இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, சமீபத்தில் நடந்த நேபாளத்து மக்களின் போராட்டம் அதில் இருந்து "இடதுசாரிகள்" கற்போம் ,சிந்திப்போம், மீளாய்வு செய்வோம் என பல்வேறு கட்டுரைகள் "கம்யூனிஸ்டுகளால்" எழுதப்பட்டிருப்பினும் அப்படிப்பட்ட எத்தகைய பரிசீலனையும் இவர்களிடம் நேர்மையாக இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை அதுதான் இவர்களுடைய கடந்த கால வரலாறு.
பிற கம்யூனிஸ்ட்களுக்கு பாடம் எடுக்கக்கூடிய ம.க. இ.க மற்றும் உடைந்து போன அதன் மூன்று குழுக்களுமே, தங்கள் மீது பல ஆண்டுகளாக உடன் பணியாற்றிய பல்வேறு தோழர்களின் கருத்துக்களை கேட்பதற்கும் அதன் மீது விவாதிப்பதற்கும் அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவதற்கும் திறனற்று போய் தான், ஆளுக்கு ஒரு திசையாக சென்றிருக்கிறார்கள். இந்தக் கூட்டம் தான் சமூகத்தில், உலகத்தில் ஏதேனும் நடந்து விட்டால் கற்போம், சிந்திப்போம் என உருட்டுவதை கண்டால் வேடிக்கையாக இருக்கிறது.
ஏனென்றால் இந்த அமைப்புகளின் இலட்சணங்கள் அப்படி. ஒன்றாக செயல்பட்ட காலத்திலேயே தேர்தல் அரசியல் குறித்தோ வேறு ஏதேனும் அரசியல் மாற்றுக்கருத்துக்கள் குறித்தோ தங்கள் அமைப்புக்கு உள்ளே இருந்தும், வெளியில் இருந்தும் வரும் மாற்று கருத்துக்களை இவர்கள் நேர்மையாக பரிசளிப்பதும் இல்லை சுற்றுக்கு அனுப்பி மொத்த அணிகளிடம் கருத்து கேட்பதும் இல்லை.
வெளியில் இருந்து வரும் பிற அமைப்புகளின், தோழர்களின், அறிவு ஜீவிகளின் கருத்துகளை தங்கள் அரசியலுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை தங்கள் அணிகளிடம் கொண்டு செல்வதில் விவாதிப்பதில் தைரியமற்ற கோழைகளாகவும் ,மாற்றுக் கருத்து சொல்லும் நபர்களை உதிரிகள், அமைப்பில் இல்லாதவர்கள், முதலாளித்து அறிவு ஜீவிகள் ,எந்த மாற்றுத் திட்டமும் இல்லாத நபர்கள் அதை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை என உதாசீனப்படுத்தியதோடு தம் அணிகளையும் அப்படி இருக்க பழக்கிய தற்போதும் பழக்கியும் கொண்டிருக்கக் கூடிய மூடர்கள் தான் இவர்கள். அதே நேரம் அமைப்புக்குள் இருந்து மாற்றுக் கருத்து சொல்லும் தோழர்களை அவர்களுடைய கேள்விக்கும் கருத்துக்களுக்கும் பதில் சொல்வதை தவிர்த்து உங்களால் எத்தனை பேரை அரசியலுக்கு வென்றெடுக்க முடிந்தது என "கிடுக்குப்பிடி"கேள்வி கேட்டு வாயடைக்க வைப்பது மட்டுமே அரசியல் தந்திரமாக செயல்படுத்துவதும் தங்களுடைய கருத்துக்களை கடிதங்களாக கட்டுரைகளாக யாரேனும் எழுதிக் கொடுத்தால் அதை அமைப்பு முழுவதும் கொண்டு சென்று விவாதிக்காமல் மறைப்பதும் அவர்களை அமைப்பை விட்டு ஓரங்கட்டும் வேலையை நைட்சியமாக செய்வதும், வெளியேற்றுவதும் உள்ளிட்ட பல "புதிய ஜனநாயக" நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்தும் வந்திருக்கிறார்கள் என்பதை இந்த அமைப்புகளில் இருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பல்வேறு தோழர்களுடைய பதிவுகள்,அறிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அரசியலில் உண்மை என்று ஒன்றுதான் இருக்க முடியும் என்கிறார் தோழர் மாவோ. அதில் சிறுபான்மை பெரும்பான்மை கருத்து என்பதே ஒரு மோசடி என்கிறார். பெரும்பான்மை ஒத்துக் கொள்வதாலேயே பொய் அல்லது தவறு உண்மையாகி விடாது, அதேபோல் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் என்பதாலேயே உண்மை பொய்யாகவோ தவறாகவோ ஆகிவிடாது என்கிறார்.
