நாளுக்கொரு அறிக்கை, வாரத்திற்கொரு பாராட்டுவிழா என்று நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. பணம், பதவி, அதிகாரம் இவற்றின் துணைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என எண்ணுகிறார். படித்த, அண்டிப்பிழைக்கும் கூட்டத்தைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு கோயபல்ஸ் பாணியில் பரப்புரை செய்கிறார்.

        தன் பேச்சு, எழுத்துத் திறனைப் பயன்படுத்தி மெய்யை பொய்யென்றும், பொய்யை மெய்யென்றும் சாதிக்கின்றார்.

        காவல்துறை மூலம் மிரட்டல்கள், அதிகாரிகள் மூலம் வருவாய் வரி சோதனைகள் என்று எதிர்ப்பவர்களை ஒடுக்கிறார்.

        ‘கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது காவிரி உரிமையை காவு கொடுத்தேன், இந்த முறை ஆட்சியில் இருக்கும்போது ஒகேனக்கல் உரிமையையும், முல்லைப் பெரியாற்று உரிமையையும் கைக் கழுவினேன். ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் சாகும்போது நான்தான் ஆட்சியில் இருந்தேன்’ என்று கலைஞரின் துரோகம் தொடர்கிறது.          தமிழின உரிமைகளைக் காவு கொடுத்து தன்னல அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்.

        திரைப்படத்துறையைச்சார்ந்த நலிந்த கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள சென்னை பையனூருக்கு அருகில் 90 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” திரைப்படத்துறையின் சார்பில் பிப்ரவரி 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

        நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள், ராஜாராணி படத்தில் கலைஞர் வசனத்தை சிவாஜி பேசும் காட்சிகள் திரையிடப்பட கலைஞர் கண்ணீர்விட, நடிகர்கள் ரஜினி, கமல், பிரபு ஆகியோரும் கண்ணீர்விட அடுத்து அரங்கேறியதுதான் அஜீத்தின் பேச்சு.

        “கொஞ்ச நாட்களாக திரையுலகம் மீது உங்களுக்கு கோபம் இருக்கலாம். ஒவ்வொரு மக்கள் பிரச்சினைகளின் போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் முன்பு திரையுலகில் பொறுப்பில் இருக்கும் சிலர் அறிக்கை விடுவதும், ஊர்வலம் நடத்துவதும் எந்த வகையில் நியாயம்?

        அந்த நிகழ்ச்சிகளுக்கு நடிகர், நடிகைகளை கட்டாயப்படுத்தி வரவழைக்கிறார்கள். அப்படி வராவிட்டால் மிரட்டுகிறார்கள். அல்லது தமிழன் இல்லையென்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் அய்யா.

        எங்களுக்கு அரசியல் வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். அதற்கு முன்பு திரையுலகில் பொறுப்பில் உள்ள ஒரு சிலர் அறிக்கைவிடுவதை தடுக்க வேண்டும் அய்யா” என்று அஜீத் பேசி முடித்தவுடன் கருணாநிதி அருகில் உட்கார்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார். கமலஹாசனும் பாராட்டினார்.

        காவிரி, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், ஈழம் சார்ந்த சிக்கல்களில் தமிழ்த் திரையுலகினர் நடத்திய போராட்டங்கள் குறித்துதான் அஜீத் பேசியுள்ளார்.

        அஜீத் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடவில்லை. தமிழ் இனத்துக்கு எதிராக தனது கருத்துகளை தயாரித்து, திட்டமிட்டுதான் பேசியுள்ளார்.

        கர்நாடகத்தில் உள்ள திரையுலகினர் காவிரி, ஒகேனக்கல் சிக்கல்களில் தமிழினத்திற்கு எதிராகப் போராடினார். இதற்கு பதிலடியாகத் தமிழ்த் திரையுலகினரும் போராட்டம் நடத்தினர்.

        2002-இல் காவிரி உரிமை மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரம் தராதே என்று பாரதிராஜா, விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடந்தபோது இப்போராட்டத்தை சீர்குலைக்க கருணாநிதி முயன்றார்.

        எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி போராட்டம் நடத்துவதற்கு பதில் போராட்டத்தை முடக்குவதற்கு ரஜினிகாந்தை தூண்டிவிட்டார். தி.மு.க.நடிகர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றார். ரஜினிகாந்த் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். கருணாநிதி, ப. சிதம்பரம் உள்ளிட்டவர்கள் ரஜினிகாந்தை ஆதரித்தார்கள்.

        2008-ல் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த கன்னட திரையுலகம் நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதத்தம்மாள் தலைமையில் போராடியது தமிழ்த் திரையுலகம் சார்பில் சென்னையில் இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்திப் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். மறுநாள் ஒகேனக்கல் திட்டம் குறித்து கர்நாடகத் தேர்தல் முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

        இந்த இரண்டு போராட்டங்களிலும் அஜீத் கலந்துகொண்டார். இரண்டுமே கர்நாடகத்துக்கு எதிரான போராட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அஜீத் ஒரு மலையாளி.

        ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் நடந்த பேரணி - பொதுக்கூட்டத்தில் நடிகர் சங்கத்தினர் கலந்துகொள்ளவில்லை. தங்கும் வசதி பாதுகாப்பு தொடர்பாக கலந்துகொள்ளவில்லை என்று கூறினர். பின்பு சென்னையில் பட்டினிப் போராட்டம் என்று அறிவித்தனர்.

        சோனியாவே, போரை நிறுத்து! என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொள்ள முதலில் அஜீத்தும், கன்னடர் அர்ஜூனும் மறுத்தனர். அங்கே இறந்தால் இங்கே எதற்கு போராட்டம் என்று அஜீத் கூறினார்.

        எனவே அப்போது வெளியாகவிருந்த அஜீத் நடித்த ‘ஏகன்’ படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் அறிவித்தனர். பின்பு அஜீத் பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்டார்.

        தமிழ்நாட்டில் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அஜீத் மலையாளியாகத்தான் வாழ்கிறார். இவரைத் தான் நமது இளைஞர்கள் சிலர் ‘தல’ என்று கொண்டாடுகின்றனர். தமிழனுக்காகக் கண்ணீர் சிந்தக்கூட யோசிக்கிற இவருடைய கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்து மகிழ்கின்றனர்.

        கருணாநிதிக்கு நன்றி அறிவிக்கும் விழாவில் அஜீத் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

        இயக்குநர் மணிரத்னம் வீட்டுச் சுற்றுச்சுவரில் வெடிகுண்டு வெடித்தவுடன்தான் ரஜினிகாந்த் அலறினார். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவுகிறதென்று பேசினார். மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்டவுடன் அஜீத் பதட்டப்படுகிறார். கங்காணி கருணாநிதிக்கும் கோரிக்கை வைக்கிறார். செயராம் வீடு ஏன் தாக்கப்பட்டது?

        மலையாளத்தில் ‘ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ்’ என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் தொடர்பாக இப்படத்தில் நடித்த ஜெயராம், ஜெயசூர்யா உட்பட பலர் கலந்துகொண்ட “இவ்விடம் ஹஸ்பண்ட்ஸ் ஹாப்பியானு” என்ற நிகழ்ச்சி ஏசியாநெட் தொலைக்காட்சியில் சனவரி 25,26 நாட்களில் இரவு ஒளிப்பரப்பட்டது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் செயராமிடம், படத்தில் உள்ளது போல் வேலைக்காரியை நிஜத்தில் சைட் அடிப்பீரா? என்று கேட்டதற்கு செயராம், “அப்படி ஒன்றும் இல்லை என் வீட்டு வேலைக்காரி தடித்த, கறுத்த தமிழச்சி, போத்து (எருமை) போல் இருப்பார். எப்படி சைட் அடிக்கத்தோணும்?” என்று பதிலளித்தார்.

        உழைக்கும் பெண்களைத் தரம் தாழ்த்தி இழிவுப்படுத்திய செயராமை பெண்ணுரிமை பேசும் ‘போராளிகள்’ நடிகைகள் குஷ்பு, சுஹாசினி உள்ளிட்டோர் கண்டித்தார்களா?

        தமிழச்சிகளை இழிவாகப் பேசிய செயராம் நகைச்சுவைக்காதத்தான் பேசினேன் என்று சொன்னாரே யொழிய முதலில் மன்னிப்புக் கோரவில்லை.

        நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் செயராமின் நடவடிக்கையினைக் கண்டித்து அவரது வீட்டைத் தாக்கினர். தமிழகக் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று அக்கட்சித் தோழர்கள் சிலரைக் கைது செய்தது. இயக்குநர் சீமான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

        காவல்துறை கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது என்றார் கருணாநிதி. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் வாகனம் எரிக்கப்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளப் பொருட்கள் சேதமானது. இயக்குநர் சீமான் வாகனம் எரிக்கப்பட்டது. காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டது யார்?

        ஒரு மலையாளியின் வீடு தாக்கப்பட்டவுடன் இன்னொரு மலையாளி அஜீத் எப்படி துடிக்கிறார்.

        மலையாளிகள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. கோவை, திருப்பூர், கரூர் பகுதிகள் மலையாளிகள் மயமாகிக் கொண்டிருக்கிறது. ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லரி, முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.

        தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்விக்கு தடைவிதிக்க சென்னையிலுள்ள கேரள சமாஜமும் கன்னியாகுமரி நாயர்கள் சங்கமும் வழக்குத் தொடுத்துள்ளன.

        தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்ததோடு அல்லாமல், தமிழர்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் எதிராக செயல்படும் மலையாளிகளை வெளியேற்ற வேண்டுமென்றால் சில ‘முற்போக்குகள்’ பாட்டாளி வர்க்க ஒற்றுமை பற்றி நமக்கு பாடம் நடத்துகின்றன.

