political flags india

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இந்தியாவை ஒரு முழுமையான ஜனநாயக நாடு என்று ஏற்றுக்கொள்பவர்கள் இங்கே தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்கின்றார்கள். அதற்கென தங்களுக்கென்று ஒரு கட்சியும், அதற்கொரு கொடியும், சின்னமும் வைத்துக் கொள்கின்றார்கள். இவர்களின் கட்சியையும், கொள்கையையும் ஏற்றுக்கொண்ட மக்கள் தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள். இன்னும் சிலர் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் பார்த்தோ, சாதியைப் பார்த்தோ, அவர்கள் மூலம் தாம் தனிப்பட்ட முறையில் அடைந்த பயன்களைப் பொறுத்தோ வாக்களிக்கின்றார்கள். அதைத் தாண்டி பெரிய அளவிலான அரசியல் எண்ண ஓட்டத்தில் இருந்தெல்லாம் இந்த மக்கள் வாக்களிப்பது கிடையாது.

 மேலும் இந்தத் தேர்தல் முறை அரசியல் கட்சிகளை இரண்டு வகையாகப் பிரிக்கின்றது. ஒன்று தேர்தலை ஏற்றுக் கொள்ளாதவர்கள், மற்றொன்று ஏற்றுக்கொள்பவர்கள். தேர்தலை ஏற்றுக்கொள்பவர்களில் நேரடியாக தேர்தலில் பங்கெடுக்காதவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் தேர்தலின் போது தமக்கு சரி என்று தோன்றும் அரசியல் கட்சிக்குத் தன்னுடைய ஆதரவை அளிப்பார்கள். இவர்கள் அளவில் சிறிய கட்சிகளாகவும், சில நூறில் இருந்து சில ஆயிரம் மக்களை தன்னுடைய உறுப்பினர்களாகவும் கொண்டிருப்பார்கள். சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பவர்களாகவும், அதற்காக குரல் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தேர்தல் சமயத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் தனக்கான அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்துகொள்ள முடியும் என்பது இவர்களின் கருத்து. அதாவது இந்த அரசு கட்டுமானத்திற்குள்ளாகவே தாங்கள் விரும்பும் சமூக மாற்றங்களை உண்டாக்கிக்கொள்ள முடியும், அதை மாற்றியமைப்பது தேவையற்றது, அப்படியே மாற்றியமைத்தாலும் அதை ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் மாற்றியமைக்க முடியாது என உறுதியாக நம்புகின்றவர்கள்.

  அடுத்து, தேர்தல் பாதையைப் புறக்ககணிப்பவர்களில் பலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் போன்றவர்கள். இவர்கள் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என ஏற்றுக்கொள்ளாதவர்கள். இந்தியா என்பது பார்ப்பன- பனியா, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின்   வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது என்றும் அதை ஒரு ஆயுதம் ஏந்திய புரட்சியின் மூலம் தான் மாற்றியமைக்க முடியும் என்றும் உறுதியாக நம்புகின்றவர்கள். பல லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட ராணுவத்தைக் கட்டியமைத்து இந்திய அரசுக்கு எதிராக - அதாவது அதை இயக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடி வருகின்றார்கள். இவர்கள் ஒரு போதும் தேர்தல் பாதையை நாடி வரப் போவதில்லை. இவர்கள் மக்கள் ஆயுதப்புரட்சிக்கு தயாராக இருக்கவில்லை, இந்தியாவில் புரட்சி சாத்தியமில்லை என்று வெற்றுமுழக்கங்களை வைக்காமல் நேரடியாக இந்திய அரசுடன் மோதலில் ஈடுபடுகின்றார்கள். அதன் மூலம் பல லட்சக்கணக்கான ஏக்கர் பழங்குடி இன மக்களின் நிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல் அவர்களுக்கு நிலப்பகிர்வும் செய்து கொடுத்திருக்கின்றார்கள். போலீஸ் மற்றும் இராணுவத்தினரின் வன்முறையில் இருந்து முடிந்தவரைக்கும் அந்த மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திருக்கின்றார்கள். இந்தியாவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றவர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

 அடுத்து, தேர்தலைப் புறக்கணிக்கும் இடது சாரி அணிகளில் உள்ளவர்களில் சிலர் ஆயுதப்புரட்சியைத் தவிர்த்துவிட்டு மக்களிடம் முதலில் கருத்தியல் தளத்தில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவில் புரட்சியை சாதிக்கமுடியும் என நம்புகின்றார்கள். இதிலேயேயும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் உள்ளன. ஐந்துபேர், பத்துபேர் உள்ள லெட்டர்பேட் அமைப்புகளில் இருந்து சில ஆயிரம் பேர் உள்ள அமைப்புகள் வரை உள்ளன. இவர்களில் பலபேர் முற்றாக தேர்தலைப் புறக்கணிப்பவர்களாக உள்ளனர். இன்னும் சில அதிமேதாவிகள் உள்ளனர். அவர்கள் எப்படி என்றால் தேர்தல் புறக்கணிப்புக்கு ஒரு அமைப்பையும் தேர்தலில் ஆதரவு அளிப்பதற்கு ஒரு அமைப்பையும் வைத்திருப்பார்கள். இப்படியாக இந்திய அரசியலில் பல வண்ண கட்சிகள், பல வண்ண சித்தாந்தங்கள் கொண்ட அமைப்புகள் உள்ளன.

