மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வினவு தளம், இன்னும் சில நிறுவனங்கள் அடங்கிய மக்கள் அதிகாரம் குழுமம் மற்றும் அதன் அரசியல் தலைமையின் அரசியல் கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம் கடந்த மூன்று வாரங்களாக கடைத்தெருவில் சந்தி சிரிக்கிறது. சொத்துடைமை வர்க்கக் கட்சியின் இயல்புக்கு ஏற்ப போல போட்டி போட்டுக் கொண்டு பொதுக்குழு, செயற்குழு நடத்தி பரஸ்பரம் எதிர்த் தரப்பை பதவி நீக்கம் செய்து கொள்கின்றனர் மக்கள் அதிகாரமும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், வினவு தளமும்.
அதிமுகவில் எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்றும், ஜெயலலிதா இறந்த பிறகு ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, சசிகலா அணி, ஜெ தீபா அணி என்றும் பிரிந்து அடித்துக் கொண்டதை நினைவூட்டுகிறது இவர்களது குழாயடிச் சண்டை.
நூறு கோடி ரூபாய் நில பேர ஊழலில் ஈடுபட்ட மாநில பொதுச் செயலாளராக இருந்த திருவாளர் சுப தங்கராசுவை தண்டனைக்குரிய குற்றவாளியாக அறிவித்து நிரந்தரமாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து நீக்கியிருக்கிறது, அவ்வமைப்பின் நிர்வாகக் குழு. அதைத் தொடர்ந்து தாங்களும் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகி இருக்கின்றனர். புதிய தேர்தல் நடத்துவது வரை தற்காலிகமாக பொறுப்பு வகிப்பார்களாம். 'பதவி விலகியதும் ஊழல் கறை போய் விட்டது' என்றும், தேர்தலில் ஜெயித்ததும் 'மக்களே தீர்ப்பு சொல்லி விட்டார்கள்' என்றும் உதார் விடுவது என சொத்துடைமைக் கட்சிகளின் லட்சணங்கள் அத்தனையையும் இவர்களும் வெளிக்காட்டுகிறார்கள்.
சொத்துடைமை ஓட்டுக் கட்சிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அவர்கள் ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை கடத்திக் கொண்டு வைப்பது, நீதிமன்றத்தில் வழக்கு போடுவது, சட்ட ரீதியான உரிமை கொண்டாடுவது என்று மேல்மட்டத்தில் மட்டும் பேரம் பேசி பிரச்சனையைத் தீர்க்க முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களோ, மேல்மட்டத்தில் பேசி பேரம் படியாமல் அணிகளிடம் தம் வாதத்தை வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கோஷ்டி சண்டைகளில் கூட இந்த வேறுபாடுகளுக்கும் பிளவுகளுக்கும் காரணமான அரசியல், சித்தாந்தப் பிரச்சனைகள் என்னென்ன , அரசியல் கோட்பாட்டு அடிப்படையில் வேறுபாடுகள் என்னென்ன என்று இரு தரப்பும் பேசவில்லை. 'அப்படி பேசுவதற்கு எதுவும் இருந்தால்தானே' என்று நீங்கள் கேட்டால், அது நியாயம்தான். அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக இவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் உலகில் ஓர் அமைப்பாக எப்படி வலம் வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
மார்க்சியம், கம்யூனிசம், புரட்சி, சமூக மாற்றம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதாகச் சொல்லி கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த - மகஇக குழுமத்தினர் என்று முன்னர் அறியப்பட்ட - மக்கள் அதிகாரம் குழுமத்தினர் இத்தகைய வெளிப்படையான சீரழிவு நிலையை வந்தடைந்தது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
1960-களின் இறுதியில் நக்சல்பாரி எழுச்சியால் தூண்டப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-யில் இணைந்தனர். அவர்களது போராட்டங்கள், தவறான கோட்பாட்டுத் தலைமையாலும், அதை விட மோசமாக செயல்தந்திரம் என்ற பெயரில் காட்டப்பட்ட வழிகாட்டலாலும் வீணடிக்கப்பட்டன; அவற்றுக்கு எதிரான அரசின் கொடூரமான அடக்கமுறைகளால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டன. அந்த எழுச்சி வெள்ளத்தின் சிதறல்களாக உருவான நூற்றுக்கணக்கான மார்க்சிய லெனினிய குழுக்களில் ஒன்றின் கீழ்தான் மக்கள் அதிகார குழும அமைப்புகள் (அப்போது மகஇக குழுமம்) உருவாகி செயல்பட ஆரம்பித்தன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகளின் தலைமை என்பது இயல்பாகவே குட்டி முதலாளித்துவ படிப்பாளி வர்க்கப் பின்னணியில் இருந்து வந்தது, அந்த வர்க்கத்தின் தன்மையைக் கொண்டது. அத்தகைய பின்னணி உள்ள தலைமையினர் புரட்சிக்கான அரசியல் கோட்பாட்டை வகுத்து அளிக்க வேண்டுமானால் என்ன தேவைப்படுகிறது? அதுவரையில் தாம் கொண்டிருந்த சமூகக் கண்ணோட்டத்தை மார்க்சிய லெனினிய அடிப்படையில் பரிசீலித்து நம் நாட்டின் பருண்மையான நிலைமைகளைப் பிரதிபலிக்கும் புதிய உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொள்வது அந்தப் பணிக்கான அவசியமான நிபந்தனையாக உள்ளது.
அதாவது, தமது "கடந்த கால தத்துவ மனசாட்சியோடு கணக்கு தீர்த்துக் கொள்வது என்று முடிவு செய்தோம்" என்று காரல் மார்க்ஸ், "அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டது போல இவர்கள் தங்களது கடந்த கால தத்துவ மனசாட்சியோடு கணக்கு தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்யவில்லை.