ஒரு உண்மையை, கருத்து முரண்பாட்டை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள மனம் இல்லாத குறுகிய கண்ணோட்டம் கொண்ட இந்த அமைப்புகள் ,இதிலிருந்து பாடம் கற்போம் ,அதிலிருந்து பாடம் கற்போம் என்று கட்டுரை எழுதுவதெல்லாம் வேடிக்கையிலும் வேடிக்கை. தாங்கள் ஏதோ ஜனநாயகவாதி போல ,நடக்கக்கூடிய நிகழ்வுகளில் இருந்து புதிதாக கற்றுக் கொள்பவர்கள் போல தங்களை காட்டிக் கொள்ளும் வெளிவேசம் தான் இது.
இவர்கள் என்று சொல்வது இந்த அமைப்புகளின் தலைமையில் இருந்து கொண்டு முடிவெடுத்து செயல்படுத்தும் நிலையில் இருக்கக்கூடிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களை மட்டுமே தவிர அணிகளையோ அமைப்புக்குள்ளேயே எந்த அதிகாரமும் அற்ற, அமைப்பு தலைமை சொன்னால் அந்த வேலையை "கண்ணை மூடிக்கொண்டு" செய்யும் நிலையில் இருக்கும் அப்பாவி தோழர்களை அல்ல. பாவம் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
இப்படிப்பட்ட வரலாற்று பின்னணி கொண்ட இந்த அமைப்புதான் தற்பொழுது நேபாளில் ஏற்பட்ட கிளர்ச்சியையும் மாவோஸ்ட்டுகளுக்கு ஏற்ப்பட்ட நெருக்கடியில் இருந்தும் தான் பாடம் கற்பதாக கூறும் ஆச்சரிய படத்தக்க கட்டுரைகளை எழுதியிருக்கிறது அதை சற்று பார்ப்போம்.
"நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோவிய மையம், இந்திய மாவோயிஸ்டுகள் குறித்தும் இவர்கள் வைக்கும் விமர்சனம், மற்றும் இவர்கள் கற்றுக் கொண்டதாக கூறுவது கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது;
" கடந்த 2006-ஆம் ஆண்டில் நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான பேரெழுச்சிக்குப் பின்னர், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, நேபாளம் கூட்டாட்சி குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, மன்னராட்சி ஒழிக்கப்பட்டது."
"ஆனால், அதைத் தொடர்ந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), அடுத்தக் கட்ட மக்கள் ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களை நாடாளுமன்றத்துக்கு வெளியே முன்னெடுக்காமல், முதலாளித்துவ நாடாளுமன்ற வரம்புகளுக்குள் செயல்படத் தொடங்கியது முக்கியமான பின்னடைவாகும்."
"அதனைத் தொடர்ந்து முதலாளித்துவக் கட்டமைப்பில் தவிர்க்கவியலாமல் மேலோங்கும் நோயான ஊழல் பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் பயன்படுத்திக்கொண்டு, நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கு இந்திய ஆளும் வர்க்க பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலும், ஏகாதிபத்தியங்களும் சதி வேலைகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றன. நேபாள ஆளும் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் குளிர்காய்ந்து தங்களது நலனையும், நோக்கத்தையும் ஈடேற்றிக்கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது".
"நேபாளத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கின்ற, உண்மையான ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டங்களை நாடாளுமன்றத்துக்கு வெளியே அங்குள்ள புரட்சிகர இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவையை இந்நிகழ்வுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன."
--+ வினவு sep 9- 2025
https://www.vinavu.com/2025/09/09/nepal-19-killed-in-public-protests-what-is-the-revealing-truth/
இவை வினவு உதிர்த்த முத்துக்கள்.
