தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிக் கட்டுரை ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க டாஸ்மாக் கொண்டு வந்தது அ.தி.மு.க! தமிழினப் படுகொலை நேரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றால், அந்தப் படுகொலைக்கு மூலக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்தவர் -இன்றும் அதற்காகப் பெருமையடித்துக் கொள்ளும்- ஜெயலலிதா! ஏழு தமிழர் விடுதலை விவகாரம் தன் கையில் இருந்தபொழுது அதை சாமர்த்தியமாகக் கை கழுவியது தமிழினத்தலைவரின் அரசு என்றால், ஒருபுறம் அவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டே மறுபுறம் சாகக் கிடந்த தகப்பனாரைப் பார்ப்பதற்குக் கூட நளினிக்குச்சிறைவிடுப்பு (parole) தரக்கூடாதென்று உயர்நீதிமன்றத்தில் வாதாடியது ஈழத்தாயின் அரசு!
இவை மட்டுமா? மின் தட்டுப்பாடு, வேளாண்துறைச் (agriculture) சீரழிவு, தமிழ் மீனவர் மீதான தாக்குதல்கள், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நசுக்கப்படுதல், அணு உலைத் திட்டம் - நுண்நொதுமித் (நியூட்ரினோ) திட்டம் எனப் பேரழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுதல், அண்டை மாநிலங்கள் - நடுவணரசு முதல் உலக நாடுகள் வரை யாருமே தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நிலைமை, இயற்கைச் சமநிலையின் சீர்குலைவு என இவ்வளவுக்கும் காரணம், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாததி.மு.க, அ.தி.மு.க அரசுகளே இங்கு திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருவது. எனவே, இத்தனை பிரச்சினைகளும் தீர வேண்டுமானால் அதற்கு உடனடித் தேவைஆட்சி மாற்றம்! யாருக்கு வாக்களித்தால் அந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஒரே கேள்வி!
இதற்கான பதில் மிக மிக எளிமையானது! தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு அடுத்த வலிமை வாய்ந்த கட்சியாக அல்லது கூட்டணியாக எது அனைவராலும் பார்க்கப்படுகிறதோ அதற்கு வாக்களிப்பதுதான் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர ஒரே வழி!
இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாமல் நமக்கு இருக்கும் தேர்வுகள் நான்கு: மக்கள்நலக் கூட்டணி, நாம் தமிழர், பா.ம.க, பா.ஜ.க. இவற்றுள் ம.ந.கூ ஒன்றைத் தவிர மற்ற மூன்றும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. அவர்களின் அந்தத் துணிச்சல் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்களைக் கொண்ட அ.தி.மு.க-வும் தி.மு.க-வுமே இன்றளவும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடத் துணியாதபொழுது அவர்களை விட மிகவும் சிறிய கட்சிகளான இவர்கள் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியையே கைப்பற்றி விடுவது என்பது நடக்க இயலாத ஒன்று என்பதுதான் நடைமுறை உண்மை (practical truth)! மிச்சம் இருப்பது மக்கள் நலக் கூட்டணி!...
பொதுவாக, சட்டமன்றத் தேர்தல் வந்தாலே “இந்த முறை தி.மு.க வருமா, அ.தி.மு.க வருமா?” என்பதாகத்தான் மக்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால், இந்த முறை தனிமனித அரட்டைகள் முதல் ஊடக விவாதங்கள் வரை மூன்றாவது அணியின் வெற்றி வாய்ப்புப் பற்றியும் பேச்சு அடிபடுகிறது. பரப்புரைகளின்பொழுது ஆளுங்கட்சி எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியையும் போட்டுக் கிழிப்பதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், முதன்முறையாக இந்த இரு கட்சிகளும் மூன்றாவது அணியையும் தீவிரமாகத் தாக்கிப் பேசுவதைக் காண முடிகிறது. அதே சமயம், இதர கட்சிகளான நாம் தமிழர், பா.ம.க, பா.ஜ.க ஆகியவற்றைப் பற்றியெல்லாம் மேற்படி இடங்களில் யாரும் அந்தளவுக்குப் பேசுவதாகத் தெரியவில்லை. இப்படி வாக்காளர்கள் முதல் வேட்பாளர்கள் வரை, கட்சிகள் முதல் ஊடகங்கள் வரை எல்லா இடங்களிலும் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ம.ந.கூ மீதே எல்லார் கவனமும் குவிந்திருப்பதே இந்த இரு கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது அதுதான் என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகிறது. அவ்வளவு ஏன், மூன்றாவது அணி என்கிற பெயரே அதைத்தான் காட்டுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் நமக்கு இருக்கிற ஒரே தேர்வு - மக்கள் நலக் கூட்டணிதான்!...
