Political flagஜனநாயகத்தின் பெருமதிகளை பற்றி வாய் கிழிய வகுப்பெடுக்கும் யாரும் அந்த ஜனநாயகத்தின் அடி நாதமாகக் கருதப்படும் தேர்தல் முறை முற்று முழுக்காக மக்களின் குரலை நசுக்குவதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது.

பெரிய கட்சிகளுக்கு ஓட்டுப் போடுங்கள் எனப் பரப்புரை செய்யும் உதடுகள் எதுவும் குறைந்த சதவீதம் ஓட்டுப் பெற்றுத் தோல்வியை தழுவும் கட்சிகளின் நிலைப் பற்றி மறந்தும் வாய் திறப்பதுக் கிடையாது.

நமக்கு கருத்தியல் ரீதியாக ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தங்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வழியில் மாற்றம் ஏற்படும் என நினைக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பலச சிறிய கட்சிகள் 3 முதல் 4 சதவீதம் வரை ஓட்டு வங்கியைக் கொண்டிருக்கின்றன.

அவற்றையெல்லாம் சேர்த்தால் ஏறக்குறைய 10 சதவீத மக்கள் மாற்றத்தை நோக்கியச் சிந்தனைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் பொருள்.

ஆனால் அந்த மக்களுக்கு இந்திய ஜனநாயகம் கொடுக்கும் மரியாதை என்ன? எதுவுமே கிடையாது. 100 ஓட்டு வாங்கிய வேட்பாளர் வெற்றிப் பெற்றவர். 99 ஓட்டு வாங்கிய வேட்பாளர் தோல்வி அடைந்தவர்.

இதைவிட வெட்கக் கேடான தேர்தல் முறை வேறு என்ன இருக்க முடியும்?. இது பெரும்பாண்மை மக்களின் ஜனநாயகமாக எப்படி இருக்க முடியும்?.

3 சதவீத 4 சதவீத ஓட்டுக்களை அளித்த மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள் கிடையாதா? அவர்களின் அபிலாசைகளுக்கு மதிப்பு கிடையாதா?.

100 ஓட்டுப் பெற்றவன் வெற்றி 99 ஓட்டுக்கள் பெற்றவன் தோல்வி என்பது சூதாட்டாத்திற்கு வேண்டுமானால் பொருந்திப் போகலாம். ஆனால் மிகப்பெரிய சமூக அசமத்துவம் நிறைந்த நாட்டில் அந்த 3 சதவீதம் 4 சதவீதம் வாக்குகள் கூட அழுத்தப்பட்டு மூச்சித் திணறிக் கொண்டு இருக்கும் ஒருவனின் மரண ஓலமாகும். அதற்கு மதிப்புத் தர வேண்டியதுதான் ஜனநாயகமே அன்றி, பெரிய கட்சிகளின் ஏவல் நாயாக வாலாட்டி குரைத்து நிற்பதல்ல.

ஜனநாயகம் என்பது பெரியக் கட்சிகளின் ஆதிக்கமாக மட்டுமே இருக்க முடியும் என்ற சூழல் இருக்கும் வரை நிச்சயம் எந்த ஒரு மாற்றத்தையும் நம்மால் இந்தச் சமூக அமைப்பில் ஏற்படுத்தி விட முடியாது.

பெரும்பாண்மை மக்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நிலைதான் அதன் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் காரணமாக இருக்கின்றது.

பெரிய கட்சிகள் கார்ப்ரேட்டுகளிடமிருந்து கோடிக் கோடியாய் நன்கொடைப் பெற்றும், ஊழல் செய்தப் பணத்திலும் ஓட்டுக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெறும் போது, சிறிய கட்சிகள் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவுகின்றன.

இவற்றை ஒழிக்க ஒரே வழி விகிதாச்சாரப் பிரதி நிதித்துவ தேர்தல் முறையை கொண்டு வருவதுதான். நெதர்லாந்து, பின்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, போலந்து, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து ஜெர்மனி, நியூஸிலாந்து, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல் அயர்லாந்து, மோல்டோவா போன்ற நாடுகள் இந்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை பின்பற்றப்படுகின்றன.

