ஆபிரஹாம் கோவூர் (1976)

Begone Godmen. Abraham kovoor (1976), JAICO Publishing House, Mumbai

Begone Godmen 450இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இந்தியத் தத்துவ வரலாற்றில், இறை நம்பிக்கையாளர்கள் (ஆத்திகர்கள்), இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) என எதிர்நிலைத் தன்மை கொண்ட இரு சிந்தனைப் போக்குகள் தொடர்ச்சியாக நிலவி வந்துள்ளன. நவீன கல்வி, தொழில் வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, நவீனத்துவம் என்பனவற்றிற்கு ஊடாக இவ்விரு சிந்தனைப் போக்குகளும் இன்றுவரை நம் சமூக வாழ்வில் நிலை பெற்றுள்ளன, முரண்பாடுகளுக்கு இடையிலும் தொடர்கின்றன.

நாத்திகர்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும், ஆத்திகர்களை ஆன்மீகவாதிகள் என்றும் அழைக்கும் மரபும் உண்டு. கட்புலனால் கண்டறிய இயலாத “ஆன்மா” என்ற ஒன்றைக் குறிப்பிடுவதன் காரணமாக இப்பெயரில் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஆன்மா என்ற ஒன்றை வலியுறுத்தும் ஆத்திகர்கள் இதை நிறுவும் வழிமுறைகளில் ஒன்றாகத் தத்துவ நூல்களை உருவாக்குவது பொதுவான உலக மரபு. ஆனால் சாமானிய மனிதர்களால் இதை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. இக் குறையைப் போக்கும் வழிமுறைகளாகப் புனித நூல்களும் புண்ணியத் தலங்களும் உருவாயின.

இவற்றுக்கு ஊடாக மீவியற்கை (இயற்கை பிறழ்ந்த) தன்மை கொண்டவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்வோரும் ஒவ்வொரு சமயம் சார்ந்தும் தோன்றுகிறார்கள். இவர்கள் தாம் சார்ந்துள்ள சமயத்தின் தத்துவம், உலகக் கண்ணோட்டம் குறித்து அறியாதவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். அறிந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

அற்புதச் செயல்களை நிகழ்த்திக் காட்டி சராசரி மனிதனை ஈர்ப்பதே இவர்களின் அடிப்படை நோக்கமாகும். இதன் பொருட்டுத் தன்னிச்சையாக அமைப்புகளை நிறுவி, சீடர் குழுவை உருவாக்கிக் கொள்வார்கள். இச்சீடர்கள் இவர்களது அற்புத ஆற்றல்களைப் பறைசாற்றும் விளம்பரத் தூதுவர்களாகச் செயல்படுவார்கள். இதன் வளர்ச்சி நிலையாகப் பொருளும், புகழும் இவர்களை நாடி வரும். அரசியல்வாதிகள், உயர் அதிகார வர்க்கம், தொழிலதிபர்கள், திரைப்படத் துறையினர், ஊடகத் துறையினர் இவர்களது சீடர்கள் வரிசையில் இணைவர். இத்தகையோரே GodMen என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் படுகிறார்கள். இவர்களது பொதுப் பண்பாக மாந்திரீகம் அமைவதால் மாந்திரீகர்கள் என்று தமிழில் இவர்களைக் குறிப்பிடலாம்.

மாந்திரீகர்கள்

மாந்திரீகர்களின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்ததன் அடிப்படையில் அவர்களைக் குறித்தப் பின்வரும் மதிப்பீட்டை கோவூர் என்பவர் வழங்கியுள்ளார்.

“ஒரு வெற்றிகரமான மாந்திரீகருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் இரண்டு. முதலாவதாக, சுயவிடுதலை, சுயபுரிதல், சுயசுத்திகரிப்பு, பரிபூரணமான உண்மை, பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச அறிவு, பிரபஞ்ச ஆன்மா, பிரபஞ்ச சிந்தனை, உடலற்ற அறிவு, அறிதலுக்கு அப்பாற்பட்ட சிந்தனை, கர்ம சக்தி, நிர்வாண உணர்வு, தெய்வீக சக்தி, தெய்வீக ஒளி, உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு, குண்டலினி போன்ற தெளிவற்ற, குழப்பமான சொற்களைப் பயன்படுத்தும் திறமை வேண்டும்.”