இப்படிச் சொல்வதற்காக அன்பர்கள், நண்பர்கள், தமிழ் மக்கள் அனைவரிடமும் முதலில் உளமார வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்! ‘விஜயகாந்த் முதல்வராக வரத் தகுதியற்றவர்’ எனக் கட்டுரை எழுதியவன்தான் நான். இப்பொழுதும் என்னுடைய அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அது என் கோட்பாட்டு அடிப்படையிலான (theoritical) பார்வை. நடைமுறை சார்ந்து (practical-ஆக) சிந்திக்கும்பொழுது ஆட்சி மாற்றத்துக்கு இதை விட்டால் வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால்தான், இப்படி ஒரு தீர்வை முன்வைக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இறுதி வரை படித்துப் பாருங்கள்!
விஜயகாந்தை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கும் விருப்பம் ஏதும் எனக்கில்லை. ஆனால், தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கி வைத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு எதிராக இன்று அரசியல் களமே மொத்தமாகத் திசை திரும்பி நிற்கும் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதே என் கவலை!
இந்த இரு கட்சிகளும் அல்லாத ஓர் ஆட்சி வேண்டும் என்று இதுவரை சில தலைவர்கள்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று காங்கிரசு என்கிற ஒரே ஒரு பெரிய கட்சியைத் தவிர்த்து மற்ற அத்தனை பெரிய கட்சிகளும் தேர்தலில் இவர்களுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. இப்படிப்பட்ட அரியதொரு சூழலிலும் மக்களாகிய நாம் இத்தனை கட்சிகளையும் தாண்டிப் போய்த் தி.மு.க/அ.தி.மு.க ஆகிய இரண்டில் ஒன்றையே மீண்டும் ஆட்சிக்கு வரவழைத்தால், அல்லது மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வரும்படியாக இதர கட்சிகளுக்கு வாக்களித்து வாக்குச் சிதறலை ஏற்படுத்தினால், ‘நாம் எவ்வளவுதான் தவறு செய்தாலும் இந்த மக்கள் நம்மைத் தவிர வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள்’ என்கிற வானளாவிய துணிச்சல் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்படும். அதன் பின், இதுவரை செய்த தவறுகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனச் சொல்லக்கூடிய அளவுக்கு மாபெரும் தவறுகளைச் செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். அது மட்டுமில்லை; இனி ஆட்சி மாற்றம், மூன்றாவது அணி எனவெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட எந்தக் கட்சியும் துணியாது. எனவே, இந்த முறை கட்டாயமாக ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது.
விஜயகாந்த் திறமையற்றவர்தான், முரடர்தான். ஆனால், கருணாநிதி - ஜெயலலிதா அளவுக்கு அவர் மீது பெரிய குற்றச்சாட்டு ஏதும் கிடையாது. எந்த ஒரு பெரிய மாற்றமும் ஓரிரவில் ஏற்பட்டு விட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி - ஜெயலலிதா போன்றோரிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமானால் அவர்களை விடத் தேவலாம் எனச் சொல்லக்கூடிய ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைப்பதுதான் முதல் படியாக இருக்க முடியும். மாறாக, எல்லாத் தகுதிகளும் பண்புகளும் பொருந்திய தேவதூதர் ஒருவரிடம்தான் ஆட்சியை ஒப்படைப்பேன் எனக் காத்திருந்து அதுவரை மீண்டும் மீண்டும் இவர்களிடமே தமிழ்நாட்டைத் தாரை வார்த்துக் கொண்டிருந்தால், அப்படி ஒருவர் வரும் வரை இங்கே எதுவும் மிச்சம் இருக்காது. திறமையுள்ள தீயவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதை விடத் திறமையில்லாத - அதே நேரம், தீய குணங்கள் ஏதும் பெரிதாக இல்லாத ஒருவரிடம் ஆட்சியைத் தருவதால் எந்தக் கெடுதலும் ஏற்பட்டு விடாது என்பதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். அப்படிச் செய்தால்தான் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மக்கள் மீது ஓர் அச்சம் ஏற்படும்.
