எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர், இதற்கெல்லாம் மேலாக இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழும், இலக்கியம் எழுதியும் பேசியும் பொருளாதார இடையூறுகள் எதுவுமின்றி இன்பமாய் வாழும் பெருமாள் முருகனது ஒரு பதிவைப் படித்தபிறகு எனக்குத் தோன்றிய எண்ணமே மேலே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு: என்ன மயித்துக்குப் படிக்கணும் இலக்கியம்.....? இந்தத் தலைப்பு தமிழ் பற்றாளர்களுக்கு, இலக்கிய படைப்பாளர்களுக்குக் கோபம் ஏற்படலாம். ஆனால், சொல்ல வேண்டியதைச் சொல்லத்தானே வேண்டும்.

"தமிழறிஞர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் இப்போது சுருங்கிப் போய்விட்டன. பெரும்பாலான தமிழ்த்துறைகளில் யார் பணியாற்றுகின்றனர் என்னும் விவரமே எனக்குத் தெரியவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பதும் வெளியுலகுக்குத் தெரியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றும் ய.மணிகண்டன், கோ.பழனி ஆகியோர் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர். அதற்குப் பின் அங்கும் என்ன நடக்குமோ தெரியவில்லை"என்பது பெருமாள் முருகனது பதிவின் ஒரு பகுதி.

இவருக்குத் தெரிந்த வயதான பேராசிரியர்களைத் தவிர வேறு யாரும் சிறந்த பேராசிரியர்களாக இல்லை என்பது இவரது அறியாமையா அல்லதுஇவர் கூறும் பேராசிரியரகளுக்குப் பிறகு பணிக்கு வந்த யாரும் தகுதியற்றவர்களா என்பது கேள்வியாக நிற்கிறது. அப்படியானால் தகுதி ஏதுமில்லாத பேராசிரியர்கள் எப்படி? எவ்வாறு? எதன் அடிப்படையில் பணியில் சேர்ந்தார்கள். எல்லா தகுதியும் திறமையும் வாய்ந்த ய. மணிகண்டன், கோ. பழனி போன்ற பேராசிரியர்கள் இந்த அநியாயத்தைக் கண்டு கொதிப்படையவில்லையா? அந்தளவில்தான் இவர்களது தகுதியும் திறமையும் அறமும் இருக்கிறதா? தமிழுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகசை் செய்த இஅவர்கள் தங்களைப் போன்ற சிறந்த பேராசிரியர்களை உருவாக்கவில்லையா? ஏன் இவர்கள் மாணவர்கள் யாருமே தகுதியில்லாதவர்களா? தகுதி இல்லாத மாணவர்களையா இத்தனை வருட காலத்தில் உருவாக்கி விட்டுள்ளார்கள்? அப்படியானால் இவர்கள் இத்தனை ஆண்டுகள் என்ன செய்தார்கள். கை நிறைய ஊதியம் வாங்கி, உண்டு, உறங்கி, கொழுத்து, இனி ஓய்வு ஊதியமும் லட்சத்தில் வாங்கி சொகுசாகச் செத்தும் போவார்கள். இவர்களே தமிழ் இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்த ஆளுமைகள். அப்படித்தான் எழுத்தாளர் என்பதைவிட பேராசிரியர் பெருமாள் முருகன் கருதுகிறார் போலும்.

இவர்கள் ஓய்வு காலத்தில் வாங்கும் ஓய்வூதியத்தின் பத்தில் ஒரு பங்கு கூட சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றுவோர் வாங்கவில்லை என்பது பெருமாள் முருகனுக்கும் இவர் கூறும் பேராசிரியர் பெரும்மக்களுக்கும் தெரியாதா? இவர்கள் எல்லாம் அது குறித்து ஏதாவது பேசியிருக்கிறார்களா? எழுதியிருக்கிறார்களா? தன்னைப் போன்ற தகுதியும் படிப்பும் கொண்ட இன்னும் சொல்லப்போனால் இவர்களைவிட ஸ்லெட், நெட் தகுதி தேர்வு போன்றவற்றில் வெற்றி பெற்ற சக பணியாளர்கள் இவ்வளவு கீழான ஊதியத்தில் வேலை பார்க்கிறபோது பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் இவர்கள் அது குறித்துப் பேசாதது ஏன்? ஓ.... இது அரசு சார்ந்த முடிவுகள், பணமும் அதிகாரமும் அரசியலும் சேர்ந்து இப்படி ஆக்கிற்று. எங்களால் என்ன செய்ய முடியுமென்று இவர்கள் எளிதாக விலகிச் செல்லக்கூடும். ஏனெனில் இவர்களது அறமும் தகுதியும் நேர்மையும் இத்தகையதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது..