“இரண்டாவதாக, அமானுஷிய சக்தி என்ற பெயரில் சில வித்தைகளைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.”

இத்தன்மை கொண்டோரே சராசரி மனிதனை ஈர்த்து அவர்களைத் தம்வயப்படுத்தி விடுகிறார்கள்.

மாந்திரீகர்களின் செயல்பாடுகள்

சராசரி மனிதனைவிட ஆற்றல் மிகுந்தவர்களாக மாந்திரீகர்களை மக்கள் கருதுகிறார்கள். இவ் ஆற்றலின் துணையுடன் அவர்களால் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியுமென்று நம்புகிறார்கள். இந்நம்பிக்கை குலையாமல் மாந்திரீகர்களும் பார்த்துக் கொள்கிறார்கள். நோய் குணமாக்கல், வெறுங்கையைச் சுழற்றித் தின்பண்டங்கள், மலர்கள், திருநீறு, பணம், அணிகலன்கள் வரவழைத்தல், ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுதல், பிறந்த நாள், நேரம், நட்சத்திரம் என்பனவற்றின் அடிப்படையில் கடந்த கால நிகழ்வுகளையும், எதிர்காலத்தில் நிகழ இருப்பதையும் உரைத்தல். கைரேகை பார்த்து எதிர்காலப் பலன் உரைத்தல், பேய், கெட்ட ஆவி விரட்டல், மூச்சு அடக்கிக் காட்டல் என்பன மாந்திரீகர்கள் நிகழ்த்திக் காட்டும் முக்கிய அற்புதச் செயல்களாக அமைகின்றன.

இச் செயல்களின் வாயிலாக மக்களை ஈர்த்து அவர்களைத் தம்வயப்படுத்துதல் மாந்திரீகர்களின் தனித்துவ அடையாளங்களாக அமைகின்றன. இச் செயல்களை மாந்திரீகர்களின் சீடர்கள் பொதுவெளியில் பரப்பி ஓர் உயரிய படிமத்தை மக்கள் உள்ளத்தில் படிய வைக்கிறார்கள். இதைக் கலைக்கும் பணியில் பகுத்தறிவுவாதிகள் என்போர் ஈடுபடுகின்றனர்.

பகுத்தறிவுவாதிகள்

பகுத்தறிவுவாதிகள் என்போர் எந்த ஒரு பிரச்சினையிலும் சமயம் சார்ந்தோ, உணர்ச்சி வயப்பட்டோ முடிவெடுக்காதவர்கள். பிரச்சினைக்கான காரண காரியங்களைத் தர்க்க அடிப்படையில் பகுத்தாராய்ந்து பகுத்தறிவின் துணையுடன் முடிவெடுப்பார்கள்.

இப்பண்பின் காரணமாக மாந்திரீகர்களின் அற்புதச் செயல்களை இவர்கள் நம்புவதில்லை. மாறாக, இவற்றின் பின்னால் மறைந்துள்ள தந்திரச் செயல்களையும் பொய்மைகளையும் வெளிப்படுத்துவார்கள். இப் பண்பு கொண்டோரில் ஒருவரே கோவூர்.

கோவூர்

ஆபிரஹாம்-டி-கோவூர் என்ற பெயர் கொண்ட இவர் கேரளத்தில் உள்ள திருவல்லா என்ற ஊரில் 1898 ஏப்ரல் 10 ஆவது நாள் பிறந்தவர். இவரது தந்தை கோவூர் அய்பி தோமா சிரியன் கத்தோலிக்கத் தேவாலயத்தில் தலைமைக் குருவாகப் பணியாற்றி வந்தார்.

சமயக்குரு ஒருவரின் மகனாக இருந்த போதிலும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களின் மீது நம்பிக்கை அற்றவராகவே கோவூர் விளங்கினார். பேய்கள் மீது அவருக்கு அச்சம் இல்லை. இதை வெளிப்படுத்தும் வகையில் பேய்கள் உறைவதாக மக்கள் நம்பும் வீடுகளில் படுத்து உறங்கினார். இரவு நேரங்களில் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றார்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பயின்றதுடன் கல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தாவரவியலும், விலங்கியலும் பயின்றார்.