அதே வேளையில், முதன்மைக் கட்சிகள் இரண்டுக்கும் அடுத்த இடத்தில் இருக்கிற ஒரே காரணத்துக்காக இவர்களுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. வேறு நல்ல காரணங்களும் இருக்கின்றன. முதலாவதாக நான் கூற விரும்புவது இவர்கள் முன்வைக்கும் கூட்டணி ஆட்சி முறை.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் திரும்பத் திரும்பப் பெரிய பெரிய குற்றங்களை அச்சமின்றிச் செய்ய முதன்மையான ஒரு காரணம் அவர்கள் ஆட்சி அமைக்கும் முறை. கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் அவர்களால் ஒருமுறை கூட ஆட்சிக்கு வர முடிந்ததில்லை என்றாலும், அந்தக் கூட்டணிக் கட்சிகளை நம்பி ஒருநாளும் அவர்கள் ஆட்சி அமைந்திருந்ததில்லை. இதனால் அவர்கள் எவ்வளவுதான் தவறு செய்தாலும் தவறான ஆட்சியிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் ஆற்றல் கூட்டணிக் கட்சிகளுக்கோ மற்றவர்களுக்கோ இல்லாமல் இருந்தது.
ஆனால், ம.ந.கூ-வைப் பொறுத்த வரை, அது கூட்டணி அமைப்பு. என்னதான் விஜயகாந்துக்கு இவர்கள் 124 தொகுதிகளை வாரிக் கொடுத்திருந்தாலும், கூட்டணியாக இவர்கள் வென்று ஆட்சிக்கு வருவதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வரும் வேளையில், அத்தனை தொகுதிகளிலும் தே.மு.தி.க வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைப்பது என்பதெல்லாம் கனவிலும் நடக்காத கதை. ஆகவே, இவர்களுக்கு நாம் வாக்களித்தால் கூட்டணி முறையிலான ஓர் ஆட்சிதான் அமையும். எனவே, விஜயகாந்த் ஏதேனும் தவறு செய்ய முயன்றால் தடுக்கவும், மீறிச் செய்தாலும் ஆட்சியைக் கலைத்து மக்களைக் காப்பாற்றவும் கூட்டணிக் கட்சிகளால் முடியும். அப்படிக் கூட்டணிக் கட்சிகள் செய்யத் தவறினால் அதற்குப் பின் கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ குறை சொல்லி அரசியல் செய்ய அவர்களால் இயலாது போகும். இந்த இருவரையும் குறை சொல்லிச் சொல்லித்தான் அரசியலில் தங்களுக்கென ஓர் இடத்தை இவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பொறுப்பே தங்கள் கையில் இருக்கும்பொழுது கடமை தவறினால் இவர்களுடைய அரசியல் அடித்தளமே காணாமல் போய்விடும் என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தே தீரும். ஆக, முதல்வரும் தவறு செய்ய முடியாத, கூட்டணிக் கட்சிகளும் அவரைத் தவறு செய்யும்படி விட முடியாத இப்படி ஒரு பாதுகாப்பான ஆட்சி முறையைத் தேர்ந்தெடுப்பதுதான் இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த முடிவாக இருக்கும்.
இதை நான் மட்டும் சொல்லவில்லை; சிந்தனையாளர் ஞாநி, எழுத்தாளர் பாலகுமாரன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, பேச்சாளர் நெல்லை கண்ணன் எனத் தமிழ்நாட்டின் அறிவுலகினர் (think tanks) அத்தனை பேரும் ஏறத்தாழ இதே கருத்தைத்தான் கொண்டுள்ளனர்; ம.ந.கூ-வைத்தான் ஆதரிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, சிறந்த சமூக ஆர்வலரும் சீரிய சிந்தனையாளருமான எழுத்தாளர் ஞாநி அவர்கள் ம.ந.கூ குறித்து எழுதியுள்ளதைப் படித்துப் பாருங்கள் - ‘யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது; யாருக்கு ஓட்டுப் போடவேண்டும்?’
