கடந்த ஒரு வார காலமாக, தமிழக அரசியலில் குழப்பமும், நிரந்தரமற்ற தன்மையும் உருவாகி பெரும் விவாதங்கள் நடந்து வருகிறது. இதில் சசிகலா, பன்னீர் - பா.ஜ.க - தி.மு.க, இன்னும் இவர்களின் ஆதரவு நிலை எடுப்பவர்களை வெவ்வேறு அணியாகக் கருதிப் பலரும் பேசுகிறார்கள்; ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே அணிதான். ஒரு வரியில் சொன்னால் “இவர்கள் அனைவரும் தமது சொந்த நலன்களை முன்னிருத்தி அடித்துக் கொள்பவர்கள்தான்”. சசிகலா ஊழல்வாதி என்று பன்னீர் எதிர்க்கவில்லை. பன்னீர், மதவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் என்று சசிகலா பன்னீரோடு முரண்படவில்லை. பா.ஜ.க. தனது கொள்கையின் அடிப்படையில் இவர்களோடு உறவு கொள்ளவோ, முரண்படவோ இல்லை. விரைவில் இவர்களுக்குள் ஒரு டீலும் உருவாகி விடும். இந்த சுயநல கூட்டத்தைத் தாண்டி, மக்கள் நலன் சார்ந்து இருப்பவர்கள், தமிழக அரசியல் சூழலில் என்ன நிலைப்பாடு எடுப்பது? மக்களிடம் என்ன கருத்தைக் கொண்டு செல்வது?
கடந்த 69 ஆண்டுகளாக நமது நாட்டில் ஒர் அரசியல் முறை பின்பற்றப்படுகிறது. அது இரண்டில் (அல்லது) நான்கில் ஒன்றைத் தேர்வு செய். அதிமுக (அல்லது) திமுக. காங்கிரஸ் (அல்லது) பா.ஜ.க. இவர்கள் எல்லாம் மக்களிடம் ரொம்ப அம்பலமாகி விட்டார்களா? விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி, கேஜ்ரிவால், மம்தா, நிதிஸ், அடுத்து விஜய், தனுசாகக் கூட இருக்கலாம்! மக்கள் தங்களது சிந்தனையை இந்த கட்சிகளுக்குள் ஒன்றைத் தேர்வு செய்வது என சுருக்கிக் கொள்ள வேண்டும். இதுவும் சரியில்லையா? சரி நோட்டோவை வைத்துக் கொள். அதனால் பயனில்லை என்றாலும் இதுதான் இந்த ஜனநாயகத்தின் உட்சபட்சம்.
சரி, இந்த அரசியல்வாதிகளே மோசம்! அப்படியா? அதிகாரிகளிடம் மனு கொடு. மனு நீதி நாள், மக்கள் குறை தீர் நாள் உள்ளது. அங்கேயும் ஆகவில்லை. நீதிமன்றம் போ. அங்கு குமாரசாமிகள் உள்ளார்களே? சரி, அப்பீல் போடு. உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதுதான் இறுதி. காவிரியில் அதுவும் ஏற்கப்படவில்லையே! சரி, அரசியலமைப்பின் நான்காவது தூண் உள்ளது. அங்கு முறையிடு. அங்கும், அம்பானி, கருணாநிதி, வைகுண்டராஜன், பச்சமுத்து எல்லோரும் மீடியா நடத்துகிறார்களே? என்ன செய்வது? எல்லாம் மோசம்தான்! இதுல பரவாயில்லாத மோசத்தத் தேர்ந்தெடு!
இதுதான் நமது அரசியல் அமைப்பின் வரம்பு. இதற்குள் இவ்வளவுதான் செய்ய முடியும். வரம்பு சரி, ஆனால் மக்கள் பிரச்சனைகள் தீரவில்லையே? மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை, 80 கோடி மக்களுக்கு தினமும் 20 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை, சாதி-தீண்டாமை, பாலியல் வன்கொடுமைகள், மதக் கலவரங்கள், எங்கும், எதிலும் ஊழல், லஞ்சம், இயற்கை வளங்கள் கொள்ளை…………இன்னும் ஆயிரம், ஆயிரம் பிரச்சனைகள்! எதையும் ஓட்டு அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை தீர்க்கவில்லை!
