கீற்றில் தேட...

சினிமா பாடகர் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்திய வீடியோ பேட்டியை விமர்சித்து கீற்று தளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் வெளிப்படும் அற்பவாத (பிலிஸ்டைன் வாத) பண்பினை விமர்சனமாக முன்வைத்திருந்தார்கள்.(http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/40893-2020-09-28-10-30-17).

இதற்கு முகநூலில் பதிலளிக்க முன்வந்த கோவனது சகோதரி, “எங்க அண்ணனை விமர்சிக்கிறீங்களே… நூறுகோடி ரூபாய் ஊழல் பண்ணியவர்களைப் போய் விமர்சிக்கத் துப்பில்லையா?" என (புஜதொமு தங்கராசுவை முன்வைத்து) கேள்வி எழுப்பினார். இதற்கு கோவனது எதிர்தரப்பினர் பின்வருமாறு பதில் பதிவு போட்டனர்.

“உங்க பக்கத்துல இருக்குற மருதையன், வினவு நடத்தியதற்காக, தான் ரூ.5 லட்சம் முதலீடு செய்ததாக சொல்லி அத்தொகையை வசூலித்துக் கொண்டுதான் காளியப்பனிடம் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், இவ்வாறு அன்று வினவின் பொறுப்பை ஏற்ற காளியப்பன் இன்று மருதையனோடு சேர்ந்து கொண்டார்” என்றும்,

மேலும் “ஊழல் நடந்தபோது தன் சொந்தத் தேவைக்காக ’ஊழல்வாதி’ தங்கராசுவிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்ட பு.மா.இ.மு கணேசன், (மருதையன் (அ) கோவன் அணியின் பிரமுகர்) இப்போது வரை அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லையே.. ஏன்? தங்கராசுவின் ஊழலுடன், அவரிடம் பண உதவி, சலுகை பெற்றவர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்றும்,

“நூறு கோடி ஊழலை கட்சிக்குள் விசாரித்த குழுவின் அறிக்கையை குழுவிற்கு தருவதற்கு முன்னரே குற்றம்சாட்டப்பட்ட தங்கராசுவுக்கு படிக்க தந்த புஜதொமு தலைவர் முகுந்தன், இன்று நல்ல பிள்ளை போல மருதையன் அணிக்கு வந்து விட்டாரே? இது நேர்மையான செயலா?” என்றெல்லாம் எதிர்க்கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

‘புரட்சிகர!’ கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி மோதல்கள் இன்று அதிமுகவில் நடப்பதைப்போல தினமும் குழாயடிச் சண்டையாக வளர்ந்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக, தனிநபர் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சனைகள் தான் அமைப்பின் சீர்குலைவுக்கு அடிப்படைக் காரணம் என்பதைப் போன்ற தோற்றத்தை இவர்கள் பொதுவெளியில் ஏற்படுத்தி வருகிறார்கள்!

இது சோற்றுக்குள் பூசணியை மறைக்கும் மூடத்தனம் என்பதாலும், கடந்த காலத்தில் நாமும் இவர்களுடன் குப்பை கொட்டிய அனுபவத்தில் இருந்தும் அந்தக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து எங்கள் அறிவுக்குப் புலப்பட்ட சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவரவர் விருப்பம்.

***********

வாரத்தில் ஆறு நாட்கள் நிறுவனத்திற்கு உழைத்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்வின்றி கட்சிக்கு (சமூகத்துக்கு) உழைக்க வந்தாலும் அவர் பெறும் ஊதியத்தை சுட்டிக்காட்டியே அவரை ‘குட்டி முதலாளித்துவ பின்னணி’, ‘மூளைச் சோம்பேறி’... இன்னபிற வார்த்தைகளால் வறுத்தெடுத்த தலைமைத் தோழர்கள், இன்று கோடிகளில் ஊழல் செய்கிறார்கள்.

மருதையனைப் போன்ற தலைவர்கள் உள்ளிருக்கும் போதும் சரி வெளியேறிய பிறகும் சரி, ஒரு செட்டிலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அதனைத் துளியும் இழக்காமல் மேடைப்பேச்சு, எழுத்து, பாடல்கள் மூலம் புரட்சியாளராக வலம் வந்தார் மருதையன். இவர் தனது வசதிக்காக, தான் குடியிருக்கும் ஏரியாவை மையப்படுத்தி, வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்களை குடியேற வைத்து. அவர்களை வேறெங்கும் நகர விடாமல் வேலை வாங்கி புரட்சி நடத்தி வந்தார். இதன் காரணமாக பல தோழர்கள் தங்களது வேலை செய்யுமிடத்துக்கு தினமும் பல மணிநேரம் பயணித்து மனித நேரத்தை வருடக்கணக்கில் வீணடித்து வந்தனர்.