பின் கேரளத்தில் கோட்டயம் நகரில் இருந்த சி.எம்.எஸ். கல்லூரியில் அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1928இல் இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தாவரவியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இங்கு வழக்கமான பணியுடன் புனித நூல்களைக் கற்பிக்கும் பணியும் வழங்கப்பட்டது. இப்பாடத்திற்கான தேர்வை இலண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்தியது. இவரிடம் பயின்ற மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள்.

ஆனால் அடுத்த ஆண்டில் இப்பாடம் கல்லூரியின் துணை முதல்வருக்கு ஒதுக்கப்பட்டது. இது குறித்து முதல்வரிடம் இவர் கேட்டபோது, புனித நூல்கள் குறித்த தேர்வில் சிறப்பான முறையில் வெற்றி பெற்ற இவரது மாணவர்கள் சமய நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் விடையளித்தார்!

பின்னர் இலங்கையிலுள்ள, ரிச்மண்ட் கல்லூரியிலும், புனித தாமஸ் கல்லூரியிலும் பணியாற்றிவிட்டு இறுதியாக, கொழும்பு நகரின் தர்ஸ்டன் கல்லூரியில் அறிவியல் துறையின் தலைவராகப் பணியாற்றி 1959இல் ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வுக்குப் பின் இலங்கையில் குடியேறி பகுத்தறிவுவாதக் கருத்துப் பரப்பலில் முழுமையாக ஈடுபட்டார்.

அற்புதச் செயல்கள்

மாந்திரீகர்கள், ஆன்மீகவாதிகள் ஆகியோர் உரிமை கொண்டாடும் அற்புதச் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தியதுடன் அவற்றின் போலித் தன்மையை வெளிப்படுத்தினார். இம் முயற்சியில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அவர் விடுத்த அறைகூவல்கள் (சவால்கள்) அமைகின்றன.

ஆன்மீகப் பயிற்சி, தெய்வீக வரங்கள் என்பனவற்றின் துணையுடன் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் மாந்திரீகர்கள், புனிதர்கள், யோகிகள், சித்தர்கள், குருக்கள், சுவாமிகள் என்போரை நோக்கி இவ் அறைகூவலை அறிவிக்கை வாயிலாக வெளியிட்டார். இது செய்தித்தாள்களில் வெளியானது. தம் அறைகூவலை ஏற்று அதை நிறைவேற்றிக் காட்டுவோருக்கு இலங்கைப் பணமாக ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இப் பரிசுத் தொகையைப் பெற அவர்கள் செய்து காட்ட வேண்டிய அற்புதச் செயல்கள் எவை என்பதும் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. அவை வருமாறு:

1) முத்திரையிடப்பட்ட காகித உறையில் வைக்கப்பட்டுள்ள ரூபாய்த் தாள்களின் வரிசை எண்ணைக் கண்டறிந்து கூறுதல்

2) ரூபாய்த் தாள் ஒன்றின் அசல் நகலை வரவழைத்துத் தரல்

3) கால்கள் வெந்து போகாமல் அரைநிமிட அளவுக்குச் சூடான சாம்பலின் மீது நிற்றல்

4) கோவூர் கேட்கும் பொருளை வெற்றிடத்தில் இருந்து வரவழைத்துத் தரல்.

5) உள்ளத்தின் ஆற்றலால் ஒரு திடப்பொருளை இடம் பெறச் செய்தல் அல்லது வளைத்துக் காட்டல்

6) டெலிபதி என்று அவர்கள் குறிப்பிடும் ஆற்றலின் வாயிலாக மற்றொரு மனிதனின் உள்ளத்தில் உள்ளதைக் கண்டறிதல்

7) பிரார்த்தனை, ஆன்மீக ஆற்றல், லூர்து மாதாவின் தீர்த்தம், திருநீறு என்பனவற்றுள் ஒன்றின் துணையோடு அறுவைச் சிகிச்சையால் துண்டிக்கப்பட்ட மூட்டு ஓர் அங்குல நீளத்துக்காவது வளரும்படிச்செய்தல்

8) யோகா ஆற்றலின் துணையுடன் காற்றில் மிதத்தல்.

