karl marx 340அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

“ஆகவே இப்போது தெட்டத்தெளிவாய்த் தெரிகிறது - முதலாளித்துவ வர்க்கம் இனி சமுதாயத்தின் ஆளும் வர்ககமாய் இருக்கத் தகுதியற்றது, தான் நீடித்து நிலவுதற்கு வேண்டிய நிலைமைகளை யாவற்றுக்கும் மேலான சட்டவிதாய் இனியும் சமுதாயத்தின் மீது பலவந்தமாய் இருக்கத் தகுதியற்றது என்பது தெட்டத் தெளிவாய் தெரிகிறது. அது ஆளத் தகுதியற்றதாகிறது - ஏனெனில் அதன் அடிமை அவனது அடிமை நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கு அதனால் வகை செய்ய முடியவில்லை; அவன் அதற்கு உண்டி அளிப்பதற்கு பதில் அது அவனுக்கு உண்டி அளிக்க வேண்டிய நிலைக்கு அதன் அடிமை தாழ்ந்து செல்வதை அதனால் தடுக்க முடியவில்லை. சமுதாயம் இனி இந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பணிந்து வாழமுடியாது. அதாவது, முதலாளித்துவ வர்க்கம் இனியும் தொடர்ந்து நீடிப்பது சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.” (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 1848)

ஆசான்கள் மார்க்சும் – எங்கெல்சும் 1848-ல் கூறியதை மென்மேலும் மெய்ப்பிக்குமாறு உலகெங்கிலும் வரலாறு காணாத அளவு ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உழைப்புச் சுரண்டல் தீவிரமாகிறது.

இயற்கை வளங்களை சூரையாடுவதால் பெருகும் கொள்ளை நோய்கள், சுற்றுசூழல் நெருக்கடி, வறுமை மற்றும் ஏகாதிபத்திய போர்களால் அகதிகள் புலம்பெயர்தல் முதலியவையும் இன்ன பிற முதலாளித்துவ ஏகாதிபத்திய சகாப்தத்துக்கே உரிய நெருக்கடிகளும் உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கின்றன. முதலாளிகள் இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு பாசிசத்தை தீவிரமாக உலகெங்கும் நடைமுறைப்படுத்த முயல்கிறார்கள். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

நமது நாட்டில் பாசிசத்தை மட்டுமல்ல, முதலாளித்துவ சமூகத்தை வீழ்த்தி சோசலிச சமூகத்தை நோக்கிச் செல்ல தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட இதர மக்கள் பிரிவினரை திரட்டக் கூடிய ஆற்றல் மிகுந்த கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே “நீ சிறிய கட்சி, நான் பெரிய கட்சி”, “உங்கள் நிலைப்பாடு தவறு, எங்கள் நிலைப்பாடுதான் சரி”, “நாங்களே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மற்றவர்கள் எல்லாம் போலிகள், திரிபுவாதிகள், சந்தர்ப்பவாதிகள்” என்ற குறுங்குழுவாதத் தவறும் வறட்டுத்தனமும் பெரியண்ணன் மனோபாவமும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

இந்தத் தவறினால் ஒன்றுபடுவதற்கான எந்த முன்னகர்வுமின்றி மேலும், மேலும் பிளவுகளும் விரிசல்களும் உழைக்கும் வர்க்க எதிரிகளான ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக கம்யூனிஸ்ட் கட்சிகளை பலவீனப்படுத்துகின்றன. இதை மைய பிரச்சினையாக நாங்கள் கருதுகிறோம்.

நாங்கள் யார்?

எங்களில் பலரும் இந்திய பொதுவுடைமை கட்சி (மா லெ) மா.அ.க-வில் பல வருடங்கள் முழு நேரமாக வேலை செய்தவர்கள். மா.அ.க என்பது ஒப்பீட்டளவில் அரசியல் ஆர்வமிக்க இளைஞர்கள் பலரும் அதன் மக்கள்திரள் அமைப்புகளில் பணியாற்றி வருவதை அரசியல் சக்திகள் பலரும் அறிவர். ஆனால் அப்பேற்பட்ட இயக்கம் தனது உள்ளார்ந்த முரண்பாடுகளில் சிக்கி சிதைந்து போயிருக்கிறது.