இவரைப் போலவே கதிரவன், காளியப்பன், ராஜு எல்லோருமே செட்டில்டு லைஃபில் இருந்து கொண்டேதான், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் அல்லது நிலமற்ற கூலி விவசாயிகளுக்குத் தலைவர்களாகவும் வலம் வந்தனர். இதில் நம்பர்1-ம் குறைந்தவர் இல்லை. இவர் தங்கராசு வீட்டில்தான் தங்க வேண்டுமா? அந்த வசதியான வாழ்க்கையைத் தொலைக்க விரும்பாத காரணத்தால்தான் இன்று, ‘நூறு கோடியில் உன் பங்கு என்ன’ என்று கேட்கிறது எதிரணியான மருதையன், கோவன், முகுந்தன், காளியப்பன் அடங்கிய அணி!

இன்னும் நெருங்கிப் பார்த்தால் இரண்டாம் மட்டத் தலைவர்களாக அமைப்பில் கோலோச்சிய பலரும் இத்தகைய இரட்டை வாழ்க்கையை, ஏற்கனவே உள்ள உத்தரவாதமான வாழ்க்கைப் பின்னணியை தக்க வைத்துக் கொண்டு, அதற்கு பாதிப்பு ஏற்படாமல், ‘புரட்சியாளர்களாக’ வாழ்ந்து வந்துள்ளதை அறிய முடியும்! (விதிவிலக்காக இருக்கும் சில நேர்மையாளர்களை மதிக்கிறோம்.)

கோவனது கலைக்குழு உட்பட தமிழகம் முழுக்க எண்ணற்ற தோழர்கள் பேருந்துகளிலும், ரயிலிலும், கடைவீதிகளிலும், உண்டியல் குலுக்கி பணம் வசூலித்து, அதில் பிரசுரம், போஸ்டர் அடித்து பிரச்சாரம் செய்வார்கள். மக்கள் பணத்தை சொந்த செலவிற்கு பயன்படுத்தக் கூடாது என்ற நேர்மையுடன் பல தோழர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வருவார்கள். வசூல் நேரத்தில் டீ குடிப்பதுகூட தவறு என்று தங்களுக்குள் வாதிடுவார்கள். தவிர, வசூல் வேலையின் போது இவர்கள் சந்தித்த அவமானங்கள் எத்தனை? தோழர்களின் குடும்பம் சந்தித்த இழப்புகள்தான் எத்தனை? இத்தகைய தோழர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தியாகத்தால் வளர்ந்ததுதான் இந்தக் கட்சியும் அதன் அமைப்புகளும்!

கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் யாருக்காவது கட்சியின் நாடி நரம்புகளாக உள்ள மேற்கண்ட கட்சி, அமைப்பு ஊழியர்கள் மீது அக்கறையோ, விசுவாசமோ துளியளவாவது இருக்கிறதா? இருந்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடுவார்களா? தலைமைக்குள்ளேயே கோஷ்டி கட்டுவார்களா? ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் ஈனச் செயலில் இறங்குவார்களா? மாநாட்டில் தேர்வு செய்த தலைமையை தானாகவே கலைத்துக் கொள்வார்களா?

தலைமைக் குழுவினரின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளுக்காக, அமைப்பின் ஆயிரக்கணக்கான தோழர்களை இன்று செயலற்ற புலம்பும் நிலைக்குத் தள்ளியுள்ளனர். இதுபற்றி குறைந்தபட்ச குற்ற உணர்வைக்கூட இவர்களிடம் காண முடியவில்லை!

இதற்கெல்லாம் அருகிலிருந்தும் அமைதியாக, வாயிருந்தும் ஊமைகளாக தலையாட்டி அங்கீகரித்தவர்கள் தான் இரண்டாம் மட்டத் தலைவர்கள்! இவர்களின் மேற்பார்வையில் பாடம் புகட்டி வளர்த்து விடப்பட்டவர்கள்தான் பகுதிப் பொறுப்பாளர்கள்! இவர்களின் ஒரு பிரிவினர்தான் இன்று தலைமைக்கு எதிராக ‘பெரும்பான்மை’ கொடியேந்தி நிற்கிறார்கள்!