அடுத்ததாக, விஜயகாந்த் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவரை வழிநடத்தும் ம.ந.கூ என்பது காலங்காலமாகத் தமிழர் பிரச்சினைகள் அனைத்துக்காகவும் இடைவிடாமல் போராடி வரும் கட்சிகளின் மொத்த உருவம் என்பதை மனச்சான்றுள்ள மனிதர்கள் யாரும் மறுக்க முடியாது. மக்களுக்காகக் களத்தில் நிற்பவர்களின் கையிலேயே ஆட்சிப் பொறுப்பை வழங்கும் இந்த அருமையான வாய்ப்பை விஜயகாந்த் எனும் ஒற்றை மனிதருக்காக இழக்க வேண்டுமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்!
ஆக, எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்பொழுது மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிப்பதே இந்தத் தேர்தலைப் பொறுத்த வரை நடைமுறையளவில் அறிவுடைய முடிவாக (practically wise choice) இருக்க முடியும்.
இருந்தாலும், மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் என்றும், ஜெயலலிதாவிடம் அவர்கள் ‘பெட்டி’ வாங்கி விட்டதாகவும் இன்னும் பல்வேறு விதமாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை அனைத்துக்குமான விடைகளை இனிஅலசலாம்!
மக்கள் நலக் கூட்டணி பற்றிய கேள்விகளும் பதில்களும்
மூன்றாவது அணிக்கு வாக்களித்தால் அ.தி.மு.க-தான் வெற்றி பெறும்; அதற்காக வைகோவிடம் 1500 கோடி ரூபாய் கொடுத்து இந்தக் கூட்டணியைத் தொடங்கச் செய்ததே ஜெயலலிதாதான்; எனவே, மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் எனச் சொல்லப்படுகிறதே?
தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்படும் பொழுதெல்லாம் இதே ஒப்பாரியைப் பாடுகிறார்கள் சிலர். அதாவது, மூன்றாவது அணி என ஒன்றைத் தொடங்கினால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக எதிர்க்கட்சிக்குப் போய்ச் சேராமல் சிதறி, மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சிக்கு வர வழி வகுத்து விடும் என்கிறார்கள். தெரியாமல்தான் கேட்கிறேன், இதுவரை எத்தனை முறை அப்படி ஆகியிருக்கிறது? கடந்த 1996ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் இதே போல் வைகோ மூன்றாம் அணி அமைத்தார். அப்பொழுதும் அ.தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், நடந்தது என்ன? அ.தி.மு.க-வால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்ததா? இல்லையே! தி.மு.க-தான் ஆட்சிக்கு வந்தது. ஆக, மூன்றாவது அணி தோல்வி அடைந்தால் அந்தத் தோல்வி ஆளுங்கட்சிக்கு நன்மையாகவும் அமையலாம், எதிர்க்கட்சிக்கு நன்மையாகவும் அமையலாம். அந்தந்தத் தேர்தல் சூழ்நிலைகளைப் பொறுத்தது அது. அப்படியிருக்க, மூன்றாவது அணி என ஒன்று அமைந்தாலே அது ஆளுங்கட்சிக்குத்தான் ஆதாயமாகும் எனச் சொல்வது அரை வேக்காட்டுத்தனம்.
அதுவும், ஏற்கெனவே ஒருமுறை மூன்றாவது அணி அமைந்தபொழுது ஆட்சியைப் பறிகொடுத்த ஜெயலலிதா, அதற்குப் பிறகும், இந்த முட்டாள்தனமான கணக்கை நம்பி ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்திருப்பதாகச் சொல்வது கற்பனையின் உச்சம் இல்லையா? பின்தொடரப் பத்துப் பித்துக்குளிகள் இருந்தால் மூன்றாவது அணிக்குத் தலைவர் முக்தா சீனிவாசன் என்பதா?
மக்கள் நலக் கூட்டணியினர் எல்லோரும் ஏற்கெனவே தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்தவர்கள்தானே?