  நமக்குத் தேர்தலை புறக்கணிக்கும் நபர்களைப் பற்றியோ அல்லது அமைப்புகளைப் பற்றியோ பெரிய விமர்சனங்கள் எப்போதும் இருந்தது கிடையாது. அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றார்கள். சுதந்திரம் அடைந்து இந்த 67 ஆண்டுகளில் இந்தியாவில் சாதி ஒழிப்புக்காக இந்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. மாறாக மிக மோசமான வகையில் சாதியப் படுகொலைகளும், சாதிய புறக்கணிப்புகளும் நடந்தேறி வருகின்றன. சில குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களே இந்தியாவின் பெரும்பான்மையான இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துகின்றார்கள். பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வீடின்றி, உடுக்க நல்ல ஆடையின்றி, உண்பதற்கு ஆரோக்கியமான உணவின்றி, குடிப்பதற்குச் சுகாதாரமான குடிநீர் இன்றி மிக இழிந்த நிலையில் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு நாட்டில் மக்களின் இந்த இழிந்த நிலையை மேலுமொரு ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஆளும் வர்க்கத்தை தேர்தெடுக்கும் அயோக்கியத்தனமே இந்தத் தேர்தல் ஆகும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

tamilnadu election

 வலுவான ஜனநாயகத்தை உருவாக்க அனைவரையும் தேர்தலில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதுவே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோளாக உள்ளது. அதற்காக அது ஒவ்வொரு தேர்தலிலும் பல சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக தம்மைக் காட்டிக் கொள்கின்றது. தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இதன் மூலம் மக்கள் மனதில் இந்திய ஜனநாயகத்தைப் பற்றிய ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகின்றது. இதன்மூலம் தொடர்ச்சியாக இந்த மக்களை தேர்தல் பாதையை விட்டு வேறு மாற்றுப்பாதையை நோக்கிச் செல்லாமல் தடுத்து வைக்கின்றது. அதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களை வைத்து தேர்தலில் பங்கெடுப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகின்றது. அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பல கோடிகளை செலவழித்து விளம்பரங்கள் கொடுக்கின்றது, மக்கள் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நாடகங்களை நடத்துகின்றது. தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யவேண்டும், மக்கள் எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்லலாம் என்பது வரை அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

  அது எப்போதும் சாதிவெறிக் கட்சிகளையும், மதவெறி பிடித்த கட்சிகளையும் தேர்தலில் போட்டியிட தடை செய்தது கிடையாது. தேர்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் உரிமையை அது எப்போது மக்களுக்குக் கொடுத்தது கிடையாது. தேர்தல் ஆணையம் என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு கைக்கூலி அமைப்பு ஆகும். அதன் பணி என்பது இந்திய மக்களை இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களின் மூலம் பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பலும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாட்டை சட்டப் பூர்வமாக செய்து கொடுப்பதுதான். இந்தக் கேடுகெட்ட வேலையைத்தான் அது ஜனநாயகம் என்கின்றது. நாம் அதை போலி ஜனநாயகம் என்கின்றோம். வெறும் 100% ஓட்டுப்பதிவு மட்டுமே ஜனநாயகம் அல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி என்றால் ஒட்டு போடவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? என நீங்கள் கேட்கலாம். நான் இதுவரை ஓட்டே போட்டதில்லை. யாராவது நல்லவருக்கு ஓட்டுபோடலாமே என நீங்கள் கேட்கலாம்.

  நாட்டில் இருக்கும் சாதிகளையும், மதங்களையும் அரசியலில் இருந்தே தனிமைப்படுத்துவேன், அதை ஒழித்துக் கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவேன், உற்பத்திக்கருவிகளை அரசுடமை ஆக்குவேன், அனைவருக்கும் சமச்சீரான இலவசக் கல்வியை கொடுப்பேன், படித்த முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பை உத்திரவாதப்படுத்துவேன், நாட்டின் வளங்களை அனைத்து மக்களும் பயன்படுத்துமாறு பகிர்ந்தளிப்பேன், அனைத்து அரசு ஊழியர்களும் மக்களால் தேர்தெடுக்கும் முறையை கொண்டு வருவேன், அரசு ஊழியர்கள் தங்களது கடமையைச் செய்யாத போது அவர்களைத் திருப்பி அழைக்கும் முறையைக் கொண்டுவருவேன் என யாராவது ஒரு நல்லவனால் சொல்லமுடியுமா?. சொன்னால் மட்டும் போதாது.. இதை எல்லாம் செய்ய முற்படும் போது ஆளும் வர்க்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களை என்ன வேண்டும் என்றாலும் செய்யும். அதை எப்படி சமாளிப்பது என்பதையும் அதற்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். இதை எல்லாம் சொல்லும் அந்த நல்லவனுக்கு நான் ஓட்டுப்போட தயாராக இருக்கின்றேன்.

 ஆனால் இது எல்லாம் வெறும் நல்லவன், கெட்டவன் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் கிடையாது. இது சித்தாந்தம் சம்மந்தப்பட்ட பிரச்சினை. வெறும் 1 சதவீத பணக்கார கும்பலை முன்னிலைப்படுத்தும் சித்தாந்தத்திற்கும், 99 சதவீத மக்களை முன்னிலைப்படுத்தும் சித்தாந்தத்திற்கும் இடையிலான பிரச்சினை. அதை எப்போது நாம் முழுமையாக புரிந்து கொள்கின்றோமோ அப்போதுதான் நமக்கான அரசை நம்மால் கட்டியமைக்க முடியும். அதுவரை அந்த 1 சதவீத மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வேலைசெய்யும் இந்த டுபாக்கூர் தேர்தல் ஆணையம் நடத்தும் போலி தேர்தலையும் அது கட்டவிழ்த்து விடும் தேர்தல் கால நகைச்சுவைகளையும் கண்ணிமைக்காமல், வாய்மூடாமல் நாம் பார்த்துக்கொண்டுதான் இருப்போம்.

- செ.கார்கி

Pin It