நான் கல்யாணத்திற்கு ஆசைப்படக் கூடாதாம். ஏனென்று கேட்டால் நான் பைத்தியக்காரனாம். என் அண்ணன் சொல்கிறான். அவனோடு எப்போதும் ஒட்டி உறவாடி பல்லிலித்துக் கொண்டிருக்கும் வெக்கங்கெட்ட என் அண்ணிகூட சொல்கிறாள். ‘நீ ஒரு பைத்தியம், உன்னை யார் கட்டிக்குவா’ என்று. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அழகான பெயர் வைத்திருக்கிறார்கள் அழகேசனென்று. யாருமே என்னை அந்தப் பெயரில் கூப்பிட மறுக்கிறார்கள். ‘ஒருத்தன் வெறியா என்கிறான், ஒருத்தன் பைத்தியக்காரா என்கிறான்’ இதையெல்லாம் என் காதால் கேட்டுக்கொண்டுதான் நான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். இவர்கள் கூறும் வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாமென்று நினைத்தால் என் கேள்விக்கு பதில் வழங்கக்கூட அவர்களுக்கு மனமில்லை. பைத்தியக்காரனின் கேள்விக்கு யார்தான் பதிலளிப்பார்கள்.

கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிரென்றெல்லாம் பலர் பேசக் கேட்டிருக்கிறேன். அந்த ஆயிரங்காலத்துப் பயிரில் நானும் ஒரு விதையாக இருக்கக் கூடாதா என்ன? வேடிக்கையைப் பாருங்கள், என் அப்பாவும் அம்மாவும் கூட என் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைத்த கையோடு என்னைக் கைகழுவிவிட்டு சுடலைக்கரைக்குப் போய்விட்டார்கள். அவர்களுக்கே எனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்ற எண்ணமில்லை. பிறகு என் ஆசையை நான் எங்கு போய்ச் சொல்வது. யாரிடம் சொல்வது. என் உழைப்பையெல்லாம் வாங்கிக்கொள்கிறவன் அண்ணன்தானே, அதனால்தான் அவனிடம் என் கல்யாணக் கோரிக்கையை வைத்தேன். அந்த வார்த்தையைக் கேட்டவுடனே பாய்ந்தான் பாருங்கள் என்னை அடிப்பதற்கு. அப்பப்பா என் ஈரக்குலையே நடுங்கிவிட்டது. பக்கத்துவீட்டு அத்தை ஒருத்திதான் அவனை மடக்கிவிட்டாள். அண்ணி மட்டும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு உள்ளூர ஆசை, என்னை என் அண்ணன் அடித்துத் துவைக்கவேண்டுமென்று. மடக்கிவிட வந்த அத்தைகூட என்னைப் பார்த்து, ‘பைத்தியக்காரனுக்கு எதுக்குடா கல்யாணமெல்லாம், கல்யாணங் கட்டி வச்சா அவள வச்சி காபந்தா வாழ்க்க நடத்த முடியுமா உன்னால, எதுனா குடுக்கறத குடிச்சிட்டு வேலைய பாப்பியா’ என்கிறாள். ஏதாவது கொடுத்தாத்தான குடிக்கிறதுக்கு, அம்மா உயிரோடு இருந்தபோதாவது எனக்கு அரை வயிறு கால் வயிறு கஞ்சி கிடைக்கும். அவள் போனதிலிருந்து அதுகூட கிடைக்கமாட்டேன் என்கிறது. நான் எப்படி என் பசியை ஆற்றிக்கொள்வது. பசிக்கிறவனுக்குத்தான் தெரியும் உணவோட அருமை. எப்போதும் வயிற்றை ஈரமாய் வைத்திருக்கிறவர்களுக்கு எப்படித் தெரியும் என் துயரம்.

ராத்திரி ஆச்சின்னா அண்ணன் வீட்டில் எல்லோரும் கொட்டமடிச்சிக்கினு சாப்புடுவாங்க, நான் மட்டும் அந்த ஓட்டை தட்டுல எப்படா கொஞ்சம் சோறு வரும்னு காத்துகுனு கெடக்கணும். ராத்திரி எட்டு மணிக்குப் பசியெடுத்தா பத்து மணிக்குதான் அது அடங்கும். அப்பத்தான மிச்சம் மீதிய அவ புள்ளைங்க கிட்ட குடுத்து அனுப்புவா அண்ணி. காலையில மீந்தது ராத்திரிக்கும் ராத்திரி மீந்தது காலமைக்கும் கெடைக்கும். வாயத்தெறந்து எதுனா கேட்டா அதுவும் ரெண்டு நாளைக்கி கெடைக்காது. அவ்வளவு பெரிய வீட்ல எல்லாரும் உருண்டு பொரளுறாங்க ஆனா எனக்கு மட்டும் அதுல படுக்கக்கூட இடங்கிடையாது. எவ்வளவு மழை அடிச்சாலும் காத்து அடிச்சாலும் பக்கத்துல எனக்குனு அண்ணன் ஒரு கொட்டா போட்டு வச்சிக் கீறான், அதுலதான் நான் மொடங்கிக் கடப்பேன். ஏன் என் அப்பா அம்மா கட்டுன அந்த வீட்ல நான் நுழையக் கூடாது. நான் அதுக்குள்ள போனா தீட்டாயிடுமா என்ன? புரியமாட்டேங்கிறது.

