பகல் முழுக்க சிடுசிடுத்து விட்டு
குடும்பமே அமர்ந்திருக்கும்
இரவு உணவில் எங்கிருந்தேனும்
மெல்ல பார்த்து புன்னகைத்து விடும் நீ
ரகசியங்களின் ராட்சஸி

ஓரப் பார்வைக்குள் அர்த்தம்
வைத்து ஒவ்வொரு இரவையும்
நீயே ஆரம்பிக்கிறாய்

கோபங்களையெல்லாம்
முத்தங்களாக்க
உன்னால் மட்டுமே முடிகிறது

பச்சை தேநீர்க்குள்ளும்
இனிப்பு சேர்க்கிறாய்
முதல் ஒரு வாய் குடித்து

'போங்க அத்தை வந்தர்றேன்..."
என எதையோ தேடுவது போல
வீட்டுக்குள் வந்து
இரண்டு நிமிடத் தழுவல்களோடு
தலை கலைந்தே
சந்தைக்குச் செல்கிறாய்

கதவு நிலவில் கைவைத்து
உருட்டிய விழிகளுடன்
நீ மிரட்டும் அழகைக் காணவே
எப்போதேனும்
தாமதமாக வருகிறேன்

அவசரமாய் செல்லும் நாளில்
உன்னைக் கும்பிட்டே
ஓடி விடுகிறேன்
சமயத்தில் கடவுளாகவும்
ஆகி விடுகிறாய் நீ...!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.