மறுக்கவில்லை. ஆனால், தி.மு.க மீதும் அ.தி.மு.க மீதும் வண்டி வண்டியாக எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே? அவற்றில் ஒன்றாவது இந்தக் கட்சிகள் மீது இருக்கிறதா? அந்த இரு கட்சிகள் போலவே இவர்களும் இருந்திருந்தால் ஒன்றில் இல்லாவிட்டாலும் ஒன்றில் இவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டாவது எழும்பியிருக்காதா? எழும்பவில்லையே! அதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாவா? இரு கட்சிகளோடும் இத்தனை ஆண்டுகள் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்ததை மட்டும் குற்றச்சாட்டாகச் சொல்கிறோமே? இத்தனை ஆண்டுகள் அவர்களோடு இருந்தும் அவர்களைப் போல் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்களே, அதைப் பாராட்ட வேண்டாவா? அது மட்டுமில்லாமல், தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுடன் சேர்ந்திருந்ததாலேயே இவர்கள் மோசமானவர்கள் என்றால், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இவர்களை விட மோசமானவர்கள் என்றுதானே பொருளாகிறது? அப்படியிருக்க, ம.ந.கூ-வைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களை விட மோசமான தி.மு.க-வையோ அ.தி.மு.க-வையோ ஆட்சியில் அமர்த்துவதில் என்ன அறிவாளித்தனம் இருக்கிறது? ம.ந.கூ-வுக்கு வாய்ப்பளிக்கா விட்டாலோ, அவர்களை விட வெற்றி வாய்ப்புக் குறைந்த மற்றவர்களுக்கு வாக்களித்தாலோ நடக்கப் போவது அதுதான். அதுதான் நம் விருப்பமா?
மூன்றாவது அணி மட்டும் வெற்றி பெறும் என எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?
முதன்மைக் கட்சிகளான தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இப்பொழுது நிலைமை சரியில்லை. ஒருபுறம், தி.மு.க-வோடு கூட்டணி வைக்கக் கூட இங்கு எந்தக் கட்சிக்கும் துணிவில்லை. அதன் பெயரைக் கேட்டாலே ஓடுகிறார்கள். அந்த அளவுக்குத் தி.மு.க பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது. மறுபுறம் அ.தி.மு.க-வோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதை மனதில் வைத்துக் கொண்டு பெரிய கட்சி எதையுமே சேர்த்துக் கொள்ளாமல் தேர்தலைச் சந்திக்கிறது. இரு கட்சிகளுக்கும் சொந்தமாக ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்கள் இருந்தாலும், இதர வாக்காளர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 4 கோடி! ஆக, கட்சிச் சார்பில்லாத வாக்காளர்களில் குறைந்தது 30% பேர் மூன்றாம் அணிக்கு வாக்களித்தாலே போதும்; இந்த அணி ஆட்சியைக் கைப்பற்றி விடும். அப்படி நடக்கக் கண்டிப்பாக வாய்ப்பும் இருக்கிறது! ஏனெனில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழ்நாட்டில் இளைய வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்கள்தான் இந்தத் தேர்தல் முடிவையே தீர்மானிக்க இருக்கிறார்கள். இவர்களில் யாருக்குமே தி.மு.க, அ.தி.மு.க என்றால் பிடிக்காது. அதாவது, இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் பெரும்பான்மையானவர்கள் தி.மு.க-அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சியை விரும்புபவர்கள்தான். இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் இருப்பது ம.ந.கூ-தான் என அனைத்துத் தரப்பினராலும் ஊடகங்களாலும் முன்னிலைப்படுத்தப்படுவதால் இவர்களில் பலரும் மூன்றாம் அணிக்கு வாக்களிக்க நிறையவே வாய்ப்பு உள்ளது.
அரசியல் நோக்கர்களின் கணிப்பு, மக்களிடையேயான கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் மீண்டும் அ.தி.மு.க / தி.மு.க ஆட்சிக்கு வரும் என்பதாகத்தானே அமைந்துள்ளன!
நம் அரசியல் நோக்கர்களின் கணிப்பும் ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளும் என்றைக்குப் பலித்தன? எத்தனையோ முறை, “மீண்டும் கருணாநிதி வெல்வார்” என்று இவர்கள் சொன்னபொழுதெல்லாம் ஜெயலலிதாவும், “ஜெயலலிதா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார்” என்று சொன்னபொழுதெல்லாம் கருணாநிதியும் ஆட்சிக்கு வந்தது நாம் பார்க்காததா? கருத்துக்கணிப்புகள், அரசியல் கணக்கீடுகள் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் தவிடுபொடியாக்குவதுதானே நம் மக்களின் வழக்கமே!