பழைய தலைவர்களை குற்றம்சாட்டும் இவர்கள், நேற்றுவரை தாங்களும் அதற்கு காரணமாக இருந்திருக்கிறோமே என்று குற்ற உணர்வுக்கு ஆளாகவில்லை. குறைந்தபட்ச சுயவிமர்சனமும் செய்து கொண்டதாகத் தெரியவில்லை. குற்றம் செய்தவர்களை எதிர்க்கிறோம் என்பதாலேயே இவர்கள் தங்களை நியாயவாதிகளாக காட்டிக் கொள்ள முயல்கிறார்கள்.

இருக்கட்டும். என்னதான் சொல்கிறீர்கள் என்று இவர்களைக் கேட்டால், ‘பிஜேபி-க்கு பதிலாக காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் பாசிசம் ஒழிந்து விடும்’ என்பதுபோல, பழைய தலைகளுக்குப் பதிலாக புதிய தலைகளை உட்கார வைத்துவிட்டால் ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்கிறார்கள்.

இதுதான் அறிவியல் வழிப்பட்ட தீர்வா? “எல்லா பிரச்சனைகளுக்கும் கம்யூனிஸ்டுகளால் தீர்வு காண முடியும்” என்றாரே மாவோ, அது இந்த வழிமுறையில்தானா? உருக்கு போன்ற தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதற்கு லெனின் இப்படித்தான் வழிகாட்டினாரா?

**********

2000-களில் முன்மொழியப்பட்ட ஆய்வுப் பணியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததில் தொடங்கியது இவர்களின் பிரச்சனை. “தற்போதுள்ள நமது அமைப்பின் அடிப்படை ஆவணம் ரஷ்ய, சீன அனுபவத்தை காப்பி-பேஸ்ட் பண்ணியதாக இருக்கிறது. இன்றைய நவீன முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் சர்வதேச சமூக - அரசியல் - பொருளாதார சூழல் பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. அதனை எதிர்கொள்வதற்குப் பொருத்தமானதாக நமது ஆவணங்கள் இல்லை. இந்திய சமூக வரலாறு, அதன் முதலாளித்துவ வளர்ச்சி, விவசாய உற்பத்தி முறை மாற்றங்கள் மற்றும் சாதி பற்றிய பருண்மையான ஆய்வுகள் தேவை” என்பதை நம்பர்-2 வலியுறுத்துகிறார். இதனை தலைமைக் குழுவும் ஏற்றுக் கொண்டு, அதை அணிகளுக்கும் அறிவித்தது. ஆய்வுக் குழுவும் அமைத்தார்கள். ஆனால் 20 வருடங்கள் கடந்தும் இதில் ஒருபடி கூட முன்னேறவில்லை. இதற்கு யார் காரணம் என்பதில் தலைமைக் குழுவிற்குள் ஏற்பட்ட உள்குத்துகளின் வெளிப்பாடுதான் இன்றைய கோஷ்டி பூசல்களாக வெடித்து நிற்கிறது.

1) ஏற்றுக் கொண்ட வேலையை செய்து முடிக்காத தவறுக்கு கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டிய தலைமைக் குழு, குழுவிலுள்ள ஒருவரை (நம்பர்-2) மட்டும் அதற்குப் பொறுப்பாக்கி அறிக்கை விடுகிறது. இது குறித்த தலைமைக் குழுவின் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்த முடிவை எட்டுவதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. பிறகு ஓட்டுக் கட்சிகளில் நடப்பது போலவே அந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை தங்களது (1&3) விருப்பத்திற்கு மாறாக இருப்பதால் இருவரும், “அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது” என்று கூறி நிராகரிக்கின்றனர்.

பிறகு கட்சி மாநாடு நடத்தி குறிப்பிட்ட நபரை (2-ஐ) தலைமைக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு, 1&3-ம் தங்களை புனிதர் பட்டம் சூட்டிக் கொண்டார்கள். இதன்பின் புதிய தலைமை (பழைய தலைகளோடு வேறு சிலரையும் ஒட்டு போட்டு) தேர்வு செய்யப் படுகிறது. புதிய ஆய்வுக் குழுவும் நியமிக்கப்படுகிறது. தலைகள் இல்லாமல் வால்கள் ஆட முடியாது என்பதால் பிரதிநிதிகள் அனைவரும் இதனை அமைதியாக அங்கீகரித்தார்கள்.

