sad man 292எரியும் ஒரு மெழுகுவர்த்தி
தீர்ந்து போவதற்குள்
வாசித்து முடியாதா இந்த
வாழ்க்கை என்னும் வாகடம்?

மிகக் கடுமையான
சவால்களோடு
ஒரு நாளுக்குள் நுழைகிறேன்
போன வாரம்போல்
இது புதிதில்லைதான்
இருந்தாலும்
உங்களுடன் பகிர்ந்து கொள்வதால்
கொஞ்சம் பரவசம் அடைகின்றேன்

ஆறிப்போன வாழ்க்கையின்
இன்றைய தொடக்கம் மிக
சூடான ஒரு பானத்தோடு
ஆரம்பமானது....

நிரம்பியிருந்த கோப்பையில்
வழிந்து கொண்டிருந்தது வெறுமை
உருசியுணரா வண்ணம்
எனது நா
மரத்துப் போயிருக்கவேண்டும்
அன்றில் இல்லாமையின் பக்குவம்
உணர்த்துவதற்காக
கலந்தும் இருக்கலாம் இத்தேனீர்
அவள் நேரிடையாக
முகத்தில் ஊற்றி விடாதவரையில்
தப்பித்துக் கொண்டேன்

ஞாயிற்றுக் கிழமையை
விடுமுறை நாள் ஆக்காமலேயே
விட்டிருக்கலாம் அரசு
என் சாதாரண வாழ்க்கையில்
நான் சபிக்கப்படுவதும்,
சோதிக்கப் படுவதும்
விவாதிக்கப்படுவதும்
இந்த ஞாயிற்றுக் கிழமை என்கிற
நரக நாளிகையில்தான்

அடுக்களையை அளவெடுத்து
ஞாயிற்றுக் கிழமையைவிட
நீளமான சீட்டை
நீட்டினாள் மனைவி

பிள்ளைகள் கொப்பி, பேனை, பென்சில்,
அழிறப்பர் என ஒரு சீட்டையும்
அம்மா வழமைபோல்
மருத்துவர் கொடுத்த
மாத்திரை சீட்டையும்
அப்பாவிடமும் ஒரு சிட்டு இருக்கிறது
பற்றிப் புகைந்துவிடும் என்பதால்
பாதுகாப்பாய் வைத்திருந்தார்
ஒவ்வொருவராய்
அவரவர் வசதிப்படி
நிதானத்தோடு நீட்டினார்கள்

தள்ளாட்டம் என்னை
தரை மட்டமாக்க
துவிச்சக்கர வண்டிகூட அற்ற
என்னிடமிருக்கும் துயரச் சீட்டை
சுமந்தபடி நடந்தேன்
வெறிச்சோடிக் கிடந்த தெரு
கூடவே பின் தொடர்ந்தது
காலை வாரிவிடும்
காலச் செருப்புடன்

வரும் வழியில்
என்னைப்போல் ஒருவன்
ஒரு கழுதைக்குக் கனமான
பொதியுடன் போய்க் கொண்டிருந்தான்
இன்னேரம் அவன்
ஊர் சேர்ந்திருப்பானோ?
உயிர் பிரிந்திருப்பானோ. ..?!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It