மாறாக, இந்திய சமூகம் பற்றிய ஆய்வு என்ற பெயரில் ஏற்கனவே தாய்க்கட்சி நகல் எடுத்து வைத்திருந்த "அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ சமூகம்", “புதிய ஜனநாயகப் புரட்சி", “நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை" ஆகியவற்றை நியாயப்படுத்தும் வகையில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின் ஆகியோரின் மேற்கோள்களை தொகுக்கும் வேலையைச் செய்து முடித்தனர். இதில் இந்திய வரலாறு பற்றிய பருண்மையான ஆய்வோ, 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்திய சமூகத்தின் சாரம் பற்றிய சரியான மதிப்பீடோ சுத்தமாகக் கிடையாது. எனவே, இவர்கள் தாம் கொண்டிருந்த கடந்த கால கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்து மார்க்சிய லெனினிய அடிப்படையிலான உலகக் கண்ணோட்டத்தை வந்தடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அவர்கள் சாதித்தது எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவற்றின் திட்டங்கள், இவர்களைத் தவிர்த்த பிற மாலெ குழுக்கள் வைக்கும் பாதைகள் தவறானவை; புரட்சி பற்றி மா.லெ கட்சி நகல் எடுத்து முன் வைத்திருந்த அடிப்படை நிலைப்பாடுகள் குறித்த தமது விளக்கங்கள் மட்டுமே சரியானவை என்று தம்மைத் தாமே நம்ப வைத்துக் கொண்டதுதான். எனவே அவற்றின் அடிப்படையிலே செயல்படுவதுதான் புரட்சிகர அமைப்பின் வேலை என்று முடிவு செய்து கொண்டனர்.
இந்திய சமூகத்தைப் பற்றிய புரட்சிகரக் கோட்பாட்டை உருவாக்கவும், தமது 'கடந்த கால தத்துவ மனசாட்சியோடு கணக்கு தீர்த்துக் கொள்ளவும்' இவர்கள் உண்மையில் செய்ய வேண்டியிருந்தது, ஏடறிந்த காலம் முதலான இந்திய வரலாற்றையும், சாதி, வருணாசிரமம் ஆகியவற்றின் தோற்றம் - வளர்ச்சியையும், மார்க்சிய லெனினிய அடிப்படையில் பருண்மையாக ஆய்வு செய்வது. அதற்கு இந்திய சமூகத்தின் பொதுவான அம்சங்களையும், இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு தேசிய இனங்களின் வரலாற்றின் குறிப்பான அம்சங்களையும் ஆய்வு செய்திருக்க வேண்டும்; வரலாற்றாசிரியர்களின் நூல்கள், தமிழகம் உட்பட பண்டைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் இலக்கியங்கள் பற்றிய ஆய்வு நூல்கள், சிந்து சமவெளி நாகரீகம் தொடர்பான தொல்லியல் ஆதாரங்கள் ஆகியவற்றை விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தி மார்க்சிய அடிப்படையில் தொகுத்திருக்க வேண்டும்; எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலைத் தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்; அந்நூலில், கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய இனக்குழு சமூகங்கள் புராதன பொதுவுடைமை என்ற நிலையிலிருந்து வர்க்க சமூகமாக மாறிய போது அரசுகள் தோன்றிய வரலாற்று நிகழ்வுப் போக்கைப் போல இந்தியாவில் வர்க்க சமூகங்களும், அரசுகளும் உருவான பருண்மையான போக்கை ஆய்வு செய்திருக்க வேண்டும்.
இதைச் செய்யத் தவறிய இவர்கள் இந்திய சமூக மாற்றத்துக்கான புரட்சிகர அரசியலை முன்னெடுக்கும் தடத்தில் ஓரடி கூட முன்னெடுத்து வைக்கவில்லை என்பது வரலாற்று உண்மை. அதிலும், புரட்சிக்கான திட்டம், போர்த்தந்திரம் என தாங்களே ஏற்றுக் கொண்டவற்றுக்குக் கூட நேர்மையாக செயல்படவில்லை. அவற்றை அமல்படுத்தும் முயற்சியில் இம்மியளவும் ஈடுபடவில்லை. மாறாக, புறநிலை வீசி எறியும் பிரச்சனைகளுக்கு பின்னால் ஓடிக் கொண்டு, தன்னெழுச்சியாக எழும் போராட்டங்களுக்கு வால்பிடிக்கும் போக்கிலும், பிற குழுக்களுடன் சித்தாந்த விவாதங்கள் நடத்துவதிலும் மட்டுமே நேரத்தை செலவிட்டார்கள்.
நமது நாட்டின் பருண்மையான நிலைமைகளுக்கு பொருந்தாத கட்சித் திட்டத்தையும், போர்த்தந்திரத்தையும் ஒரு புறம் மூட்டை கட்டி வைத்து விட்டார்கள். அவை அவர்களது ஒரு சில வகுப்பறைகளிலும் ஆவணங்களிலும் மட்டுமே உயிர்ப்போடு இருந்தன. 1990-களின் தொடக்கத்தில், பிரச்சனைகளுக்கு வால் பிடிக்கும் வகையிலான தமது போராட்டங்களுக்கு 'மறுகாலனிய எதிர்ப்பு பார்ப்பன பாசிச எதிர்ப்பு' என்ற முழக்கங்களை முத்திரை பதித்துக் கொண்டனர். அதற்கு செயல் தந்திரம் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டனர்.
மார்க்சிய லெனினிய கோட்பாட்டு அடிப்படையில் ஒரு நாட்டின் சமூக பொருளாதார படிவம் பற்றி பருண்மையாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பிரதான முரண்பாட்டை அடையாளம் கண்டு, அதன் ஒளியில் புரட்சிக்கான திட்டம், போர்த்தந்திரம் இவற்றை வகுத்துக் கொண்ட ஓர் அமைப்பு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனது முதன்மைக் கடமையாக இருப்பதை செயல்தந்திரமாக வகுத்து, பின்பற்றுகிறது. ஆனால், சமூகம் பற்றிய வரையறையையும், புரட்சிக்கான திட்டத்தையும், போர்த்தந்திரத்தையும் வறட்டுத்தனமாக வகுத்துக் கொண்டிருந்த இந்த அமைப்பினர் செயல்தந்திர அடிப்படையில் செயல்படுவதாகக் கூறிக் கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்றாகும்.