ஆய்வுப் பணி நடக்காததில் 1&3-க்கு என்ன பங்கு? அதற்காக இவர்கள் என்ன செய்தார்கள்? இதனைத் தவிர்த்துவிட்டு வேறு எந்த வேலையில் ஆர்வம் காட்டினார்கள்? இவர்களைப் பற்றி நம்பர்-2 என்ன விமர்சனங்களை முன்வைத்தார்? அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா? இருவரின் ஒத்துழைப்பின்றி ஒருவர் மட்டும் தனியாக செய்து முடிப்பதற்கு ஆய்வுப் பணி என்ன ‘ஆய்’ கழுவும் வேலையா? என்று பிரதிநிதிகளில் ஒருவருக்குக்கூட சந்தேகமோ, கேள்வியோ எழவில்லை, கோபமும் வரவில்லை. மீறி வந்தாலும் அது ‘கட்சியின் நலன் கருதி’ அடங்கிப் போயிருக்கும். (இதில் அதிருப்தியடைந்த சிலர் மட்டும் அமைப்பைவிட்டு வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.)

ஏற்கனவே உள்ள அரசியல் நிலைப்பாடுகள் இந்திய சமூகத்தின் விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்டதல்ல என்பதை 2000-லேயே நன்கு அறிந்துள்ளது தலைமை. அப்படியானால், கடந்த 40 வருடமாக புரட்சிக்குப் பயன்படாத தவறான நிலைப்பாடுகளை கட்சித் தலைமை செயல்படுத்தி வந்திருக்கிறது. தவறு என்று நன்கு தெரிந்தே கட்சியை தவறான திசைவழியில் நடத்திச் சென்றிருக்கிறது தலைமை. ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்களின் கடந்த கால உழைப்பும், அர்ப்பணிப்பும் வீணடிக்கப் பட்டிருக்கிறது. மக்கள் விரோத ஒட்டுக் கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்றுத் தலைமை என்று இவர்களுக்கு ஆதரவளித்த மக்களை நம்பிக்கை மோசடி செய்துள்ளார்கள் என்பதுதானே இதன் நேரடி பொருள்.

கட்சித் தலைமையின் இந்த வரலாற்றுத் துரோகத்திற்கு கட்சியின் இரண்டாம், மூன்றாம் மட்டத் தலைவர்களின் ஆதரவும், பங்களிப்பும் இல்லையென்று மறுக்க முடியுமா? துரோகத் தலைவர்களின் கபட நாடகத்திற்கு இறுதிவரை முட்டுக் கொடுத்து அவர்களிடமே மீண்டும் கட்சியின் அதிகாரத்தை ஒப்படைத்தது இவர்கள்தானே! அன்று “தலைமைக்கு வேறு தகுதியான ஆட்கள் கிடையாது” என்று அதற்கு நியாயம் கற்பித்தார்கள். இன்று அவர்களே “தலைமை சரியில்லை” என்று கோஷ்டி கட்டுகிறார்கள். ‘கூழ்முட்டை குஞ்சு பொரிக்காது’ என்று சொல்வதற்கு மார்க்சியம் படிக்க வேண்டுமா என்ன?

***********

போஸ்டர் ஒட்டாதவரையும், குறைவாக நிதி வசூல் பண்ணியவரையும், கூட்டத்திற்குத் தாமதமாக வந்தவரையும் விடிய விடிய உட்கார வைத்து வறுத்தெடுப்பீர்களே... ‘சிரமப்படத் தயங்கும் குட்டி முதலாளி’, ‘பாட்டாளி வர்க்கப் புரட்சிகர உணர்வு இல்லை’, ‘மூளை சோம்பேறிகள்’ என்றெல்லாம் பாடம் எடுப்பீர்களே.. ஈவு இரக்கமற்ற விமர்சனமும் சுயவிமர்சனமும்தான் தவறுகளை வேரோடு களையும் வழிமுறை என்று மாவோ மேற்கோளைக் காட்டிப் பேசினீர்களே... அதே வழிமுறையைப் பின்பற்றி “இவ்வளவு நாளா என்னய்யா புடுங்குனீங்க?” என்று தலைமையை உலுக்கியிருக்க வேண்டுமல்லவா? தலைமையிடம் மட்டும் ஏன் உங்களால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை?

ஏனென்றால், “தலைமையைக் கேள்வி கேட்பதோ, சந்தேகத்திற்கு உட்படுத்துவதோ, விமர்சிப்பதோ கட்சியின் நலனுக்கு எதிரானது. அது எதிரிவர்க்க சிந்தனை” என்ற ஒரு படிமத்தை கட்சி ஊழியர்களின் மூளையில் பதிந்து வைத்துள்ளனர். மீறி எதிர்க்கேள்வி கேட்ட பலரை பல்வேறு முத்திரைகள் குத்தி வெளியேற்றிய அனுபவமும் உள்ளது. இதனை அமைப்பிற்குள் எழுதப்படாத கருப்புச் சட்ட விதியாக உருவாக்கி வைத்திருக்கிறது தலைமை. இது கடவுளுக்கு நிகரான, பயம் கலந்த வழிபாட்டுக்குரிய ஒன்றாக தலைமையை அணிகளிடம் நிலை நிறுத்துகிறது.

