பள்ளிக்கூடத்திற்கு ஊர்த் தெருவைக் கடந்து போகும்போதெல்லாம் ராஜாவின் கண்கள் அந்த வீட்டை ஒருமுறை பார்க்காமல் கடந்துபோகாது. அது என்னவோ அந்த வீட்டைப் பார்ப்பதில் அவ்வளவு ஆவல் அவனுக்கு. இத்தனைக்கும் அது மாடிவீடு கூட கிடையாது. சீமை ஓடு வேய்ந்த வீடுதான். என்றாலும் அந்த வீடு அவனுக்கு அழகாய்த் தோன்றியது. இந்தமாதிரி வீட்டிற்குள் குடியிருந்தால் எவ்வளவு இன்பமாய் இருக்கும் என்பதை அவனால் அசைபோட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வெளிப்புறத்தில் இரண்டு பக்கமும் பரந்து விரிந்த திண்ணை வைத்து இரண்டு புறங்களிலும் அழகான தூணை நிறுத்தி எவ்வளவு ரம்மியமாய்த் தோன்றுகிறது இந்த வீடு என்ற பொறாமையும் ராஜாவின் மனதிற்குள் இல்லாமல் இல்லை. ஒருநாள் இரண்டுநாள் இல்லை அவன் பள்ளிக்குடம் போய்த்திரும்பும் நாளெல்லாம் அந்த வீடு அவனை என்னவோ செய்தது. அவன் மனதை அரித்தது. தனக்கு அந்தமாதிரி ஒரு வீடு வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்திவிட்டது.

indian hutஐம்பது ஆண்டுகள் பழமையான அந்த வீட்டைத் தெருவில் இருந்து வாசற்படி வழியே பார்த்தால் ஒரு தொடர் வண்டி பெட்டியைப் போல் நீண்டிருக்கும். போகிற வேகத்தில் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் வீட்டின் உள்ளே தூண்கள் நின்று கொண்டிருப்பதும் அந்தப் பகுதியில் வெயிலடித்துக் கொண்டிருப்பதும் தானிய மூட்டைகளெல்லாம் அந்த வராண்டாப் பகுதியில் சுவர் ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்ணுக்குப் புலப்படும். அந்த வீட்டில் படுக்கையறை எப்படி இருக்கும், சமயலறை எந்த மூலையில் இருக்கும், குளியலறை வைத்துக் கட்டியிருப்பார்களா? தொலைக்காட்சிப் பெட்டியை எங்கு வைத்திருப்பார்கள், எல்லோரும் எங்கு உட்கார்ந்து சாப்பிடுவார்கள், தரை மண்ணாலானதா?, காரையா, மொசைக்கா என்றெல்லாம் ராஜாவின் மனதில் தோன்றும். உள்ளே செல்வதற்கு அனுமதியில்லாத வீட்டைப் பற்றி எவ்வளவு வேண்டுமானலும் கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான். அதற்குள் என்ன இருக்குறது என்று வீட்டுக்காரனுக்குத் தானே தெரியும்.

ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ராஜா, அந்த வீட்டிற்கு அருகே வந்தவுடன் அங்கேயே நின்றுகொண்டான். அந்த வீட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டின் கடைக்கோடிவரை தன் பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தான். அவனது கண்கள் அந்த வீட்டையே துழாவுவதைப் போல சுற்றிச் சுற்றி வட்டமடித்தன. சற்றுநேரத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் சுகுமார் நைனார் அவனைப் பார்த்து, விரட்டுவதைப் போல் சைகைசெய்ய, பையைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிதான் ராஜா. ஓடிக்கொண்டிருந்தவனுக்குள் பல கேள்விகள் எழும்பிக்கொண்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையை எங்குப் பெறுவது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. ‘நாம இருக்குற வீடுகள மட்டும் மண் சுவரு வச்சி பனை ஓலையால கட்டி இருக்காங்க, ஊர்த்தெருவுல மட்டும் மாடி வீடுமா ஓட்டு வீடுமா கட்டி வச்சிருக்காங்க. இந்த அறிவில்லாத அப்பா அம்மா ஏன் அந்த மாதிரி வீடு கட்டல’ என்று வெகுளித்தனமாய் முனகிக்கொண்டே போனவன் மீண்டும், ‘ஒவ்வொரு வருசமும் காத்து மழ அடிச்சா பக்கத்துத் தெருவுல இருக்குற மகாதேவன் மாமா வீட்டுலதான் போயி தங்க வேண்டியதா இருக்குது. அவரு வீடுகூட ஓட்டு வீடுதான். அதுலகூட சில நேரம் ஒழுவும். ஏன் ஒழுவுதுன்னு மாமாகிட்டா கேட்டா ஓடு மாத்த பணமில்லன்னு சொல்றாரு. அந்த வீடே அவரு தாத்தா கட்டினதுன்னு அம்மா சொல்றா. அன்றைக்கி மழ விட்டு, பொழுது விடிஞ்சி வந்து பாத்தா கூரையெல்லாம் பிரிஞ்சி போயி கெடக்கும், இந்த அப்பாவோ அத இடிச்சித் தள்ளிட்டு மாடி வீடு கட்டாம மீண்டும் கூரை வீட்டையே கட்டறாரு. நான் மாடி வீடு கட்டுப்பான்னு சொன்னா, போடா… போயி விளையாடு… குடும்ப சூழ்நில உனக்குத் தெரியாதுன்னு துறத்தி விட்டுடுறாரு.. என் ஆசைய புரிஞ்சிக்காத அப்பா அம்மாவ நான் என்னதான் சொல்றது’ என்று புலம்பிக் கொண்டான்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அரை உறக்கத்தில் இருந்த ராஜாவிற்கு அருகில் வந்து படுத்தாள் அவன் அம்மா மல்லிகா. ‘அம்மா.. நாம மட்டும் ஏம்மா கூரை வீட்டுல இருக்குறோம்’ மெதுவாக மல்லிகாவின் வயிற்றின்மேல் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டான் ராஜா. ‘நாம இன்னும் நெறைய ஒழைக்கணும்பா…நீ நல்லா படிச்சி உத்தியோகத்துல சேந்தா நாம பெரிய மாடிவீடு கட்டிடலாம்…’ மெளனமாய் இருந்தவன், ‘அப்ப.. ஊர்த்தெருவுல மாத்திரம் எல்லாரும் மாடி வீடும் ஒட்டு வீடுமா கட்டியிருக்காங்களே அது எப்பிடிம்மா.. அவுங்க எல்லாரும் உத்தியோகத்துலயா இருக்குறாங்க’ இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்ப்பார்க்காதவள் ‘அது குடியானவங்க வீடுப்பா… அவங்க ஆதிகாலத்துல இருந்து பணக்காரங்க… நெலபுலமெல்லாம் நெறையா இருக்கும்… நாம அப்பிடி இல்ல. கைய ஒழைச்சாத்தான் கஞ்சி… அப்புறம் எப்பிடி நாம வீடு பத்தி கனவு காணமுடியும்’ அடுத்த கேள்வி வருவதற்கு முன் தூங்குவதைப் போல் பாவனை செய்தாள் மல்லிகா. ராஜாவின் கேள்விக்கணைகளும் நின்றுபோயின.