9) யோகா ஆற்றலினால் இதயத் துடிப்பை அய்ந்து நிமிட அளவுக்கு நிறுத்திக் காட்டுதல்

10) தண்ணீர் மீது நடத்தல்

11) உடலை ஓர் இடத்தில் கிடத்தி விட்டு மற்றோர் இடத்தில் தோன்றுதல்

12) யோகா ஆற்றலின் துணையுடன் முப்பது நிமிட அளவுக்கு சுவாசித்தலை நிறுத்தி வைத்தல்.

13) ஆழ்நிலைத் தியானத்தின் துணையுடன் படைப்பாற்றலை வளர்த்தெடுத்தல்

14) புனித அல்லது கெட்ட ஆவி இறங்குதலால் தாம் அறிந்திராத மொழியில் பேசுதல்

15) ஆவி அல்லது பேய் ஒன்றினை ஒளிப்படத்தால் வெளிப்படுத்துதல்

16) ஒளிப்படம் எடுக்கும்போது அதில் காட்சியளிக்காமல் மறைந்து போதல்

17) பூட்டப்பட்ட அறை ஒன்றிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியேறுதல்

18) பொருள் ஒன்றின் எடையைக் கூட்டி அதன் அளவை அதிகரித்தல்

19) ஒளித்து வைக்கப்பட்ட பொருள் ஒன்றைக் கண்டுபிடித்தல்

20) தண்ணீரை பெட்ரோல் அல்லது ஒயினாக மாற்றுதல்

21) ஒயினை இரத்தமாக மாற்றுதல்

22) அடுத்து, சோதிடம் பார்ப்பதும், கைரேகை பார்ப்பதும் அறிவியல்பூர்வமானவை என்று கூறும் சோதிடர்களுக்கும் கைரேகை பார்ப்போருக்கும் ஒரு சவால்: பத்து ஓலைச்சுவடிகள் அல்லது சாதகக் குறிப்புகளில் இருந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளோர் இறந்தவரா அல்லது உயிரோடு இருப்பவரா என்பதைக் கண்டறிய வேண்டும். அடுத்து ஆண் / பெண்களுக்குரியதைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, அவர்களின் பிறந்தநாள், பிறந்த நேரம் (நிமிடம் உட்பட), பிறந்த இடம் அட்சரேகை, தீர்க்கரேகை உட்படத் தெளிவாகக் கூற வேண்டும். இதில் அய்ந்து விழுக்காடு தவறு அனுமதிக்கப்படும். இறுதியாக, கோவூரின் இவ் அறைகூவலில் சில விதிமுறைகளும் இடம் பெற்றிருந்தன.

விதிமுறைகள்

1) என்னுடைய அறைகூவலை ஏற்றுக் கொள்பவர் நான் அறிவித்துள்ள பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ள விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆயிரம் ரூபாயைக் காப்புத் தொகையாகக் கட்ட வேண்டும். இக் காப்புத்தொகை கட்டுவதை நான் வலியுறுத்துகிறேன். அவர் வெற்றி பெற்றால் இக் காப்புத் தொகை அவருக்குத் திருப்பித் தரப்படும். அற்பத்தனமான விளம்பரத்திற்காக என்னுடைய நேரம், பணம், ஆற்றலை வீணடிப்போரைத் தடுப்பதற்காகவே இக்காப்புத் தொகை வலியுறுத்தப்படுகிறது.

2) இக்காப்புத் தொகையைக் கட்டியவர்தான் என்னுடைய அறைகூவலை ஏற்றுக் கொண்டவராவார். இதைக் கட்டாதவரிடம் எந்தக் கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்படாது.

3) காப்புத் தொகையைக் கட்டிய பின்னர் அதைக் கட்டியவரின் ஆற்றலானது, இருதரப்பினரும் ஒப்புக் கொண்ட நாளில் கோவூரால் நியமிக்கப்பட்டவரால் வெளிப்படையான சோதனைக்கு உட்படுத்தப்படும்.

4) இத்தொடக்கநிலைச் சோதனையை எதிர்கொள்ளத் தவறுபவரிடம் அவர் கட்டிய காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்

5) தொடக்கநிலைச் சோதனையில் ஒருவர் வெற்றி பெற்றால் கோவூரே பொதுமக்கள் முன்னிலையில் இறுதிச் சோதனையை நடத்துவார்.

6) இறுதிச் சோதனையில் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் கட்டிய காப்புத் தொகையுடன் பரிசுத் தொகையான ஒரு இலட்சம் ரூபாயும் அவருக்கு வழங்கப்படும்.

