இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக புரட்சியாளர்களில் ஒருவரான ஈ.வெ.ராமசாமி பெரியார் (1879-1973), தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்துள்ளார். அவரது குரல் அதாவது அவரது உரத்த, கூர்மையான, சமரசமற்ற குரல் இன்று வரை தமிழக அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த குரல் வெறும் சப்தம் அல்ல; அது ஒரு வரலாற்று அவசியம், ஒரு சமூக விழிப்புணர்வு, ஒரு புரட்சிகர சித்தாந்தம். பெரியாரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள், உலகளாவிய சமூக நீதி இயக்கங்களோடு ஒப்பிடத்தக்கவை. கார்ல் மார்க்ஸ், விளாடிமிர் லெனின், மகாத்மா காந்தி, பீமாராவ் அம்பேத்கர் போன்ற மாபெரும் சிந்தனையாளர்களின் கொள்கைகளோடு பெரியாரின் தத்துவத்தை ஒப்பிடும் போது, அவரது தனித்துவமான பங்களிப்பும், அவரது வரலாற்று பார்வையும் தெளிவாகின்றன.உலகளாவிய சமூக நீதி இயக்கத்தில் பெரியாரின் இடம்
பெரியார், ஒரு தமிழ்நாட்டு தலைவர் மட்டுமல்ல; அவர் ஒரு உலகளாவிய சமூக நீதி சிந்தனையாளர். மார்க்ஸின் வர்க்க பகுப்பாய்வு, லெனினின் புரட்சிகர உத்திகள், அம்பேத்கரின் சாதி விழிப்புணர்வு, காந்தியின் அஹிம்சா தத்துவம் இவை அனைத்தையும் ஒரு தனித்துவமான கலவையாக பெரியார் உருவாக்கினார். 2025 செப்டம்பரில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “பெரியாரின் சிந்தனைகள் உலகளாவியவை” என்று கூறினார். உண்மையில், சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு இவை எல்லா நாடுகளுக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்தும்.
பெரியாரின் அரசியல் தத்துவம்: மூன்று தூண்கள்
1. பகுத்தறிவு (Rationalism): அறிவியல் சிந்தனையின் அடித்தளம்
பெரியாரின் முதன்மையான பங்களிப்பு, இந்திய மண்ணில் பகுத்தறிவு இயக்கத்தை வேரூன்றச் செய்ததாகும். மதம், கடவுள், மூட நம்பிக்கைகள் இவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். “நான் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. யோசியுங்கள். நான் சொன்னது உண்மை என்றும், நம்பத்தக்கது என்றும் திருப்தியடைந்தால் மட்டுமே என் கருத்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார். இந்த அணுகுமுறை, பிரெஞ்சு ஞானோதய தத்துவவாதியான வோல்டேர்(Voltaire), தாமஸ் பெய்ன்(Thomas Paine), பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்(Bertrand Arthur William Russell) போன்றோரின் பகுத்தறிவு பாரம்பரியத்துடன் ஒத்திசைகிறது. ஆனால் பெரியார், இந்த பகுத்தறிவை வெறும் தத்துவார்த்த விவாதமாக நிறுத்தவில்லை. அதை சாதி ஒழிப்பு, பெண்விடுதலை, மொழி உரிமை போன்ற நடைமுறை சமூக புரட்சிகளோடு இணைத்தார்.
2. சுயமரியாதை இயக்கம்: மனித கண்ணியத்தின் அரசியல்
1925இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், பெரியாரின் மிக முக்கியமான அரசியல் பங்களிப்பாகும். “அடிமைகள் என்று பிறந்தவர்கள் யாரும் இல்லை; அடிமைகளாக்கப்பட்டவர்கள்தான் உள்ளனர்.” என்ற அவரது முழக்கம், மார்க்சியத்தின் வர்க்க விழிப்புணர்வையும், அம்பேத்கரின் தலித் விடுதலை தத்துவத்தையும் நினைவுபடுத்துகிறது. ஆனால் பெரியார், மார்க்சியர்களை விட முன்னேறினார். “மார்க்ஸ், லெனின் ஆகியோர், இந்நாட்டில் பார்ப்பனர்கள் செலுத்தும் ஆதிக்கத்தையும், அவர்கள் தங்கள் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள நடத்தும் சதிகளையும் அறிந்திருப்பார்களா? இந்நாட்டின் பூர்வகுடி மக்கள், பிறவியிலேயே சூத்திரர்கள், அடிமைகளின் மக்கள் என்று கருதப்படுவதை அறிந்திருப்பார்களா?” என்று அவர் கேட்டார். பெரியார், மார்க்சிய பொருளாதார பகுப்பாய்வுடன், சாதி என்ற இந்திய யதார்த்தத்தை இணைத்து, ஒரு தனித்துவமான சமூக நீதி தத்துவத்தை உருவாக்கினார்.