இந்த முறையில் ஒவ்வொரு கட்சியும் அது பெரும் ஓட்டு சதவீதத்திற்கு ஏற்ப வேட்பாளர்களைப் பெற்றுக்கொள்கின்றது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 41.06, திமுக 31.86 காங்கிரஸ் 6.47, பாமக 5.36, பாஜக 2.86, தேமுதிக 2.41, நாம் தமிழர் 1.07 சதவீத வாக்குகளையும் பெற்றன. அவை பெற்றத் தொகுதிகள் முறையே அதிமுக 134, திமுக 89, காங்கிரஸ் 8 ஆகும். ஆனால் மற்ற கட்சிகள் எந்த வேட்பாளர்களையும் பெற முடியாமல் போனது.

ஆனால் இதுவே விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் அதிமுக 96, திமுக 74, காங்கிரஸ் 15, பாமக 12, பாஜக 7, தேமுதிக 6, நாம் தமிழர் 3 இடங்களையும் பெற்று இருப்பார்கள். இது தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கூட தலா ஒரு இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இப்படியான தேர்தல் முறை கொண்டு வரப்படும் போதுதான் பெரிய கட்சிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து சிறிய கட்சிகள் கூட தங்களின் குரலை மக்கள் மன்றத்தில் பதிக்ச் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

ஜனநாயகம் என்பது ஒற்றைக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் மக்கக்ச் சிந்திக்க பயிற்றுவிப்பதல்ல. பல்வேறு கருத்துகளுக்கும், சித்தாந்தாங்களுக்கும் அது வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும்.

பெரிய கட்சிகளை எப்படி மக்கள் நம்புகின்றார்களோ அதே போல சிறிய கட்சிகளையும் மக்கள் நம்பத்தான் செய்கின்றார்கள். பல ஆண்டுகளாகப் பெரிய கட்சிகள் தங்களுக்கு எதுவுமே செய்யாத போது மாற்றுக் கருத்தையும் தத்துவத்தையும் கொண்டு வரும் யாராக இருந்தாலும் அவர்களை ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் ஆதரிக்கின்றார்கள்.

உண்மையான ஜனநாயகம் என்பது அப்படி மாற்றத்தை நாடும் மக்களின் குரலுக்கும் மதிப்பளிப்பதுதான். இதன் மூலம் பணநாயகம் பெரும் அளவில் கட்டுப்படுத்தப்படும். பெரிய கட்சிகள் கூட சிறிய கட்சிகளிடம் பயந்து கொள்ளும் நிலை ஏற்படும்.

பணமும், சாதிப் பலமும் இருந்தால் மட்டுமே வெற்றிப் பெற முடியும் என்ற நிலையில் நிச்சயம் விகிதாச்சாரப் பிரநிதித்துவ தேர்தல் முறை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

பெரிய கட்சிகள் இதை ஒருப் போதும் ஆதரிக்காது என்பதுச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிறியக் கட்சிகள் நிச்சயம் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். தங்களின் இருத்தலை அவை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், தங்களை நம்பும் மக்களின் குரலை மக்கள் மன்றத்தில் ஒலிக்க விரும்பினால் அவை நிச்சயம் இதைச் செய்துதான் ஆக வேண்டும்.

 சிறிய கட்சிகள் உண்மையில் பெரியக கட்சிகள் செய்யாததை செய்யும் போது காலப்போக்கில் அவை வளரவும் மக்களின் நன்மதிப்பையும் பெறவும் முடியும். மக்களுக்கான சித்தாந்தத்துடன் யார் களத்திற்கு வந்தாலும் நிச்சயம் வெற்றிப் பெற முடியும் என்ற நிலை ஏற்படும். அதுவே உண்மையான ஜனநாயகம்.

- செ.கார்கி

Pin It