7) எல்லாப் பரிசோதனைகளும் ஏமாற்றுதலைத் தடுக்கும் சூழலில் கோவூராலோ, அவரால் நியமிக்கப்பட்டவராலோ நடத்தப்படும்.

1963 ஜூன் திங்களில் வெளியான இவ் அறைகூவல் உலகெங்கும் அறிவிக்கப்பட்டது. அறைகூவலின் படிகள், சோதிடர்கள், கைரேகை பார்த்துப் பலன்கூறுவோர், மாந்திரீகர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் எவரும் வெற்றி பெற்று கோவூரிடமிருந்து பரிசுத் தொகையைப் பெறவில்லை.

பெங்களூரில் உள்ள மருத்துவர் ஓருவர் மட்டும் இவ் அறைகூவலை எதிர்கொள்ள முன்வந்து காப்புத் தொகையைக் கட்டினார். இறுதியில் ஆயிரம் ரூபாய்ப் பணத்துடன் பெங்களூரிலிருந்து கோவூர் இலங்கை திரும்பினார்!

புனிதர்கள், அற்புதச் செயல்கள் நிகழ்த்துவோர் என்று தம்மைத் தாமே பறைசாற்றிக் கொண்டோருக்கு அச்சம் அளிப்பவராகவே கோவூர் விளங்கி, இருபதாம் நூற்றாண்டின் உயரிய ஆளுமை கொண்டவராகக் காட்சியளித்ததாக வி.ஏ.மேனன் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நூல்

abrahamin kovri 350இந்நூல், அவர் அவ்வப்பொழுது எழுதிய இருபத்தியெட்டு கட்டுரைகளின் தொகுப்பாகும். அவரது அனுபவத்தின் வெளிப்பாடாகவே இவை அமைந்துள்ளன. ஓர் உளவியல் மருத்துவராக அவர் சிகிச்சை அளித்த மனநோயாளிகளின், மருத்துவச் சிகிச்சை வரலாறாகவும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன.

பேய்களைத் தேடி அலைந்த அவரது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். பேய் உறைவதாக நம்பும் வீடுகளில் இரவு நேரத்தில் அவர் தங்கியுள்ளார். நள்ளிரவில் பேய்களைத் தேடி தம் மனைவியுடன் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்றதையும், அங்கு அவற்றைக் காண முடியாது திரும்பியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு நீலகண்ட பாபாஜி என்பவர் தம் கைகளை ஆகாயத்தில் விரித்துக் காட்டி இலிங்கப் படிமம் ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார் என்ற செய்தி இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழின் வாரமலரில் வெளியானது. இது உண்மைதானா என்று வினவி இந்திராகாந்திக்கு கோவூர் கடிதம் எழுதினார். இது உண்மையல்ல என்ற பதில் பிரதமரின் தனிச் செயலரிடமிருந்து வந்தது.

இதுபோன்ற செய்திகள் அடங்கிய இக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து இரண்டு கட்டுரைகளின் சாரம் இங்கு அறிமுகமாகிறது.

ஓர் அறிவியலாளர்

1972இல் இந்தியாவின் பிரபல வார இதழ் ஒன்று இந்திய அளவில் பரவலாக அறிமுகமாகியிருந்த, சாமியார் ஒருவரை மையமாகக் கொண்ட விவாதத்தைத் தொடங்கியிருந்தது. அவர் கடவுளின் அவதாரமா அல்லது தந்திர வித்தைக்காரரா என்பது விவாதத்தின் கருப்பொருளாகும். அதில் முதற் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டு மூன்று இதழ்களில் கோவூர் கட்டுரை எழுதினார்.

கோவூரின் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்து இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய ஒருவர் இரண்டு மறுப்புக் கட்டுரைகள் எழுதினார். இவர் அறிவியலில் பி.எச்.டி., டி.எஸ்.சி. ஆகிய ஆய்வுப் பட்டங்களைப் பெற்றவர்.