கடந்த 2019-ல் இவ்வமைப்பில் நடந்த பிளீனத்தின் மையப்பொருள் என்பது பத்தாண்டுகாலமாக அதன் அரசியல் சித்தாந்த தலைமை ஆய்வை ஏன் முடிக்கவில்லை என்பதை விசாரிப்பதும் அதனோடு சேர்த்து “புதிய தலைமை” தேர்ந்தெடுப்பதும் ஆகும். அந்த பிளீன விவாதத்தில் அணிகளின் கேள்விகளால் தலைமை துளைத்தெடுக்கப்பட்டது.

விளைவாக, அமைப்பின் சித்தாந்த தலைமையென சொல்லிக் கொள்ளப்படும் அந்த தோழர், “1980களில் மா.அ.க வின் அரசியல் கோட்பாட்டு ஆவணங்களை முன்வைத்தபோது நான் செய்த வரலாற்று பிழையை திருத்திக் கொள்ள எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதைத் தவறவிட்டு விட்டேன்.

இதனை எனது அரசியல் தற்கொலையாக கருதுகிறேன்” என்றார். அதன் செயலர் உட்பட தலைமையில் இருந்த மற்றவர்கள், “நாங்கள் அமைப்பை வழிநடத்த இலாயக்கு அற்றவர்கள். இனி, தலைமைக்கு நாங்கள் வரமாட்டோம்.” எனக்கூறி கண்ணீர் விட்டனர்.

பிளீனத்தில் அரசியல் ரீதியான பரிசீலனையும் இல்லை. அமைப்பு ரீதியான அறிக்கைப் (பத்தாண்டிற்கான அறிக்கை) பரிசீலனையும் இல்லை. ஒட்டுமொத்த அணிகளையும் ஒரு சூன்யத்தில் தள்ளிவிட்டு, தந்திரமாக செயலர் உள்ளிட்ட “அரசியல் தற்கொலை செய்துகொண்ட, தலைமைக்கு இலாயக்கற்ற அவர்களே” ஒரு சில புதிய தோழர்களுடன் தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தவறிழைத்தவர்களின் மீதான நடவடிக்கை என்பதற்காக கூடி மீண்டும் அவர்களே ‘புதிய தலைமை’யாக தேர்ந்தெடுக்கப்படும் அவலம் நடந்தேறியது.   

இதனால், அதிருப்தியான பல ஆண்டு அனுபவமுள்ள முன்னணித் தோழர்கள் பலரும் அதன்பின் அமைப்பிலிருந்து வெளியேறினர். அமைப்பின் உள்ளிருந்து பயணித்தவர்கள் விடை தெரியாத பல கேள்விகளுடனும், குழப்பத்துடனும், வேறு வழியின்றி அரைமனதுடன் பயணித்தனர். அரசியல் - சித்தாந்த ரீதியில் காலாவதியாகிப்போன தலைமையின் உள்முரண்பாடு வெடிக்க தொடங்கியதன் வெளிப்பாடே தோழர். மருதையனின் வெளியேறல். உடன் நிகழ்வாக, அமைப்பில் பொதிந்திருந்த அனைத்து நெருக்கடியும், முரண்பாடுகளும் வெடிக்கத் தொடங்கி வெளியே அம்பலமாகியது. இறுதி விளைவாக செயலர் தரப்பால் கட்சி இரண்டாக பிளக்கப்பட்டது.

இப்பிளவுக்கான காரணம் பற்றி கிடைத்த விவரங்களின் அடிப்படையிலும், ஆரம்பப்புரிதலின் அடிப்படையிலும் நாங்கள் முதலில் செயலர் தரப்பை ஆதரித்தோம். அங்கு மா.அ.க-வின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்திய போதெல்லாம், கேள்விகள் அனைத்தையும் அங்கீகரித்து பிளீனம் (2021) முடிந்தவுடன் அனைத்து நிலைமைகளிலும் ‘மாற்றம்’ வரும் என்றனர்.

