நிரம்பி ஓடும் வைகையாற்று நீரை
சைக்கிளில் கொணரும் அப்பாவிற்கு
ஒத்தாசை புரிந்திருக்கிறேன்
சனி ஞாயிற்றுக் கிழமைகளில்
தெருக்குழாய் வரிசைகளில்
குடத்துடன் கால்கடுக்க
தன் முறைக்காக பாட்டி
நிற்க வைத்து விடுவாள்.
மூன்று தெரு தள்ளிய ஒரு கிணறு
அவ்வப்போது தெருவில் தலைகாட்டும்
தண்ணீர் லாரியென
அம்மா அழைத்துச் சென்றிருக்கிறாள்.
இப்பொழுது வாசல் கதவருகாய் ஒருவன்
தண்ணீர்க் குடுவையை இறக்கி
காசு வாங்கிச் செல்கிறான்
எங்களின்
எந்த வியர்வையுமே படாத
அந்தத் தண்ணீர்
நன்றாகவே இனிக்கிறது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It