ஆறு வயதாகியிருக்கிறது
மகனுக்கு
பெண் குழந்தை
பேசத் தொடங்கிவிட்டாள்
முன்பைப் போல் சமாளித்து
என்னால்
தொலைப்பேசியை துண்டிக்க இயல்வதில்லை
எப்பொழுது வருவீர்கள் என
பையன் கேட்கிறான்
துரித கதியில்
விரல்களில் எண்ணி
செவன் டேய்ஸில் வருவீர்களா என்கிறான்
நீண்ட இருக்கையுடைத்த
சிறிய மிதிவண்டி கேட்கிறான்
மகளுக்கு
பெருத்த தொப்பையுடைத்த
டெட்டி பியர் ஒன்று
ரோஸ் நிறத்தில் வேண்டுமாம்.
அண்ணனுடன் சண்டையிடாமல் விளையாடுவேனென்று
வாக்குறுதியும் தருகிறாள்.
மிதி வண்டியும்
கரடி பொம்மையும்
உள்ளூரிலேயே கிடைக்கும் ரகம்தான்.
அப்பாவை வேண்டத்தெரியாமல்
பொருட்கள் வாயிலாக
அப்பாவை வேண்டும்
அம்மழலைகளின் பரிதவிப்புகள்தான்
என்னைப் போன்ற
வெளிநாட்டு அப்பன்களுக்கு
உறைப்பதேயில்லை.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It