3. நாத்திகம் மற்றும் மதவிரோதம்: ஒடுக்குமுறையின் வேர்களை அழித்தல்
பெரியாரின் நாத்திகம், வெறும் கடவுள் மறுப்பு அல்ல. “மதம் மட்டுமே ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நச்சு போன்றது” என்று அவர் கூறினார். இது மார்க்சின் “மதம் மக்களின் அபினி” என்ற கருத்துடன் ஒத்துப் போகிறது. ஆனால் பெரியார், மார்க்சை விட மேலே சென்று, இந்து மதத்தின் சாதி அடிப்படையிலான அமைப்பை குறிப்பாக தாக்கினார். காந்தியுடன் பெரியாருக்கு இருந்த முரண்பாடு, இங்கு தெளிவாகிறது. காந்தி, மதத்தை தேசிய விடுதலைக்கான ஆயுதமாக பயன்படுத்தினார்; பெரியார், மதத்தை சமூக ஒடுக்குமுறையின் ஆயுதமாக கண்டார். “கடவுள் இல்லை, மதம் இல்லை; காந்தி இல்லை, காங்கிரஸ் இல்லை; பார்ப்பனர்கள் இல்லை” என்று அவர் முழங்கினார். இது வெறும் நாத்திக அறிவிப்பு அல்ல; அது ஒரு முழுமையான சமூக மறு கட்டுமானத்திற்கான அழைப்பு.
பெரியார் Vs மார்க்ஸ்: வர்க்கம் மற்றும் சாதி
கார்ல் மார்க்ஸ் (1818-1883), வர்க்கப் போராட்டத்தை வரலாற்றின் இயக்க சக்தியாக கண்டார். உற்பத்தி சாதனங்களின் உடைமை, சமூக உறவுகளை நிர்ணயிக்கிறது என்பது அவரது அடிப்படை வாதம். ஆனால் இந்திய சமூகத்தில், உற்பத்தி உறவுகளை விட, சாதி உறவுகள் மிக முக்கியமானவை என்பதை பெரியார் அடையாளம் கண்டார். மார்க்சிய வர்க்கப் பகுப்பாய்வு, ஐரோப்பிய முதலாளித்துவ சமூகங்களுக்கு பொருந்தும். ஆனால் இந்தியாவில், ஒரு பார்ப்பன ஏழையும், ஒரு தலித் பணக்காரனும் கூட, சாதி அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறார்கள். பெரியார், இந்த சாதி வர்க்க இடைச்செருகலை (intersection) புரிந்து கொண்டு, ஒரு விரிவான சமூக நீதி கோட்பாட்டை உருவாக்கினார். மார்க்சிய பொருளாதார தீர்மானவாதத்திற்கு மாறாக, பெரியார் கலாச்சார மற்றும் மத கட்டமைப்புகளின் பங்கை வலியுறுத்தினார். “பொருளாதார சமத்துவம் போதாது; சமூக சமத்துவம் வேண்டும்” என்பது அவரது வாதம். வர்க்க ரீதியாக விடுவிக்கப்பட்ட ஒரு சமூகமும், சாதி அடிப்படையில் ஒடுக்கப்படலாம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
பெரியார் Vs காந்தி: இரண்டு புரட்சிகர பாதைகள்
மகாத்மா காந்தி (1869-1948) மற்றும்பெரியார், இரு பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் இரண்டு மாபெரும் சமூக மறுசீரமைப்பாளர்கள். ஆனால் அவர்களின் வழிமுறைகளும், இலக்குகளும் அடிப்படையில் வேறுபட்டவை. காந்தி, இந்து மதத்தை சீர்திருத்த முயன்றார்; பெரியார், அதை அழிக்க விரும்பினார். காந்தி, வர்ணாசிரம தர்மத்தை புதுப்பித்து, சாதியற்ற சமூகத்தை உருவாக்க முயன்றார்; பெரியார், சாதி அமைப்பின் மத அடித்தளத்தையே மறுத்தார். காந்தி, தீண்டாமையை ஒரு பாவமாக கண்டார்; பெரியார், அதை ஒரு சாதிய குற்றமாக கண்டார். 1924-25இல், வைக்கம் சத்தியாகிரகத்தில் பெரியாரும் காந்தியும் இணைந்து பணியாற்றினார்கள். ஆனால் அந்த ஒத்துழைப்பு நீண்டகாலமானதாக இல்லை. 1925இல், பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார். “பார்ப்பன ஆதிக்கத்தின் கட்சி” என்று காங்கிரசை அவர் விமர்சித்தார்.