பகலெல்லாம் மாடு மேய்க்கிறேன். அதுக்குத் தண்ணி காட்டுறேன், புள்ள பூண்ட புடுங்கிப் போடுறேன். சாயங்காலம் ஆயிடுச்சினா அதுங்குள ஓட்டினுபோயி கொட்டாயில கட்டுறன். நான் நல்லா தெளிவாத்தான இருக்குறேன். அப்புறம் எதுக்கு எனுக்குப் பைத்தியக்காரப் பட்டம். என்னோட வயிசுல இருக்குறவனெல்லாம் புள்ளைங்கல பெத்துட்டு அதுங்குல பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் கூப்டுகுனு அலையுறானுங்க தெரியுமா? எனக்கும் ஒரு புள்ள வேண்டாமா? அதுக்குக் கல்யாணம் தான அவசியம். ஏன் என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் இது புரிய மாட்டேங்குது. கல்யாணம் பண்ணா சொத்துல பங்கு குடுக்கனுமில்ல, அதனாலகூட என் கல்யாணத்துக்குத் தடையேற்படுத்தலாமில்லையா. இருக்கும். கண்டிப்பா இது அண்ணி போட்டுக் கொடுத்த பிளானாத்தான் இருக்கும். அப்பகூட அண்ணனுக்கு அறிவு எங்க போச்சி. இப்ப எனக்கு அம்மாவோட எடத்துல அவன்தான இருக்குறான். மடையன், மரமண்டு அண்ணிக்கே அடிமைபட்டுக் கடக்குறான். அவன்கிட்ட சண்ட போடலாம்னு பாத்தா, அவனோ என்ன ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேங்கிறான். எனக்கு எல்லாரையும் மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாததும் அதுக்குக் காரணமா இருக்குமோ என்னவோ தெரியல. ஊருல இருக்குறவங்கள்ல பாதிபேருக்கு மேல என்ன அவமானப்படுத்தி இருக்காங்க, இருந்தாலும் அவங்களுக்கு எதிரா நான் ஒரு வார்த்த கூட பேசினது இல்ல தெரியுமா! இதுல பெரிய கொடும என்னன்னா பலபேரு கிண்டல் பண்ணும்போது என்னோட அண்ணனும் அவங்ககூட சேந்துகிட்டதுதான். அப்படி கிண்டலுக்கு ஆளாகுற ராத்திரியெல்லாம் தூங்காம நான் எத்தன நாளு கிடந்திருக்கன். இதையெல்லாம் யாருகிட்ட நான் சொல்ல முடியும். நான் சொல்றதக் கேக்குறதுக்குத்தான் யார் இருக்கா! ஒருத்தரும் இல்லையே.

நான் பைத்தியம் தான், ஒத்துக்குறன். எனக்கேத்த மாதிரி ஒரு பைத்தியத்த தேடிப்புடிச்சி கட்டி வைக்க வேண்டியதுதான. அவள வச்சி நான் வாழ்க்கை நடத்துறனா இல்லையானு தெரியுமில்ல. என்ன உப்பு கல்லுக்குக் கூட மதிக்காத அண்ணன் குடும்பத்துல எத்தனைக் காலந்தான் கஞ்சிக்கி காத்துக் கெடக்குறது. அவன் பெத்த புள்ளைங்ககூட என்ன வெறியா, பைத்தியக்காரான்னு சொல்லுதுங்க. அதுமட்டுமா, எங்கூட பேசுறதுக்குக் கூட அதுங்குளுக்குப் பயம். ஏன்னா, நான் பைத்தியம். அதுங்குள எதுனா பண்ணிட்டன்னா? அப்பிடிப் பாடம் ஏத்தி வச்சிருக்கா அண்ணி. அன்பு பாசத்துக்கு அர்த்தம் என்னன்னு எங்கிட்ட கேட்டீங்கன்னா நான் சொல்லுவேன் பைத்தியம், வெறியன்னு. எனக்கு என் காதுல அந்த சொற்கள்தான் வலிய வந்து விழுந்திருக்கு. நான் ஒரு நடமாடும் பிணமா, ஜடமாத்தான் எங்க ஊருல வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு நண்பர்னு யாரும் கிடையாது. அதேபோல எதிரின்னும் யாரும் கிடையாது. ஆனா என்ன அழவைக்காத மனிதர்கள எங்க ஊர்ல விரல் விட்டு எண்ணிடலாம். அந்த மாதிரி மோசமான மனிதருங்களுக்கு இடையிலதான் நான் ஊசலாடிக்கிட்டு இருக்கேன். எனக்கு கல்யாணம் செய்யச்சொல்லி எப்பிடி இவங்கள்ளாம் எங்கண்ணனுக்குப் பரிந்துரை பண்ணுவாங்க. கண்டிப்பா பண்ணமாட்டாங்க. ஆனா நான் விடற மாதிரி இல்ல. எனக்கு எதிரா இந்த ஊரே திரண்டு வந்தாலும் பரவா இல்ல. நான் கல்யாணம் பண்ணியே தீருவேன். ஆனா பொண்ணுதான் எங்க எப்படித் தேடறதுன்னு தெரியல.