இனித் தீர்க்கவும் முடியாது! ஏனென்றால் பிரச்சனையே இவர்கள்தான்! பல கோடி மக்கள் தெருவோரங்களில் வசிக்கும்போது, 5000 கோடியில் அம்பானிக்கு வீடும், 3000 கோடியில் ஜெயாவுக்கு கொடநாடு எஸ்டேட்டும் வைத்துக் கொள்ள வழிவகை செய்பவர்கள்தான் நமது அரசமைப்பின் பிரதிநிதிகள். இவர்களின் நோக்கம் 95% மக்களை நிரந்தரமாகப் பிரச்சினையில் வைத்து 5% அம்பானி, அதானிகளைக் காப்பதே! இவர்களின் சேவைக்கு, குறிப்பிட்ட சதவீதம் பங்கு எடுத்துக் கொண்டு, உல்லாசமாக வாழ, இந்த அரசியலமைப்பு அனுமதிக்கும்! மோடி, அதானிக்காக ஆஸ்திரேலியா செல்வதும், அம்பானியின் ஜியோ சிம்மின் தூதராவதும் இதற்குத்தான்!
ஆக, இந்த அரசமைப்பின் வரம்பில் நின்று சிந்தித்தால் மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு இல்லை எனத் தெளிவாகும்போது, மாற்றை நோக்கிச் சிந்திப்பதுதானே சரி! மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் அரசமைப்பு முறை, அதன் சட்டங்கள் உள்ளனவே தவிர, சட்டத்திற்காக மக்கள் ஒருபோதும் இருக்க முடியாது.
அரசமைப்புச் சட்டம் தமிழக சூழலுக்குத் தரும் தீர்வு இதுதான். சசிகலா (அல்லது) பன்னீர் (அல்லது) தேர்தல் மூலம் ஒரு கட்சி (அல்லது) கவர்னர் ஆட்சி. இந்த நான்கு தீர்வுகளால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன? விடை பூஜ்யம்தான். இது கிட்டத்தட்ட ஹெல்மெட்டை செய்து வைத்துக் கொண்டு, அதற்கேற்ப தலையை வெட்டிக்கொள் என்ற வகையிலான தீர்வே! இதை எப்படி ஏற்க முடியும்? எனவே சிந்தனையின் வரம்பை, இன்னும் விசாலமாக்குவதே அறிவுப்பூர்வமாக சரி! 69 ஆண்டு கால அனுபவம் உணர்த்தும் செய்தியும் இதுதான். மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று என்ன?
வரலாற்று வழியில் ஆராய்ந்தால், பலவித அரசியல்-சமூக அமைப்புகள் தோன்றி மறைந்திருக்கிறது. அந்தந்த சமூக அமைப்பில் கூடுதல் பலன் அடைவோர், அதைத் தக்க வைக்க முயற்சித்துள்ளார்கள். மற்றவர்கள் போராடி வென்றுள்ளார்கள். நமக்குச் சமீபத்திய அரசமைப்பு மன்னராட்சி முறை. அன்றிருந்த ஆட்சியாளர்களும், ஒரு மன்னன் சரியில்லையா, அவரது குடும்பத்திலிருந்து வேறு நபர் என்றுதான் பேசியிருப்பார்கள்! ஆனால் மக்கள், மக்களாட்சி என்ற கோரிக்கையை உயர்த்திப் பிடித்தார்கள். மன்னராட்சி என்ற அரசமைப்பையே மாற்றினார்கள். அதனால் உருவானது இன்றைய அரசியலமைப்பு. ஆனால், இன்று மக்களாட்சி என்று பேப்பரில் எழுதி வைத்துவிட்டு, குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்காக மட்டும் ஆட்சி நடக்கிறது. குறிப்பிட்ட சில பிரிவுகளின் நலன்களுக்கு மட்டுமே இந்த அரசமைப்புமுறை பயன்படுகிறது. அரசமைப்பின் அத்தனை தூண்களும் மக்களைச் சுரண்ட உதவுகிறது. எதிர்ப்பவர்களை பலாத்காரத்தால் அடக்குகிறது. கீழிருந்து மேல்வரை ஊழலும், சாதி, மதமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இதை இனி மாற்ற முடியாது எனும்போது, ஓர் உண்மையான மக்களாட்சிக்குப் போராடுவதுதானே சரி?
மாற்றத்திற்கு, முதலில் இன்றிருக்கும் ஆட்சிமுறையைப் புரிய வேண்டும். நம் நாட்டில் உள்ளது இரட்டை ஆட்சி முறை. மக்கள் தேர்ந்தெடுக்கும் கட்சியினரின் ஆட்சி ஒன்று. மற்றொன்று - மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிரந்தர அதிகாரம் கொண்ட போலீசு, வருவாய்-நிர்வாகம், நீதிமன்றம் போன்றவை. முன்னதில், நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுத்த மறுநாளே, நம்மைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தாலும், அவரை மாற்ற 5 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். பின்னதில் நம்மால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், குடிசைக்குத் தீ வைக்க உத்தரவு போடுவார்கள், நாம் ஒன்றும் செய்ய முடியாது.