காந்தியின் கதர் இயக்கத்தை, பெரியார் கடுமையாக விமர்சித்தார். “கதர் பொருளாதாரம், மதம் மற்றும் தேசியவாதத்தின் சொல்லாடலில் புதைக்கப்படுகிறது. நெசவாளர்களின் உழைப்பு, பாரம்பரிய மற்றும் புனிதமான தோற்றுவாயாக கொண்டாடப்படுகிறது. இதனால் பயனடைபவர்கள் யார்? மரபுகளை புதுப்பிப்பதால் பயனடைபவர்கள் யார்? மக்களை ஏமாற்றி சோம்பேறித்தனமாக வாழும் பார்ப்பனர்கள்; ஏழைகளின் உழைப்பை சுரண்டும் பணக்காரர்கள்; உடல் உழைப்பு இல்லாமல் வாழ விரும்பும் படித்தவர்கள்” என்று அவர் கூறினார். இந்த விமர்சனம், மார்க்சிய பொருளாதார பகுப்பாய்வை நினைவுபடுத்துகிறது. ஆனால் பெரியார், மார்க்சிய வர்க்க பகுப்பாய்வுடன், சாதி பகுப்பாய்வையும் இணைத்தார். காந்தியின் “ஹரிஜன” என்ற சொல்லை அவர் கடுமையாக எதிர்த்தார். “கடவுளின் மக்கள்” என்று அழைப்பது, தலித்களின் அரசியல் உரிமைகளை மறுப்பதாகும் என்பது அவரது வாதம். 1932இல், பூனா ஒப்பந்தம், அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தியது. பெரியார், காந்தியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். “தலித்களுக்கு தனித் தேர்தல் உரிமை மறுக்கப்பட்டது. இது சாதிய அடக்குமுறையின் தொடர்ச்சி” என்று அவர் கூறினார்.
இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பெரியாரின் பங்கு
நீதிக் கட்சி மற்றும் திராவிடர் இயக்கத்தின் தோற்றம். 1916இல் தொடங்கிய நீதிக் கட்சி, பார்ப்பனரல்லாதோரின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான முதல் முயற்சி. 1920களில், சென்னை மாகாண அரசாங்கத்தில் உயர்பதவிகளில் 70% பார்ப்பனர்கள் இருந்தனர், அவர்கள் மக்கள் தொகையில் வெறும் 3%. நீதிக் கட்சி அறிமுகப்படுத்திய இட ஒதுக்கீடு, இந்த ஏற்றத்தாழ்வை மாற்றியது. பெரியார், 1939இல் நீதிக் கட்சியின் தலைவரானார். 1944இல், அதை திராவிடர் கழகமாக மாற்றினார். இந்த மாற்றம், வெறும் பெயர் மாற்றம் அல்ல; அது ஒரு அரசியல் பார்வை மாற்றம். தேர்தல் அரசியலில் இருந்து நேரடி சமூக செயல்பாட்டிற்கு நகர்ந்தது திராவிடர் கழகம்.
1937இல், மத்திய காங்கிரஸ் அரசு, சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாயமாக்க முயன்றபோது, பெரியார் தலைமையிலான எதிர்ப்பு வெடித்தது. இது வெறும் மொழி பிரச்சினை அல்ல; அது ஒரு கலாச்சார மற்றும் அரசியல் ஆதிக்க பிரச்சினை. “தமிழ்நாடு தமிழர்களுக்கு” என்ற பெரியாரின் முழக்கம், மொழி தேசியவாதத்தின் முதல் அறிவிப்புகளில் ஒன்று. இது பின்னர், திராவிட நாடு கோரிக்கையாக வளர்ந்தது. 1940களில், பெரியார் “திராவிட நாடு” என்ற தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். இது பாகிஸ்தான் பிரிவினையோடு ஒத்த காலத்தில் வந்தது. ஆனால் திராவிட நாடு கோரிக்கை, மத அடிப்படையில் இல்லை; அது மொழி மற்றும் கலாச்சார அடிப்படையில் இருந்தது. இந்த கோரிக்கை, லெனினின் “தேசிய சுயநிர்ணய உரிமை” கோட்பாட்டை நினைவுபடுத்துகிறது. ஆனால் பெரியாரின் நோக்கம், ஒரு தனி அரசு உருவாக்குவது மட்டுமல்ல; இந்திய தேசியவாதத்தின் பார்ப்பன மையத்தை சவால் செய்வதும் அவரது நோக்கமாக இருந்தது.