யாரு எனக்குத் துணையா இருந்து இதெல்லாம் செய்து வைப்பாங்க. யாராவது பாவப்பட்டு எனக்கு உதவ வந்தாக்கூட அண்ணன் குடும்பம் அவங்கள சும்மா விடாதே! கண்டிப்பா எங்க ஊருல யாரும் எனக்குப் பொண்ணு தரமாட்டாங்க, அப்ப, வேற ஊருக்குத்தான போகணும். பஸ்ஸு?, அது எங்க ஊரக் கடந்து போவும்போதும் வரும்போதும் பாத்திருக்கேன். அதுல போனதில்லையே. அதுக்கான அவசியம் எனக்கு எப்ப வந்துச்சி, ஒருநாளும் வந்ததில்லையே. எங்க ஊருல இருக்குற கடை வாசலக்கூட நான் மிதிச்சதில்ல, இதுல பஸ் பயணம்தான் கொறையா கெடக்குதா? ஆமா, பஸ்ஸுக்குப் போறதுன்னா பணம் வேணாமா? கண்டிப்பா வேணும். அவன் எவ்வளவு கேப்பானோ? அண்ணனுக்குத் தெரியாம ஒரு மாட்ட வித்து பணத்த வெச்சிக்கலாமா? முடியாதே. யாரு ஏங்கிட்ட மாடு வாங்குவா, நான்தான் பைத்தியமாச்சே. சும்மா வேணும்னா ஒட்டிக்கினு போயிடுவானுங்க. பணம் கேட்டா அண்ணன் கிட்ட இல்ல சொல்லிடுவாங்க. வேற என்ன வழிதான் இருக்குது.

அப்பிடியே நடந்து போகவேண்டியதுதான். எதுனா ஒரு ஊருல என்ன மாதிரி ஒரு பைத்தியம் கெடைக்காதா. கெடைக்கும். இனிமே கண்டிப்பா அண்ணன் வீட்டுக்குப் போகக் கூடாது. இப்பிடியே கெளம்பிடுவோம். என்னமாதிரி பைத்தியம் ஒன்னப் புடிச்சி அதுங்கழுத்துல தாலி கட்டிக் கொண்டாந்து இந்த ஊருக்கு நடுவுல நிறுத்துறன். அப்ப என் அண்ணனும் அண்ணியும் இன்னா பண்றாங்க பாக்கலாம்! இந்த பைத்தியக்கார ஊரு இன்னா செய்யுதுன்னு பாக்கலாம். இன்னா செய்வாங்க என்னையும் அவளையுஞ் சேத்து பைத்தியங்கன்னு சொல்லுவாங்க, சொல்லட்டும். நான் பைத்தியம்னா நான் மட்டும்தான் பைத்தியம். என்ன பைத்தியம்னு சொல்றவங்க எத்தனை குடும்பத்த பைத்தியமா ஆக்குறாங்க தெரியுமா?, அவுங்களே சிலநேரத்துல பைத்தியமாத்தான் அலையுறாங்க. அவுங்க முதுவ அவுங்களே திரும்பிப் பாக்க எங்க நேரமிருக்குது. யாருனா எப்படியாச்சும் போவட்டும் நான் ஒரு பைத்தியத்த தேடிப்போறேன். என் மாடுகளை பிரிஞ்சி போவத்தான் மனசு கேக்கமாட்டேங்குது. இவ்வளவு நாளா எங்கூட ஒட்டிக்கினு இருந்த மாடுங்க என் பிரிவால வாடுமேன்றத நெனச்சாத்தான் எனக்கு வருத்தமா இருக்குது. இருக்கட்டும். என்னை நெனச்சி வருத்தப்பட இந்த மாடாவது இருக்குதே!

- சி.இராமச்சந்திரன்         

Pin It