அதன் அடிப்படையில் இணைந்து செயல்பட்டோம். ஆனாலும் கடந்த காலங்களில் அமைப்பிலிருந்து வெளியேறிய தோழர்கள் பற்றி அரசியல் தலைமை அவிழ்த்து விட்ட அவதூறுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை அறிந்து கொள்ள நாங்களே களத்தில் இறங்கி தேடத் துவங்கினோம்.

அமைப்புச் செயலரின் அதிகாரத்துவத்துக்கு எதிராக நேரடியாக விமர்சித்து அதன் காரணமாக ஓரங்கட்டப்பட்டதும், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோற்றத்துக்கு பின் கட்சியின் அரசியல் திசைவிலகல், மக்கள் திரளுக்கு வால்பிடித்துச் செல்லப்படுவதற்கு எதிராகவும், அமைப்புமுறை சீர்திருத்தம் கோரியும் அமைப்பு முறையில் ஊன்றி நின்று போராடி, 2016-ல் வெளியேறிய முன்னாள் பகுதிப் பொறுப்பாளரை விசாரித்து அவரது அனுபவத்தை கேட்டறிந்தோம். (இது குறித்து தனியாக கட்டுரை வெளியிடுகிறோம்).

மேலும் 2019 பிளீனத்திற்குபின் அதிருப்தியில் வெளியேறிய கட்சித்தோழர்கள் பலரின் அனுபவங்களையும், குறிப்பாக ஆய்வுக்குழுவில் பங்கெடுத்து அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றுக்கருத்தை முன்வைத்ததால் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட தோழரின் அனுபவத்தையும் சேகரித்தோம்.

அவர்களின் அனுபவமும், செயலர் தரப்பு எங்களுக்கு கொடுத்த அறிக்கை விவரங்களும் முரண்பாடாக இருந்ததுடன், செயலர் தரப்பின் அறிக்கை அனுபவவாதமாகவும், சந்தர்ப்பவாதமாகவும், சுயமுரண்பாட்டுடனும் தொகுக்கப்பட்டிருந்ததை உணர்ந்தோம்.

கடைசி நம்பிக்கையாக நாங்கள் கருதிய 2021 செயலர் தரப்பு பிளீனமும் கேலிக்கூத்தாக நடந்து முடிந்தது (பிளீனம் பற்றி தனியாக எழுதுகிறோம்). அதையடுத்து, மா.அ.க-வின் மீது முழுமையாக நம்பிக்கை இழந்த, ஆனால் புரட்சியின் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடைய நாங்கள் வேறுவழியின்றி வெளியேறுவது எனும் தீர்க்கமான முடிவை அறிவித்தோம்.

எங்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள். புரட்சிக்காக கல்லூரிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு முழுநேரமாக கட்சிக்கு வந்தவர்கள். அரசியல் சித்தாந்த பிரச்சினைகளை நாங்கள் எழுப்பியதற்காக எங்களை எதிரிகள் போல் அணுகியவிதம் பற்றி தனியாக மீண்டும் எழுதுகிறோம். மா.அ.க மீது அரசியல் ரீதியாக நம்பிக்கையிழக்க காரணமானவற்றை மட்டும் முன்வைக்கிறோம்.

• அகில இந்தியப் புரட்சி எனப்பேசிக்கொண்டே தமிழகத்தின் சமூகநீதி அரசியல், திராவிட இயக்கத்தின் புரட்சிகர வாலாக நீண்டு போய்விட்ட போராட்டம் மற்றும் அமைப்புகளை மட்டுமே கட்டியமைக்கின்றனர். பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அரசியல் சித்தாந்த ஐக்கியத்திற்கான முயற்சிகளை முற்றிலுமாக கைகழுவியது. இந்தியாவின் ஒரே புரட்சிகரக் கட்சி என தற்பெருமை பேசி, தலைமைக்குழுவே குறுங்குழுவாதிகளாக செயல்படுவதுடன் அதற்கேற்ப அணிகளின் சிந்தனையை வார்த்தெடுக்கின்றனர்.

