முன்குறிப்பு:

நீட் எதிர்ப்புப் போராட்டம், இன்றைய தமிழகச் சூழலில் கல்வி, சமூக நீதி, மாநில உரிமை பல விசயங்களைப் பற்றிய உரையாடல்களை முன்னுக்குக் கொண்டுள்ளது. இந்த உரை யாடலுக்கு நா. வானமாமலையின் தமிழ் மொழிக் கல்வி என்னும் இக்கட்டுரை பெரிதும் உதவும். தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியின் வாயிலாகவே கற்பிப்பிலும் கற்றுக் கொள்வதிலும் வளர்ச்சியைப் பெற முடியும்; ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன் வாய்ந்த மாணவர்கள் உருவாக முடியும். ஆங்கில வழிக் கல்வியும் ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வும் நம் நாட்டில் அறிவியல் மனப்பாங்கையும் சிந்தனையும் வளர்க்காது, கல்வித் தரமும் உயராது, சிந்தனைத் திறன் மிக்க மாணவர்களும் உருவாக மாட்டார்கள். இவையெல்லாம் நா.வா. முன்வைத்த அறிவார்ந்த கருத்துகள். இக்கருத்துகளுக்கு இன்றைய இந்தியக் கல்விமுறையே ஆதாரமாய் நிற்கின்றது. சமூகநீதியையும் மாநில உரிமையையும் புறக்கணிக்கும் உலக முதலாளிய வாணிக வெறியை ஊக்குவிக்கும் நீட் தேர்வை எதிர்த்த போராட்டத்தில் நா.வா.வின் கீழ்க்கண்ட கருத்துகள் கவனம்பெற வேண்டும்.

தாய்மொழியில் கற்பதால் என்ன நன்மை? 16 மணி நேரம் ஆங்கிலத்தின் மூலம் பயிலும் பாடங்களை 10 மணி நேரத்தில் தாய் மொழியில் பயில முடியும் என்று மகாத்மா காந்தி கூறுகிறார். இதனையே பல கல்வி வல்லுநர்களும் கூறியுள்ளனர். அவ்வாறாயின் ஒரு மணி நேரத்தில் 3/8 மணி நேரம் வீணாகிறது. காந்தியடிகள் குறிப்பிட்ட காலத்திலிருந்து இக்காலத்து மாணவர்களின் ஆங்கிலத்தின் தரம் குறைந்துள்ளது. எனவே பாதி நேரம் ஆங்கில மொழிச் சுமையால் வீணாகிறது. நம்முடைய கல்லூரிகளில் 4 வருஷம் பயிலும் பாடங்களைத் தமிழில் கற்பித்தால் 2 வருஷங்களில் கற்பிக்க முடியும்.

மிச்சமுள்ள 2 ஆண்டுகளில் மூன்றாவது பாகப் பாடங்களின் அளவை உயர்த்தலாம். தற்காலம் நமது பட்டப்படிப்பின் தரம், மேனாடுகளின் பட்டப் படிப்பின் தரத்திற்கு மிகவும் தாழ்ந்துள்ளது. அங்குப் பட்ட மேற்படிப்பு (வி.கி.,) படிக்கச் செல்லுமுன் இங்குப் பட்டப் படிப்புப் படித்தவர்கள் மேலும் 6 மாதங்கள் புதிதாகப் பல பாடங்களைப் படிக்க வேண்டியதிருக்கிறது. நம் பல்கலைக்கழகப் பயிற்சிகளில் பல பாடங்கள் மிகவும் பழமையானவையாக இருக்கின்றன. நமது பாடத் திட்டங்களை நவீனப்படுத்த வேண்டும். நவீனப்படுத்து வதற்குள்ள தடை, ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பதுதான். இப்பொழுதுள்ள குறைந்த அளவிலுள்ள பாடத்தையே நடத்த முடியவில்லை. தமிழில் கற்பித்தால் அதிக அளவிலும், நவீனத் தலைப்புகளை அதிகரித்தும் கற்பிக்க முடியும். இப்பொழுது ஆங்கில மொழி யறிவைப் பெறச் செலவழிக்கும் நேரம், பௌதீகம், ரசாயனம், தரையியல், உயிரியல், பொறியியல் போன்ற பொருள் பாடங்களைக் கற்பதில் செலவிடப்பட்டால், பொருளறிவு மிகும்.

···

மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளைச் சில ஆண்டுகளாக இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் தென்னிந்தியர்கள் ஆங்கிலத்திலும், ஆங்கில மொழியின்மூலம் விடையெழுதும் பிற பாடங்களிலும், குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எவ்வளவுதான் ஆங்கில அறிவைத் தென்னிந்தியர்கள் விருத்தி செய்து கொண்டாலும், இந்தி பேசுபவர்களின் இந்தி அறிவுக்கு ஒப்ப ஆங்கில மொழியறிவு பெற முடியாது. எனவே அதிக மதிப்பெண்கள் பெற தமிழர்கள் தமிழிலேயே விடையெழுத வேண்டும். சென்ற ஆண்டிலிருந்து நமது தேசீய மொழிகள் அனைத்திலும் விடை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத வசதியிருக்கும் போது ஆங்கிலத்தில் விடையெழுதி குறைந்த மதிப் பெண்கள் பெற்றுத் தோல்வியடைவது ஏன்? மத்திய அரசு தேர்வுகளை நம் தாய்மொழியிலேயே எழுது வதற்குத் தடையென்ன?