மேல் மட்டத்திலிருக்கும் இந்த ‘கொரோனோ வைரஸ்’ பகுதிப் பொறுப்பாளர்கள் மூலம் கட்சியின் அனைத்து உறுப்புகளிலும், கீழ்மட்டம் வரையிலும் பரப்பி விடப்படுகிறது. அதிகார வர்க்கப் போக்கும், ஜனநாயக மறுப்பும் தலைமையிடம் மட்டுமா உள்ளது? மாவட்டக் கமிட்டி முதல் விவாதக்குழு வரையிலும் நீடிக்கத்தான் செய்கிறது. தலைமையின் மேற்படி தவறுகளை எதிர்ப்பதாகக் கூறும் இன்றைய தலைவர்கள், கடந்த காலத்தில் தாங்கள் கையாண்ட தோழர்களிடம் அதிகார வர்க்கத் திமிருடனும், ஜனநாயக மறுப்புடனும்தான் நடந்து கொண்டார்கள். உண்டா? இல்லையா? என்று நேர்மையாக, சுயவிமரிசனமாகப் பரிசீலித்தால் உங்களால் மறுக்க முடியாது. ஏனென்றால் மொத்த அமைப்பையும் இப்படித்தான் ‘டிசைன்’ செய்து வைத்திருக்கிறார்கள்.

கட்சிக்குள் கட்சி கட்டுவது, கோஷ்டிகள் உருவாக்குவது, பிடிக்காத ஒருவரைத் திட்டமிட்டு ஓரம் கட்டுவது, அமைப்பைவிட்டு துரத்துவது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகள் கட்சிக்குள் வளர்வதற்கு இந்த ‘தலைமை வழிபாட்டுச் சிந்தனை’ முறைதான் அடிப்படை. பிழைப்புவாதக் கட்சிகளில் இது மிகவும் கொச்சையாக வெளிப்படுகிறது. இங்கு அவ்வளவு அநாகரீகமாக வெளிப்படவில்லை என்பதுதான் வித்தியாசம்.

**********

2) 1+3ம் ஓரணியில் நின்று 2-ஐ வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டு தலைமையைத் தக்க வைத்துக் கொண்டனர். பிறகு ஒரு நன்னாளில் நம்பர் 1-ஐ தனியாகத் தவிக்க விட்டுவிட்டு மருதையன் ஓடுகிறார். “என்னைப் பற்றி கட்சிக்குள் அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. என்னைப் பற்றி எனக்குத் தெரியாமல் 20 பக்க ரகசிய சுற்றறிக்கை தயாரித்து சுற்றுக்கு விடுகிறார்கள். எனவே இந்தக் கட்சித் தலைமை மீது எனக்கு நம்பிக்கையில்லை” என்று வினவில் எழுதிப் போட்டுவிட்டு தனது கூட்டாளியோடு தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடிப் பிடித்து ரகசியமாக சமாதான தூதுவிடும் வேலைகளில் ஈடுபட்டு இறுதியில் படுதோல்வி அடைகிறது தலைமை.

நீண்ட காலமாக தலைமைக் குழுவில் இருக்கிறார். அமைப்பிலும், அமைப்பிற்கு வெளியிலும் தனக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதும் மருதையனுக்கு நன்றாகவே தெரியும். இப்படி உயர்ந்த செல்வாக்குடன் இருக்கும் அறிவுஜீவி மருதையனுக்கு தலைமைக் குழுவின் மீது திடீரென அவநம்பிக்கை ஏற்படுகிறது. இவரது அவநம்பிக்கை அமைப்பின் அரசியல், சித்தாந்தம், கோட்பாட்டுப் பிரச்சனைகளில் உருவானதல்ல. ‘என் விருப்பத்திற்கு கட்சி தலை வணங்கவில்லை’ என்பதுதான் இவரது அவநம்பிக்கைக்கு காரணம். அப்படியே இருந்தாலும் தனது கருத்தை, கட்சி அணிகளிடம் கொண்டு சென்று அவர்களுடன் இணைந்து, தலைமைக்கு எதிராகப் போராடியிருக்கலாம். அதைச் செய்வதற்கு அவருக்கு எவ்விதத் தடையும் இருக்க நியாயமில்லை. இருந்தும் அவர் அத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை.

ஏனென்றால் இவருக்கு கட்சித் தலைமை மீது மட்டுமல்ல, தன்னைத் தலைமையாக இவ்வளவு நாளும் அங்கீகரித்து, ஆராதித்த அணிகள் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை.