இந்த முழக்கங்களை வகுப்பதற்கான ஆவணங்களையோ, விவாதங்களையோ, கோட்பாட்டு அடிப்படையையோ இவ்வமைப்பினர் வெளியிடவில்லை. இவர்கள் வகுத்ததாகக் கூறப்படும் செயல்தந்திரமும் அதன் முழக்கங்களும் ஏற்கனவே வகுத்து வைத்ததாக சொல்லிக் கொண்ட 'அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ சமூகம்', 'புதிய ஜனநாயகப் புரட்சி', 'நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை' என்ற கோட்பாட்டோடு எந்த ஒட்டுறவையும் கொண்டிருக்கவில்லை.
"கோட்பாடு, கோட்பாடு மட்டும்தான் இயக்கத்துக்கு பலமான நம்பிக்கையை அளிக்க முடியும். எதிர்கால திசைவழியாற்றலைத் தர முடியும். சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளினுடைய உட்தொடர்பை புரிந்து கொள்ளச் செய்ய முடியும். ஏனென்றால் கோட்பாடு மட்டுமே நிகழ்காலத்தில் வர்க்கங்கள் எவ்வாறு எந்த திசையில் செல்கின்றன என்பதை மட்டுமின்றி உடனடி எதிர்காலத்தில் அவை எவ்வாறு எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்று புரிந்து கொள்ளச் செய்து நடைமுறைக்கு உதவ முடியும்" - லெனினியத்தின் அடிப்படை கோட்பாடுகள், ஸ்டாலின் (பக்கம் 31)
சரியான கோட்பாடு இல்லாத எந்த ஓர் அமைப்பையும் போலவே, அவ்வப்போது ஆளும் வர்க்கங்களால் எழுப்பப்படும் பிரச்சனைகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் வால் பிடித்துச் செல்வதே இவர்களது அரசியல் நடைமுறையாக இருந்தது.
இந்த வரம்புக்குள் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ கும்பலின் மதவாத, சாதிய அரசியலை எதிர்த்தும், ஆளும் வர்க்கம் மூர்க்கமாக அமல்படுத்த ஆரம்பித்த தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்தும், இயக்கங்கள் (கருவறை நுழைவு, இறால் பண்ணை ஒழிப்பு, கோக் பெப்சி எதிர்ப்பு, ஈழப் பிரச்சனை தொடர்பான போராட்டங்கள், டாஸ்மாக் எதிர்ப்பு முதலானவை), போராட்டங்கள் நடத்தியும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகள் நடத்தியும், கலைக்குழுவின் மூலமாக இந்த இரண்டு அம்சங்களை வெளிப்படுத்தும் பாடல்களை வெளியிட்டும் நிகழ்ச்சிகளை நடத்தியும், பிற்காலத்தில் வினவு இணையதளம் நடத்தியும் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் இந்த விஷயங்கள் பற்றிய கருத்துருவாக்கம் செய்யும் ஒரு குரலாக உருவெடுத்தன மக்கள் அதிகாரம் குழும அமைப்புகள் (அப்போது மகஇக குழுமத்தினர்). அதைத் தாண்டி ஒரு மக்கள் திரள் அமைப்பாக வளர்வதற்கான சுவடு கூட இவர்களது வரலாற்றில் ஒரு போதும் இல்லை.
விவசாயிகள், தொழிலாளர்களுக்கான வர்க்க அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகியவை முறையே பகுதி பிரச்சனைகளிலும் பொருளாதாரப் போராட்டங்களிலும் ஈடுபட்டன. பாட்டாளி வர்க்கக் கோட்பாட்டின் அடிப்படையில் அமையாத அரசியல் தலைமை, வர்க்க அமைப்புகளை புரட்சிகர கடமைக்கு வழிகாட்டுவதில் எந்த வகையிலும் தகுதியோ, திறமையோ பெற்றிருக்கவில்லை. எனவே, இந்த வர்க்க அமைப்புகளின் செயல்பாடுகளும் அரசியல் ரீதியில் முடக்கப்பட்டே இருந்தன.
இது குறித்து, எங்கெல்ஸ் சொல்வதை மேற்கோள் காட்டி லெனின் கூறுவதைப் பார்க்கலாம்.
“ஒரு தொழிலாளர் இயக்கத்தின் போராட்டமானது... அதன் மும்முனைகளிலே - கோட்பாட்டு முனை, அரசியல் முனை, நடைமுறை வழிப்பட்ட பொருளாதார முனை (முதலாளிகளை எதிர்ப்பது) என்று ஒத்திசைவுடனும், அவற்றுக்கிடையேயான பரஸ்பரத் தொடர்புகளோடும் முறையாகவும் நடத்தப்படும் போது...இவ்வகைப்பட்ட பொதுமையத் தாக்குதலில்தான்... அதன் வலிமையும் வெல்லவொண்ணாத் தன்மையும் அடங்கியுள்ளன"
- என்ன செய்ய வேண்டும், லெனின், பக்கம் 43
மக்கள் அதிகாரம் குழுமத்தின் அரசியல் தலைமை புரட்சிக்கான திட்டத்துக்கும், போர்த்தந்திரத்துக்கும் அடிப்படையான ஆய்வு ஆவணங்களாக சொல்லிக் கொண்ட ஆவணங்கள் (மேலே சொன்ன மேற்கோள்களின் தொகுப்புகள்) தோழர்களின் புத்தக அலமாரிகளை அலங்கரித்து தூங்கிக் கொண்டிருந்தன. இந்தப் புத்தகங்களின் தடிமனும், பருமனும் புதிய தோழர்களையும், வாசிப்பில் ஆர்வம் குறைவான தோழர்களையும் 'தலைமை ஏதோ மாஸ்டர் பிளான் வைத்திருக்கிறது' என்ற மாயைக்குள் சிக்க வைத்து பராமரிக்க உதவிக் கொண்டிருந்தன. அந்தப் புத்தகங்கள் 2010-க்குப் பிறகு புதிய பதிப்புகளாக போடப்பட்டு எல்லா அணிகளிடமும் வினியோகிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பகுதிகளிலும், வர்க்க அமைப்புகளிலும், மக்கள் திரள் அமைப்புகளிலும் சேரும் தோழர்களின் வேலைத் திட்டம் என்னவாக இருந்தது? ஆரம்ப வகுப்பில் கலந்து கொள்வது, பத்திரிகை விற்பது, புதியவர்களை 'வென்றெடுப்பது’, நிதி வசூல் செய்வது, ஆர்ப்பாட்டங்கள், அறைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது - இவை அனைத்துக்கும் மையப் புள்ளியாக இருந்தது புதிய அணிகளை 'வென்றெடுத்து; அமைப்பில் இணைப்பது, அதன் மூலம் அமைப்பை வலுப்படுத்துவது என்பது மட்டுமே.