மேலும், பெருமாள் முருகன்,

"தமிழ்ப் பேராசிரியர்கள் நவீன இலக்கியத்தை வாசிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டை 1950, 60களில் கடுமையாக முன்வைத்தவர்கள் க.நா.சு., சி.சு.செல்லப்பா முதலியோர். சி.கனகசபாபதி, எழில்முதல்வன் எனச் சிலரேனும் அப்போது நவீன இலக்கியம் தொடர்பாகக் கவனம் செலுத்தினர்" என்கிறார் .

பெருமாள் முருகனுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கும் போலிருக்கிறது. 1950 களில், இலக்கியம், கல்லூரி, பல்கலைக்கழக பணி என அனைத்திலும் இருந்தவர்கள் சாதிய மேலாதிக்கம் நிறைந்தவர்களே. க.நா.சு., சி.சு. செல்லப்பா போன்றோர் இத்தகைய குற்றச்சாட்டை வைப்பதற்குத் தகுதியானவர்கள் தானா என்கிற கேள்வியும் எழுகிறது. அக்காலத்தில் பணியாற்றிய அனைவரது செயல்பாடுகளையும் அறிந்தா க.நா‌சு., சி.சு.செ , சொல்லியிருப்பார்கள். இல்லையே. அவர்களுக்குக் கிடைத்த அதாவது பெருமாள் முருகனுக்குக் கிடைத்ததைப் போன்ற அல்லது தனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே கூறியிருப்பர். அப்படியிருக்க க.நா.சு., சி.சு.செ., போன்றோர் கூறியதும், பெருமாள் முருகன் கூறியதும் உண்மையின் ஒருசிறு துணுக்கு மட்டும்தானே. அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது ஏராளம் இருக்குமே. ய. மணிகண்டன். கோ. பழனிக்கு அடுத்ததாகப் பெருமாள் முருகன், "பின்னர் இரா.மோகன், சு.வேங்கடராமன், வீ.அரசு, அ.ராமசாமி, சிற்பி, இரா.சந்திரசேகரன் போன்ற ஒருசிலரையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடிந்தது"என்கிறார். இதிலும் அவரது குறை புரிதலும் தகவலுமே அடங்கியுள்ளது. பெருமாள் முருகன் எதற்கோ அடி போடுகிறார் என்பது உறுதியாகிறது. ஜெயமோகனைப் போல எதற்கோ பனிக்கட்டி பாளங்களை வைக்கிறார். மேலே குறிப்பிட்டுள்ள பேராசிரியர்கள் தவிர ஏராளமான பேராசிரியர்கள் தமிழ் நவீன இலக்கியம் மட்டுமல்லாது அனைத்து இலக்கிய வடிவங்களிலும் ஆழ்ந்த பரிச்சயம் உள்ளவர்கள் ஏராளமாக உள்ளனர். இவர் குறிப்பிடும் பேராசிரியர்களைவிட கூடுதல் தகுதியும் திறமையும் வாய்ந்த பேராசிரியர்கள் கல்லூரிகளில் உள்ளனர். அவர்களுக்கு ஏன் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்து பெருமாள் மருகன் பேசுவாரா? மேலே கூறிய பேராசிரியர்களில் இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த செயல்பாடுகளிலும் தாக்கம் செலுத்துகிற, வேறொரு சிந்தனைகளை முன்வைக்கிறவர்களாக வீ. அரசு மற்றும் அ. இராமசாமி போன்ற பேராசிரியர்கள் உள்ளனர் என்பது மெச்சத் தக்கதே. இருப்பினும், இவர்கள் எத்தகைய பேராசிரியர்களை உருவாக்கி விட்டுள்ளனர் என்பது ஆய்வுக்குரியதே.

மேலும் பெருமாள் மருகன், "உ.வே.சா. தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, எல்லாமே பாடம் மட்டும் நடத்தும் சாதாரணக் கல்லூரி வகுப்பறைகளாகச் சுருங்கி விட்டன. அப்போது நவீன இலக்கிய ஈடுபாடு இல்லை என்றாலும் பழந்தமிழ் இலக்கியப் புலமை பெற்ற பேராசிரியர்கள் பலர் இருந்தனர். இன்று எந்தப் புலமையும் அற்றவர்கள் பல்கலைக்கழக நாற்காலிகளில் போய் உட்கார்ந்திருக்கின்றனர். நினைவில் தேடிப் பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஒருவருமே இல்லை. என்ன நடக்கிறது? ஒன்றுமே நடக்கவில்லை". ( -பெருமாள் முருகன் நன்றி: அகழி.) என்று வருத்தம் கொள்கிறார்.

இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றியும் தமிழக அரசு பணிகளில் குறிப்பாகக் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் பணிகளில் பேராசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றனர் என்பது தெரியாமலா பெருமாள் முருகன் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இல்லை செலக்டிவ் அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா? தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பணி வாய்ப்பினைப் பெற பணமும் அதிகாரமும் எந்தளவுக்குச் செயல்பட்டுள்ளது என்பது இங்கு அனைவருக்கும் தெரியுமே. அப்படியிருக்க சிறந்த பேராசிரியர்கள் யாரும் பல்கலைக்கழகைங்களில் இல்லை என்று கூறுவது வேடிக்கைதானே. சென்னையில் ஒரு மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த ஒரு பேராசிரியர் இடைத்தரகராக இருந்து பலருக்கும் வேலை வாங்கிக் கொடுத்தாரே அதுவும் இவருக்குத் தெரியாதா? அதுவும் அவர் வாங்கிக் கொடுத்த துறைகளில் எவ்வித பரிச்சியமும் கல்வியும் இல்லாமல் அந்தத் துறை விற்பன்னர்களாக இருந்து கைநிறைய ஊதியம் வாங்குவதும் இவருக்குத் தெரியாதா? இது குறித்து பெருமாள் முருகனோ அவர் பட்டியலிடும் பேராசிரியர்களோ பேசியுள்ளனரா?

நவீன இலக்கியம் படிக்க வேண்டுமா?

எந்தவொரு செயலுக்கும் பயன் இருக்க வேண்டும். “கடமையைச் செயய் பலனை எதிர் பாராதே” என்கிற முட்டாள் வாசகத்தை யாரும் பின்பற்றுவதில்லை. பயனற்ற எந்தச் செயலையும் செய்வது வீண். அந்தப் பயன் என்பது புலனின்பம் சார்ந்ததாகவோ, பொருளின்பம் சார்ந்ததாகவோ இருக்க வேண்டும். எனக்குப் படிக்கத் தெரிந்த அதாவது மூன்றாவது வகுப்பு முதல் நாள் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் படித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைப் பருவத்தில், இளமைப் பருவத்தில் இலக்கியம் எனக்குத் தந்த புலனின்ப ஈர்ப்புகள் அதிகம். அதிலும் காமம் தொனிக்கதொனிக்க எழுதப்பட்ட நாவல்கள், கொலையும் அதனைத் தொடர்ந்து நிகழும் துப்பறியும் நிகழ்வுகள் சார்ந்த நாவல்களும் என்னை அதிகம் ஈர்த்தன. தற்போது அவற்றை நான் படிப்பதில்லை என்பது வேறு. பெருமாள் முருகன் கூறுவதுபோல நவீன இலக்கியங்களையும் தற்போது நான் படிப்பதில்லை. அவற்றைப் படிப்பதற்கான தேவை எதுவும் எனக்கில்லை. இப்படித்தானே பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் இருக்கும். முதலில் ஏன் படிக்க வேண்டும் என்கிற கேள்வியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அனைத்து வளங்களும் அனைவருக்கும் கிடைத்து, ஓய்வு நேரங்கள் அதிகமாக இருக்கும் சமூகம் மட்டுமே வாசித்தல் மற்றும் கேளிக்கை விசயங்களில் மூழ்க முடியும். அப்படியொரு முழுமையான சமூகம் இங்கு உருவாகவே இல்லையே. நவீன இலக்கியங்களை விட சமூக ஊடகங்கள் அதிக வீரியம் கொண்டதாக, மனிதனை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்கிறபோது எதற்கு இலக்கியங்களைப் படிக்க வேண்டும். வாசித்தல் போய் கேட்கும் சூழல் உருவாகியுள்ளதே. மீண்டும் பாட்டி கதை சொன்ன காலம் போல சமூக ஊடகங்கள் கதை சொல்லும் காலம் வந்து விட்டதே, அனைத்தையும் காட்சிகளாகப் பார்க்கும் சூழலும் உருவாகப் போகிறதே இது குறித்து பெருமாள் முருகனது கருத்தென்ன?