மத்திய அரசுத் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளை ஞர்கள் போதிய அளவு வெற்றி பெறாததற்கு இது மட்டும் காரணமன்று. நமது பல்கலைக்கழகங்களில் சில, புகுமுக வகுப்பை இரண்டு ஆண்டுகளாகவும், பட்டப் படிப்பை மூன்று ஆண்டுகளாகவும் வைத்திருக்கின்றன. இங்கு மொத்தப் பட்டப்படிப்புக் காலம் ஒரு ஆண்டு குறைவு. பட்டப்படிப்பில் பல பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் குறைத்து, மூன்றாவது பாகத்தில் இரண்டு மேஜர் பாட அளவுக்குக் கற்பிக்கிறார்கள். ஆகவே இரண்டு பாடத்தில் அவர் களுக்குப் போதிய பொருள் அறிவு உண்டாகிறது.

சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பயில்வதிலேயே அதிக நேரம் செலவாகிறது. எனவே மூன்றாவது பாகத்தில் உள்ள பாடங்களுக்கு நேரம் போதவில்லை. எனவே வட நாட்டுப் பல்கலைக்கழகப் பட்டப் பயிற்சிக்குரிய பாடத் திட்டத்தைவிட நமது பாடத்திட்டம் குறைவானது. அதிலும் அவர்கள் இரண்டு மேஜர் பாடங்களைப் பட்டப் பயிற்சிக்கு வைத்திருக்கும் பொழுது, நமது பல்கலைக்கழகங்கள் ஒரு மேஜர் பாடத்தையே வைத்திருக்கின்றன. எனவே மொழிப் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினால், மூன்றாவது பாகத்திற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை.

எனவே நம்முடைய மாணவர்கள் மூன்றாவது பாகத்தில், வடநாட்டு மாணவர் கற்பதற்கு பாதிக்கும் குறைவாகவே கற்கிறார்கள். முக்கியமாக நமது மாணவர்கள் மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் தோல்வி யுறுவதற்குக் காரணம் இதுவே. புகுமுக வகுப்பிற்கு மேல், மொழிப் பயிற்சிக்கான நேரத்தை பாதியாகக் குறைத்தால் மூன்றாவது பாகத்திலுள்ள பாடத் திட்டத்தை அதிகமாக்கலாம். இதனால் பட்டம் பெறுபவா¢களின் பொருளறிவு அதிகமாகும். இந்தியா முழுவதற்கும் ஒரே விதமான பாடத்திட்டம் அவசியம். இல்லாவிட்டால் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

···

அறிவியல் கல்வி வேற்று மொழியில் இருக்கும் வரை அது மக்களிடையே பரவாது. ஒரு சில வசதி பெற்றவர்களிடையேதான் நிலைத்திருக்கும். அவர்கள் தங்களுக்குப் போட்டி ஏற்படாத வகையில் பொது மக்களிடையே அறிவுக் கல்வி பரவுவதைத் தடுப்பார்கள். நாட்டு மக்களிடையே கல்வியும், அறிவியலும் பரவ வேண்டுமானால், அவர்களுடைய மொழியையே கல்வி புகட்டவும், அறிவியலைப் பரப்பும் சாதனமாகக் கொள்ள வேண்டும். நமது நாட்டிலும் தமிழே பயிற்று மொழியானால், தமிழிலக்கியத்திலும், அறிவியலிலும், பண்பாட்டியலிலும், மாபெரும் மறுமலா¢ச்சி ஏற்படும். தமிழ்நாட்டில் மாபெரும் அறிவியக்கம் தோன்றும். ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கும்வரை, படித்தவர் களிடையே அரைகுறையறிவும், அதனைத் தனக்காகப் பயன்படுத்தக்கூடிய போக்கும் தான் இருக்கும். தமிழ்நாடு முன்னேற வேண்டுமாயின் நமது இளம் சந்ததி யினர், தமிழ் மூலம் அறிவியலையும் பண்பாட்டினையும் கற்று, தமிழர் சமுதாயத்தின் நன்மைக்காக அறிவியல் அறிவைப் பயன்படுத்துவதோடு, அதனை எல்லோரும் எல்லா வாய்ப்பும் பெற்று முன்னேறக்கூடிய திசையில் மாற்ற முன்வரவேண்டும். அப்பொழுது தான் பண்பாடு வளரும்.

(ஆராய்ச்சி இதழ் 4-ல் நா.வானமாமலை எழுதிய கட்டுரையின் குறிப்பிட்ட சில பகுதிகள்)