பள்ளிக்கூடத்தில் போடும் மதிய சாப்பாட்டை வாங்கிச் சாப்பிடுவதற்கு ஒரு தட்டை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டான் ராஜா. கொடிக்கயிற்றில் கிடந்த பின்பக்கம் கிழிந்த சராயை எடுத்துப் போட்டுக்கொண்டு திட்டுத் திட்டாய்ப் படிந்திருக்கும் நீலம் போட்ட வெள்ளைச் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான். மீண்டும் சுகுமார் நைனார் வீடு அவன் கண்களில் தென்பட்டது. சற்று நேரம் அந்த வீட்டையே உற்றுப் பார்த்துவிட்டு ‘நான் நல்லா படிச்சி உத்தியோகத்துக்குப் போயி இந்த மாதிரி ஒரு வீடு கட்டுறன்’ என்று சபதமெடுத்துக்கொண்டான். எப்போதோ கட்டப்போகும் வீட்டிற்கு அளவெடுத்துக் கொண்டன அவன் கண்கள். அவன் கால்கள் பள்ளிக்கூடத்தை நோக்கி நடக்கத் தொடங்கின. ஊர்த்தெருவில் இருக்கும் மாடிவீடுகளின் நிழலில் நடப்பது அந்த வீடுகளுக்குள் போய் நடப்பது போன்றே மனநிறைவைத் தந்தது ராஜாவுக்கு. நிழலும் ஒருநாளைக்கு நிஜமாகலாம் அல்லவா.

இனிமேல் அந்த வீட்டைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது என்ற உறுதியோடுதான் ராஜா பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். ஆனாலும் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை உண்டாக்கிவிட்டது அந்த வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டும் கத்திக் கொண்டுமிருந்த கூட்டம். கூப்பிடும் தொலைவிலிருந்தவனுக்கு அந்த வீட்டிற்கு மேல்நோக்கிப் போய்க் கொண்டிருந்த புகைமண்டலம் தென்பட்டது. சடுதியில் புரிந்துகொண்டான் ராஜா. அந்த வீடு தீப்பற்றிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவன், குசாலமாய்ப் பையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வேகமாய் ஓடினான். காலனி மக்களில் பெரும்பாலானோர் அங்குக் கூடியிருந்தனர். குடங்களிலும் பக்கட்களிலும் தண்ணீரை மொண்டுவந்து அந்த வீட்டின்மேல் ஊற்றிக் கொண்டிருந்தனர் அவர்களில் சிலர். ஒரு ஓரமாய்ப் போய் நின்றுகொண்டான் ராஜா. அவன் கண்கள் ஓடுகள் பிரித்துப் போட்டுத் திறந்த வெளியாய்க் கிடக்கும் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அதற்குள் ஒரு மூலையில் பீரோவும், மற்றொரு பகுதியில் தொலைக்காட்சிப் பெட்டியும், பிரிதொரு பகுதியில் கட்டிலும், வராண்டாவில் துணி துவைக்கும் இயந்திரமும், சமையல் அறையில் கேஸ் அடுப்பும் வைக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் பார்த்த ராஜாவுக்கு தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது போல் ஒரு திருப்தி. வீட்டின் உட்புறத்தைக் கண்டுவிட்ட குதூகலத்தில் தன் தோளில் சுமந்திருந்த பையை எடுத்துத் தலைக்குமேல் சுற்றிக்கொண்டு ஓட்டம் பிடித்தான் ராஜா. 

- சி.இராமச்சந்திரன்

Pin It