நீண்ட பயணங்கள்
தேசங்களின் வரலாற்றைத்
தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கின்றன
நீண்ட பயணங்கள்
வர்க்க சமுதாயத்தை
வேரோடு வெட்டிச் சாய்த்திருக்கின்றன
நீண்ட பயணங்கள்
மனித சமூகத்தின்
ஏற்றத்தாழ்வுகளை அழித்துத் துடைத்திருக்கின்றன

நீண்ட பயணங்கள்
நீண்ட நாள் ஏமாற்றங்களிலிருந்து தொடங்குகின்றன
நீண்ட பயணங்கள்
நீண்ட நாள் வெறுப்பிலிருந்து தொடங்குகின்றன
நீண்ட பயணங்கள்
நீண்ட நாள் காத்திருப்பிலிருந்து தொடங்குகின்றன
நீண்ட பயணங்கள்
நீண்ட நாள் கோபத்திலிருந்து தொடங்குகின்றன

கால்களை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்
இன்னும் நீண்ட தூரம் நடக்க வேண்டும்
இதயத்தை வலிமையாக்கிக் கொள்ளுங்கள்
இன்னும் நீண்ட தூரம் கடக்க வேண்டும்
நிலங்கள் உங்களுடையது தேசமும் உங்களுடையதே
கோரிக்கைகள் நிறைவேறும் நின்றுவிட வேண்டாம்

இறங்கி வந்த சூரியன்
பெருவெடிப்பைப் போல் பல்லாயிரமாய்ச் சிதறி
சாலையை நிறைத்துக் கொண்ட காட்சி
அடடா அடடா
எத்தனை முகங்கள் ஒரே வண்ணத்தில்
எத்தனை கோஷங்கள் ஒரே எண்ணத்தில்
இங்கிருந்து தான் இங்கிருந்து தான்
பிறக்க வேண்டும் புதிய இந்தியா

- ஜோசப் ராஜா

( மும்பையை நிறைத்த விவசாயிகளின் பேரணிக்கான வாழ்த்துக் கவிதை )

Pin It