ஒவ்வொரு ஆணவக் கொலையும் ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதோடு முடிவதில்லை. அது ஒரு சமூகத்தின் உண்மையான முகத்தை ஆவணப்படுத்துகிறது. ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை, ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை, ஒரு மருத்துவமனையின் உடற்கூறாய்வு அறிக்கை, ஒரு செய்தித்தாளின் தலைப்புச் செய்தி, ஒரு தாயின் கதறல், ஒரு தந்தையின் மௌனம், ஒரு காதலியின் காத்திருப்பு, ஒரு இளைஞனின் நிறைவேறாத கனவு, இவை அனைத்தும் சேர்ந்து ஒரு நாட்டின் மனசாட்சியின் மீது எழுதும் ஆவணத்தின் பெயர்தான் ஆணவக் கொலை. ஆனால் அந்த ஆவணம் ஒரு தனிப்பட்ட குற்றத்தின் பதிவு மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் சுயவாக்குமூலம்.mettupalayam honor killingஇந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி ஆகியவை வெறும் சொற்களாக எழுதப்படவில்லை; அவை இந்தியக் குடியரசின் தார்மீக வாக்குறுதிகளாகப் பதியப்பட்டுள்ளன. ஆனால் அதே நாட்டில், இரண்டு வயது வந்த மனிதர்கள் தங்களது விருப்பப்படி ஒன்றாக வாழ முடிவு செய்ததற்காக உயிரிழக்கிறார்கள். சட்டம் அவர்களைப் பாதுகாக்கிறது; நீதிமன்றம் அவர்களது உரிமையை உறுதி செய்கிறது; அரசியலமைப்பு அவர்களது சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் சமூகம் அவர்களைத் தண்டிக்கிறது. இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் ஆணவக் கொலையைப் புரிந்து கொள்ள முடியாது.

பலர் இதை "குடும்பக் கௌரவம்" என்று அழைக்கிறார்கள்; "மானம்" என்று நியாயப்படுத்துகிறார்கள்; "பண்பாடு" என்று மென்மைப்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு மனித உயிரைப் பறிக்கும் செயலை "கௌரவம்" என்ற சொல்லால் அலங்கரிப்பது, வன்முறைக்கு மொழியின் வழியாக வழங்கப்படும் மன்னிப்பாகும். ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுத்ததற்காக அவளை மிரட்டுவது கௌரவமல்ல. ஒரு இளைஞன் தனது பிறப்பின் காரணமாகக் கொல்லப்படுவது பண்பாடல்ல. ஒரு குடும்பம் தன் குழந்தையின் உயிரைவிட சமூகத்தின் பார்வையைப் பெரிதாகக் கருதுவது மரபல்ல; அது அதிகாரத்தின் வெளிப்பாடு. அந்த அதிகாரத்தின் பெயர் - சாதி.

இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முயன்ற டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாதி அமைப்பின் உயிர்நாடி அகமணத் திருமணம்தான் என்று வலியுறுத்தினார். 'Castes in India' என்ற அவரது ஆரம்பகால ஆய்விலிருந்தும், 'Annihilation of Caste' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையிலிருந்தும் வெளிப்படும் மையக் கருத்து இதுவே: ஒரே சாதிக்குள் திருமணம் செய்யும் நடைமுறையே சாதியைத் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு உயிரோடு வைத்திருக்கிறது. அதனால்தான் அவர் கலப்புத் திருமணத்தை வெறும் தனிப்பட்ட விருப்பமாகப் பார்க்கவில்லை; சாதியை உடைக்கும் சமூகச் செயலாகப் பார்த்தார்.

இந்தக் கருத்தை தமிழ்நாட்டின் சமூகப் புரட்சியாக மாற்றியவர் தந்தை பெரியார். சுயமரியாதைத் திருமணம் என்பது திருமணச் சடங்கின் எளிமைப்படுத்தல் அல்ல; அது பிறப்பின் அடிப்படையில் மனிதனைப் பிரிக்கும் சமூக ஒழுங்குக்கு எதிரான அரசியல் அறிவிப்பு. திருமணத்திற்குப் புரோகிதர் தேவையில்லை என்று அவர் சொன்னதைவிட, திருமணத்திற்குச் சாதியும் தேவையில்லை என்பதே அவரது சிந்தனையின் மையம். திருமணம் என்பது குடும்பத்தின் சொத்துரிமை அல்ல, இரு மனிதர்களின் சம்மதம் என்ற கருத்தை அவர் சமூகத்தின் முன் வைத்தார்.