1947 ஆகஸ்ட் 15, பெரும்பாலான இந்தியர்களுக்கு சுதந்திர தினம். ஆனால் பெரியாருக்கு, அது ஒரு “கறுப்பு தினம்”. “அதிகாரம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பார்ப்பனர்களுக்கு மாற்றப்பட்டது. இது உண்மையான விடுதலை அல்ல” என்று அவர் கூறினார். இந்த நிலைப்பாடு, காந்தியின் “ராம் ராஜ்” கனவுக்கும், நேருவின் “நவீன இந்தியா” பார்வைக்கும் முரணானது. பெரியாரின் விமர்சனம், வெறும் தீவிரவாதம் அல்ல; அது ஒரு ஆழமான சமூக பகுப்பாய்வின் விளைவு. சுதந்திரம் கிடைத்தாலும், சாதி ஒழிந்துவிடவில்லை; பொருளாதார சுரண்டல் தொடர்ந்தது; பெண்கள் இன்னும் அடிமைப்படுத்தப்பட்டனர். எனவே, அரசியல் சுதந்திரம் மட்டும் போதாது என்பது பெரியாரின் வாதம்.
1956இல், பெரியார் தலைமையில், இராமாயண எரிப்பு நடைபெற்றது. இது வெறும் மத எதிர்ப்பு அல்ல; அது கலாச்சார ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம். இராமாயணம், பார்ப்பன க்ஷத்திரிய ஆதிக்கத்தின் இலக்கியமாக, தாழ்த்தப்பட்டோரை “இழிவுபடுத்தும்” கதைகளை கொண்டிருக்கிறது என்பது பெரியாரின் வாதம். இந்த செயல், இந்து வலதுசாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் பெரியாருக்கு, இது ஒரு “கலாச்சார புரட்சி”. சீனாவில் மாவோவின் கலாச்சார புரட்சியுடன் (1966-76) இதை ஒப்பிடலாம். இரண்டிலும், பாரம்பரிய கலாச்சார மதிப்புகளை சவால் செய்யும் முயற்சி இருந்தது. ஆனால் மாவோவின் புரட்சி, கட்சி மற்றும் அரசு ஆதிக்கத்துடன் இருந்தது; பெரியாரின் புரட்சி, அடிமட்ட சமூக இயக்கமாக இருந்தது.
திராவிட இயக்கத்தின் பாதிப்பு: 1967 முதல் இன்றுவரை
1967, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. சி.என். அண்ணாதுரை தலைமையிலான திமுக, காங்கிரஸை தோற்கடித்து, ஆட்சிக்கு வந்தது. இது பெரியாரின் சித்தாந்தத்தின் ஒரு அரசியல் வெற்றியாக கொண்டாடப்பட்டது. இட ஒதுக்கீடு, இரு மொழி கொள்கை, பகுத்தறிவு கல்வி இவை அனைத்தும் அரசு கொள்கைகளாக மாறின.
ஆனால் பெரியார், இந்த வெற்றியை முழுமையாக கொண்டாடவில்லை. “அரசியல் ஆதாயங்கள் முக்கியம், ஆனால் சமூக மாற்றம் இன்னும் நிறைவேறவில்லை” என்று அவர் எச்சரித்தார். இது லெனினின் “கலாச்சார புரட்சி” தேவை பற்றிய கருத்தை நினைவுபடுத்துகிறது. அரசு அதிகாரம் கைப்பற்றிய பிறகும், பழைய சமூக உறவுகள் தொடரும் என்பது லெனினின் அறிவுரை; பெரியாரும் இதை உணர்ந்திருந்தார்.
1977இல், எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1991 முதல், ஜெயலலிதா தமிழ்நாட்டில் மாற்று அதிகாரத்தை நிறுவினார். இரண்டும் சினிமா நட்சத்திரங்களின் அரசியல் ஆதிக்கம். இது தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் பண்பாக மாறியது. ஆனால் இந்த சினிமா-அரசியல் இணைப்பு, பெரியாரின் பகுத்தறிவு அரசியலிலிருந்து விலகியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆளுமை வழிபாடு, குடும்ப அரசியல், ஊழல் இவை திராவிட கட்சிகளின் சிக்கல்களாக மாறின. பெரியாரின் சமூக நீதி கோட்பாடு, தேர்தல் வெற்றிகளுக்கான கருவியாக மாற்றப்பட்டது என்பது கவலைக்குரிய போக்கு.
