கம்பீரமாக எழுந்து
நிற்கிறது என் புது வீடு.

ஏதோ ஒரு ஆற்றிடம்
அபகரிக்கப்பட்ட மணல்
இதன் சுவர்களுள்
புதைந்து கிடக்கிறது.

எங்கெங்கோ
வெட்டிச் சாய்க்கப்பட்ட
பல நூற்றாண்டுகால
மரங்களெல்லாம் இதன்
நிலையாக, கதவாக, ஜன்னலாக
அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

எப்பொழுதோ யாரோ ஒரு
ஏழை விவசாயியிடம்
முப்போகம் விளையும்
பூமியாயிருந்த இடத்தில்
இன்று கம்பீரமாகத்தான்
எழுந்து நிற்கிறது
எனது புதிய வீடு..!

- ஆதியோகி

Pin It