இறுதியாக எஞ்சி நிற்பது மருதையனின் சுயநலமும், தன்னகங்காரமும் மட்டும்தான். இது எந்த வர்க்கத்தின் சிந்தனை? பண்பாடு? என்பதை மருதையனுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அவரே இது பற்றி சிறப்பாகப் பேசியும் எழுதியுமிருக்கிறார். ஆனால் ‘முன்னணியாளர்களோ’ இவரின் அறிவுஜீவிப் போதையில் இன்னமும் மயங்கிக் கிடக்கிறார்கள்.

3) நம்பர்-2 எல்லாம் அறிந்தவராக அமைப்பில் கருதப்படுகிறார். இவரது பெரும்பங்களிப்பில் உருவானதுதான் கட்சி ஆவணங்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளில் நாங்கள் மட்டும்தான் ஆய்வின் அடிப்படையில் அடிப்படை நிலைப்பாடுகளை நிறுவியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொண்டது கட்சி. இதன் அடிப்படையில்தான் “போலிக் கம்யூனிஸ்டுகள்”, “இடது தீவிரவாதிகள்” என பிற அமைப்பினருக்கு எதிராக கம்பு சுத்தியும் வந்தார்கள். ஆனால், ஆவணங்களை உருவாக்கியவரே இப்போது, “நாம் ரஷ்ய, சீன ஆவணங்களை காப்பி-பேஸ்ட் செய்துவிட்டோம். புதிதாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று நேர்மையாக ஒப்புக் கொள்கிறார். அதற்காக கட்சியின் கடந்த காலத் தவறுகளிலும், நிகழ்கால சீர்குலைவுகளிலும் இவருக்குப் பெரும்பங்கு இருப்பதை மறுக்க முடியாது!

ஏனென்றால் இவரது “காப்பி-பேஸ்ட்” ஆவணங்கள் - நிலைப்பாடுகளின் அடிப்படையில்தான் கட்சியின் வேலைத்திட்டமும், அமைப்பு முறைகளும், வேலைப்பாணியும், அதன் விதிமுறைகளும், அரசியல் பாடங்களும் வகுக்கப்பட்டது. இவையெல்லாம் சேர்ந்துதான் இன்று கட்சியை குழாயடிச் சண்டையாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. தலைமையின் முரண்பாடுகளில் இவர் தூங்குகிறார். அல்லது அப்படி பாவனையாவது செய்கிறார். 1,2,3 ஆகிய மூவரும் தங்களிடையே உள்ள அரசியல்ரீதியான முரண்பாடுகளை, பரஸ்பர விமர்சனங்களை கட்சி அணிகளிடம் கொண்டு சென்று விடக்கூடாது என்பதில் மட்டும் ஒன்றுபட்டு உறுதியாக இருக்கிறார்கள். இவர்களது தலைமைப் பாத்திரத்தின் ரகசியம் இங்குதான் உள்ளடங்கி இருக்கிறது.

கட்சியின் இன்றைய சீரழிவுக்கான அடிப்படை, அடிநாதமான அதன் அரசியலில் இருக்கிறது. அதுதான் நக்சல்பாரி அரசியல். தனிநபர் அழித்தொழிப்பு என்பது அதன் அரசியல் வெளிப்பாடு. ஆனால் அதன் உள்ளடக்கம் ரஷ்யாவின் நரோத்னிக்குகளை ஒத்தது.

நரோத்னிக்குகள் ரகசியக் கட்சி ஆரம்பித்து ஜாரைக் கொல்வதன் மூலம் புரட்சியை நடத்தி முடிக்கலாம் என நினைத்தனர். முதல் முயற்சியில் வெற்றியும் பெற்றனர். ஜார் கொல்லப்பட்டதால் அடக்குமுறை ஏவப்பட்டது. இரண்டாவதாகப் பொறுப்பேற்ற ஜாரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான் லெனினது அண்ணன் அலெக்சாண்டர் பிடிபட்டு தூக்குத் தண்டனைக்கு ஆளானார்.

லெனின் நரோத்னிக்குகளின் கோட்பாடுகளை பரிசீலனை செய்தார். மூலதனத்தைப் படித்தார். மார்க்சியத்திற்கு எதிரான போக்குகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்தார். 1861-ல் பண்ணையடிமை ஒழிப்புக்கு பிறகு ஏற்பட்டிருந்த விவசாய மாற்றங்களைக் குறித்து, விவசாயிகளது வளர்ச்சி குறித்து, 1893-ல் ஒரு நூல் எழுதினார்.