அவ்வாறு புதிதாக சேர்க்கப்பட்டவர்களும் இதே வேலைத் திட்டத்தின் கீழ் செயல்படத் தொடங்குவார்கள். எனவே, இந்த அமைப்புகள் மல்டிலெவல் மார்க்கெட்டிங் போல அல்லது மதம் மாற்றும் கிருத்துவர்கள் போல ஆள் பிடிக்கும் அமைப்புகளாகவே செயல்பட்டன.
இன்னொரு பக்கம் அமைப்பில் இணையும் தோழர்களின் தனித்திறமைகள், கல்வித் தகுதிகள், துறைசார் அறிவு இவற்றை புரட்சிகரத் திட்டத்துக்காக (அப்படி ஒன்று இவர்களிடம் இல்லாத நிலையில்) பயன்படுத்துவதற்கு எவ்வழியும் தெரியாமல் அவர்களையும் இந்த ஆரம்ப வகுப்பு, சித்தாந்தப் பயிற்சி + பத்திரிகை விற்பனை, பிரச்சாரம் + வென்றெடுப்பு என்ற வேலைத் திட்டத்துக்கு உள்ளேயே திணித்து வந்தனர்.
இப்படி இனிப்பு மிட்டாயைக் காட்டி குழந்தையை கடத்திச் செல்லும் பிள்ளை புடிகாரனைப் போல 'பார்ப்பன பாசிச எதிர்ப்பு, மறுகாலனியாக்க எதிர்ப்பு' என்ற பெயரிலான பிரச்சாரத்தின் மூலம் சமூக அக்கறை உள்ள இளைஞர்களைக் கவர்ந்து அமைப்புக்குள் கடத்திச் சென்று அவர்களது அரசியல் சமூக உணர்வை மழுங்கடித்து, சிந்தனையை முடக்கி, புரட்சிகர செயல்பாட்டை இல்லாமல் செய்து, காயடிக்கும் வேலையைச் செய்து வந்தனர். இதனால் சமூக ரீதியில் துடிப்பாக செயல்பட வேண்டிய நூற்றுக் கணக்கான தோழர்களின் சக்திகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.
'கட்சித் தலைமையிடம் ஏதோ ஒரு பயங்கரமான புரட்சிகரத் திட்டம் இருக்கிறது, அது அவர்கள் எழுதிய கோட்பாட்டு ஆவணங்களில் புதைந்திருக்கிறது, அது அவர்களுக்கு மட்டும்தான் புரிகிறது (அந்த ஆவணங்கள் தொகுக்கப்பட்ட விதமும் அவற்றின் தமிழ் மொழி நடையும் சாதாரணமாக படித்துப் புரிந்து கொள்ளும்படி இல்லை). நாம் கஷ்டப்பட்டு உழைத்து போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை வென்றெடுத்து விட்டால் அந்த ஆவணங்கள் காட்டும் திசையில் செயல்பட்டு தலைமை நம்மை புரட்சியை நோக்கி அழைத்துச் சென்று விடும்.' இதை நம்பும்படி போதிப்பதுதான் தலைமை அணிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான மெசேஜிங். இவர்கள் முன்னெடுக்கும் அரசியல் இயக்கங்களும், போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் கூட ஆள் பிடிப்பதையே இலக்காகக் கொண்டிருப்பவை.
அணிகளின் அணுமுகுறை எப்படி இருந்திருக்க வேண்டும்?
"இன்றைய நிலைமையின் காரணமாக குறிப்பாக பெரும்சுமையான நடைமுறை வேலைகள் திணிக்கப்பட்டுள்ள நிலைமையின் காரணமாக இன்றைய லெனினிய நடைமுறை ஊழியர்கள், கோட்பாட்டை உரிய முக்கியத்துவம் உள்ளதாக கருதுவதில்லை என்பதும் நமக்குத் தெரியும். இது லெனினைப் பற்றிய தப்பெண்ணம் என்பதையும் முற்றிலும் பிழையானது என்பதையும் இது உண்மை நிலைமையுடன் எந்தவிதமான உறவும் அற்றது என்பதையும் நான் வெளிப்படையாக அறிவித்தே தீர வேண்டும். கோட்பாட்டை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, நடைமுறை வேலைகளில் மூழ்கி விடும் ஊழியர்களின் செயல்பாடானது, லெனினியத்தினுடைய உயிர் உணர்வுக்கே முற்றிலும் எதிராக இருக்கிறது என்பதையும் இது நடைமுறை வேலைக்கு பெரும் கேடு விளைவிப்பதாகி விடும் என்பதையும் நான் வெளிப்படையாக அறிவித்தே ஆக வேண்டும்"
- லெனினியத்தின் அடிப்படை கோட்பாடுகள், ஸ்டாலின் (பக்கம் 31)
சமூக மாற்றத்துக்கான துடிப்புடனும், புரட்சிகர அக்கறையுடனும் இந்த பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு அமைப்பில் இணையும் ஒருவர், நடைமுறை வேலைகளின் சுமைகளுக்கு மத்தியில் இந்த குழும அமைப்புத் தலைமையின் அரசியல் கோட்பாட்டு ஓட்டாண்டித்தனத்தைப் புரிந்து கொள்வதற்கு குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் ஆகி விடுகிறது. அது இந்த ஆவணங்களை வாசித்து கேள்விகள் எழுப்புவதால் நடக்கலாம். அல்லது 'நடைமுறை செயல்பாட்டில், மாதாந்திர திட்டம், ஆண்டு இலக்கு என்று ஓடி ஓடி வேலை செய்தாலும் எதை நோக்கியும் நகராமல் இருக்கிறோமே, மக்களின் அவல நிலைமைக்கும் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கும் நம்மால் முகம் கொடுக்க முடியவில்லையே' என்ற தேடலால் இருக்கலாம்.