தேர்தல் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்த இவர்களின் பழைய பல்லவியான தேர்தல் புறக்கணிப்பு தேர்தல் பாதை திருடர் பாதை எனும் "புரட்சிகர' மன நிலையில் இருந்து உதிர்த்த அந்த முத்து தான் இது.
அரசியல் போராட்டங்களை நாடாளுமன்றத்துக்கு வெளியே முன்னெடுக்காமல் முதலாளித்துவ நாடாளுமன்ற வரம்புகளுக்குள் செயல்பட தொடங்கியது தான் இந்த விஷயத்தில் சிக்கல் என வினவை சார்ந்த பிரிவினர் முன்னிறுத்துவதானது இவர்களின் கடந்த கால "இடது சந்தர்ப்பவாத" தவறுகளில் இருந்து உதிர்ந்த ஒரு முத்து.
நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதன் மூலமாகவே தங்களை "புரட்சியாளராக" காட்டிக் கொள்வது "இடது சந்தர்ப்பவாத" தவறு என தோழர் லெனின் பல்வேறு முறை எச்சரித்தும் சுட்டிக் காட்டியும் இவர்கள் மண்டையில் அது உரைப்பதே இல்லை.
மேலும் தோழர் லெனின்
"பிற்போக்கு நிறுவனங்களை அழித்துவிடும் பலம் நம்மிடம் இல்லாதவரை நாம் பிற்போக்கு நிறுவனங்களில் பங்கெடுத்துக் கொள்வது அவசியம்" என்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் பங்கெடுத்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தங்களை புரட்சியாளர்களாக இடதுசாரிகள் காட்டிக் கொள்ளலாம் ஆனால் அது வெறும் வாய்வீச்சு என்கிறார்.
தேர்தல் பாதையில் மக்களை அமைப்பாக்குவதற்கும் பாட்டாளி வர்க்க அரசியல்வாதிகளை உருவாக்குவதும் இன்றி அமையாதது அது எவ்வளவு சிரமமான காரியமாக இருந்தாலும் அதை செய்து தான் ஆக வேண்டும் என இது குறித்து பல்வேறு கருத்துக்களை இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு எனும் நூலில் தோழர் லெனின் விளக்கி இருந்தாலும், 40 ஆண்டுகளுக்கு மேலாக தங்களை புரட்சியாளராக காட்டிக் கொள்வதற்கு இந்த அமைப்பு போட்ட முழக்கமான "ஓட்டு போடாதே புரட்சி செய்' என்பது இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்க பிரபலமான மிகப்பெரும் "இடது சந்தர்ப்பவாத" முழக்கக்கமாகும்..
நடைமுறைக்கு சிறிதும் பொருந்தாத இது போன்ற பல இடது சந்தர்ப்பவாத முழக்கமும் செயல்பாடுமே இந்த அமைப்பை மக்கள் திரள் அமைப்பாக்காமல் மக்களிடம் இருந்து அந்நியபடுத்தி பிரித்து வேலி கட்டிய அரசியல் நடவடிக்கைக்கு சில சான்றாகும்
தற்போது இவர்கள் "தேர்தல் பாதையை போராட்ட களமாக பயன்படுத்துவோம்" வேண்டும் ஜனநாயகம்" என "நடைமுறை" ஏற்படுத்திய நிர்பந்தத்தால் (தத்துவ புரிதலால் அல்ல) தேர்தல் பாதையில் முன் மண்டியிட்டு உள்ளது மக்கள் அதிகாரக் கழகத்தின் தலைமை.
தற்போது தேர்தலில் திமுக, காங்கிரஸை வெளிப்படையாக ஆதரிப்பது எனும் கோவன் தலைமையிலான ம.க.இ.க ,மக்கள் அதிகாரம் பிரிவினரோ ஆசான்களின் சரியான தத்துவத்தை அனுபவத்தை புரிந்து கொண்டு அதை தம்முடைய நடைமுறை பிரச்சனைகளுக்கு பொருத்துவது என்ற கண்ணோட்டத்திற்கு வராமல் மோடி ஆட்சி குறித்து பாசிசம் குறித்து ஏற்பட்ட பீதி,தலைமையாகிய தமக்கு நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சத்திலிருந்து ஓடோடிப் போய் முதலாளித்துவ தேர்தல் கட்சிகளிடம் சரணாகதி அடைந்திருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் கட்சி ,பிற வர்க்கங்களிலேயே முன்னேறிய வர்க்கப் பிரிவினரான தொழிலாளி வர்க்கத்தின் தலைமையை உறுதிப்படுத்துவது, தமது கட்சியின் வர்க்க அணி சேர்க்கையை பெரும் பகுதியை தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியினர் இருப்பது போல் பார்த்துக் கொள்வது, விவசாயிகள், மாணவர்கள், அறிவு ஜீவிகள் உதிரி பாட்டாளிகள் குட்டி முதலாளித்துவ பிரிவினர் ஆகியோருடைய எண்ணிக்கையை குறிப்பிட்ட வரம்புக்குள் குறைத்து கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே ஒரு கட்சியை தொழிலாளி வர்க்கத்தின் கட்சியாக புரட்சிகர கட்சியாக வழிநடத்த இயலும் என்பதை மார்க்சிய ஆசான்கள் அத்தனை பேரும் பல்வேறு இடங்களிலும் சுட்டிக்காட்டியும், கற்பதற்கு திறனற்றவர்களாய் இத்தனை ஆண்டு காலம் காலத்தை கடத்தியவர்கள்,
சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமே திசை விலகல் இல்லாமல் கட்சியை வழிநடத்த இயலும் என்ற அரிச்சுவடி கூடத் தெரியாமல் அல்லது எது சந்தர்ப்பவாதம் என்றே தெரியாமல் இத்தனை ஆண்டு காலம் கட்சி அமைப்பு நடத்தியது குறித்து இவர்களிடம் ஏதேனும் ஒரு சுய விமர்சனத்தை பார்க்க முடிந்ததா?
மாவோயிஸ்டுகளுடைய இடது சந்தர்ப்பவாதம் அவர்களுடைய அழிவுக்கு தற்பொழுது இட்டுச் சென்றிருக்கிறது பல பத்தாண்டு காலமாக தங்களுடைய அணியினர் பல்வேறு நபர்கள் கொல்லப்பட்டிருப்பினும் அப்போதெல்லாம் வராத இந்த சுய விமர்சனம் தற்போது அவர்களுக்கு வந்திருப்பதன் நோக்கம் என்ன?. இனி, தான் தப்பி பிழைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகு சரணடைவதை தவிர வேறு நிலை இல்லை என்று வந்த பிறகு அல்லது தங்களுடைய கழுத்துக்கு அந்த கத்தி வந்து விட்ட பிறகு இந்த தலைமைகளுக்கு சுய விமர்சனம் வருவது துயரம் மிகுந்த உண்மை.
சீனப் புரட்சி குறித்து மாவோ சொல்லும் பொழுது இப்படி கூறியுள்ளார். "சிறிய பகுதிகளில் மக்களின் அரசியல் அதிகாரம் நிலைப்பது சாத்தியமா என்பது தேசிய அளவில் புரட்சிகர சூழல் தொடர்ந்து வளர்கிறதா என்பதன் மீது சார்ந்து இருக்கிறது. இது நடைபெறுமானால் அப்போது சிறிய சிவப்பு பகுதிகள் சந்தேகமின்றி நீண்ட காலத்திற்கு நீடிப்பதுடன் மேலும் தவிர்க்க இயலாமல் தேசிய அளவில் அரசியல் அதிகாரத்தை வெற்றி கொள்வதற்கான பல சக்திகளுள் ஒன்றாக மாறும். தேசிய அளவில் புரட்சிகர சூழல் தொடர்ந்து வளர்ச்சியுறாமல் ஓரளவு நீண்ட காலத்திற்கு தேக்கமடைகிறது எனில் அப்போது சிறிய சிவப்பு பகுதிகள் நீடித்து நிலைப்பது சாத்தியமில்லாமல் இருக்கும். உண்மையில் தரகு முதலாளி ,நிலக்கிழார் வர்க்கங்களின் கும்பல்கள் மற்றும் சர்வதேச