பிறகு அடுத்த ஆண்டே மக்களின் நண்பர்கள் யார்? சமூக ஜனநாயகவாதிகளுடன் அவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள்? என்ற நூலை எழுதினார். மேலும், நரோத்னிக் கருத்தாளர்களுடன் தீவிரமாக கட்டுரைகள், உரைகள், அறைக்கூட்டங்கள் வழியாக போராடிக் கொண்டிருந்தார். ரசியாவின் முதலாளித்துவம் வளர்ந்து வருவதை ஏற்க மறுத்து, பிலிஸ்டைன் வாதியாக இருக்கும் நரோத்னிக்குகளை மிகக் கடுமையாக தனது கட்டுரைகளில் சாடி வந்தார் லெனின்.

1897-ல் சிஸ்மாண்டிசின் பொருளாதார ரொமாண்டிசிசம் குறித்து விரிவாக எழுதினார். அதனையே விரித்து பின்னர் (சிறைப்பட்டபோது) எழுதியதுதான் ரசியப் புரட்சிக்கே அடிகோலிய ’ரசியாவில் முதலாளித்துவ வளர்ச்சி’ என்ற நூல்.

1897-ல் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோது மூன்று ஆண்டுகளில் பாடுபட்டு உழைத்து இந்த நூலை உருவாக்கினார். இதுவரை வெறும் கோட்பாடுகளாக உரையாடியதை, அறிவியல் முறைப்படி ஆதாரங்களுடன் முன்வைத்து எப்படி ரசியாவில் முதலாளித்துவம் வளர்ந்து இன்ன கட்டத்தில் இருக்கிறது என்பது வரை நிரூபித்தார். நிரூபித்த பிறகும் பிற குழுக்களுக்கு அதனை அனுப்பி ஒப்புதலும் திருத்தங்களும் வாங்கிப் பெற்றார். இதற்காக மூன்று நூலகங்களைப் பயன்படுத்திக் கொண்டார் அதில் ஒன்று பெருவணிகர் ஒருவரது நூலகம் ஆகும். இந்நூற்களை பெற்றுத் தந்தவர் அவரது மூத்த சகோதரி ஆகும்.

இந்த சித்தாந்தப் போராட்டங்களின் ஊடாகத்தான் ரஷ்யாவில் புரட்சிகரமான கட்சி கட்டப்பட்டது. ஆனால் இவர்கள் செய்வது என்ன? லெனின் எதனை எதிர்த்துப் போராடினாரோ அதே நரோத்னிக் வகைப்பட்ட நக்சல்பாரியின் வாரிசுகள் என்று தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள். நக்சல்பாரித் தலைவர்களால், சீனாவை ‘ஈயடிச்சான்காப்பி’ அடித்து முன்மொழியப்பட்ட 8 அடிப்படை நிலைப்பாடுகளை இவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு ஆய்வு என்ற பெயரில் டிங்கரிங் வேலைகள் செய்து இதற்கு சித்தாந்த முலாம் பூசியதுதான் இக்கட்சித் தலைவர்களின் தனிச்சிறப்பு.

தலைமை வழிபாடு, அதிகாரத்துவப் போக்கு, ஜனநாயக மறுப்பு, இவை எல்லாம்‌ கட்சிக்குள் நிலவும் நக்சல்பாரி அரசியலின் எச்சங்கள். இதுதான் இன்று கட்சியை சின்னாபின்னமாக்கி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

*********

கட்சி கட்டுவது, ஊழியர்களை அரசியல்படுத்துவது ஆகியவற்றில் இவர்களின் அணுகுமுறை என்ன?

அரசியல் ஆர்வத்தோடு முன்வருபவர்களை, 11 தலைப்புகளில் பாடம் எடுப்பார்கள். தேர்வின் இறுதி நேரத்தில் கோனார் நோட்ஸ்-ஐக் கிழித்து பரீட்சை எழுதும் மாணவர்களைப் போல, இவர்களும் படித்து பாஸ்‌ ஆவார்கள். அடுத்து பத்திரிக்கை விற்பனை, நிதிவசூல், வென்றெடுப்பது என்று களப்பயிற்சியில் இறக்கி விடுவார்கள். பின்னர் இறுதிவரை செக்கு மாடுகளைப்போல இதையே சுற்றிக் கொண்டு திரிவதுதான் புரட்சிகரக் கடமை என்றாகி விடும். இதில் சோர்வாகி தேங்கினால் விமர்சன சாட்டையால் வெளுத்து வாங்குவார்கள். இப்போது உங்கள் முன் இருப்பது இரண்டே வழிதான். ஒன்று மீண்டும் சுற்றுவட்டப் பாதையில் ஓட வேண்டும். அல்லது கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியில் தப்பி ஓட வேண்டும். அமைப்பிலிருந்து வெளியேறியவர்களில் பலரும் இரண்டாவது வழியைத் தேர்வு செய்தவர்கள்தான்.