தந்தை பெரியார் தொடங்கிய அந்த சமூகப் புரட்சிக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கிய முக்கியமான அரசியல் நிகழ்வு, பேரறிஞர் அண்ணா தலைமையிலான தமிழக அரசின் காலத்தில் நடந்தது. 1968-ஆம் ஆண்டு, இந்துத் திருமணச் சட்டத்தில் தமிழ்நாட்டுக்கான திருத்தத்தின் மூலம் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றன. இது ஒரு சட்டத் திருத்தம் மட்டுமல்ல, சமூகச் சீர்திருத்தக் கோரிக்கை அரசின் அங்கீகாரத்தைப் பெற்ற வரலாற்றுத் தருணம். திருமணத்தின் மையத்தில் சடங்கை அல்ல, சம்மதத்தை நிறுத்திய அந்த மாற்றம், இந்திய சமூக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றது. ஆனால் சட்டம் மாறிய வேகத்தில் சமூகம் மாறவில்லை.

சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் உருவாயின. நீதிமன்றங்கள், வயது வந்த இருவர் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது அடிப்படை உரிமை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தின. இருந்தும், காதலர்கள் இன்னும் காவல் நிலையங்களின் கதவுகளைத் தட்டுகிறார்கள். சிலர் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்; சிலர் உயிரையே இழக்கிறார்கள்.

ஏன்?

ஏனெனில் சாதி என்பது ஒரு சமூக அடையாளம் மட்டுமல்ல; அது வாரிசுரிமை, அது நில உரிமை, அது சமூக ஆதிக்கம், அது அரசியல் செல்வாக்கு, அது பெண்களின் திருமணத் தேர்வின் மீது செலுத்தப்படும் கட்டுப்பாடு. இந்த அனைத்தையும் இணைத்து நிற்கும் அதிகார அமைப்பின் மீது கலப்புத் திருமணம் நேரடியான சவாலாக மாறுகிறது. அதனால்தான் காதலைப் பார்த்து அவர்கள் அஞ்சுவதில்லை; காதலால் உடைந்துவிடக்கூடிய சாதி எல்லைகளைப் பார்த்தே அஞ்சுகிறார்கள்.

தமிழ்நாட்டின் சமீபத்திய சமூக வரலாறு இதற்குச் சாட்சியாக நிற்கிறது. கண்ணகி-முருகேசன், இளவரசன்-திவ்யா, கோகுல்ராஜ், சங்கர்-கௌசல்யா... இந்தப் பெயர்கள் தனித்தனி குற்றவழக்குகள் அல்ல; அவை ஒரே சமூக நோயின் வெவ்வேறு வெளிப்பாடுகள். ஒவ்வொரு வழக்கிலும் இடங்கள் மாறின, காலம் மாறியது, குற்றவாளிகள் மாறினர். ஆனால் கொல்லப்படுவதற்கான காரணம் மாறவில்லை; அது - சாதி.

கண்ணகி-முருகேசன் வழக்கு, சாதியை மீறிய திருமணத்தின் மீது சமூக வன்முறை எவ்வளவு திட்டமிட்டதாக மாற முடியும் என்பதை வெளிப்படுத்தியது. இளவரசன்-திவ்யா வழக்கு, ஒரு காதல் எப்படி முழு சமூக மோதலாக மாற்றப்படுகிறது என்பதை நினைவூட்டியது. கோகுல்ராஜ் வழக்கு, சாதி வெறி ஒரு மனிதனை மட்டும் கொல்வதில்லை, நீதியின் பாதையையும் சோதிக்கிறது என்பதைக் காட்டியது. சங்கர்-கௌசல்யா வழக்கு, பட்டப்பகலில் நிகழ்ந்த ஒரு கொலையைத் தாண்டி, ஒரு பெண்ணின் உயிர்ப்போராட்டத்தைச் சமூக நீதிக்கான குரலாக மாற்றியது. "இன்னொரு சங்கர் உருவாகக் கூடாது" என்ற கௌசல்யாவின் வேண்டுகோள், தனிப்பட்ட துயரத்தைத் தாண்டி ஒரு சமூகத்தின் வேண்டுகோளாக மாறியது.

இந்த வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் சென்றன. சிலவற்றில் தண்டனைகளும் வழங்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு உண்மையை மீண்டும் நினைவூட்டியது: நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும், ஆனால் அந்தக் குற்றத்தை உருவாக்கிய சமூக மனநிலையைத் தனியாக மாற்ற முடியாது.