        மலையாளி அஜீத்தின் ஆவேசம் கன்னட ரஜினிக்கு உற்சாகம் கொடுக்கிறது. எழுந்து நின்று கைத் தட்டுகிறார்.

        அண்மையில் ஜெகத் ரட்சகன் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தியபோது ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாராட்டினார். அப்போது, “சென்னையில் சிலை திறக்கப்பட்ட சர்வக்ஞர் ஓர் பகுத்தறிவாதி. சாதியை வெறுத்தவர். அனைத்துத் தரப்பினரும் எப்படி வாழவேண்டும் என்று வரைமுறை செய்தவர். அவர் ஒரு சித்தர். அவருடைய சிலையை இங்கே வைக்க முதலமைச்சர் கருணாநிதி பெரும் முயற்சி எடுத்தார். அவரை நான் பாராட்டுகிறேன் என்றார். 18 ஆண்டுகாலமாக பெங்களூரில் மூடப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பது குறித்து வாய்திறக்காத ரஜினிகாந்த் சர்வக்ஞர் சிலை திறப்பதை நியாயப்படுத்துவது அவரை அடையாளப் படுத்துகிறது.

        குசேலன் படத்தை திரையிட மறுத்த கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டார். ஒகேனக்கல் தொடர்பான போராட்டத்தில்தான் பேசியது தவறு என்றார். கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த் இதுவரை தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டாரா?

        “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்”, “என் ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்தது தமிழல்லவா?” என்று பாடி நடிப்பதோடு சரி. தமிழர்களுக்கு உண்மையாக நடந்துகொள்கிறாரா? இல்லையே.

        மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்ற முடியாது. தமிழ்ப்பெயரை தன் படத்துக்கு வைக்க முடியாது என்று மறுத்த கமலஹாசன் அஜீத்தை பாராட்டுகிறார். கமலஹாசனும், ரஜினிகாந்தும் கருணாநிதியின் நிலைய வித்துவான்கள் போல செயல்படுகிறார்கள்.

        அஜீத் நடித்து அண்மையில் வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் உள்ளன. இக்காட்சிகளை தவிர்க்குமாறு மருத்துவர் அன்புமணி இராமதாசு அஜீத், நடிகர் பிரபு, இயக்குநர் சரண் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

        இதை அஜீத் மிரட்டல் என்கிறார். நடிகர் அஜீத் சமூக அக்கறையற்றவராக இருப்பதோடு மட்டுமின்றி மற்றவர்களையும் கருணாநிதியை அண்டிப்பிழைக்கச் சொல்வது என்ன நியாயம்?

        திரையில் அநீதிகளை எதிர்க்கிற வீரனைப் போல் நடிக்கும் அஜீத் உண்மையில் தன்னை மிரட்டியது யாரென்று சொல்ல வேண்டியது தானே? பதுங்குவது ஏன்?

        சில ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தாவில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் தொடக்க நாளன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குத்துவிளக்கேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று வங்காளிகள் கூறினர்.

        வங்காளிகளைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் போராடியதா?

       இயக்குநர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டார்களே? ஒட்டுமொத்த திரையுலகமே போராடியதா?

         காவிரி, ஒகேனக்கல் சிக்கலில் கூட தமிழ்த் திரையுலகினர் தாமாக முன்வந்து போராடவில்லை. கன்னடர்களுக்கு எதிர்வினையாகத்தானே போராடினார்கள். இதுவும் அஜீத் வகையறாக்களுக்கு பிடிக்கவில்லை.

        ஈழத்தமிழர்களுக்காக நாம் அழக்கூடாதா? நம்மை விட்டால் வேறு யார் அழுவார்? யார் அழுதார்? உளியின் ஓசை கேட்டவர் உயிரின் ஓசையை கேட்கவில்லையே?

        அதனால் தானே நாம் போராடுகிறோம். இது அஜீத்திற்கு பிடிக்கவில்லை.

        தமிழ்த் திரையுலகினர் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - சீனா போர்களின்போது கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். நிதி திரட்டிக் கொடுத்தனர். கார்கில் போருக்கும், குசராத் பூகம்பத்திற்கும் நிதி கொடுத்தனர்.

        நம்முடைய சொந்த இனம் ஈழத்தில் அழியும்போது நமக்காக யார் குரல் கொடுத்தார்கள்? யார் உதவி செய்தார்கள்? யார் கண்ணீர் விட்டார்கள்? என்பதை இன உணர்வுள்ள திரைப்படத் துறையினர் சிந்திக்கவேண்டும்.

        தமிழ்த் திரையுலகம் 80 விழுக்காடு பிறமொழியினர் ஆதிக்கத்தில் உள்ளதை மாற்றவேண்டும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டு நடிகர்கள் சங்கம் என்பது போன்ற பெயரில் தமிழர் அமைப்புகள் செயல்பட வேண்டும்.

        தமிழ்த் திரையுலகில் அரும்பி வருகிற இனஉணர்வைக் காயடிக்க கருணாநிதி துணையோடு வருகிறவர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

- நா.வைகறை 

Pin It