தற்போது, எம்.கே. ஸ்டாலினின் திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக, தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய திராவிட கட்சிகள். இரண்டும் பெரியாரை தங்கள் சித்தாந்த தலைவராக கொண்டாடுகின்றன. ஆனால் நடைமுறையில், இவர்களின் கொள்கைகள் எவ்வளவு பெரியார் சிந்தனையை பிரதிபலிக்கின்றன? திமுக, மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்கிறது என்று கூறுகிறது. ஆனால் மத ரீதியான அடையாளங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிமுக, சமூக நீதி கட்சி என்று கூறுகிறது. ஆனால் பார்ப்பன சக்திகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற விமர்சனம் உள்ளது.
மதவாத அரசியலின் விளைவுகள்: பாஜக மற்றும் இந்துத்துவா
பாரதிய ஜனதா கட்சி (பாஜக), தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளை பெறவில்லை. இது பெரியாரின் பகுத்தறிவு அரசியல் மரபின் வலிமையை காட்டுகிறது. ஆனால் சமீபகாலமாக, பாஜக தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இது திராவிட இயக்கத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கு சவாலாக இருந்தது. 2023இல், அதிமுக இந்த கூட்டணியிலிருந்து விலகியது, ஆனால் 2025இல் மீண்டும் இணைந்தது. இந்த ஊசலாட்டம், திராவிட கட்சிகளின் கொள்கை குழப்பத்தை வெளிப்படுத்துகிறது.
இந்து தேசியவாதம், மாநில தன்னாட்சி மீதான தாக்குதல்கள், NEET தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தேசிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, CAA, மற்றும் இப்போது புதிதாக தொகுதி மறுவரையறை இந்த சட்டங்களால் இந்தியாவின் சிறுபான்மையர்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் நாம் அவர்கள் என்கிற பாகுபாட்டிலேயே இது இயங்குமானால் அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். நாம் என்கிறது சொல் அதிகாரத்தில் கூட நிலையான ஒரு பொருளாக இருக்காது இதைத்தான் சர்வாதிகார ஆட்சி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள் இவை அனைத்தும், மத்திய அரசின் கலாச்சார ஆக்கிரமிப்பின் வெளிப்பாடுகள். பெரியார் 1937இல் போராடிய அதே போராட்டம், 2026இலும் தொடர்கிறது. இது தமிழக அரசியலின் சுழற்சி தன்மையை காட்டுகிறது.
மதவாதத்திற்கு எதிரான பெரியாரின் எச்சரிக்கைகள்
“மதம் அரசியலில் நுழைந்தால், அது ஒடுக்குமுறையின் கருவியாக மாறும்” என்று பெரியார் எச்சரித்தார். இந்த எச்சரிக்கை, இன்று மிகவும் பொருத்தமானது. இந்தியா முழுவதும், இந்து தேசியவாதம் ஜனநாயக நிறுவனங்களை அழிக்கிறது. சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள் இவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாடு, இந்த அலைக்கு எதிரான ஒரு அணை. பெரியாரின் பகுத்தறிவு பாரம்பரியம், மதவாதத்திற்கு எதிரான தடுப்பு சக்தியாக செயல்படுகிறது. ஆனால் இந்த தடுப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? திராவிட கட்சிகள் தங்கள் மதச்சார்பற்ற அடித்தளத்தை பலப்படுத்தாவிட்டால், பெரியாரின் மரபு அபாயத்தில் உள்ளது.
இப்படியான ஒரு பேராபத்து இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் தான் நடிகர் விஜய் 2024 பிப்ரவரி 2இல், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் சித்தாந்தங்களை பின்பற்றுவதாக அறிவித்துள்ளார். “மதச்சார்பற்ற சமூக நீதி” என்பதை கட்சியின் கொள்கையாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஒரு சினிமா நட்சத்திரத்தின் அரசியல் நுழைவு, தமிழ்நாட்டில் புதிதல்ல. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த் இவர்கள் அனைவரும் முயற்சித்தார்கள் வெவ்வேறு அளவுகளில் வெற்றி/தோல்வி என தமிழக அரசியலில் அவர்களின் நிலைப்பாடு மாறியது . விஜயின் முயற்சி இவற்றிலிருந்து எப்படி வேறுபடுகிறது?