கிட்டத்தட்ட எல்லோருமே ஏதோ ஒரு வகையில், இந்த அமைப்பு பின்பற்றும் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு வால்பிடித்துச் செல்லும் அரசியலுக்கும், இந்திய சமூக மாற்றம் மற்றும் புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற புரிதலுக்கு வந்து விடுகின்றனர்.
இந்தப் புரிதலுக்கு வந்த பின்னர் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பும் போது முறையான உட்கட்சிப் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் எல்லாவற்றையும் மறுப்பதை ஓர் அமைப்பு முறையாகவே வைத்திருக்கிறது, தலைமை. ஜனநாயக மத்தியத்துவம் என்ற பெயரில் "உனக்கு என்ன தெரியும், புத்தகம் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களோ, சொன்ன வேலையை செய்யத் துப்பில்ல, கேள்வி கேட்கிறீங்க" என்ற தொனியில் அணிகள் வாயடைக்கப்படுவார்கள். அல்லது "தலைமையையே கேள்வி கேட்கிறீர்களா, இது அடிபணிய மறுக்கும் போக்கு, பாட்டாளி வர்க்க விரோதப் பண்பு" என்று முத்திரை குத்துவார்கள்.
"சமூக ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்டத்தின் இரண்டு (அரசியல் வகைப்பட்டது, பொருளாதார வகைப்பட்டது) வடிவங்களை" மட்டுமின்றி, "எங்கெல்ஸ் மூன்று வடிவங்களை அங்கீகரிக்கிறார். முதலில் சொன்ன இரு வடிவங்களுக்குச் சமமாக கோட்பாட்டுப் போராட்டத்தை வைக்கிறார்" - என்ன செய்ய வேண்டும், லெனின், பக்கம் 41
இவ்வாறு கட்சிக்குள் கோட்பாட்டு போராட்டத்தை நடத்த திராணியற்று முடக்கிப் போட்ட தலைமை, தோழர்களின் முன் முயற்சிகளையும் செயல் துடிப்பையும் மழுங்கடித்து வந்தது.
இத்தகைய வேலைத் திட்டம், கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம், இருவழிப் போராட்டத்துக்கான கட்சி வழிமுறைகள் இல்லாமை இவை அனைத்தும் சேர்ந்து, கட்சியில் செயல்படும்/ செயல்பட்ட தோழர்கள் மீது என்ன விளைவுகளை ஏற்படுத்தின?
- ஒரு தரப்பினர் இதுதான் நிலைமை என்பதைப் புரிந்து கொண்டு, 'வழக்கமான சமூக வாழ்க்கையை விட்டு விட்டு அமைப்புக்குள் வந்து விட்டோம், இதே நடைமுறையில் இணைந்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவோம்' என்று முழு நேர ஊழியர் அல்லது பகுதி நேர ஊழியர் என்ற தகுதியில் காலத்தை ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள்தான் இந்த அமைப்பின் முதுகெலும்புகள், பல்வேறு மாவட்ட நிலை, பகுதி அளவு பொறுப்பில் இருப்பவர்கள், தலைமைக் குழுவிலும் இடம் பிடிப்பவர்கள், சுருக்கமாகச் சொன்னால் தலைமையின் அடியாட்படைகள்.
- இன்னொரு தரப்பினர் தலைமை மற்றும் மேலே சொன்ன பொறுப்பாளர்களின் கடுமையான உளவியல் தாக்குதல்களை எதிர்கொண்டு, சமரசம் செய்து கொள்ள முடியாமல், தன்னுடைய புரட்சிகர நேர்மைக்கும், குடும்ப, பணி வாழ்க்கைக்கும் இடையே போராடிப் பார்த்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நோயாளியாகி முடங்கிப் போனவர்கள். அமைப்புக்குள்ளேயே பெயரளவில் செயல்படுபவர்களாக இருப்பவர்கள் அல்லது அமைப்பை விட்டு வெளியேறி சமூக ரீதியில் நடை பிணமாக வாழப் போய் விடுபவர்கள்.
- மூன்றாவது தரப்பினர் விடாப்பிடியாக போராடி, தலைமை மற்றும் முழு நேர ஊழியர்களின் உளவியல் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து, தலைமை பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பி, அமைப்பின் ஓட்டாண்டித்தனத்தையும் அம்பலப்படுத்தி வெளியேற்றப்பட்டவர்கள், அல்லது வெளியேறியவர்கள்.
இந்த மூன்றிலும் இன்னும் இணையாதவர்கள், இந்தத் தெளிவு ஏற்படாமல், மார்க்சிய லெனினியத்தை கற்றுக் கொள்ளும் நடைமுறையில் இருப்பவர்கள். இத்தகைய ஆரம்பகட்ட சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டு தமது பிழைப்பை நடத்துவதுதான், மக்கள் அதிகாரம் குழும அமைப்புகளின் அரசியல் தலைமையும் அவர்களது அடியாள் படையான முதல் தரப்பு பிழைப்புவாதிகளும் செய்யும் வேலை.
ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவாக இணைந்திருக்கும் நாங்கள் அமைப்புக்குள் இருந்து குறுகிய அல்லது நீண்ட காலம் இருந்து போராடி வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள். அமைப்புத் தலைமையின் வர்க்கத் தன்மையையும் கோட்பாட்டு ஓட்டாண்டித் தனத்தையும் புரிந்து கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் எங்களது அரசியல் கோட்பாட்டு பயிற்சியின்மையாகும். அரசியல் சித்தாந்தத் தெளிவு இல்லாமல், எழும் பிரச்சனைகளுக்குக் கூட 'பகுதிப் பொறுப்பாளர்தான் காரணம், தலைமை சரியாகத்தான் இருக்கிறது' என்ற மயக்கத்தில் இருந்திருக்கிறோம். இவ்வாறு நாங்கள் முட்டாளாக்கப் பட்டோம் என்பதை சுயவிமர்சனமாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், எங்களை காயடிக்க முடியவில்லை.
அதுதான், இன்றும் சமூக அக்கறையோடு இருப்பதற்கும் புரட்சிகர செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்குமான அடிப்படை.
சந்தர்ப்பங்களுக்கேற்ப இரண்டாவது, மூன்றாவது தரப்பினரின் வெளியேற்றத்துக்கு இணையாக அல்லது அதை விட அதிகமாக புதிய சக்திகளை தொடர்ந்து இணைத்துக் கொண்டே இருப்பது என்பதுதான் தலைமைக்கும், முதல் பிரிவு பிழைப்பு வாதிகளுக்கும் அடிப்படையான செயல் திட்டமாக இருந்து வந்தது. இதன் மூலம் இந்தத் தரப்பினர் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக, ஒரு சொத்துடைமை வர்க்கத்தின் நிலையில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். புத்தக வியாபாரம், நிதி வசூல், நன்கொடை வசூல், மேடைப் பேச்சு என்று 'புரட்சிகர' பிசினசில் ஈடுபட்டு அதன் மூலம் தமது வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டுவதை உறுதி செய்து கொண்டிருந்தார்கள்
இந்நிலையில் புறநிலை சமூக பொருளாதார அழுத்தங்களும், அவற்றால் உந்தப்பட்ட அணிகள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்திய போராட்டங்களும் அடிப்படை நிலைப்பாடுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற முடிவை நோக்கி அமைப்பைத் தள்ளின. அதாவது இந்திய சமூகம் பற்றி மார்க்சிய லெனினிய அடிப்படையில் ஆய்வு செய்து கோட்பாட்டு ரீதியாக முடிவு எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் உருவானது.
அதன்படி 2010-ம் ஆண்டில் நடைபெற்ற பிளீனத்தில் "அடுத்த பிளீனம் நடைபெறுவதற்குள் (2014-ல்) இந்தியாவின் பொருளாதாரத்தை ஆய்வு செய்து இந்திய விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கோட்பாட்டு ரீதியாகத் தொகுத்து முன் வைக்க வேண்டும்" என்று தலைமைக்கு பணிக்கப்பட்டது. அமைப்பின் உச்சபட்ச உறுப்பாகிய பிளீனம் கொடுத்த வேலையை அடுத்த 4 ஆண்டுகளில் நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் காலத்தை ஓட்டியது தலைமைக் குழு.
"ஒரு கடமை எத்தகைய ஒன்றானாலும் கூட, நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில் வழிகாட்டும் பாதையோ வழிமுறையோ திட்டமோ கொள்கையோ இல்லாதிருக்கும் போது வழிகாட்டும் பாதையோ வழிமுறையோ திட்டமோ கொள்கையோ உருவாக்கப்படுவது முதன்மையான கூறாகும்.” - முரண்பாடு பற்றி மாவோ (பக்கம் 47)
இத்தகையே வழிகாட்டலோ, திட்டமோ, கொள்கையோ இல்லாமல், காலம் கடந்தாவது அணிகளுக்கு நேர்மையாக ஆய்வுப் பணியை முடிப்பதற்கான ஒரு கடைசி வாய்ப்பையும் தவற விட்டது தலைமை.
அடுத்த பிளீனம் நடத்த வேண்டிய காலக்கெடு நெருங்கும் போது அணிகளுக்கு, தலைமை உறுப்பாகிய பிளீனத்தில் என்ன பதில் சொல்வது என்ற நெருக்கடியை எதிர்கொண்ட தலைமை செய்த சதித்திட்டம் 'மக்கள் அதிகாரம்' என்ற புதிய செயல்தந்திரம்.
இந்திய சமூகத்தின் பருண்மையான நிலைமைகள் பற்றி மார்க்சிய லெனினிய அடிப்படையில் பருண்மையான ஆய்வு செய்து புரட்சிக்கான திட்டம், போர்த்தந்திரம் வகுப்பதற்குப் பதிலாக அவர்களது முந்தைய 35 ஆண்டு வரலாற்றின் தொடர்ச்சியாக ஒரு வால்பிடிக்கும் அவியல்வாதக் கோட்பாட்டை செயல் தந்திரம் என்ற பெயரில் முன் வைத்தார்கள்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை அறிக்கை இதற்கான உயிருள்ள ஆதாரமாக உள்ளது. தேவைப்பட்டால் இது பற்றிய முழுமையான விமர்சன பகுப்பாய்வை தனியாக முன் வைக்கிறோம். இப்போதைக்கு ஒரு சில உதாரணங்களை மட்டும் பார்க்கலாம்.