அதனால்தான் ஆணவக் கொலை என்பது ஒரு குற்றவியல் பிரச்சினை மட்டும் அல்ல; அது சமூக நீதி, பாலின சமத்துவம், அரசியலமைப்புச் சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சோதிக்கும் ஒரு சமூகக் கேள்வி.

நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள், சட்டத்தின் வலிமையை மட்டுமல்ல, சமூகத்தின் பலவீனத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 2006-இல் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லதா சிங் (Lata Singh) கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்கு அவரது குடும்பம் எதிர்த்த வழக்கில், வயது வந்த இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது அரசியலமைப்பு வழங்கிய உரிமை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

கேரளாவைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற இளம்பெண் கல்லூரியில் படிக்கும் போது இஸ்லாமியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தனது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை 'ஹாதியா' என மாற்றிக் கொண்டார். 2016-இல், அவர் ஷபின் ஜஹான் என்ற இஸ்லாமிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை தனது மகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும், இது ஒரு "லவ் ஜிஹாத்" (Love Jihad) சதி என்றும் கூறித் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. வயது வந்த ஒரு நபர் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சி மற்றும் தனியுரிமை (Privacy) சார்ந்த விஷயமாகும்; அதில் பெற்றோரோ அல்லது நீதிமன்றங்களோ தலையிட முடியாது என்று தனிமனித சுதந்திரத்தை (Article 21) உறுதி செய்தது. மேலும், இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் தனக்குப் பிடித்தமான மதத்தைப் பின்பற்றவும், மாறவும் அரசியலமைப்புச் சட்டம் முழு உரிமை வழங்கியுள்ளது (Article 25 - மத சுதந்திரம்) என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

ஷக்தி வாஹினி (Shakti Vahini) அமைப்பின் வழக்கில், ஆணவக் கொலைகள் வெறும் குற்றங்கள் அல்ல, அவை அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான தாக்குதல்கள் என்றும் கூறி, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதுகாப்புக் குழுக்கள், அச்சுறுத்தலுக்குள்ளாகும் தம்பதிகளுக்கான பாதுகாப்பு, உடனடி காவல்துறை நடவடிக்கை, விரைவான விசாரணை போன்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

கேள்வி, நீதிமன்றம் என்ன சொன்னது என்பதல்ல; அதை நாம் எவ்வளவு செயல்படுத்தியிருக்கிறோம் என்பதுதான்.

ஆணவக் கொலைகள் நிகழ்ந்த பிறகு நாம் பெரும்பாலும் கொலையாளிகளைப் பற்றியே பேசுகிறோம். ஆனால் இந்தக் கொலைகள் நடப்பதற்கு முன் மாதக்கணக்கில், சில நேரங்களில் ஆண்டுக்கணக்கில், ஒரு மிரட்டல் சூழல் உருவாகியிருக்கும். தொலைபேசி அழைப்புகள், உறவினர்களின் அழுத்தம், ஊர் பெரியவர்களின் தலையீடு, சாதிச் சங்கங்களின் எச்சரிக்கை, சமூக ஒதுக்கல், பொருளாதார மிரட்டல் என இவை அனைத்தும் சேர்ந்து அந்த இரு இளைஞர்களைத் தனிமைப்படுத்துகின்றன. கொலை என்பது அந்தச் சங்கிலியின் கடைசி வளையம் மட்டுமே.

அதனால்தான் ஆணவக் கொலையைத் தடுப்பது, கொலை நடந்த பிறகு குற்றவாளிகளைக் கைது செய்வதோடு முடிவதில்லை. மிரட்டல் தொடங்கும் முதல் கணத்திலேயே அரசின் பாதுகாப்பு செயல்பட வேண்டும். குடும்பத்திலிருந்து தப்பி வரும் தம்பதிகளுக்குத் தற்காலிக பாதுகாப்பு இல்லங்கள் உண்மையாகச் செயல்பட வேண்டும். காவல்துறை இதை "குடும்பப் பிரச்சினை" என்று அல்லாமல், உயிருக்கு ஆபத்தான சூழல் என்று அணுக வேண்டும்.

