அரசியல் தளத்தில் “தொண்டர்” என்ற சொல்லுக்கு மரியாதையும், அர்ப்பணிப்பும், சேவையும் இணைந்து காணப்படுகின்றன. ஆனால் அந்த சொல் மறைக்கும் இன்னொரு உண்மை உள்ளது — அது சுரண்டலின் உண்மை. குறிப்பாக கடைமட்டத்தில் செயல்படும் தொண்டர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, அவர்கள் செய்கிற உழைப்புக்கும் அவர்கள் பெறும் பலனுக்கும் இடையிலான பெரும் பிளவு தெளிவாகத் தெரிகிறது.

இந்த நிலையை புரிந்து கொள்ள, தொண்டர்களை இரண்டு வகைகளாகப் பிரித்து ஆராயலாம்: வாக்கு அரசியலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மற்றும் வாக்கு அரசியலில் நம்பிக்கை இல்லாமல் சமூக மாற்றத்தை நோக்கி இயங்கும் இயக்கங்களின் தொண்டர்கள்.

வாக்கு அரசியல் தொண்டர்கள், அரசியல் கட்சிகளின் அடித்தளமாகக் கருதப்படுகின்றனர். தேர்தல் காலங்களில் அவர்கள் செய்கிற உழைப்பு — வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பது, கூட்டங்களை ஒழுங்குபடுத்துவது, கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது — இவை அனைத்தும் ஒரு கட்சியின் வெற்றிக்குத் தீர்மானகாரகமாக அமைகின்றன. அவர்களின் உழைப்பு அரசியல் அதிகாரத்தை உருவாக்குகிறது. ஆனால் அந்த அதிகாரத்தில் அவர்களுக்கு கிடைக்கும் இடம் மிகவும் குறைவு.

சமுதாய பார்வையிலும் இந்த வேறுபாடு தெளிவாகப் பார்க்க முடிகிறது. தேர்தல் காலங்களில் அவர்கள் “ஆக்டிவ்” மற்றும் “அர்ப்பணிப்பு மிக்கவர்” என்று பாராட்டப்படுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்தவுடன், அவர்கள் மீண்டும் பொதுமக்களாகவே கருதப்படுகிறார்கள். இந்த தற்காலிக அங்கீகாரம், அவர்களின் உழைப்பின் உண்மையான மதிப்பை மறைக்கிறது.

பொருளாதார ரீதியாகவும், இந்த தொண்டர்கள் பெரும்பாலும் நிலைத்தன்மையற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். அரசியல் பணிகளில் செலவழிக்கும் நேரமும், பணமும் அதிகம்; ஆனால் அதற்கான வருமானம் அல்லது பாதுகாப்பு இல்லை. பலர் கட்சிக்காகவே தனிப்பட்ட செலவுகளை ஏற்றுக்கொள்வதோடு, சில சமயங்களில் கடன் சுமையையும் ஏற்கின்றனர். இங்கு அவர்களின் உழைப்பு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றமடைவதில்லை.

இதற்கு மாறாக, வாக்கு அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்களின் தொண்டர்கள், அதிகாரத்தை நோக்கி அல்லாது, சமூக மாற்றத்தை நோக்கி செயல்படுகின்றனர். மனித உரிமைகள், சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலட்சியங்களுக்காக அவர்கள் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகின்றனர். இவர்களின் பங்களிப்பு தேர்தல் வெற்றியில் அளவிடப்படாது; அது சமூக விழிப்புணர்வில் வெளிப்படுகிறது.

ஆனால் இவர்களின் பாதையும் சிரமமில்லாதது அல்ல. சமுதாயம் இவர்களை பல நேரங்களில் “சமுக விரோதிகள்” அல்லது “எப்போதும் அமைதிக்கே இடையூறு செய்பவர்கள்” என்று பார்க்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் குறைவாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும், இவர்களும் நிலைத்தன்மையற்ற சூழலில் தான் செயல்படுகின்றனர். இருப்பினும், இவர்களின் செயல்பாடு ஒரு முக்கிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது — அவர்கள் தங்கள் தேர்வை அறிந்தே செய்கிறார்கள்.

ஒரு அமைப்பு அல்லது அரசியல் கட்சி, தனது தொண்டர்களின் உழைப்பை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது அதன் உள் நிர்வாகத்தின் தரத்தை நிர்ணயிக்கிறது. தெளிவான பொறுப்புப் பிரிவு இல்லாமல், அதிகாரம் சிலரின் கையில் மட்டுமே சுருங்கும்போது, தொண்டர்களின் உழைப்பு “பங்களிப்பு” என்ற பெயரில் இருந்து “பயன்பாடு” என்ற நிலைக்கு மாறுகிறது. இங்கே தான் சுரண்டலின் முதல் அடுக்கு உருவாகிறது.

ஒரு ஆரோக்கியமான அமைப்பில், தொண்டர்களின் பங்கு தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். யார் என்ன செய்கிறார்கள், எந்த அளவுக்கு செய்கிறார்கள், அதன் விளைவு என்ன — இவை அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த தெளிவு இல்லாதபோது, தொண்டர்களின் உழைப்பு அளவுகோல் இல்லாத ஒன்றாக மாறி, அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் அதன் மதிப்பு கணக்கிடப்படாததாகிவிடுகிறது.

அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அமைப்புகளில், முடிவெடுக்கும் சக்தி சிலரிடம் மட்டுமே இருக்கும். இதனால், அடித்தளத்தில் உழைக்கும் தொண்டர்களின் குரல் கேட்கப்படாது. ஒரு சமநிலையான அமைப்பில், தீர்மானங்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு,

கருத்து சொல்லும் உரிமை, உள்ளூர் நிலைமைகளில் தீர்மானிக்கும் சுயாட்சி,

இவை அனைத்தும் தொண்டர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதிகாரம் பகிரப்படாத இடங்களில், தொண்டர்கள் எப்போதும் “கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள்” ஆகவே தங்கிவிடுகிறார்கள்.

ஒரு தொண்டரின் உழைப்பிற்கு வரம்புகள் அவசியம். எப்போது வேலை செய்ய வேண்டும்? எவ்வளவு நேரம்? எந்த அளவுக்கு தனிப்பட்ட செலவுகளை ஏற்க வேண்டும்? இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாத அமைப்புகளில், தொண்டர்களின் வாழ்க்கை முழுவதும் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இழுக்கப்படுகிறது. “அர்ப்பணிப்பு” என்ற பெயரில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மெதுவாக அழிக்கப்படுகிறது. எனவே, ஒரு நியாயமான அமைப்பு, நேர வரம்புகள், பொருளாதார பொறுப்புகளின் வரையறைகள், தனிநபர் வாழ்க்கைக்கான இடம், இவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

தொண்டர்களின் பாதுகாப்பு என்பது உடல் பாதுகாப்பை மட்டும் குறிக்கவில்லை; அது பொருளாதார, சமூக, மற்றும் மனநல பாதுகாப்புகளையும் உள்ளடக்கியது.

நிலையான உதவி அமைப்புகள், சட்ட ரீதியான பாதுகாப்பு, அவசர சூழ்நிலைகளில் உதவி, நீண்ட கால நலத்திட்டங்கள், இவை இல்லாதபோது, தொண்டர்கள் தங்கள் வாழ்க்கையை ஆபத்தில் இட்டு வைத்து செயல்பட வேண்டிய நிலை உருவாகிறது. இந்த பாதுகாப்பின்மையே, அவர்களை பலியாடுகளாக மாற்றும் முக்கிய காரணமாகிறது.

வாக்கு அரசியல் தொண்டர்களின் சூழலில், இந்த கட்டமைப்புகள் பெரும்பாலும் பலவீனமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கின்றன. அதனால் அவர்கள் அறியாமலேயே சுரண்டலின் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். மாற்றாக, சில இயக்கங்களில் கட்டமைப்பு தெளிவாக இருந்தாலும், வளங்களின் பற்றாக்குறை காரணமாக பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட முடியாத சூழல்கள் உள்ளன.

அரசியல் அமைப்புகள் பெரும்பாலும் படிநிலை அடிப்படையில் இயங்குகின்றன. அதில் கீழ்தட்டு உழைப்பு மேல்தட்டு அதிகாரமாக மாறுகிறது, ஆனால் அந்த மாற்றத்தில் உழைத்த மனிதன் காணாமல் போகிறான்.ஒரு நியாயமான அரசியல் அமைப்பு, தொண்டர்களின் உழைப்பை புரிந்து கொள்ளும் மட்டுமல்ல — அதை அனுபவிக்கும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றைப் படைக்கவோ, காக்கவோ அல்லது அழிக்கவோ தனி மனிதனால் மட்டும் இயலாது. எந்த அமைப்பும் பலரின் கூட்டு உழைப்பின் மூலம் தான் உருவாகிறது. ஆனால் அந்த கூட்டு உழைப்பின் விளைவு அதிகாரம், ஒரே புள்ளியில் குவியத் தொடங்கும் போது, அது இயல்பாகவே சமநிலையை இழக்கிறது. இந்த குவிதல் தான் சுரண்டலின் முதல் படியாக மாறுகிறது. இதன் விளைவாக, தொண்டர்களின் உழைப்பு “கூட்டு முயற்சி” என்ற நிலையிலிருந்து “மேல்நிலைக்கு எரிபொருள்” என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. அவர்கள் அமைப்பை கட்டுகின்றனர்; ஆனால் அந்த அமைப்பு உருவாக்கும் அதிகாரம் அவர்களிடம் திரும்பி வருவதில்லை.

இதற்கு மாறாக, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டால், அது பரவலாக விநியோகிக்கப்பட்டால், அமைப்பின் இயல்பு மாறுகிறது. இந்த பரவலாக்கம், சுரண்டலைத் தடுக்கும் ஒரு முக்கிய கருவியாக அமைகிறது. ஏனெனில், அதிகாரம் பகிரப்பட்ட இடத்தில், அதை கண்காணிக்கும் சக்தியும் பரவலாக இருக்கும். அதிகாரம் பகிரப்படுவது என்பது வெறும் பொறுப்புகளைப் பகிர்வது அல்ல

அது பொறுப்புக்கூறும் நிலையை உருவாக்குவது.

ஆனால் பல அரசியல் அமைப்புகளில், இந்த பகிர்வு நடைமுறையில் இல்லை. மாறாக, தொண்டர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு அதிகாரம் கட்டப்படுகிறது. அந்த அதிகாரம் மேல்நிலைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது அதன் விலையாக, அடித்தளத்தில் உள்ளவர்கள் பலியிடப்படுகிறார்கள்.

தொண்டர்கள் - அவர்கள் தான் அடித்தளம்… அவர்கள் தான் இயக்கம்… அவர்கள் தான் அதிகாரம்… அவர்கள் அதை உணரும் நாளே, அரசியல் மாறும் நாள்.

- கோபி சேகுவேரா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.