“இன்று பரந்துபட்ட மக்களிடத்தில் இருந்த மாயை பெரும்பாலும் மங்கி விட்டது. தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றுவதில்லை. எத்தனை முறை போராடினாலும் சரி, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதில் தம்மை பலாத்காரமாக அரசுக் கட்டுமானங்கள் ஒடுக்குகின்றன என்பது மட்டுமல்ல, 'உன்னால் எங்களை என்ன செய்து விட முடியும்' என்று திமிரோடு பார்த்து ஏளனம் செய்வதோடு...”
என்று ஆரம்பித்து,
“...ஈவிரக்கமின்றி தம்மை ஒடுக்குகிறார்கள் என்று பெரும்பாலான உழைக்கும் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இதைத்தான் 'எங்க போனாலும் ஒன்னும் நடக்காது சார்', 'எவன் சார் யோக்கியன்' என்று எல்லா பிரிவு மக்களும் ஏகோபித்த குரலில் சொல்கின்றனர்"
என்று முடிக்கின்றனர் (பக்கம் 117)
“தர்மமாவது, மானவெட்கமாவது, கட்டுப்பாடாவது? எப்படி வேண்டுமானாலும் உல்லாசமாக வாழ வேண்டும்; அதற்கான பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; தான் மட்டும் அனுபவிக்க வேண்டும், அதிலும் வகைவகையாக அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலவெறி ஆகியவையே இன்று சமுதாயத்தை வழிநடத்தும் பண்பாடுகளாக, நாகரீகங்களாக மாறியுள்ளதையும் மக்கள் உணர்ந்து உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கின்றனர்" (பக்கம் 118)
என்று மக்களை அவமானப்படுத்துகின்றனர்.
அதாவது, 'நாட்டில் எல்லாம் கெட்டுப் போச்சு, எவனும் யோக்கியனில்லை, அரசியல் கட்சிகள் எல்லாம் ஊழல் மயம், பெண்கள் ரோட்டில் நடமாட முடியலை, நீதிபதிகளும் மோசம், கல்வியும், மருத்துவமும் கெட்டுப் போச்சு, சாதி மதவெறி தலைவிரிச்சு ஆடுகிறது, சுற்றுச் சூழல் நாசமாப் போகுது, என்.ஜி.ஓக்கள் தொல்லை தாங்கல, மக்களும் போராட வரமாட்டேன் என்கிறார்கள்' என்ற ஒரு குட்டி முதலாளித்துவ புலம்பலால் நிரம்பியது அந்த ஆவணம்.
உண்மையிலேயே, இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால் தலைமை என்ன செய்திருக்க வேண்டும்?
"எல்லா கோட்பாட்டு பிரச்சினைகளிலும் மேலும் தெளிவான உட்பார்வை பெறுவதும், பழைய உலகக் கண்ணோட்டத்திலிருந்து சுவீகரித்த மரபுச் சொற்றொடர்களின் செல்வாக்கிலிருந்து மேன்மேலும் விடுவித்துக் கொள்வதும், சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாக ஆகி விட்டதால் அதை ஒரு விஞ்ஞானமாக பின்பற்றுவது, அதாவது அதைப் பயில்வது, அவசியம் என்பதை இடையறாது நினைவில் கொள்வதும் தலைவர்களின் கடமையாக இருக்கும்.
இவ்வாறு பெற்று மேன்மேலும் தெளிவாக்கிக் கொண்ட ஞானத்தை தொழிலாளர் திரள்களிடையே அதிகரித்த ஆர்வத்துடன் பரப்புவதும், கட்சியமைப்பையும் தொழிற்சங்கங்களின் அமைப்பையும் ஒருங்கே மேன்மேலும் உறுதியாக இணைத்துப் பிணைத்துத் தருவதும், பணியாக இருக்கும்"
(என்ன செய்ய வேண்டும், லெனின், பக்கம் 44)
மார்க்சிய லெனினியத்தை விஞ்ஞானமாக பயில்வது என்பதை கைவிட்டு விட்டு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ இலக்கியங்களிலிருந்து எடுத்த சில தரவுகளை எடுத்து புதிய 'செயல் தந்திரம்' என்ற பெயரில் முன் வைத்தனர்.
இறுதியில்,
“வர்க்க அமைப்புகளைக் கட்டுவதும் ஓரளவுக்கு மேல் அவற்றின் மூலம் சாதித்துக் கொடுக்க முடியாமல் போவதும், அடக்குமுறைகள் காரணமாக அவை கலைந்து போவதும் அல்லது தேக்கநிலையை அடைவதும் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது"
“அடிப்படை வர்க்கங்களின் தன்னியல்பான, தன்னெழுச்சியான, வர்க்கப் பிரச்சினைகளை, பகுதி அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளுள் முக்கியமானவைகளை அதிக அளவில் கையிலெடுக்காமலேயே திராவிட மற்றும் தேசிய இயக்கங்கள், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆகியன மக்களைத் திரட்டியிருக்கின்றன"
“மாறாக, திரிபுவாதிகளின் வர்க்க அமைப்புகள் - வேறு சில காரணங்களோடு முக்கியமாக – அடிப்படை வர்க்கங்களின் தன்னியல்பான, தன்னெழுச்சியான, வர்க்கப் பிரச்சினைகளை, பகுதி அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கையிலெடுத்து அவற்றினூடாக அரசியலுக்கு வென்றெடுப்பது என்ற அணுகுமுறை காரணமாக தேக்கநிலையை எட்டிவிட்டன" (பக்கம் 98)
“மக்கள் தமது அன்றாடப் பகுதிக் கோரிக்கைகளுக்காகத் தன்னெழுச்சியாக, ஏராளமாகப் போராடுகிறார்கள். அவற்றுக்கெல்லாம் காரணம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயமாக்கம் என்றும் உலகமயமாக்கம் - மறுகாலனியாக்கம் என்றும் சொல்லித்தான் மக்களைத் திரட்டுகிறோம். ஆனாலும், அவர்களைப் பெருமளவு நாம் நமது முந்தைய செயல்தந்திரத்தின்பால் திரட்ட முடியவில்லை" (பக்கம் 99)
அதாவது, 'நாமும் பலமுறை முயற்சித்துப் பார்த்து விட்டோம், மக்கள் நம்மிடம் வர மாட்டேன் என்கிறார்கள். அரசு உறுப்புகள் எல்லாம் தோற்றுப் போய், திவாலாகி, எதிர்மறை சக்திகளாக மாறி விட்டன என்று மக்களிடம் போய்ச் சொன்னால், அவற்றை எல்லாம் இணைத்துப் புரிந்து கொள்ளாமல் தனித்தனியாக பார்க்கும் மக்கள், நாம் சொன்னதும் அதை உணர்ந்து அணி திரண்டு புரட்சியை நடத்தி முடிக்க முன் வருவார்கள். உதயகுமாரன், மேதா பாட்கர் போன்ற என்.ஜி.ஓக்கள் கூட ஆட்களைத் திரட்டி விடுகிறார்கள், நம்மால் முடியவில்லை. எனவே, மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை உருவாக்கி சாதி, மதவாதப் பின்னணி இல்லாத எல்லா தரப்பினரையும் அணி திரட்டுவோம்.’ என்று முடிகிறது, இவர்களது அவியல்வாத அறிக்கை.