பெரியார் பெயரை பயன்படுத்துதல் Vs பெரியார் கொள்கைகளை பின்பற்றுதல்
TVK, பெரியார், அம்பேத்கர், காமராஜர் படங்களை பெரிதாக காட்டி, 2024 அக்டோபரில் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தியது. சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கட்சியின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படங்களின் அடையாள அரசியல்(Identity Politics), உண்மையான சமூக மாற்றத்திற்கு போதுமா? பெரியார், வெறும் படமோ, சிலையோ அல்ல. அவர் ஒரு கொள்கை, ஒரு போராட்டம், ஒரு வாழ்க்கை முறை. விஜய், பெரியாரின் நாத்திகத்தை ஏற்றுக்கொள்வாரா? சாதி ஒழிப்பிற்கு உறுதியாக செயல்படுவாரா? பெண் விடுதலைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பாரா? பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்பாரா? இந்த கேள்விகள், TVK இன் உண்மையான திராவிட அடையாளத்தை தீர்மானிக்கும்.
பெரியாரின் கேள்வி: “TVK, உண்மையிலேயே என் மரபா?”
பெரியார் இன்று உயிருடன் இருந்தால், TVK பற்றி என்ன சொல்வார்? “ஒரு சினிமா நட்சத்திரம், பெரியார் படத்தை வைத்துக்கொண்டு, கூட்டம் சேர்க்கிறார். அவர் நாத்திகரா? அவர் சாதி ஒழிப்பு செயல்பாட்டாளரா? அவர் பகுத்தறிவு சிந்தனையாளரா? அவர் பெண் விடுதலைக்காக போராடினாரா?” என்று அவர் கேட்பார். “அரசியல் எதிரி” Vs “கொள்கை எதிரி”: ஒரு குழப்பமான பிரிவு
2024 அக்டோபர் 27 மாநாட்டில், விஜய் பாஜகவை “கொள்கை எதிரி” எனவும், திமுகவை “அரசியல் எதிரி” எனவும் அறிவித்தார். ஊழல் மற்றும் குடும்ப அரசியல் காரணமாக திமுகவை விமர்சித்தார். இந்த பிரிவு தர்க்க ரீதியாக பலவீனமானது. பாஜக, இந்து தேசியவாதத்தின் அடையாளம். திமுக, மதச்சார்பற்ற திராவிட அரசியலின் அடையாளம். இந்த இரண்டும் “ஒன்று தான்” என்று கூறுவது, பெரியாரின் பகுத்தறிவுக்கு விரோதமானது. திமுகவில் ஊழல் இருக்கலாம், குடும்ப அரசியல் இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படை கொள்கைகள் மதச்சார்பின்மை, இட ஒதுக்கீடு, சமூக நீதி இவை பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.“அவர்கள் ‘பாசிசம், பாசிசம், பாசிசம்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன? பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?” என்று விஜய் குறிப்பிட்டார்,
உண்மையில் விஜய் அவர்கள் பாசிசத்தின் தீவிரத்தை இங்கே குறைந்து மதிப்பீடுகிறார் பாசிசம் என்றால் என்ன என்று அவருக்கு எப்படி தெரிந்திருக்கும் அல்லது எப்படி புரிந்திருக்கிறார் பாசிசம் என்பதன் பொருள் என்ன அது ஒரு தீவிர தேசியவாதம், சர்வாதிகாரம் மற்றும் இராணுவவாதத்தை மையமாகக் கொண்ட ஒரு தீவிர வலதுசாரி அரசியல் சித்தாந்தமாகும். இது தனிநபர் உரிமைகளை விட தேசத்தின் நலனே முதன்மை என்று கருதி, ஜனநாயக முறைக்கு எதிராக ஒரே தலைவரின் கீழ் முழு அதிகாரத்தையும் குவிக்க வழிவகுக்கிறது. இப்படியான ஒரு தீவிர அரசிலை ஜனநாயகத்திற்கு எதிரான கொள்கையை பற்றி பேசும்போது அதை நகைச்சுவையாக்கி நியூட்ரலைசேஷன் (Neutralization) செய்கிறார் விஜய். இப்படியான ஒரு ஜனநாயகத்துக்கு எதிரான கொள்கையை நகைச்சுவையாக்கும் பொழுது அதன் கட்சியின் தொண்டர்கள் எதிர்காலத்தில் பாசிசத்தின் நேரடி அரசியலால் பாதிக்கப்படும் பொழுது அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போய்விடக்கூடும் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக்கும் செயலை திரு விஜய் அவர்கள் செய்கிறார் பஞ்ச் டயலாக் மூலம் ஒரு தீவிரத்தை சமன் செய்ய பார்க்கிறார்.
