கள் குடித்து போதையேறிய குரங்கை, தேளும் கொட்டினால் என்ன நடக்குமோ அதுதான் தமிழக அரசால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமச்சீர்க்கல்வி கேட்ட மாணவர் போராட்டத்தை ஒடுக்குவதில் துவங்கி வேலைக்கான இளைஞர்கள் போராட்டம்வரை ஜனநாயக முறையில் நடைபெறும் அனைத்துப் போராட்டங்களையும் தடிகொண்டு அடக்கி ஒடுக்குவதில் கலைஞரும் காவல்துறையினரும் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வயதுக்குமேல் கவனத்துடனும் ஆரோக்கியத்துடனும் வேலை செய்ய முடியாது என அறிவியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஆராய்ந்து, ஓய்வுபெறும் வயதை நிர்ணயித்து, ஓய்வுபெற்றுவந்த அரசு ஊழியர்களுக்கு இனி, சாவு மட்டுமே ஓய்வைத்தரும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர், 18-12-09 அன்று அரசாணை எண் 170ஐ வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் காலியாக உள்ள பல லட்சம் பணியிடங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பும்படி அந்த அரசாணை கூறுகிறது. கலைஞர் வேண்டுமானால் நாள்தோறும் நடைபெறும் நடிகர் நடிகைகளின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டும், பல விதமான பெயர்களில் விருதுகளை கொடுத்துக் கொண்டும்,  பெற்றுக்கொண்டும் வயதாவது தெரியாமல் இளமைக் கடலில் திளைத்திருப்பது போல் உணரலாம். ஆனால், சாதாரண அரசு ஊழியரின் நிலை அதுவல்ல.

ஏற்கனவே, தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் நூலகங்களை அமைத்து நிர்வகிப்பதற்கு அரசாணை எண் 177 மூலம் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ரூ.1000 அத்துக்கூலிக்கு அமர்த்தியது. அரசாணை எண் 274 மூலம் அரசுக் கல்லூரிகளில் 3025 காலிப்பணியிடங்களில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நிரப்பியது தமிழக அரசு. பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயில் இஞ்சினியரிங் துறைகளில் ஓய்வுபெற்றவர்களை வேலைக்கு எடுக்கும் திட்டமும் உள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது நம்பிக்கை வைத்து பதிவுசெய்து வேலைக்காக காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை 62 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் (வேலைவாய்ப்பு அலுவலகங்களை நம்பாமல், பதிவு செய்யாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, பதிவு செய்தவர்களின் அதே அளவு எண்ணிக்கையில் இருக்கக்கூடும்) ஓய்வுபெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்த பிறப்பித்துள்ள அரசாணை 170ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இதைவிட திமுக அரசு தமிழக இளைஞர்களுக்கு வேறு என்ன தீமை செய்துவிடமுடியும். தற்போது, கலைஞரின் சிந்தனையில் ஓடிக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான். அது, உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டை நடத்தி முடிப்பதும் வருடம் 365 நாளும் பாராட்டு விழா எடுப்பது எப்படி என்பதும்தான்.

மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு? என்பது போன்ற இளைஞர்களின் சிந்தனையைத் திசைத்திருப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருக்கும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிச் செய்திகளில், அன்னிய வெள்ளைக்கார துரைகளை அழைத்துவந்து, ‘இதோ புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டோம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடும்’ இனி இளைஞர்களின் வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று துவக்கவிழாவை நடத்தி, ஊடகங்களில் காட்டி விளம்பரம் தேடிக்கொண்டு, அத்துடன் அதற்கு மூடுவிழாவும் நடத்திவிட்டு, சத்தமின்றி பாராட்டு விழாக்களுக்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல்வரும் துணைமுதல்வரும் தங்களது கொற்றக்குடையின் கீழ் வேலையின்மை என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்து பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டுக்கு விரட்டப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் அறிவிக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக இளைஞர்களுக்கு எந்தப்பலனையும் அளிக்கவுமில்லை அளிக்கப்போவதுமில்லை என்பது திண்ணம்.

மேலும், தமிழகத்தில் இருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களில் எந்தவித சமூக பாதுகாப்புமின்றி, அத்துக்கூலிகளாக, காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக, ஆபத்தென்றால் ஏனென்று கேட்க ஆளற்ற அனாதைகளாக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். ஹுண்டாய் துவங்கி சமீபத்தில் நோக்கியா நிறுவனங்கள் வரை தொழிலாளர்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தைத் தீவிரமாகத் துவக்கியுள்ளனர். தமிழக தொழிலாளர் துறையோ இவையனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதோடல்லாமல் பன்னாட்டு முதலாளிகளுக்குச் வெண்சாமரமும் வீசிக்கொண்டிருக்கின்றது.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விரக்தியின் விளிம்பிற்கு மக்கள் தள்ளப்படும்போது பணத்திற்காக முதலில் கையில் ஆயுதம் எடுப்பவர்கள் இளைஞர்கள் தான். கூலிக்கு கொலை, திருட்டு, வழிப்பறி, கள்ளநோட்டு மாற்றுதல், நவீன தொழில் நுட்பமுறையில் ஏமாற்றுதல், கற்பழிப்பு, சாதி, மதம், இன வெறிகளுக்கு அடிமையாதல், பிரிவினைவாதிகளுக்கும் சீர்குலைவுவாதிகளுக்கும் இரையாதல், நக்சல், தீவிரவாதத்திற்குத் துணையாய் நின்று நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் இருத்தல். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும்போது மேற்கண்ட இவைகளும் கூடவே வளரும் என்பது பல ஆராய்ச்சியாளர்களால் கணித்து சொல்லப்பட்ட உண்மை. மேலும், வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது குறைந்தபட்சக் கூலியும் கேள்விக்குறியாகிறது.

பேருந்துகளிலும் ரெயில்களிலும் ‘மாதம் 20 ஆயிரம் சம்பளம், வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்’ என்பது போன்ற வாசகங்களை அதிகமாகக் காணலாம். இவ்வளவு பெரிய நாட்டில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லையா எனவும் தோன்றலாம். ஆனால், அதுவும் வேலையின்மையால் ஏற்பட்ட ஏமாற்றும் தொழிலின் ஒரு வடிவமே.

தொண்ணூறுகளில் உலகமய அமலாக்கத்திற்குப் பிறகு தமிழக தேர்வாணையம், கல்வி, மருத்துவம், ஊரக வளர்ச்சி, வேளாண் துறை, பொதுசுகாதாரம், வேலைவாய்ப்புத் துறை, காவல்துறை, அரசுப் பொதுத்துறைகள் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள பல லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில் மிகவும் கொடுமை என்னவென்றால் வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே காலிப்பணியிடங்கள் 60 சதத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசு வேலையில்லா கால நிவாரணம் கொடுப்பதாக கூறுகிறது. 33 லட்சத்து 43 ஆயிரம் இளைஞர்கள் வேலையில்லாக்கால நிவாரணம் பெற தகுதியானவர்கள். ஆனால், திமுக அரசு கொடுக்கும் நிவாரணமோ வெறும் 3 லட்சத்து 50 பேருக்குத்தான்.

தமிழக இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட கேவலமான நிலையை ஏற்படுத்திய அரசாணை எண் 170ஐ ரத்து செய்யவேண்டுமென தமிழகமெங்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி சிறையிலிருந்த தொழில்முறைக் கொலையாளிகள் உட்பட ஆயிரம் குற்றவாளிகளை விடுதலை செய்து தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்ட கலைஞர், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய சுமார் 1000 இளைஞர்களை சிறையிலடைத்தார். போராட்டம் என்ற வார்த்தையைக் கேட்டாலே, என் ஆட்சியில் எங்கு கண்டீர் குறை என பொங்கி எழுகிறார் கலைஞர். கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்பு, இந்திராகாந்தி எதிர்ப்பு என அடுக்கடுக்கான போராட்டங்களையும், தண்டவாளத்தில் தலையை வைத்தவன் நானென்றும் பெருமை பேசும் கலைஞர், தமிழக இளைஞர்கள் தங்கள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை நடத்தினால் அவர்களை சிறையில் தள்ளி வேடிக்கைப் பார்ப்பது, வக்கிரத்தின் உச்சக்கட்டத்தில் கலைஞர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற வாசகமெல்லாம் குறளோவியம் படைத்த கலைஞருக்கு தெரியாதது அல்ல, அப்படிப்பட்டவர்களை மக்கள் தங்களின் போராட்டங்களால் தான் தூக்கியெறிந்தார்கள் என்பதும் அவருக்குப் புரியாததுமல்ல!


-இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It