இவ்வாறு நடைமுறை பொருத்தமற்ற கோட்பாட்டு அடிப்படையில் செயல்பட்டு அணிகளின் கேள்விகளுக்கும் புறநிலை யதார்த்தத்துக்கும் முகம் கொடுக்க முடியாத குட்டி முதலாளித்துவ தலைமை 'மக்கள் அதிகாரம்', 'நாளைக்கே அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்' என்ற முழக்கத்தை செயல் தந்திரம் என்ற பெயரில் முன் வைத்தது. அதற்கு முந்தைய 25 ஆண்டுகளில் ஓட்டிக் கொண்டிருந்த வண்டியின் சக்கரங்களை கழற்றி விட்டு விட்டனர். அதில் தலைமையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வண்டியை குடை சாய்க்க ஆரம்பித்தன.
இப்போது மக்கள் அதிகாரம் குழு அமைப்புகளின் ஓட்டாண்டித்தனத்தை மறைத்திருந்த கடைசி கோவணமும் உருவப்பட்டு, முழுக்க முழுக்க தனிநபர்களுக்கு இடையேயான சண்டைகளாகவும், சொத்துடைமை வர்க்கங்களின் பங்கு பிரிப்பதற்கான வழக்குகளாகவும் அவர்களது செயல்பாடுகள் மாறி விட்டிருக்கின்றன. அதன் உச்சகட்டமாகத்தான், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, வினவு தளம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இந்த குழுமத்தின் அமைப்புகள் குடுமிப்பிடிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு 40 ஆண்டுகளாக தமிழகத்தின் புரட்சிகர சூழலை மாசுபடுத்தி, சீர்குலைத்த இந்த சீரழிவு சக்திகளை அம்பலப்படுத்தி வெளியேறுவதும், புரட்சிகர அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி எழுப்புவதுமே அந்த அமைப்புகளில் இருக்கும் நேர்மையான சக்திகளின் முன் நிற்கும் கடமை.
மகஇக, புஜதொமு, புமாஇமு, மக்கள் அதிகாரம், வினவு, புதிய ஜனநாயகம் மற்றும் பிற குழும அமைப்பின் நேர்மையான அணிகளே!
நம்மால் என்ன செய்ய முடியும் என்று மலைக்க வேண்டாம், ஒரு தனிநபர் அல்லது குழு என்ன சாதிக்க முடியும் என்று ஆசான் லெனின் சொல்வதைக் கேட்போம்.
“ஒரு குழுவின் சக்தி மட்டுமல்லாமல் ஒரு தனிநபரின் சக்தியம் கூட புரட்சி இலட்சியத்திற்காக சாதிக்கக் கூடிய அருஞ்செயல்களை பார்க்கத் தவறுகிறீர்கள்"
“நீங்கள் அப்படி நினைக்கக் காரணம் என்ன? நமக்குப் பயிற்சி இல்லை என்பதினாலா? அதற்கென்ன, நாம் பயிற்சி பெற்று வருகிறோம், தொடர்ந்து பயிற்சி பெற்று வருவோம், பயிற்சி பெற்றுத் தீருவோம்!”
“ஓர் உண்மையான புரட்சிகரமான கோட்பாட்டால் வழிகாட்டப்பட்டு, உண்மையிலே புரட்சிகரமான, தன்னியல்பாக விழிப்புற்றுவரும் வர்க்கத்தை ஆதாரமாகக் கொண்டு கடைசியிலே - நெடுங்காலத்துக்குப் பின் கடைசியிலே! - அசுர பலத்துடன் குன்றென நிமிர்ந்து நிற்க முடிகிற நேரம் வந்து விட்டது" - என்ன செய்ய வேண்டும், பக்கம் 162, 163
“மார்க்சியம் சமூக-ஜனநாயகவாதியின் (கம்யூனிஸ்டின்) முன்முயற்சிக்கும் ஆற்றலுக்கும் மாபெரும் தூண்டுவிசை அளிக்கிறது. மிக விரிவான திசைவழிகளை திறந்து விடுகிறது. மற்றும் சொல்லக் கூடுமானால், “தன்னியல்பாக போராட்டத்திற்கு எழும் கோடிக்கணக்கான தொழிலாளிகளின் வலுமிக்க சக்தியை அவன் வசம் விடுகிறது.” - லெனின், என்ன செய்ய வேண்டும் (பக்கம் 74, 75)
இந்த மார்க்சிய லெனினிய விரோத அமைப்புகளிலிருந்து வெளியேறுவீர்!
மார்க்சிய லெனினிய அடிப்படையில் புரட்சிகர பாதையில் பயணிப்போம், வாரீர்!!
- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு