அகப் புறம் பேசு... 2
தமிழ்நாடு முழுக்க அரசு ஆசிரியர்கள் (ஜேக்டோ-ஜியோ) போராடி வருகிறார்கள். மாவட்டந்தோறும் தங்கள் போராட்ட வடிவங்களைத் தேர்வு செய்து, சாலை மறியல், கைது நடவடிக்கை, தற்காலிக சிறை என்கிற திருமண மண்டப அடைத்துவைப்பு எனத் தொடர்கிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு களத்தில் போராடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பூ விற்கும் ஒருவர்,
"என்னய்யா அநியாயம் இது? ஒரு லட்சம் சம்பளத்தை முழுசா வாங்கிக்கிட்டு ஒழுங்கா வேலெ செய்யாம, ஒழுங்காச் சொல்லிக் குடுக்காம, எங்க புள்ளங்கள ஆயிரக்கணக்கில செலவழிச்சி பிரைவேட் ஸ்கூல்ல சேக்குறோம். இதுல இன்னும் ஒங்களுக்குச் சம்பளம் பத்தலன்னு போராட்டம் வேற" எனச் சத்தமிட்டிருக்கிறார். (உண்மையில் அவர்கள் வெறும் சம்பள உயர்வுக்கு மட்டும் போராடவில்லை என்ற போதிலும், பொது மக்கள் என்கிற வரையறுப்பின் மத்தியில் இந்த எண்ணம்தான் நிலவுகிறது.)
போராட்டக் களத்தில் இருந்தவர்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்து கொள்ள, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர்(?) சத்தம் போட்ட அந்தப் பூ வியாபாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர். அந்த அப்புறப்படுத்தலின்போது அவரின் சட்டை கிழிந்துவிட, ஏகத்துக்கும் கோபமுற்ற அந்தப் பூ வியாபாரி, மீதமிருந்த தனது உடைகளைக் களைந்து எறிந்து, நிர்வாணமாய் மேலும் மேலும் அதிகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றாராம். இது ஒரு புறம்.
அடுத்த புறம். கற்றறிந்த, 'கைபேசி' என்கிற கையடக்கக் கணிணியைக் கையாளத் தெரிந்த, பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள், முகநூல் மற்றும் கட்செவி அஞ்சல் என்கிற 'வாட்ஸ் ஆப்'களில் எல்லாம் அரசு ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும், கேள்வியெழுப்புதல்களும் பதிலடிகளுமாய், ஒருவருக்கொருவர் கொந்தளித்துப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் இப்போது பேசப்போவது போராட்டக்காரர்களின் போராட்டம் குறித்தோ அல்லது அவர்கள் கோரிக்கைகளின் நியாய அநியாயங்கள் குறித்தோ அல்லது பொருத்தப்பாடுகள் மற்றும் முரண்களைக் குறித்தோ அல்ல. தமிழ்ச் சமூகத்தில் ஒரு போராட்டம் என்னவாகப் பார்க்கப்படுகிறது? எப்படி அணுகப்படுகிறது? என்பது குறித்துதான்.
போராட்டக்காரர்களை விடுங்கள். எந்தவொரு போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு போராட்ட நியாயம் இருக்கும். ஆனால், அதை எதிர்கொள்பவர்கள் அதாவது தனியார் முதலாளிகள் அல்லது அரசின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதலாளிகளின் கையூட்டு, கைக்கூலிக் கங்காணிகள், அரசின் காவல்துறை என்று சொல்லப்படும் ஏவல்துறைகள், இதை எப்படிப் பார்க்கிறார்கள்? எப்படிக் கையாள்கிறார்கள்?
பொதுவாக ஆசிரியப் பணி என்பது மிக உன்னதமான பணி. அதனால்தான் அது தெய்வத்துக்கு முன் வைக்கப்பட்டுள்ளது என்கிற கருத்து நம் பொதுப்புத்தியில் வலுவாகப் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கண நூலான அகத்தியம், தொல்காப்பியம் போன்ற ஆதி நூல்களில் எல்லாம் ஆசிரியப் பணி குறித்து நல்லதொரு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.
"குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே"
- நன்னூல். 26. ஆசிரியனது வரலாறு
(உயர்ந்த குடிப்பிறப்பு, அருளுடைமை, கடவுள் பற்று, பல்கலைத் தேர்ச்சி, சொல்வன்மை, உலகியலறிவு, உயர்ந்த குணம் ஆகியவைகளை ஓர் ஆசிரியன் கொண்டிருக்க வேண்டும். மேலும், பூமி, மலை, துலாக்கோல், மலர் ஆகியவற்றின் நற்பண்புகளையும் நல்லாசிரியன் பெற்றிருக்க வேண்டும் என்று நன்னூல் எடுத்துரைக்கிறது.)
இதில் உயர்ந்த குடிப்பிறப்பு என்கிற சாதியக் கண்ணோட்டத்தையும், கடவுள் பற்று என்கிற மத நம்பிக்கையையும் களைந்துவிட்டுப் பார்த்தால், பல்கலைத் தேர்ச்சி, சொல்வன்மை, உலகியலறிவு, உயர்ந்த குணம் போன்றவைகளைக் கொண்டவர் மட்டுமே நல்லாசிரியர் என்கிற இலக்கண வரையறையை, நம் முன்னோர்கள் அன்றே வகுத்தளித்துவிட்டனர். அப்படியான ஆசிரியர் பணி என்பது வெறும் பணி அல்ல. அது எதிர்கால சமூகத்தை வனைவதாகும், வடிவமைப்பதாகும். ஆக, ஒரு தேசத்தின் விழுமியங்களை வகுப்பறைகள்தான் நிர்ணயிக்கின்றன. அந்த வகுப்பறை வழிகாட்டிகள்தாம் ஆசிரியர்கள்.
இலக்கியத்தில் சொல்லுவோம். சில கவிதைகளை எழுதுபவன் கவிஞன் அல்ல. மாறாக கவிதை எழுதுதலோடு, கவிதை மனநிலையில் வாழ்பவனே கவிஞன். கவிதைகளோடு சில கவிஞர்களையும் உருவாக்குபவன் நல்ல கவிஞன். ஒரு காலத்தையே உருவாக்குபவன் மாகவிஞன். அதுபோலத்தான், ஒரு சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துவார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிப்பார். ஒரு உன்னதமான அசிரியர் வருங்கால சந்ததியினருக்கு உயிரோட்டத்தை ஏற்படுத்துவார்.
இப்படித்தான் அன்றைய கால ஆசிரியர்கள் இருந்தார்கள். நம் ஆளுமைகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்களின் ஆசிரியர்களின் மேன்மையை. நான் அவரிடம் பாடங் கற்றவனாக்கும். இவரிடம் பாடங் கற்றவனாக்கும் என்கிற பெருமிதங்கள் பீறிட கர்வத்தோடு சொல்வார்கள்.
அதுபோலத்தான் அன்று பெருகிப் பீறிட்டு எழுந்து கொண்டிருந்த திராவிட இயக்கத்தின் கருத்தியல் செல்வாக்கால் நிறைய ஆசிரியப் பெருமக்கள், திராவிடத் தாக்கம் கொண்டு, வகுப்பறைகளையே கருத்தியற் பாசறைகளாக மாற்றினர். அதன் விளைவு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் துள்ளி வரும் காளைகளென மாணவர்கள் ஆர்ப்பரித்து தெருக்களில் இறங்கிப் போராடினர். வெள்ளமெனத் திரண்ட அந்த தமிழ் மாணாக்கர்கள் கூட்டத்தைத் தயாரித்த உலைக்களங்கள் அன்றைய ஆசிரியர்கள். குறிப்பாக தமிழாசிரியர்கள்.
