மோடியைப் பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு...
மோடியைப் பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன...
அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்....
இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது.
"நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்"
என்று அவர் அடுக்கிய வரிசைக் கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி குறித்து எல்லாம் கவனத்தில் கொள்ளாத அவர், தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது, அதனால்தான் பாஜக தோற்றுப் போனது என்று மட்டும் சொன்னார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனிதத் தலைமைக்குக் கிடைத்த வெற்றி, வாஜ்பாய்க்குப் பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக மோடி திகழ்கிறார் என்று சொல்லத் தெரிந்தவரால் திமுகவின் வெற்றி ஸ்டாலினின் வெற்றியாகப் பார்க்கத் தெரியவில்லை. அல்லது அப்படிச் சொன்னால் எங்கே சிக்கல் வந்துவிடுமோ என்ற பயத்தினால் இருக்கலாம்.
மற்றபடி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக, அதன் தலைவர் ஸ்டாலினின் வெற்றியையும் இதே கோணத்தில்தான்தான் பாஜகவினரும் அந்தக் கட்சிக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டோரும் பார்க்கிறார்கள்... அல்லது நிறுவ முயல்கிறார்கள்...
ரஜினியின் பேட்டியும் இதே பொருள்படத்தான் அமைந்திருக்கிறது...
திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாகிக் கொண்டிருக்கிறார்... இதை மற்ற தலைவர்கள் எல்லாம் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.... வாக்கு சதவீத அடிப்படையில் மாபெரும் கட்சியாக உருவெடுக்க வைத்ததில் தமிழக மக்களின் பங்கு மகத்தானது.
ஸ்டாலினின் வெற்றியை மக்கள் வெற்றியாகக் கருதாமல் மீண்டும் மாயவலைக்குள் சிக்க வைக்க நடக்கும் முயற்சியாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
மோடி எதிர்ப்பு அலையை ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டார் என்றால், அதே எதிர்ப்பு அலையை மற்றவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கலாமே? ஏன் வைப்புத் தொகையைக்கூட இழந்து நிர்க்கதியாய் நின்றார்கள்?
ரஜினி, சீமான் மற்றும் பாஜக ஆதரவு மனோபாவம் கொண்டோர் சிந்திக்க வேண்டாமா...?
- சஞ்சய் சங்கையா