தனி ஈழம், அணு உலை போன்ற தமிழர் பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணிக்குத் தமிழர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
இதே ஈழப் பிரச்சினையிலும் அணு உலைப் பிரச்சினையிலும் பா.ஜ.க-வும் காங்கிரசும் எந்த அளவுக்கு இரும்புப்பிடியாக இருக்கின்றன என்பது நாம் அறியாததில்லை. அதற்குக் காரணம் அவர்களின் தனிப்பட்ட நலன் கருதி. ஆனால், இடதுசாரிகள் இந்தப் பிரச்சினைகளில் இப்படியொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் காரணம் கொள்கை அடிப்படையிலானது. கொள்கை காரணமாக எதிர்க் கருத்துக் கொண்டிருப்பவர்களைப் பேச்சுவார்த்தையின் மூலம் நம் வழிக்குக் கொண்டு வந்து விட முடியும். ஆனால், தங்கள் சொந்தக் காரணங்களை முன்னிட்டு எதிர்ப்புக் காட்டுபவர்களை எக்காலத்திலும் மனம் மாற்ற முடியாது. அதிலும் ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, தனி ஈழம் என்பதை மட்டும்தான் இடதுசாரிகள் எதிர்க்கிறார்களே தவிர, ஈழத் தமிழர் உரிமைக்காகத் தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வருபவர்கள்தான் அவர்களும். அது மட்டுமின்றி, ஈழப் பிரச்சினை - அணு உலைப் பிரச்சினை இரண்டுமே நடுவணரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே, மற்ற இரு தேசியக் கட்சிகளோடு ஒப்பிடும்பொழுது இந்தப் பிரச்சினைகளில் ஓரளவாவது தேவலாம் எனச் சொல்லக்கூடிய தேசியக்கட்சிகளான இடதுசாரிகளை எப்படியாவது நம் பக்கத்தில் வைத்துக் கொள்வதுதான் எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளில் தமிழினத்துக்கு சாதகமாகக் காய்நகர்த்த உதவும்.
தேர்தலுக்குப் பின் மக்கள் நலக் கூட்டணி தி.மு.க அல்லது அ.தி.மு.க பக்கம் சாய்ந்து விட்டால்...?
அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்ல இன்னொரு முதன்மைக் காரணம்! இன்றைய சூழலில் வைகோவால் கோபாலபுரம் இருக்கும் திசையில் தலைவைத்துக் கூடப் படுக்க முடியாது. ஜெ-வுக்கோ விஜயகாந்த், திருமாவளவன் இருவரையும் கண்டாலே ஒவ்வாது (allergy). ஆக, எப்படிப் பார்த்தாலும், இரண்டு பக்கங்களில் எந்தப் பக்கத்துக்கும் இவர்கள் போக முடியாது. நம்பி வாக்களிக்கலாம்.
கூட்டணியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரான வைகோவே தேர்தலில் போட்டியிடவில்லையே?!
சாதிக் கலவரத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்கிறார் வைகோ. ஆனால், அது பொய்யெனக் கூறிப் பல்வேறு விதமான காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், வைகோ சொல்வதுதான் உண்மை என அவர் ஆதரவாளர்களோ கூட்டணித் தலைவர்களோ மட்டுமில்லை; விகடனே சொல்கிறது! (பார்க்க: இங்கே) எந்த விகடன்?... தி.மு.க-வுக்கு விலை போய்விட்டதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படும் விகடன்! அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், தி.மு.க சார்பான ஓர் ஊடகமே தி.மு.க-வுக்கு எதிராக இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது எனும்பொழுது அதை நம்பாமல் இருக்க முடியாது. ஒருவேளை, அந்தக் குற்றச்சாட்டு தவறாக இருந்தால், நடுநிலையான ஓர் இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி எனும் வகையிலும் இது உண்மை என்றே ஆகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் வைகோ சொல்வது உண்மை! எத்தனை பேர் சாவது பற்றியும் கவலைப்படாமல் சாதி-சமய உணர்வுகளைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றுவோருக்கு இடையில் தன் காரணமாக சாதிக் கலவரம் ஏற்படக்கூடாது யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒருவர் தேர்தலையே புறக்கணிக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மற்றபடி, தேர்தலில் அவர் மட்டும்தான் போட்டியிடவில்லை, அவர் கட்சி போட்டியிடுகிறது. அணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தோ வேறெந்தப் பொறுப்பிலுமிருந்தோ அவர் விலகவும் இல்லை. எனவே, ஆட்சியை வழிநடத்துவதில் அவர் பங்கு கட்டாயம் இருக்கும்.
ஆயிரம்தான் சொன்னாலும், ம.ந.கூ தெலுங்கர் கூட்டணிதானே?
ஒருவர் தமிழரா இல்லையா என்பதை அவருடைய நடத்தையை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய, பிறப்பை வைத்து இல்லை. அவ்வகையில், காலங்காலமாகத் தமிழர் பிரச்சினைகள் அனைத்துக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வரும் வைகோவைத் தமிழர் இல்லை எனச் சொன்னால், அதைத் தமிழினத்தின் பெருந்தலைவரான பிரபாகரன் முதலில் ஏற்றுக் கொள்வாரா என்பதைச் சிந்தியுங்கள்! இன்று பிரபாகரன் இல்லை என்கிற துணிச்சலில் ஆளாளுக்கு இப்படிப் பேசித் திரிகிறீர்களே? நாளைக்கே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அவர் திரும்பி வந்துவிட்டால், அவர் நண்பரான வைகோவைத் தமிழர் இல்லை என அவர் எதிரில் நின்று சொல்ல உங்களில் ஒருவருக்காவது நெஞ்சில் உரம் இருக்கிறதா? மற்றபடி, விஜயகாந்த் தெலுங்கர்தான். நான் மறுக்கவில்லை. வீட்டில் கூட அவர் தெலுங்குதான் பேசுகிறார் என்பது உலகறிந்த ஒன்று. ஆனால், உண்மையான தமிழர் ஒருவர், (அட, சீமான் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்) ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலிமையைத் திரட்டிக் கொண்டு வரும் வரை தமிழ்நாடும் இனமும் கொஞ்சமாவது மிச்சம் இருக்க வேண்டாவா? அதற்கு ஒரே வழி, உடனடியாக ஓர் ஆட்சி மாற்றம். அதற்காகத்தான் மூன்றாவது அணிக்கு வாக்களிக்கச் சொல்வதே தவிர, வேறொன்றுமில்லை.
எந்தக் கட்சி/கூட்டணி மீதும் நம்பிக்கையில்லாதவர்களாகத்தான் இன்றைய பெரும்பான்மை இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கக் கூடாது?
தி.மு.க போனால் அ.தி.மு.க; அ.தி.மு.க போனால் தி.மு.க என்கிற சுழற்சியைத் தகர்க்க அரிய ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனப் பொத்தானை அழுத்தினால், இந்த இரு கட்சிகளையும் பிடிக்காதவர்களின் வாக்குகள் ஒரே இடமாகச் சேராமல் சிதறி, மீண்டும் இந்த இரு கட்சிகளில் ஒன்றே ஆட்சிக்கு வரத்தான் அது வழி வகுக்கும். அது நல்லதா?
* * * * *
மக்கள் நலக் கூட்டணி மீது வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்குமான பதில்களை இதுவரை பார்த்தோம். இவை தவிர வேறு குற்றச்சாட்டுகளும் இருக்கலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கெனத் தனிப்பட்ட குற்றச்சாட்டுக் கூட ஏதேனும் இருக்கலாம். அப்படி எது இருந்தாலும், எத்தனை இருந்தாலும் அத்தனையையும் உங்கள் மனதிற்குள்ளேயே வரிசையாக ஓட்டிப் பாருங்கள்! அவை அனைத்தையுமே சேர்த்து வைத்துப் பார்த்தாலும் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பக்கத்தில் கூட அவை நெருங்க முடியாது என்பதை நீங்களே உணர்வீர்கள்! மூன்றாவது அணிதான் சிறந்த தேர்வு என நான் சொல்லவில்லை. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றுக்கு எதிரானவர்களில் இவர்கள் அளவுக்கு யாருக்கும் வெற்றி வாய்ப்பும் இல்லை; அதே நேரம், தி.மு.க, அ.தி.மு.கஅளவுக்கு இவர்கள் மோசமான தேர்வும் இல்லை.
ஆக, தி.மு.க, அ.தி.முக இரண்டையும் வீழ்த்தக்கூடிய வலிமை கொண்ட, தவறுக்கு இடமளிக்காத கூட்டணி ஆட்சி முறையை முன்வைக்கிற, தமிழ்ப் போராளிகளின் கையிலேயே ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் அரிய வாய்ப்பை வழங்குகிற, தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த பெருமக்களால் பரிந்துரைக்கப்படுகிற இவர்களுக்கு வாக்களிப்பதுதான் இன்றைய சூழ்நிலையில் அறிவார்ந்த முடிவாக இருக்க முடியும். அதற்கு மேல் உங்கள் விருப்பம்!
- இ.பு.ஞானப்பிரகாசன்