தேவை மற்றும் பயன் இருப்பின் மட்டுமே நவீன இலக்கியங்களை வாசிக்க முடியும். பலரும் எழுதுகிறார்கள் என்பதற்காகப் படித்துவிட முடியாது என்பதைப் பெருமாள் முருகன் உணர்ந்து கொள்ள வேண்டும். காரணம், இலக்கியங்களை வாசிப்பதன் தேவை மாறியிருக்கிறது. வாழ்விற்கான பெரும் போராட்டத்தில் இருக்கும் ஒருவர் எப்படி இலக்கியங்களைப் படிக்க முடியும். உங்களைப் போன்ற சொகுசான வாழ்க்கை வாழும் மனிதர்கள் நவீன இலக்கியங்களைப் படியுங்கள். பெருமாள் முருகன் கூறியதைப் போல, ‌இன்று பல்கலைக்கழகங்களில் சிறந்த பேராசிரியர்கள் கிடையாது. இவர் பட்டியலிடுபவர்கள் அனைவரும் மிகச்சிறந்த பேராசிரியர்கள்தானா? அதன் அளவுகோல்கள் என்ன? அந்த அளவுகோல்கள் பெருமாள் முருகனது அளவுகோல்கள்தானா? அந்த அளவுகோல்களை அவர் எப்படி வகுத்தார்? அல்லது வேறு யாராவது அப்படிப்பட்ட அளவுகோல்களை எழுதி வைத்துள்ளனரா? இவர்களில் சிலர், ஒரு புதிய ஆய்வுச் சிந்தனையை, ஆய்வு முறையியலை, ஆய்வு முடிவுகளை ஏற்கத் திராணியற்றவர்கள். யாப்பிலக்கணம் குறித்த ஓர் ஆய்வரங்கில் பெருமாள் முருகன் குறிப்பிடும் சிறந்த பேராசிரியர்களில் ஒருவர் ஓர் ஆய்வாளர் முன்வைத்த கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைவிட அவரது ஆய்வுரையை வாசிக்கவே விடாத ஒருவகை மனநிலையோடு நடந்து கொண்டார் என்பது பெருமாள் முருகனுக்குத் தெரியுமா?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் சிறந்த பேராசிரியர்கள் கிடையாது. பணம் என்கிற மைய சிந்தனை மட்டுமே கொண்ட நாட்டில், ஒரே வேலைக்குப் பல்வேறு ஊதிய நடைமுறைகளைக் கொண்டதொரு திராவிட நாட்டில் எப்படி தகுதியான பேராசிரியர்களை எதிர்பார்க்க முடியும? இருப்பினும், எங்கேனும் யாராவது ஒன்றிரண்டு தகுதியான பேராசிரியர்கள் இருக்கலாம். ஏனிந்த நிலை? இன்று கல்லூரி பேராசிரியர் பணிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறதே. பல்கலைக்கழகம் என்றால் இன்னும் தொகை கூடக் கூடும்‌. அது எதனால்? இது பெருமாள் முருகனுக்குத் தெரியாதா?. அவர் நேர்மையான முறையில் வேலைக்குச் சென்றிருப்பாராக என்று நம்பலாம். திராவிட அரசுகள் செய்த மிகப்பெரிய சாதனை இது. இதில் எந்தப் பேதமும் இல்லை. திமுக, அதிமுக இரண்டுமே கொள்ளைக்கார கும்பல்கள்தான்.

நவீன தீண்டாமை இந்திய சமூகத்தில் பலவிதங்களில் நடைமுறையில் இருக்கிறது. அதில் ஒன்று சுயநிதி கல்லூரிகளில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மீதானது. இந்தியா போன்ற மனிதாபிமானமோ, கருணையோ, தயையோ, இரக்க குணமோ, மனித பண்பாடோ இல்லாத ஒரு நாட்டின் சமூகம் இப்படித்தான் இருக்கும். இங்கே இயல்பிலேயே சாதிய, மத அடிப்படையிலான ஒரு மேலாதிக்க சிந்தனை உண்டு. இது நவீன காலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. ஐயாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் பேராசிரியர்களாக வேலை பார்க்கும் சூழலில் நவீன இலக்கியம் படிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை மனநோயாளியால்தான் வைக்க முடியும். நீங்கள் கேட்கலாம் பெருமாள் முருகன் அதிக ஊதியம் பெறும் பல்கலைக்கழக பேராசிரியர்களைத்தானே கூறுகிறார் என்று. அது உண்மை தான் என்றாலும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வேலைக்குச் செல்லும் ஒருவரிடம் நீங்கள் எப்படி நவீன இலக்கியம் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்.