அந்த வெற்றியை அறுவடை செய்து கொண்ட திராவிடக் கட்சிகள் மீது வேண்டுமானால் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வேட்கையை, விருப்பை, மாணாக்கர்களின் மனங்களில் விதைத்திட்டவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் நாம் வலியதாய்ச் சொல்கிறோம். ஒரு தேசத்தின் விழுமியங்களை நிர்ணயிப்பவை வகுப்பறைகள். அந்த வகுப்பறையை நிர்ணயிப்பவர்கள் ஆசிரியர்கள். அன்றந்தப் போராட்டக்களத்தில் முன் நின்ற வீரர்களாயினுஞ் சரி, ஈகியர்களாயினுஞ் சரி. அவர்கள் பெருமையுடன் சொல்லிக் கொண்டார்கள் இவர்தாம் எம் நல்லாசிரியர் என்று.
அதன்பிறகு எழுபதுகளில் புரட்சிகர கட்சிகளின் சித்தாந்தத்தை, அறைகூவலை ஏற்று வகுப்பறைகளிலிருந்து வெளியேறியவர்கள்தான் இன்றைய புரட்சிகர நீரோட்ட தமிழகத் தலைவர்கள். எண்பதுகளில், தொன்னூறுகளில், அதன் பிறகு புத்தாயிரமாண்டிற்குப் பிறகான இற்றைநாள் வரை என்ன நிலை? ஏன் அந்த விழுமிய ஆசிரியப் பாரம்பரியக் கண்ணி அறுந்தது? அறுபட்டுப் போனது?
குறிப்பாக, இங்கு தொன்னூறுகளில் ஏற்படுத்தப்பட்ட உலகமயமாதல் போக்கினால், காட், டங்கல் என்கிற அதன் கோர வரிசையில் உலகமயமாதலினால் ஒட்டு மொத்த சமூகமே, சமூக உறவுகளே சீரழிந்து போகையில், அந்த சமூகத் துணுக்குகளில் ஒன்றான ஆசிரியச் சமூகமும் அதன் வழியில் தன் விழுமியங்களை இழந்து சீரழிந்து போனது என்பதுதான் நமது மதிப்பீடு.
அடுத்து, நமது தமிழ்ச் சமூகத்தில் போராட்டங்கள் என்றால் என்ன? அது எப்படியிருக்கிறது? அது எப்படிப் பார்க்கப்படுகிறது? எப்படி அணுகப்படுகிறது? என்றெல்லாம் ஒரு சுற்றுப் பார்ப்போம்.
ஆரம்பத்தில் போராட்டக் களத்தில் இருந்துதான் உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளை, ஊதியத்தை, உழைப்பு நேரத்தை நிர்ணயித்துக் கொண்டார்கள், நிச்சயித்துக் கொண்டார்கள். அன்று ஒருவர் போராடினால் எல்லோரும் சேர்ந்து நின்று ஒற்றுமைக் கரம் கொடுத்தார்கள். ஒருமைப்பாட்டுச் சரம் தொடுத்தார்கள். அதனால் தொடர் வெற்றிகளை, தொடர் உரிமைகளை வென்றெடுத்தார்கள். அடுத்த தலைமுறைத் தொழிலாளர்களுக்கு, உழவர்களுக்கு கையளித்துப் போனார்கள். இதற்கு சிறந்த உதாரணம் வெண்மணிப் போராட்டம்.
1968 வெண்மணி எரிப்பு வன்கொடுமைக்கு முன்னர், விவசாயத் தொழிலாளர்கள் ஆங்காங்கே செங்கொடியேற்றி சங்கங்களை அமைத்துக் கொண்டு போராடினார்கள். அப்போது தமிழகத் தொழிலாளர் வர்க்கம் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டது. அதில் வெண்மணி மற்றும் வெண்மணியைச் சுற்றிய பகுதிகள், ஏன் நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதிலுமுள்ள செங்கொடிச் சங்கம் வைத்திருந்த விவசாய அமைப்புகளெல்லாம் அந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தரும் விதமாய், தாங்களும் அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்தப் பங்கேற்பு நிலை ஆண்டைகளுக்கு வெகுவான கோபத்தைத் தந்தது. வெண்மணிக்கு எதிரான ஆண்டைகளின் கோபக் கோர வெறிக்கான பல காரணிகளில் ஒன்று இந்த வர்க்க சேர்க்கையும், ஒன்று கூடலும்தான்.