இவர் எழுதிய கட்டுரையின் தொடக்கத்தில் தமது இளமைப் பருவத்தில் கோவூரைப் போன்றே பகுத்தறிவுவாதியாக இருந்ததாகவும், பின்னர் ............அந்த மாந்திரீகவாதச் சாமியாரின் அற்புதச் செயல்கள் சிலவற்றைக் கண்டபிறகு தமது பகுத்தறிவுவாதத்தைக் கைவிட்டு விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் அவர் செய்த அற்புதச் செயல்களை விவரித்திருந்தார். அவை நேர்மையான அற்புதச் செயல்களேயன்றி தந்திரச் செயல்கள் அல்லவென்றும் வாதிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ஓர் அற்புதச் செயலை கோவூர் ஆராய்ந்து வெளிப்படுத்தியதே இந்நூலில் இடம் பெற்றுள்ள மூன்றாவது கட்டுரையின் உள்ளடக்கமாகும்.

அற்புதச் செயல்

உலகப் புகழ் பெற்ற கைக்கடிகார உற்பத்தியாளரான ஜப்பான் நாட்டு சீகோ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவுக்குப் பயணமாக வந்திருந்தார். இந்தியப் பயணத்தை மேற்கொள்ளு முன்னர் மிக உயரிய வகையிலான கைக்கடிகாரம் ஒன்றைத் தயாரித்து அதைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து விட்டு வந்து விட்டார்.

இந்தியப் பயணத்தின்போது ஆர்வத்தின் அடிப்படையில் இச்சாமியாரைக் காண வந்தார். ஜப்பானியக் கனவானைக் கண்டதும் ஆகாயத்திலிருந்து பெரிய பொதி ஒன்றை வரவழைத்து அவரிடம் சாமியார் கொடுத்தார். அப்பொதியை அவிழ்த்துப் பார்த்த ஜப்பானியர் வியப்பில் ஆழ்ந்து போனார். அதனுள் பெட்டகத்தினுள் அவர் பாதுகாப்பாக வைத்திருந்த கைக்கடிகாரம் இருந்தது. பட்டு நூலால் சுற்றப்பட்டு, அப்புதிய கைக்கடிகாரத்தின் பெயரும் விலையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதைப் பார்த்ததும் அச்சாமியாரின் ஆற்றல் குறித்து அவர் கொண்டிருந்த அய்யப்பாடுகள் நீங்கின. அவரது பாதங்களில் விழுந்து வணங்கியதுடன் அவரது பக்தராகவும் மாறி விட்டார்.

ஜப்பானுக்குத் திரும்பியவுடன் பெட்டகத்தில் அவர் வைத்திருந்த கைக்கடிகாரம் அங்கு இல்லாததைக் கண்டறிந்தார். தெய்வீகத் தோற்றத்துடன் புதர் போன்ற தலைமுடியைக் கொண்ட ஒருவர் அலுவலகத்தினுள் நுழைந்து பெட்டகத்தைத் திறந்து கைக்கடிகாரத்துடன் வெளியேறியதாக அவரது தனிச் செயலாளர் கூறினார்.

கோவூரின் ஆய்வு

அவ்வறிவியல்வாதியின் இக்கூற்று சோதித்தறியப்படாத ஒன்று என்ற நிலையில் இக்கூற்றை சோதனைக்கு உட்படுத்த கோவூர் விரும்பினார். இதன் முதற்கட்டமாக இதை வெளியிட்ட அறிவியலாளருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் பொறுப்புள்ள ஒரு செயலர், அந்நியர் ஒருவர் வந்து பேழையைத் திறக்கும்போது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து காவல் துறையை அழைத்திருக்க மாட்டாரா? என்ற வினாவை எழுப்பினார்.

மேலும் இக்கூற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் தன் முயற்சியில் அவர் ஒத்துழைக்காவிடில் அவரது உண்மைத் தன்மை மீதும், நேர்மையின் மீதும் அய்யப்பட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டதுடன், உள்நோக்கத்துடனேயே இத்தகைய பொய்யான கருத்துப் பரப்புரையைத் திட்டமிட்டே செய்ததாகக் கருத இடமுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கோவூரின் இக்கடிதத்திற்கு அறிவியலாளரிடமிருந்து பதில் வரவில்லை. எனவே தாமே உண்மையைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கோவூர் முடிவு செய்தார்.

இலங்கையிலுள்ள ஜப்பான் நாட்டுத் தூதுவர் உதவியால் சீகோ கைக் கடிகார நிறுவன உரிமையாளரின் பெயரையும் முகவரியையும் பெற்றுக் கொண்டார்.

