வெள்ளையடிக்கப்படவிருந்த
ஒரு சுபமுகூர்த்த தினத்தில்
வீட்டின் பரணியிலிருந்து
ஜெயகாந்தனின் புத்தகமொன்று
தொப்பென கீழே விழுந்தது
கையில் எடுத்ததுமே
படுத்திருந்த ஜெயகாந்தன்
எழுந்து அமர்ந்துகொண்டார்
அப்புத்தகத்தை தூசி தட்டி
துடைத்து விட்ட பொழுது
குளித்து பிரகாசமாகி
புத்தாடை தரித்து
அமர்ந்துகொண்டார்
ஜெயகாந்தனும்.
நூல் வாசிப்பை நான் தொடர
சிறிது சிறிதாக
வெண் மீசை கறுக்கத் தொடங்கி
இளைஞனாகி விட்டிருந்த ஜெயகாந்தன்
அந்நூலை முடித்து
பேப்பரும் பேனாவுமாய்
ஒரு காகிதமெடுத்து
நான் அமர்ந்த பொழுது
முழுதுமாய் என்னுள்
இறங்கி விட்டிருந்தார்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It