இந்த இடத்தில் அரசியலின் பொறுப்பையும் தவிர்க்க முடியாது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு சமூக நீதியை மையமாகக் கொண்டு வளர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில், தேர்தல் அரசியல் பல இடங்களில் சாதி அடையாளங்களின் தாக்கத்திலிருந்தும் முற்றிலும் விடுபடவில்லை என்பதும் மற்றொரு உண்மை. இதை ஒரு கட்சியின் குறையாக மட்டும் பார்க்க முடியாது; இந்திய ஜனநாயகத்தின் பரந்த சவாலாகப் பார்க்க வேண்டும். தேர்தல்கள் நெருங்கும்போது, பல சமூகங்களின் ஆதரவைப் பெறும் அரசியல் கணக்கீடுகள் முன்னிலைக்கு வருகின்றன. அதன் விளைவாக, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக வெளிப்படையாகவும் தொடர்ந்து பேச வேண்டிய தருணங்களில் கூட அரசியல் மொழி சில நேரங்களில் மென்மையடைகிறது.

இதுவே ஆணவக் கொலைகளுக்குப் பிறகு எழும் கண்டனங்கள் ஏன் பல நேரங்களில் நீடித்த சமூக மாற்றமாக மாறுவதில்லை என்ற கேள்விக்கும் பதிலாகிறது. ஆனால் இந்த விமர்சனம் அரசியலுக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கும், ஊடகங்களுக்கும், நமக்கும் பொருந்தும்.

ஒரு ஆணவக் கொலை நடந்தவுடன், சில நாட்கள் அது செய்தியாகிறது; தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கின்றன; சமூக ஊடகங்களில் கோபம் பொங்குகிறது. சில வாரங்களுக்குப் பிறகு அடுத்த செய்தி வந்துவிடுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்க்கை அங்கேயே நின்றுவிடுகிறது. ஒரு தாய் இன்னும் தனது மகனை எதிர்பார்த்துக் கதவையே பார்க்கிறாள். ஒரு பெண் தனது கணவரின் நினைவோடு நீதிமன்றங்களுக்கு அலைகிறாள். ஒரு குழந்தை, தனது தந்தையின் பெயரை வழக்குக் கோப்புகளில் மட்டுமே படிக்கிறது.

அதனால்தான் ஆணவக் கொலைகள் வெறும் செய்திகளல்ல; அவை முடிவடையாத மனிதக் கதைகள். அவற்றை ஒரு நாள் பரபரப்பாகப் பார்த்துவிட்டு மறந்துவிடும் ஒவ்வொரு முறையும், அந்தக் கதைகளை இரண்டாவது முறையாகக் கொன்றுவிடுகிறோம்.

இந்த மறதியைத்தான் உடைக்க வேண்டும். ஏனெனில் சமூகங்கள் தங்கள் குற்றங்களை நினைவில் வைத்திருக்கும் வரை மட்டுமே தங்களைத் திருத்திக் கொள்ள முடியும். மறந்துவிடும் சமூகங்கள், அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆணவக் கொலையும், நீதிமன்றத்தின் வழக்குப் பதிவாக மட்டுமல்லாமல், நம் சமூக நினைவகத்தின் நிரந்தர ஆவணமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆணவக் கொலைகள் குறித்துப் பேசும்போது, நாம் பெரும்பாலும் "காதல்" என்ற சொல்லையே மையப்படுத்துகிறோம். ஆனால் இந்தக் கொலைகளின் மையத்தில் இருப்பது காதல் அல்ல; தேர்வு. ஒரு மனிதன் தன் வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை. ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானே தீர்மானிக்கும் உரிமை. இந்தத் தேர்வுதான் சாதி அமைப்பிற்கு மிகப் பெரிய சவாலாகிறது. ஏனெனில் சாதி என்பது பிறப்பை மட்டுமல்ல, திருமணத்தையும் கட்டுப்படுத்தி உயிரோடு நிற்கும் அமைப்பு.

அதனால்தான் ஆணவக் கொலைகள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் கோபமாகத் தொடங்கினாலும், அவை ஒரு சமூகத்தின் ஒப்புதலால் வளர்கின்றன. "ஊர் என்ன சொல்லும்?", "சொந்தக்காரர்கள் என்ன நினைப்பார்கள்?", "சாதியின் முகம் குனிந்துவிடும்" போன்ற வாக்கியங்கள், ஒருவரின் தனிப்பட்ட கருத்துகள் அல்ல; தலைமுறைகள் கடந்து பரப்பப்பட்ட சமூக ஒழுங்கின் மொழி. அந்த மொழியே பின்னர் வன்முறைக்கு நியாயம் தேடுகிறது.