கட்சிப் பணிக்கு முன்வருபவர்களிடம் உள்ள தனித்திறமை என்ன? அதில் அவரை மேலும் ஊக்கமளித்து வளர்ப்பது எப்படி? அவரின் தனித் திறமையை எதிர்காலப் புரட்சியின் நலனுக்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற அறிவியல்பூர்வமான கண்ணோட்டமே இவர்களிடம் இல்லை. இருந்தால் “தலைமைக்குத் தகுதியான ஆட்கள் இல்லை” என்ற அவல நிலை இன்றைக்கு வந்திருக்குமா? ஆய்வுப் பணிகள் இவ்வளவு கால தாமதமாகி இருக்குமா?

அரசியல், சித்தாந்தம், கோட்பாடு ஆகியவைதான் புரட்சிகர அமைப்பின் அடிப்படைப் பிரச்சனை. ஏற்கனவே உள்ள அடிப்படை நிலைப்பாடுகள் காலாவதியாகி விட்ட நிலையில், ஆய்வுப் பணிகளுக்கு முதல் முக்கியத்துவம் அளித்து செயல்படுவதுதான் தற்போதுள்ள ஒரே வழி! ஆனால் இவர்கள் நம்பர்-1 அணி, இடைக்காலக் கமிட்டி அணி என போட்டி போட்டுக் கொண்டு பத்திரிக்கைச் செய்திகள் வெளியிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இடைக்காலக் கமிட்டியை கலைத்து விட்டோம் என்கிறது நம்பர்-1 அணி. நாங்கள் கட்சி செயலரையே நீக்கி விட்டோம் என்கிறது இடைக்காலக் கமிட்டி. இருதரப்பின் நோக்கமும் அதிகாரப் பதவியைக் கைப்பற்றுவதுதான். இவ்வாறு அடிப்படையான அரசியல் பிரச்சனையை திட்டமிட்டு மூடிமறைப்பதன் மூலம், இவர்கள் தற்போதைய சீரழிவை மேலும் விரைவுபடுத்தி கட்சிக்கு சவக்குக்குழி தோண்டுகிறார்கள்.

இறுதியாக...,

நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்? என்ற வழக்கமான உங்களது கேள்விக்கணையை இங்கு அவிழ்க்க வேண்டாம்! அதற்கு உங்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. எங்களை புரட்சிக்கு வழிநடத்துகிறீர்கள் என்று உங்களை மனப்பூர்வமாக நம்பினோம். உங்கள் உத்தரவுகளை ஏற்று, நேர்மையாக மக்களிடம் அரசியல் பிரச்சாரம் செய்தோம். இழப்புகளை, அரசின் அடக்குமுறையை உளப்பூர்வமாக எதிர்கொண்டோம். ஆனால் நீங்களோ எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டீர்கள். முதலாளியைவிடக் கேடாக எங்கள் உழைப்பை சுரண்டியிருக்கிறீர்கள். இனியும் உங்களை நம்ப நாங்கள் தயாரில்லை.

“முதலில் அமைப்பைக் காப்பாற்றுவோம்” என்ற கபட நாடகத்தைக் கைவிடுங்கள்! ‘அரசியலற்ற அமைப்பு’ என்ற தலைகீழான சிந்தனையை குப்பையில் தூக்கி எறியுங்கள்!

ஒருவேளை,

உங்களுக்கு புரட்சிகர நேர்மையும், கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் மீது நம்பிக்கையும், இன்னமும் உங்களுக்குள் இருப்பதாக நீங்கள் நம்பினால்...

முதலில் உங்களின் கடந்தகால தவறுகளைக் குறிப்பிட்டு, மக்கள் மத்தியில் பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்! மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்! நீங்கள் தலைமையின் தகுதிக்கு உரியவர்களா என்பதை மக்கள்தான் அங்கீகரிக்க வேண்டும்!

புரட்சியை நேசிக்கும் தோழர்களே, கட்சியை கேடான வழிமுறைகளில் கைப்பற்றத் துடிக்கும் இவ்விரு அணிகளின் நோக்கத்திற்கும் பலியாகாதீர்கள்! அரசியலை ஆணையில் வைத்து விமர்சனம் - சுயவிமர்சனம் என்ற ஆயுதங்கள் மூலம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகப் போராடுவோம்!

- மார்க்சிய மாணவர்கள், தமிழ்நாடு