மேலும் அவர் என்ன சொல்கிறார் தன்னுடைய கட்சியின் கொள்கையாக திருக்குறளில் இருந்து முதல் அடியை வைத்துக்கொண்டு பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்கிறார் சரி அவரின் கொள்கையின்படியே அவர் கருத்தியலில் செயல்படுகிறார் என்று பார்த்தால் இல்லை அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பெண் போலீஸ் ஒன்று ஆண் போலீஸ் ஒன்று என்றும் பெண் கலெக்டர் ஒன்று ஆண் கலெக்டர் ஒன்று என்றும் பெண்ணாசிரியர் ஒன்று ஆண் ஆசிரியர் ஒன்று என்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறார் இது எப்படி சமமான வாய்ப்பாக இருக்கக்கூடும். பாலியல் பாகுபாட இங்கே கையில் எடுக்கிறார் அவர் அனைவரும் சமம் எனக் கூறிவிட்டு பிறகு ஆண் ஒன்று பெண் ஒன்று என்ற பாலியல் வேறுபாட்டை நிலைப்படுத்த நினைக்கிறார். இது கொள்கை ரீதியாக தனது கட்சியின் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார். இன்றைய தமிழக பள்ளிகளிலேயே ஆண் பெண் இருவரும் சமம் என்பதால் இருக்கையில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்கிற ஒரு பாகுபாடற்ற நிலையை உருவாக்கி கொண்டிருக்கும் பொழுது விஜய் அவர்கள் மீண்டும் ஒரு பாலியல் ஏற்றத்தாழ்வை நோக்கி சமூகத்தை பின்னுக்கு தள்ளப் பார்க்கிறார்.
உண்மையில் திரு விஜய் அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களின் கொள்கையின் படியே அவர் செயல்படுகிறார் என்று அவரது ரசிகர்களும் தொண்டர்களும் தான் சோதனை செய்ய வேண்டும். கண்மூடித்தனமாக கொள்கை தெளிவாற்றவரை தலைவராக ஏற்றுக்கொண்டு வழி தொடர்வதும் மற்றும் ஆரவாரம் செய்வதும் பகுத்தறிவுக்கு முற்றிலும் எதிரானது விஜயின் ரசிகர்கள் எத்தனை பெயர் அவரின் கொள்கை நிலைப்பாடை பற்றி கேள்வி கேட்டுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரியின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது பெண்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்புகளும் சாதனை படைக்கும் சூழலை தமிழ்நாட்டின் திராவிட கொள்கை தந்துள்ளது இவற்றையெல்லாம் புரிந்து ஒரு மனித அறிவு ஜீவியாக நாம் செயல்பட வேண்டிய சூழல் தற்பொழுது உள்ளது அதை விட்டுவிட்டு ஒரு நடிகர் தலைவரானதும் புகழ் வெளிச்சம் கொண்டவரின் கார் பின்னால் ஓடுவதும் அவர் வண்டியின் மீது ஏறி குதிப்பதும் தர்பீஸ் பழங்களை வண்டிக்குள்ளே தூக்கி போடுவதுமாக திரைப்படப் பாடல்களுக்கு வைப் செய்து கொண்டிருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் உங்கள் சுய முன்னேற்றத்திற்கும் ஒரு பயனும் அளிக்காது….. உங்கள் தலைவர் கடவுளாகவே இருந்தாலும் அவர் முரணாக செயல்படும் பொழுது உங்கள் சுய அறிவுக்கு உட்பட்டு கேள்வி கேட்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்…
பெரியாரின் குரல், வெறும் பிரசங்கங்கள் அல்ல. அது செயல்பாடு, தியாகம், உறுதி. விஜய், தனது சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டார் என்பது உண்மை. ஆனால் அது போதுமா? பெரியார், தனது குடும்ப சொத்துகளை விட்டுவிட்டார், தனது சாதி அடையாளத்தை கைவிட்டார், சமூக புறக்கணிப்பை எதிர்கொண்டார். TVK தலைவர், இந்த தியாகங்களுக்கு தயாரா?
பெரியாரின் குரல் - கடந்த காலமா அல்லது எதிர்காலமா?
பெரியார், 1973இல் இறந்துவிட்டார். ஆனால் அவரது குரல் இன்னும் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சியும், அவரது பெயரை கூறுகிறது. ஆனால் எத்தனை பேர் அவரது கொள்கைகளை பின்பற்றுகிறார்கள்?
1. பகுத்தறிவு விட்டுக்கொடுக்க முடியாதது
21ஆம் நூற்றாண்டில், மூட நம்பிக்கைகள், போலி அறிவியல், மத வெறி இவை மீண்டும் வளர்ந்து வருகின்றன. பெரியாரின் பகுத்தறிவு இயக்கம், இதற்கு எதிரான தடுப்பாற்றலாக தொடர வேண்டும். TVK உட்பட அனைத்து கட்சிகளும், இந்த பகுத்தறிவு பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும்.