30 அக்டோபர் 1973 நாளிட்ட கடிதத்தில் அவ்வறிவியலாளரின் கூற்றை அப்படியே மேற்கோளாகக் குறிப்பிட்டுவிட்டுப் பின்வரும் கேள்விகளுக்கு விடை அளிக்கும்படி கைக்கடிகார நிறுவன உரிமையாளரைக் கேட்டிருந்தார். அவரிடம் எழுப்பிய கேள்விகள் வருமாறு.

1) நீங்களோ உங்கள் நிறுவனத்தின் பங்காளிகள் எவரேனுமோ இச்சாமியாரை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?

2) உங்களுக்கோ உங்கள் தொழில் கூட்டாளிகள் எவருக்குமோ காற்றிலிருந்து கைக்கடிகாரத்தை அவர் வரவழைத்துக் கொடுத்தாரா?

3) உங்களிடமோ உங்கள் தொழில் கூட்டாளிகள் எவரிடமோ அந்நியர் ஒருவர் பெட்டகத்தைத் திறந்து கைக்கடிகாரத்தை எடுத்துச் சென்றதாக உங்கள் தனிச் செயலாளர் கூறினாரா?

4) நீங்களோ உங்கள் தொழில் கூட்டாளிகள் எவருமோ அச்சாமியாரின் பக்தர்களா?

இக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஜப்பானிய தொழிலதிபர், உண்மையைக் கண்டறிய கோவூர் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிவிட்டு, மேற்கூறிய நிகழ்வு தொடர்பாக அவர் கேட்டுள்ள நான்கு கேள்விகளுக்கும் இல்லை என்ற விடையையே அளிப்பதாக பதில் எழுதி அனுப்பினார்.

இக்கடிதத்தைப் பெற்ற உடன் அதன் ஒளிநகலுடன் கடிதம் ஒன்றை அவ்அறிவியலாளருக்கு எழுதினார். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அச்சாமியாரைக் குறித்த பொய்யான பரப்புரையில் அறிவியலாளர் ஈடுபட்டார் என்ற முடிவுக்குத் தாம் வந்ததாகக் கோவூர் குறிப்பிட்டுள்ளார்.

மாசில்லாக் கருத்தரிப்பு

கோவூர் மேற்கொண்ட உளவியல் சிகிச்சைகளில் ஒன்றின் பதிவே மாசில்லாக் கருத்தரிப்பு என்ற தலைப்பில் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது.

1967 நவம்பர் 26வது நாளன்று இலங்கை அரசுத்துறை ஒன்றின் உதவி ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற அறுபது வயதை எட்டிய ஒருவர் கோவூரைக் காணத் தம் மனைவியுடன் வந்திருந்தார்.

இருவரும் புத்த சமயத்தினர். தம் மனைவியை வரவேற்பறையில் அமர்த்திவிட்டுக் கோவூரைச் சந்திக்கத் தனியே வந்தார். அவர் தம் மனைவிக்கு ஏற்பட்டிருந்த உளவியல் சிக்கலை விரிவாக விவரித்தார்.

இதன்படி கத்தோலிக்கப் புனிதர்களில் ஒருவராக இடம் பெற்றிருக்கும் புனித யூதா (St JUDE) உடன் தமக்குக் காதல் ஏற்பட்டு உடலுறவு நிகழ்ந்து கருவுற்றிருப்பதாக அவர் மனைவி நம்புகிறாள் என்று கோவூரிடம் முறையிட்டார். இது தொடர்பாக அவரிடமும் அவரது மனைவியிடமும் உரையாடல் நிகழ்த்தியதுடன் ஜெரின் என்ற பெயர் கொண்ட அப்பெண்ணை, ஆழ்துயிலில் ஆழ்த்தியும் பல செய்திகளைக் கோவூர் கேட்டறிந்தார்.

இதன்படி ஜெரின் அவரது கணவருக்கு இரண்டாவது மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய். அவரது பணி ஓய்வுக்குப் பின்னரே இவர்களது திருமணம் நிகழ்ந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் மூன்றாவது குழந்தையின் பிறப்பைத் தவிர்க்க கருத்தடை முறை எதையும் பின்பற்றாமல் மனைவியுடனான உடலுறவை அவர் தவிர்த்து விட்டார்.