அவர் சில பேராசிரியர்கள் பெயர்களைப் பட்டியிலிடுகிறார். அவர்கள் எனக்குத் தெரிந்து ஒருசில நூல்களை எழுதியுள்ளார்களே தவிர, இந்தச் சமூகத்திற்குப் பயன்படும்படி என்ன செய்தார்கள் என்று கேட்டால் வட்ட பூஜியம் என்பதே பதிலாக இருக்கும். சரி ய. மணிகண்டன் யாப்பியலில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்.கோ. பழனி இலக்கிய துறை சார்ந்து இயங்குபவர். அதனால் இத்தச் சமூகத்திற்கென்ன பயன். அவரது மாணவர்கள் யாருமே பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகும் தகுதியற்றவர்களா?அப்படியானால் இத்தனை வருடங்களாகப் பணி புரிந்தும் தகுதியான பேராசிரியர்களை உருவாக்க முடியாத இவர்கள் எப்படி சிறந்த பேராசிரியர்களாக இருக்க முடியும். இவர்கள் பேராசிரியர்களாக இருக்கும் பல்கலைக்கழகங்களிலும், இவர்கள் நேர்காணல்கள் நடத்தி பேராசிரியர்களாகத் தேர்ந்தெடுத்த பேராசிரியர்கள் யாருமே தகுதி இல்லாதவர்களா? அப்படி தகுதி இல்லாத பேராசிரியர்களை உருவாக்கி விட்ட, தகுதி இல்லாத பேராசிரியர்களை நேர்காணல் செய்து பணியில் அமர்த்திட காரணமாக இருந்த இவர்கள் போன்ற பேராசிரியர்கள் இந்தச் சமூகத்திற்குத் தேவையற்றவர்கள்தானே. இவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தால் என்ன இல்லாமல் போனால்தான் என்ன? அதனால் சமூகத்திற்கு இழப்பொன்றுமில்லையே. பெருமாள் முருகனது வருத்தம் தமிழுக்கு இழப்பாக இருக்குமாம். தமிழுக்கும் இழப்பேதுமில்லை என்பதே எனது எண்ணம். இலக்கியம் என்பதே ஒரு வெற்றுப் பெருமித புலம்பலாகவே எனக்குப் படுகிறது. இத்தகைய மன நோயாளிகள் தானே வைரமுத்தவுக்கு ஞானபீட விருது கிடைத்ததைப் பொறுக்க முடியாமல் தமிழுக்கு இழுக்கு, அழுக்கு எனப் புலம்பித் திரிகின்றனர். .

தமிழ் படித்த காரணத்தினாலேயே வாழ்க்கையை இழந்து கூலி வேலைக்கும் கடைகளுக்கும், குறைந்த ஊதியத்திலும் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் பற்றி இவர்களில் யாரேனும் வருத்தம் கொண்டதுண்டா? அவர்களுக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று பேசியதுண்டா? ஏன் முணுமுணுத்ததுண்டா? அப்புறம் என்ன இதுக்கு இந்தப் பதிவு. பெருமாள் முருகனைப் போன்றவர் கூறுவர் அவர்களுக்குத் தகுதி இல்லை என்று. அப்படியானால் பல்கலைக்கழகம், அரசு கல்லூரி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பேராசிரியர்களுக்கு மட்டும் தகுதி உள்ளதா? தகுதி உள்ளதென்றால் ஏன் அவர்கள் தகுதியானவர்களை உருவாக்கவில்லை. நான் மாநில மற்றும் தேசிய அளவிலான தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழ் - மலையாள இலக்கணம் மற்றும் இலக்கியத்தில் ஒப்பாய்வு செய்துள்ளேன். மொழிபெயர்ப்பு, ஆய்வு, படைப்பு என இதுவரை 21 நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்த (2026) வருட சென்னை புத்தகத் திருவிழாவில் எனது மொழிபெயர்ப்பாக நீலம் பதிப்பகம் வெளியிட்ட கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு - நூல் சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது. பெருமாள் முருகன் உட்பட அவர் பட்டியலிடும் பேராசிரியர்கள் என்னைவிட அதிகமான வேலைகளை அல்லவா செய்திருக்க வேண்டும். இதில், நவீன இலக்கியம் படிக்கவில்லை என்று கூறுவது எப்படி சரியாகும்.

அரசியல், அரசு நடைமுறைகள் எதுவும் சரியற்ற நாட்டில் நான் யோக்கியன், நான் கூறுபவர்களுமே சிறந்த பேராசிரியர்கள், சிறந்த எழுத்தாளர்கள். அவர்களுக்குப் பின் யாருமே இல்லை என்று புலம்புவது எதனால் பெருமாள் முருகன்?

- பெ. செல்வ. இராஜேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.