2. சாதி அழிப்பு, பேச்சுகளுக்கு அப்பால் செயல்பாடு தேவை
இந்தியா, இன்னும் ஒரு சாதி சமூகம். சாதி அடிப்படையிலான வன்முறைகள், தலித்களுக்கு எதிரான பாகுபாடுகள், இவை தொடர்கின்றன. “சாதி ஒழிப்பு” என்ற முழக்கம் மட்டும் போதாது; செயல்பாடு வேண்டும். சாதி கணக்கெடுப்பு, சாதி அடிப்படையிலான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை, அரசு வேலைகளில் மேலும் இட ஒதுக்கீடு அவசியம்.
3. மதச்சார்பின்மை, கூட்டணி அரசியலுக்கு அப்பால்
திராவிட கட்சிகள், மதச்சார்பற்றவை என்று கூறுகின்றன. ஆனால் தேர்தல் கூட்டணிகளுக்காக, மத அரசியலை இயல்பாக்குகின்றன. இது பெரியாரின் மரபுக்கு துரோகம். உண்மையான மதச்சார்பின்மை, மத அரசியலை முழுமையாக நிராகரிப்பதில்தான் உள்ளது.
2026 தேர்தல்: பெரியாரின் மரபுக்கான சோதனை
2026 மார்ச் 18, விஜய் TVK தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். இது ஒரு தைரியமான முடிவு அல்லது ஒரு முட்டாள்தனமான தவறா? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், மூன்றாவது அணி வெற்றி பெறுவது அரிது. 1967 முதல், திமுக-அதிமுக இருமுனை மட்டுமே இருக்கிறது. TVK, இந்த இருமுனையை உடைக்க முடியுமா? ரசிகர்களின் உற்சாகம், வாக்குகளாக மாறுமா? இந்த கேள்விகளுக்கு, 2026 மே 4 (தேர்தல் முடிவு அறிவிப்பு) பதில் சொல்லும்.
TVK இன் நுழைவுடன், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கலாம். ஆனால் உண்மையான சோதனை, தேர்தல் வெற்றி/தோல்வி அல்ல. பெரியாரின் மதச்சார்பு, பகுத்தறிவு, சமூக நீதி மரபு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதே உண்மையான சோதனை. விஜயின் TVK, பெரியார் மரபின் உண்மையான தொடர்ச்சியா அல்லது வெறும் தேர்தல் தந்திரமா? திமுக மற்றும் அதிமுக, தங்கள் மதச்சார்பற்ற அடித்தளத்தை மீட்டெடுக்குமா? பாஜகவின் இந்துத்துவா ஊடுருவலை தமிழ்நாடு தடுக்குமா? இந்த கேள்விகளுக்கான பதில்கள், தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
பெரியார், தனது 94 வயதில், மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், பகுத்தறிவு மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றி உரையாற்றினார். இது அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பை காட்டுகிறது. அவரது இறுதி செய்தி: “விழித்திருங்கள், கேளுங்கள், செயல்படுங்கள்”. இன்றைய தமிழ்நாடு, பல சவால்களை எதிர்கொள்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதி வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மதவாத அரசியல், கார்ப்பரேட் ஆதிக்கம் இவை அனைத்தையும் எதிர்கொள்ள, பெரியாரின் பகுத்தறிவு ஆயுதம் தேவை. பெரியாரின் குரல், நிறுத்தப்படவில்லை. அது இன்னும் முழங்கிக் கொண்டிருக்கிறது. கேட்க தயாராக இருப்பவர்கள், அதை கேட்கட்டும். செயல்பட தயாராக இருப்பவர்கள், அதன்படி செயல்படட்டும். பெரியாரின் குரல், ஒரு வரலாற்று எதிரொலி மட்டுமல்ல; அது ஒரு எதிர்கால அழைப்பு.
- மு.தனஞ்செழியன், சென்னை.
ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள்
- Periyar E.V. Ramasamy (1879-1973) - Self-Respect Movement, Dravidar Kazhagam
- Karl Marx (1818-1883) - Das Kapital, Communist Manifesto
- Vladimir Lenin (1870-1924) - What Is To Be Done?, The State and Revolution
- Mahatma Gandhi (1869-1948) - Hind Swaraj, Vaikom Satyagraha
- B.R. Ambedkar (1891-1956) - Annihilation of Caste
- Cambridge Companion to Periyar (2025)