42 வயதேயான அவரது மனைவியின் பாலியல் வேட்கை குறித்து அவர் கவலைப்படவில்லை. பாலியல் வேட்கையுடன் இருந்தாலும் முறையற்ற பாலுறவின் மூலம் பாலியல் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளும் எண்ணம் ஜெரினுக்கு இல்லை. இருப்பினும், பாலியல் வேட்கை அவரையும் அறியாது அவரை ஆட்டிப் படைக்கலாயிற்று.

பள்ளியில் பயிலும்போது கத்தோலிக்க மாணவர்களுக்கு மட்டுமான சமய வகுப்பில் விருப்பத்துடன் வலியச் சென்று கலந்து கொண்ட அனுபவத்தால் புனித யூதாவை ஜெரினா அறிந்திருந்தார். இதுவே தன் புனிதமான காதலனாக அவரைக் கருதும்படிச் செய்தது. அவளது மார்பில் தன் நகத்தால் அவர் சிலுவைக்குறி இட்டதாகவும் மோதிரம் மாற்றிக் கொள்வதாகக் கூறியதாகவும் கற்பனைகளை உருவாக்கியது. இவற்றின் உச்சகட்டமாக அவரின் உறவால் தாம் கருவுற்றிருப்பதாக நம்பும்படிச் செய்தது.

கணவன், மனைவி இருவரிடையே நடத்திய உரையாடல் வழியாகவும் ஜெரினாவை ஆழ்துயிலில் ஆழ்த்தி நிகழ்த்திய உரையாடல் வாயிலாகவும் பாலியல் உறவில் நிறைவின்மை ஜெரினாவுக்கு ஏற்பட்டுள்ளதைக் கோவூர் கண்டறிந்தார்.

ஓர் இளம் மனைவியின் பாலியல் தேவையை நிறைவு செய்யுமாறு கணவனுக்கு அறிவுரை கூறினார். ஜெரினாவை மீண்டும் ஆழ்துயிலில் ஆழ்த்தி புனித யூதா பேசுவதாகக் கூறி இதுவே தனது கடைசி வருகை என்றும், அவளது கருப்பையிலுள்ள கருவைத் தாம் எடுத்துச் செல்வதாகவும், இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டேன் என்றும் உறுதிபடப் பேசி ஜெரினாவை நம்பச் செய்தார்.

இதுவே கோவூர் வழங்கிய உளவியல் சிகிச்சை. இச்சிகிச்சையின் பயனாக, தன்னைவிட்டு புனித யூதா விலகிச் சென்றதாக ஜெரினா நம்பியதுடன் அவரிடம் கொண்ட உடலுறவால் உருவான மாசில்லாக் கரு கலைந்து போனதாகவும் நம்பினார்.

***

இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல திறத்தவை. ஆயினும் இவை அனைத்திற்கும் இடையே, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஓர் ஆற்றல் இல்லை என்பதுடன் தந்திரச் செயல்கள், மக்களின் அறியாமை என்பனவற்றின் துணையுடன்தான், அற்புதச் செயல்களும் அச்சுறுத்தும் செயல்களும் நோய் குணப்படுத்தும் சிகிச்சைகளும் மாந்திரீகர்களால் நிகழ்த்தப்படுகின்றன என்ற உண்மை இழையோடுகிறது.

இறப்புக்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டா, சோதிடம், போலி அறிவியல், தியானம், விவிலியம், பல்வேறு வகையான பேய்கள், பிசாசுகள், ஆவிகளுடன் உரையாடுதல், லூர்து மாதாவின் நோய் போக்கும் ஆற்றல், சங்கிலி வீரன், காட்டேரி ஆகிய நாட்டார் தெய்வங்களை மையமாகக் கொண்டு உருவான வழக்காறுகள், பிறர் உள்ளத்தில் உருவாகும் எண்ணங்களைக் கண்டறிதல் என்பன குறித்த திறனாய்வுத் தன்மை இக்கட்டுரைகளில் அழுத்தமாகப் பதிவாகி உள்ளது.

மொத்தத்தில், பகுத்தறிவுவாதத்தின் தேவையை உணர்த்தும் சிறப்பு இந்நூலுக்கு உள்ளது.

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It