இது உண்மையில் மக்களாட்சி அல்ல! மக்களிடம் இங்கு எந்த அதிகாரமும் இல்லை! ஆக மக்களுக்கு அதிகாரம் இருக்கும் ஓர் ஆட்சிமுறையை நோக்கி நகர்வதே, நிரந்தரத் தீர்வாக இருக்குமே தவிர சசிகலா – பன்னீர் – மோடி - சுப்பிரமணியசாமி விளையாட்டின் பின் செல்வதல்ல.
சரி, புதிதாக உருவாகும் அமைப்பில் பிரச்சனைகள் இருக்காதா? இருக்கும், ஆனால் அவற்றைச் சரி செய்யும் அதிகாரம், மக்களிடம் இருக்குமே தவிர கவர்னரிடமோ, மோடியிடமோ இருக்காது. இந்த அரசமைப்பை நடத்துபவர்கள், மக்களின் பிரச்சனைகள் நீடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதுதான் ஆகப்பெரும் பிரச்சனை. அம்பானி, அதானி, டாட்டா உள்ளிட்ட 100 பணக்காரர்கள், 90% மக்களின் சொத்துக்களைத் தொடர்ந்து வைத்திருக்கும் சுரண்டல் நீடிக்க வேண்டுமானால், இங்கு பிரச்சனைகள் தேவை. எனவேதான், ஆயிரம் சாதிகள், மதங்கள், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், தொழிலாளிக்கு குறைந்த சம்பளம், தீவிரவாத, பயங்கரவாத சமூக விரோதிகள் என்ற பூச்சாண்டிகள், பாகிஸ்தான் எதிரி, பசுவைப் பாதுகாக்க வேண்டும், இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், நாட்டு வளர்ச்சிக்காக காங்கிரஸ் - பா.ஜ.க. - அ.தி.மு.க - தி.மு.க. போன்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும், அவர்களின் தேர்தல் சூதாட்டங்களை ஏற்க வேண்டும் என்பவை தொடர்ந்து சமூகத்தில் நீடிக்க வைக்கப்படுகிறது. ஆனால் புதிய அரசமைப்பில் பிரச்சினைகளுக்கான மூலங்கள் ஒழிக்கப்படும். உதாரணமாக, கல்வி அனைவருக்கும் இலவசம், அரசு மட்டுமே கல்விவழங்கும். அருகாமைப் பள்ளியில் மட்டுமே சேர்க்க முடியும். கல்வி நிலையங்களை பெற்றோர்களே கண்காணித்து முடிவுகள் எடுப்பர். தனியார் கட்டணக் கொள்ளை முடிந்து விடும் அல்லவா?
எனக்கு தோன்றும் சில யோசனைகள் இவை. நாம் எல்லோரும் சேர்ந்து மாற்று குறித்து சிந்தித்தால், நிச்சயம் சரியான ஒன்றை நோக்கி முன்னேற முடியும்! இதற்கு முதல் தேவை, சிந்தனையின் வரம்பை விரிவு செய்வது. சமகாலப் பிரச்சனைகளுக்கான தீர்வை குரான், கீதை, பைபிள், நிலவுகின்ற சட்டங்களில் மட்டும் தேடாமல், எதார்த்தத்திலிருந்து அணுகுவது. நிச்சயம் இது சாத்தியம்தான், என்பதை அலங்காநல்லூரும், மெரீனாவும் உணர்த்தின. அங்கு ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு, ஏற்கனவே இந்த அரசியலமைப்பு சொன்ன தீர்வை, (மனு கொடுப்பது, அரசு செய்யும் என நம்புவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து ஏற்றுக் கொள்வது) நடைமுறைக்கு உதவாதது என்று சொல்லி நிராகரித்து வெற்றி கண்டனர் மாணவர்களும்-மக்களும். இது இந்தியா முழுவதும், ஒரு பிரச்சனைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் தீர்க்கக் கோரி நடந்தால் அதுதான் மாற்று! மொத்தத்தில், தீமைகளையும், அதை தாங்கிப் பிடிக்கும், அனைத்து அமைப்புகளையும் நிராகரித்து, மக்கள் பங்கேற்கும், மக்களுக்கு அதிகாரம் வழங்கும் - மாற்று அரசியல் - சமூகக் கட்டமைப்பை நோக்கி கூட்டாகச் சிந்தித்து, செயல்படும் தருணம் இது! மாற்றி சிந்திப்போம்! செயல்படுவோம்!
- சே.வாஞ்சிநாதன், மதுரை