• இந்தியப்புரட்சிக்காக வகுத்துக்கொண்ட நீண்டகால மக்கள் யுத்தப் பாதை உள்ளிட்ட போர்தந்திர திட்டங்களெல்லாம் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்பதைப் போல யதார்த்தத்தில் ஒரு அடிகூட எடுத்து வைக்காமலே 40 ஆண்டுகாலத்தை வீணடித்தது, மார்க்சிய - லெனினியத்தின் அடிப்படையிலான வர்க்க பார்வையிலிருந்து திசைவிலகிய கட்டமைப்பு நெருக்கடி என்ற தவறான செயல்தந்திரத்தை முன்னெடுத்து சென்றது, ஒரு வர்க்கத்துக்கான கட்சி என்ற முறையில் செயல்படாமல் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் படிப்பாளி பிரிவினரின் சமூக ஆதரவை மட்டுமே இலக்காக வகுத்து கொண்ட நடைமுறையை இன்றளவும் உயர்த்தி பிடிப்பது.

• இந்திய சமூகத்தைப் பற்றிய ஆய்வுப்பணியை பத்து வருடத்திற்கு மேல் ஆகியும் முடிக்காமல், 2019 பிளீனத்தில் அவர்களே ஒப்புக்கொண்டபடி அணிகளை “தந்திரமாக” ஏமாற்றியுள்ளனர். புதிய அரசியல் சூழ்நிலைமைக்கு ஏற்றாற்போல் அரசியல் ரீதியில் சரியான செயல்தந்திரத்தை முன்வைக்கவில்லை.

• அமைப்பின் பத்து வருட அனுபவத்தை தொகுக்காமல் மொத்த அமைப்பையும் செயலரின் அனுபவவாத திசைவழியில் இழுத்துச் சென்று அமைப்புத் தோழர்களின் அர்ப்பணிப்பு, புரட்சிகர உணர்வை விரயமாக்கியது. அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு பரவசப் போக்கில் வால் பிடித்துச் சென்று அதில் சுயதிருப்தி கொள்வது.

• அணிகளை அரசியல் சித்தாந்த ரீதியாக பயிற்றுவிக்காமல், நடைமுறை வேலை என்ற பெயரில் செக்குமாடாக உழழும் வகையில் அவர்களின் வேலைத்திட்டங்களை வடிவமைத்து அமைப்பு முழுவதையும் மந்தைகளைப் போல மாற்றி , தங்களது தலைமைக்கு போட்டி உருவாகிவிடாமல் ஒரு தலைமுறை அரசியல் ஆர்வமிக்க இளைஞர்களையே காயடித்து இரண்டாம் மட்ட தலைமை உருவாகாமல் பார்த்துக் கொண்டது.

• அமைப்புத் தவறுகளுக்கு எதிராக கேள்வி கேட்பவர்களிடம் அதிகாரத்துவத்துமாக அணுகுவதும், அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனப்பூர்வமாக அணுகிய தோழர்களை கொள்கையில் மாறுபட்டவர்கள் யாரும் அமைப்பினில் நீடிக்க முடியாது என்று கூறி வெளியேற்ற அமைப்பின் துணைவிதிகளையே குத்தீட்டியாக பயன்படுத்தி வருவது.

• இறுதியாக அனாதீன நிலத்தை சூறையாடும் நிலத்தரகு கும்பலைப் போல தலைமைக்குழுவே ஊழலில் படுத்துப்புரண்டிருப்பதும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீதான குற்றவுணர்வு இன்றி ‘கட்சி ரகசியம்’ என்ற பெயரில் கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் தயங்காதவர்களாக சீரழிந்து விட்டனர்.

தொகுப்பாக, இவர்கள் முன்னணிப்படை இல்லை என்பதை அவர்களது அரசியல் வரலாறு மற்றும் நடைமுறை மூலம் நிரூபித்துள்ளனர். இந்த அவலங்களை ஏற்க மறுத்து தொடர்ச்சியாக வெளியேறிய தோழர்களும், மார்க்சியத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட மேலும் சில புதிய இளம் தோழர்களும் ஒன்றாக கூடி, 3 மாதங்களாக அரசியல் ரீதியாக விவாதித்து, இறுதியில் இளம் கம்யூனிஸ்ட்டு கழகமாக உருவாகியுள்ளோம்!

“முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம், ஜனநாயக மத்தியத்துவம், விமர்சன - சுயவிமர்சனம், பாட்டாளி வார்க்க சர்வாதிகாரம்” போன்ற மார்க்சியத்தின் அடிப்படைகளில் எங்களுக்கு எவ்வித கருத்து மாறுபாடும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் தற்போது தனிக் கட்சியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடனோ அல்லது அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்ள அன்றாடம் சில கட்டுரைகளை மட்டும் எழுதும் நோக்கத்துடனோ நாங்கள் இம்முயற்சியை மேற்கொள்ளவில்லை.

நடைமுறைவேலைகள் என வெறும் செக்குமாடாக செயல்படாமல் (பழைய அனுபவத்தைக் குறிப்பிடுகின்றோம்) அரசியல் - சித்தாந்த ரீதியாக, மார்க்சிய - லெனினிய அரசியலையும், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், தொழிலாளர்களின் போராட்ட நடைமுறையில் இருந்தும் கற்றுக் கொண்டும், அதற்கேற்ப நடைமுறைகளை வகுத்துக்கொள்வது; குறிப்பாக இந்தியாவின் உற்பத்தி நிலைமைகளை புரிந்து கொள்வது.

பிற கம்யூனிஸ்ட்டு கட்சிகளின், குழுக்களின் நிலைப்பாடுகளை விமர்சனப் பூர்வமாக பயில்வது, அவர்களுடன் அரசியல் சித்தாந்த ரீதியில் விவாதிப்பது. எது சரியாக உள்ளதோ, அவர்களுடன் இணைவது அல்லது சரியானவற்றை உருவாக்க முயற்சி செய்வது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிட பொறுப்பேற்று செயல்பட முடிவெடுத்துள்ளோம்.

உலகம் முழுவதும் பாசிச சக்திகள் மேலோங்கி வருகின்ற இச்சூழலில், ஜனநாயக சக்திகளிடம் பாசிசத்திற்கெதிராக கைகோர்ப்பதும், நாடு முழுவதும் புரட்சிகர நோக்கில் செயல்படும் கம்யூனிஸ்ட்டு கட்சிகளிடையே ஒரு ஐக்கியமும் தேவை.  அனைத்து புரட்சிகர சக்திகளிடமும் சித்தாந்த ரீதியான, புரட்சிக்கான திட்டத்தை பற்றிய விவாதத்தை ஆக்கபூர்வமாக தொடங்க வேண்டும்.

ஜனநாயக – மத்தியத்துவ அடிப்படையில் முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தி அதன் அனுபவத்தை தொகுத்து முன்னேற வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அதற்கான சிறு முயற்சியை ஆசான் கார்ல் மார்க்ஸின் பிறந்த நாளன்று தொடங்கியுள்ளோம். அரசியல் ரீதியிலான உரையாடலைத் தொடங்கவும், விவாதக் களமாகவும் www.yclindia.wordpress.com என்ற இணையம் இருக்கும் என கருதுகிறோம். எங்களின் அடுத்துக் கட்ட முயற்சிகள் பற்றி எங்களின் இணையப்பக்கத்தில் பரிமாறிக் கொள்கிறோம்.

ஆசான் லெனின் சொல்வது போல் “மார்க்ஸ் அந்தக் கட்சித் தலைவர்களுக்கு எழுதியதில், நீங்கள் ஒன்றுபட்டுத் தீரவேண்டுமானால் இயக்கத்தின் நடைமுறைக் குறிக்கோள்களை நிறைவாக்குவதற்கான உடன்பாடுகள் செய்து கொள்ளுங்கள், ஆனால் கோட்பாடுகள் பற்றி எந்தவிதமான பேரத்துக்கும் இடங்கொடாதீர்கள், தத்துவார்த்த வகைப்பட்ட “சலுகைகள்” எதுவும் கொடாதீர்கள் என்று எழுதினார்…”

இதன் வழி கம்யூனிச புரட்சியாளர்கள் நமது மகத்தான இலட்சியமான சோசலிச சமூதாயத்தின் மூலம் கம்யூனிச சமூதாயத்தை படைக்க அனைவருடன் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு!

புரட்சிகர வாழ்த்துக்கள்!

தோழமையுடன்,

இளம் கம்யூனிஸ்ட் கழகம் (YCL)

Pin It