ஆக, அப்படியாக இருந்ததொரு தமிழகப் போராட்டக் களம் ஏன் இப்படி துண்டு துக்காணிகளாகிப் போனது? போய்விட்டது? ஏன் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் கொஞ்சங் கொஞ்சமாகப் பறிபோனது? போய்விட்டது? இன்னமும் பறிபோய்க் கொண்டிருக்கிறது?
தொழிலாளர் வர்க்கத்தின் வருடாந்திர ஒன்றுகூடலாய் மாறிப்போன 'மே தின'த்தில், எமது பாட்டாளி வர்க்கம் தற்போது என்ன முழக்கமிட்டு வருகிறது தெரியுமா? "தோழர்களே. நாம் போராடிப் போராடி புதியதாய்ப் பெற வேண்டாம். இருக்கிற உரிமைகளையாவது இழக்காமல் இருந்தால் போதும்." ஏன் இந்தச் சீரழிவு? பின்னடைவு?
தொன்னூறுகளில் நாம் தலையால் அடித்துக் கொண்ட, வரவே கூடாது, அமல்படுத்தவே கூடாது என்று மறுத்து தெருவில் இறங்கி, "காட் ஒப்பந்தம் வேண்டாம்" "டங்கல் ஒப்பந்தம் வேண்டாம்" "தனியார்மயம், தாராளமயம், உலகமயம் வேண்டவே வேண்டாம்" என்று கதறிக் கூப்பாடு போட்டோமே. மிகு சிறுபான்மையாய் அன்று எழுந்த எங்கள் எதிர்ப்புக் குரல்கள் கண்டுகொள்ளப்படாமல் போனதால், இன்று உலகமயம் கோலாச்சி நிற்கிறது, தலைவிரித்து ஆடுகிறது. இங்கு சகலமும் காசு பணம் மட்டுமே. போட்டி. போட்டி. எங்கும் போட்டி. எதிலும் போட்டி. சற்று அயர்ந்தால் போதும். அடுத்தவன் உன்னைத் தாண்டிப் போய்விடுவான். அவனைப்பார். உன்னைவிட ஊதியம் கூட. என்னைப்பார். நான் நிரந்தரமற்ற ஒப்பந்தத் தொழிலாளி. எனக்கு அவன் போட்டி. அவன் எனக்குப் போட்டி. இப்படி சகலமும், சகலரும் ஒவ்வொருவருக்கும் போட்டி எனப் போட்டி போட்டுக் கொண்டிருக்க, உச்சத்தில் நின்று அந்த லாபவெறி வேட்டை நாய் கோரப்பல்லிடுக்கில் தொழிலாளர்களின் ரத்தமும், உழவர்களின் சதையும் வழிய வழிய ருசித்துக் கொண்டிருக்கிறது. பிளவு படாமல், பிரிவு படாமல் ருசித்துக் கொண்டிருக்கிறது பன்னாட்டு இன்னாட்டு உலகமய கார்ப்பரேட் வர்க்கம்.
அதன் ஊதுகுழலாய் ஊடகங்கள். அவை செய்தி ஊடகமானாலுஞ் சரி. காட்சி ஊடகமானாலுஞ் சரி. இங்கு பொதுப் புத்தியில் வலியதாய்ப் பதிக்கப்பட்டுள்ள உளவியற் கூறு என்பது, பொதுவாக போராட்டத்ததினால் 'மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்'. ஆலைத் தொழிலாளர்கள் போராடினால், அவர்களைத் தவிர மற்ற அனைவரும் 'மக்கள்' பாதிக்கப்படுகிறார்கள். உழவர்கள் போராடினால், உழவர்களைத் தவிர 'மக்கள்' அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் போராடினால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடினால், செவிலியர்கள் போராடினால், அவரவர்களைத் தவிர மற்ற எல்லோரும் 'மக்கள்'. பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த உளவியல்தான் இன்று போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் மீதான குதர்க்கம், காழ்ப்பு, எதிர்ப்பு வன்மக் குரல்கள். ஆக, உலகமயம் இன்று மக்கள் என்கிற ஒரு பொதுக் கூட்டத்தினைப் பிளவுபடுத்தி வைத்துள்ளது. பிரிவுபடுத்தி நிறுத்தியுள்ளது.
பொதுவாக மனிதகுல பொது உளவியல் கூறு என்பது தன்னை 'மேல்நிலையாக்கம்' செய்து கொள்வது என்கிற கூறுதான். விலங்குகள், மற்ற உயிரினங்களிலிருந்து பகுத்தாயும் அறிவினைக் கொண்டு, இந்தப் பூமிப் பந்தின் மேல் வாழும் உயிரினங்களின் மீது மேலாண்மை செய்யும் இனமாக மனிதன் திகழ்ந்தான். உழைப்புப் போக்கில் நிகழ்ந்த இந்த இயங்கியற் கூற்றை நன்கு உள்வாங்கிய முதலாளியம், தன் நவீன அறிவியற் சிந்தனைக் கூறுகளை அதில் புகுத்தி, இந்த உலகிற் பிறந்த அனைத்து உயிரியும் சமம் என்கிற சமத்துவக் கூறினை மறுத்து, 'நான் மேல்' 'நீ கீழ்' என்று பாகுபடுத்தி, வேறுபடுத்தி, பேதப்படுத்தி, மனித உயிரிகளை வர்க்க, சாதி, மத, பால் ரீதியாகப் பிளவு படுத்தி, பிரிவுபடுத்தி, பேதப்படுத்தி வைத்திருக்கிறது. எனவே, 'மேல்நிலையாக்கம்' என்கிற உளவியற் கூறு இயல்பானதானதொன்றாக மாற்றியமைத்தது.
இந்த நவீனமய 'மனுத்துவம்'தான் உலகத்தை ஆள்கிறது. இந்திய ஒன்றியத்தை ஆள்கிறது. தமிழகத்தை ஆள்கிறது. எனவேதான், இங்கு போராட்டம் என்பது ஏளனமாக, மலினமாக, ஏன் இழிவானதொன்றாகவும் பார்க்கப்படுகிறது. இந்த உலகமயச் சூழலில், வர்க்கப் பிளவுகள் இருக்கும்வரை போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். சாதிப் பிரிவுகள் இருக்கும்வரை போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். மத பேதங்கள் நிலவும்வரை போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். பாலின பேதங்கள் நிலவும்வரை போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். தேசிய இன அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் தொடுத்து, ஒரு ஒற்றை வல்லாதிக்கம் நிலவும்வரை தேசிய இனத் தன்னுரிமைப் போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். ஒரு அசமத்துவமான உலகம் இருக்கும்வரை சமத்துவத்தினைக் கோரி போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். ஆக, இங்கு தேவை என்பது. பிளவுபடாத, பிரிவு படாத, பேதங்களின்றிய மக்கள் ஒற்றுமைதான்.
இங்கு ஒற்றுமை என்று நாம் முன் மொழிகிறபோது, எது ஒற்றுமை? எந்த ஒற்றுமை? என்பதிலும் தெளிவு வேண்டும் நமக்கு. எமது மார்க்சிய ஆசான்கள் எமக்கு கற்றுக் கொடுத்த, எமது தொழிற்சங்க போராட்டக் களங்களில் நான் அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம் என்பது "போராட்ட ஒற்றுமை என்பது தேவை முடிந்தவுடன் கலைந்துவிடும். மாறாக தீர்வுக்கான ஒற்றுமைப் போராட்டம் என்பதுதான் இறுதி வெற்றியைத் தரும்."
- பாட்டாளி