அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கருந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
துஞ்சும் உலகை மாயங்கள் செய்து
காத்திட இயலாது வெப்பமும் மாசும்
ஏத்தும் முறையாம் சந்தை வழியை
அழித்தே சமதர்ம உற்பத்தி முறையைப்
பழியா தேற்பதே அறிவடைமை யாகும்

(பிறரை அச்சுறுத்தி வருத்தும் அசுரர்கள் தொலைவில் உள்ள சூரியனை எடுத்துக் கொண்டு போய் மறைத்து வைத்ததால் உவ்வுலகில் இருள் சூழ்ந்தது. இதனால் மக்கள் அடைந்த துன்பத்தை நீக்கும் பொருட்டு, மிக்க வலிமை கொண்ட கரு நிறக் கண்ணன் அச்சூரியனை வானத்தில் கொண்டு வந்து நிறுத்தினார் என்பது போன்ற மாயங்கள் செய்து (புவி வெப்ப உயர்வால்) அழிந்து கொண்டு இருக்கும் இவ்வுலகைக் காப்பாற்ற முடியாது. புவி வெப்பத்தை உயர்த்திக் கொண்டும், மாசுகளை உமிழ்வதால் சுற்றுச் சூழலைக் கெடுத்துக் கொண்டும் இருக்கின்ற பொருட்களை உற்பத்தி செய்வதை மட்டுமே ஊக்குவித்துக் கொண்டு இருக்கும் சந்தை வழி உற்பத்தி முறையை அழித்து, சோஷலிச உற்பத்தி முறையைப் பழிக்காமல் ஏற்பதே (இப்புவி அழியாமல் பார்த்துக் கொள்ளும்) அறிவுடைமையாகும்.)

- இராமியா

Pin It