இதில்தான் கல்வியின் பங்கு மிக முக்கியமானதாகிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான கருவி மட்டுமல்ல; மனிதனை மறுபடியும் உருவாக்கும் வாய்ப்பு. ஒரு மாணவன் வரலாற்றைப் படிக்கலாம், அறிவியலைப் படிக்கலாம்; ஆனால் சமத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் வெளியேறினால், அந்தக் கல்வி முழுமையடையாது. அதுபோல ஒரு மருத்துவர் உயிரைக் காப்பாற்றக் கற்றுக்கொள்ளலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் மனிதனைப் பிரிக்கும் மனநிலையை விட்டு வெளியே வரவில்லை என்றால், கல்வியின் நோக்கம் பாதியிலேயே நின்றுவிடுகிறது.

இதற்காகத்தான் சமூக நீதி என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; கல்வி நிறுவனங்களின் பொறுப்பும் ஆகும். பள்ளிகளில் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகள் உயிரோடு கற்பிக்கப்பட வேண்டும். கல்லூரிகளில் சாதி, பாலினம், மனித உரிமைகள் குறித்த திறந்த உரையாடல்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கலப்புத் திருமணம் என்பது குற்றமல்ல, அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்த தனிநபர் உரிமை என்பதை இளம் தலைமுறை தெளிவாக அறிய வேண்டும்.

அதே நேரத்தில், சமூக மாற்றத்தை முழுவதுமாக இளைஞர்களின் தோள்களில் சுமத்திவிடவும் முடியாது. குடும்பங்களும் தங்களைப் பற்றிய கடினமான கேள்விகளை எழுப்ப வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் தருணத்திலிருந்து அவனுக்கோ அவளுக்கோ மனிதநேயத்தைவிடச் சாதி முக்கியம் என்று கற்பிக்கிறோமா, இல்லையா? "நம்ம ஆள்" என்ற சொல்லின் பின்னால் மறைந்திருக்கும் பிரிவினையை உணராமல் நாம் பயன்படுத்துகிறோமா? திருமணத்தை இன்னும் இரண்டு மனிதர்களின் உறவாக அல்லாமல், இரண்டு சாதிகளின் உடன்படிக்கையாகப் பார்க்கிறோமா? இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான பதில்கள்தான் சமூக மாற்றத்தின் தொடக்கம்.

ஆணவக் கொலைகளைப் பற்றிய விவாதங்களில், உயிரிழந்தவர்களை மட்டுமல்ல, உயிர் பிழைத்தவர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சங்கர் கொல்லப்பட்ட பிறகு கௌசல்யா மௌனமாக வாழவில்லை. அவர் தனது தனிப்பட்ட துயரத்தைச் சமூக நீதிக்கான குரலாக மாற்றினார். "இனர்னொரு சங்கர் உருவாகக் கூடாது" என்ற அவரது வேண்டுகோள், ஒரு குடும்பத்தின் துயரத்தைத் தாண்டி, ஒரு சமூகத்தின் பொறுப்பாக மாறியது. அந்தக் குரலைக் கேட்பது, ஒரு பாதிக்கப்பட்டவருக்கு அனுதாபம் தெரிவிப்பது மட்டுமல்ல; அந்தக் குரல் சுட்டிக்காட்டும் சமூக மாற்றத்தின் தேவையை ஏற்றுக் கொள்வதுமாகும்.

ஒரு சமூகத்தின் நாகரிகம், அதன் உயரமான கட்டிடங்களால் அளவிடப்படுவதில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியாலும் மட்டும் அளவிடப்படுவதில்லை. பிறப்பின் காரணமாக யாரும் தாழ்த்தப்படாத சமூகமா? காதலித்ததற்காக யாரும் கொல்லப்படாத நாடா? தன் குழந்தையின் மகிழ்ச்சியைத் தனது சாதி அடையாளத்தைவிட உயர்வாக மதிக்கும் குடும்பங்களைக் கொண்ட சமூகமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சியை அளவிடுகின்றன.

ஒரு நாள், ஆணவக் கொலை என்ற சொல் நீதிமன்ற வழக்குகளிலும் வரலாற்று நூல்களிலும் மட்டுமே எஞ்ச வேண்டும். அது அன்றாட செய்திகளில் இருக்கக் கூடாது. அந்த நாளை உருவாக்குவது சட்டத்தின் கடமை மட்டுமல்ல; சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் ஆகும். அந்த நாள் வரும்வரை, ஒவ்வொரு ஆணவக் கொலையும் நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். ஆணவக் கொலை என்பது காதலர்களின் இரத்தத்தில் எழுதப்பட்ட ஒரு குற்றப்பதிவு மட்டுமல்ல; சாதியை முழுமையாகக் கைவிடத் தயங்கும் சமூகத்தின் சுயசரிதை.

- கோபி சேகுவேரா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.