவையில்லை. 

அலுவலகத்தில் ஆளுக்கொரு நானாய் எங்கும் நடக்கிறேன். பேசிய பொருளெல்லாம் எனது நெற்றி வியர்வை கொள்ளும் சொட்டுகளில் மறைந்திருந்ததை துடைக்காமலே விட்ட என்னை சொட்டியே ஆக வேண்டும். சொட்டுதலின் தீர்க்கம் தரை தொட்ட வானத்துக்கும் உண்டு என்பது நவீனம். புராதான முயக்கத்தின் சூல்களை நான் விட்டொழிய வேண்டும். கேள்வி கேட்க வேண்டும். பதிலை தேடி கொண்டு வந்து சேர்க்க வேண்டும். என் முகநூலை தாண்டி.. முக முகமாய் கொட்ட வேண்டும். நான் அப்படியே வந்திருக்க கூடாதுதான். தோன்றிய கணத்தில் நின்று சத்தமிட்டிருக்க வேண்டும். யாரிடமாவது கேட்டிருக்க வேண்டும். அதீதமாக இப்போது தோன்றினாலும் எனது பிதற்றல்களை நான் வடிகட்டி மதிக்கிறேன்.

என்னால் இனி ஒரு கணம் தாமதிக்க முடியாது. நான் வறண்டு கிடக்கிறேன். இதோ கிளம்புகிறேன். வந்த வழியில் அலுவலகம் விட்டு மீண்டும் வீடு நோக்கி வேக வேகமாய் எனது வண்டியை செலுத்துகிறேன். எங்கும் சூரியனின் இறகுகள் உதிர்வதை கண் கூச காண்கிறேன். எனக்கு அழ தோன்றுகிறது. யாராவது அழுதால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனது நம்பிக்கைகள் எனது இலட்சியங்கள்.. எனது கனவுகள் யாருக்காவது கற்பனையாக இருக்கலாம். ஆனால்.. மிச்சத்தின் விளிம்புகளை நான் வரவேற்கிறேன். வேர்த்து விறுவிறுக்கும் கிறுகிறுப்பின் உச்சத்தில் எனது நிழல் நடுங்கி உள்ளே மறைகிறது.

இதே இடம் தான். இதே இடம்தான். யாரும் கண்டும் காணாத அந்த துரோகத்தின் வடிகால் நிகழ்ந்து கொண்டிருப்பது இதே இடம் தான். இங்கு தான் நான் நின்று தயங்கி சரி யாராவது சரி செய்வார்கள் என்று எல்லாரையும் போல சற்று முன் சென்றேன். அப்படி நான் சென்றிருக்க கூடாது. இதோ ஒரு சூப்பர்மேனைப் போல வந்து விட்டேன். நான் இதை சரி செய்ய போகிறேன். நீங்கள் யார் வந்தாலும் சரி. இல்லையென்றாலும் சரி. நான் நினைக்கும் சரிகளை நானே ஆரம்பிக்கிறேன். நான் வண்டியை விட்டு இறங்கி.. வேகமாய் ஓடி சென்று அந்த காரியத்தை செய்தேன். யாராவது வாருங்கள். இதை இப்படியே விட்டு விட கூடாது. யாராவது தகவல் தெரிவியுங்கள். கூகுளில் எண்ணை தேடினேன். ரிங் போய்க்கொண்டே இருக்கிறது. வெறுப்பின் உச்சத்தில் தாகம் எடுத்தது. கோபம் வலுத்தது. அடேய் மனிதர்களா வாருங்கள். கொஞ்ச நேரம் பிடியுங்கள். நான் போய் வாங்கி வருகிறேன். இல்லை என்றால் நீங்களாவது வாங்கி வாருங்கள். இப்படியே விடுவது சரி அல்ல. நான் அங்கேயே நின்று அதை செய்து கொண்டிருந்தேன். மதியம் மாலை ஆனது. மாலை இரவானது. ஊர் அடங்கியது. முகம்  புரியாத சிலர் வந்து என்னை தூக்கி போனார்கள். அவர்கள் பேசியதை இங்கே எனக்காக கவிஜி மொழி பெயர்ப்பு செய்வார். நான் கொஞ்சம் மயங்குகிறேன். அது தான் எனக்கு இப்போது தேவையாக இருக்கிறது.

டேப் இல்லாத குழாயில் பீறிட்டு வந்து கொண்டிருக்கும் தண்ணீரை அடைக்கவே இவன் இத்தனை நேரம் போராடினான். புலம்பினான். பாவம் பூமியில் இருந்து கொண்டு வரப்பட்ட கடைசி 100 மனிதர்களின் அவனும் ஒருவன் என்பதை அவன் மறந்து விட்டான். தண்ணீர் இன்றி அவன் பூமி மடிந்ததை மட்டும் அவன் மறக்கவில்லை.

இங்கு டேப் இல்லாத குழாய் நீர் சொட்டும். பின் ஆள் இல்லையென்றால் தானாக நின்று விடும் என்பதை சீக்கிரத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வாரம் ஒருமுறை இப்படி இவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அலையத்தான் வேண்டும்......

- கவிஜி 

Pin It