முதலாளி வர்க்க கும்பலுக்கு இடையிலான தொடர்ச்சியான பிளவுகள் மற்றும் போர்களோடு சீனாவில் புரட்சிகர சூழல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே சிறிய சிவப்பு பகுதிகள் சந்தேகமின்றி நீண்ட காலம் நீடிப்பதும் தொடர்ந்து விரிவடைவதும் மேலும் படிப்படியாக நாடு முழுவதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் இலக்கை எட்டும்." (மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 1 ; பக்கம் 90)
இப்படி தோழர் மாவோ தன்னுடைய நாட்டு சூழலுக்கு பொருந்தி ஒரு புரட்சியை செய்து வெற்றி பெற்றிருப்பது அங்குள்ள ஒரு வரலாற்றுக் கட்டத்திற்கு அது சாத்தியமாகிருக்கிறது "தேசிய அளவில் புரட்சிகர சூழல் தொடர்ந்து வளர்ச்சி பெறாமல் ஓரளவுக்கு நீண்ட காலம் தேக்கமடைகிறதெனில் அப்போது சிறிய சிவப்பு பகுதிகள் நீடித்து நிலைப்பது சாத்தியமில்லாமல் இருக்கும்" என்று அவர்களின் தத்துவ தலைவரே கூறிய பிறகும் இத்தனை ஆண்டுகள் எதற்காக இப்படி ஒரு போராட்ட முறையை இவர்கள் கை கொண்டார்கள், எதை அடிப்படையாக ஏற்றார்கள்?
இது போன்ற இடது சந்தர்ப்பவாதத்தையும், தேர்தல் அரசியலில் மூழ்கி சீரழிந்து , தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியல் குறித்து, தொழிற்சங்கம் குறித்து, வர்க்க ஒற்றுமை குறித்து எந்த கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தாத,தொழிற்சங்கங்களை பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமே நடத்தும் வலது சந்தர்ப்பவாதிகளான cpi ,cpim போன்றவர்களின் வலது, சந்தர்ப்பவாதத்தையும் தத்துவ ரீதியாக முறியடிக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக திராணி இல்லாத இந்த ம.க. இ.க. நேபாள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் விஷயத்தில் கற்றுக் கொள்ளப் போவதாக கட்டுரை எழுதுவதெல்லாம் அணிகளை ஏமாற்றும் தந்திரமே. உண்மையில் அவர்களுக்கு பரிசீலினை, மீள் ஆய்வு,சுய விமர்சனம் என்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தமே தெரியாத "மேட்டிமை" மனநிலையும் அதிகாரத்துவ பண்பும் மட்டுமே இதுவரை அவர்களிடம் வெளிப்பட்டிருக்கிறது.
(இதில் ம.க. இ.க வை மட்டும் நாம் குறிப்பிட காரணம் அவர்களே கூறிக் கொண்ட படி உலகத்தில் தற்போது இருக்கும் ஒரே "புரட்சிகர அமைப்பு" அவர்கள் மட்டும்தான் என்பதால்.)
மாவோயிஸ்ட் தலைமையோ (2025),விடுதலைப் புலிகள் தலைமையோ(2009), ம.க. இ. க. தலைமையோ (2019) அல்லது வேறு ஏதேனும் அரசியல் இயக்க தலைமைகளோ தங்கள் கழுத்திற்கு கத்தி வராதவரை,தங்களுக்கு நெருக்கடி வராத வரை சமாதானம் ,ஆயுதங்களை மௌனிப்பது, பரிசீலனை செய்வது என்று முன் வருவதில்லை, ஆயிரக்கணக்கான சக தோழர்கள் உழைப்பும்,வாழ்வும்,உடல்நிலையும் வீணாகும் போதும் , சாகும்போதும் வராத "பரிசீலனை" தலைமையின் முடிவு கண்ணுக்குத் தெரியும் போது மட்டுமே வருகிறது.
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் என்கிறார் தோழர் மாவோ;
யுத்தத்திலோ அரசியலோ யார் கை ஓங்கி இருக்கிறதோ, யார் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார்களோ அவர்களே சகலத்தையும் தீர்மானிக்கின்றனர், அவர்கள் மனது வைத்தால் மட்டுமே சமாதானம் ஏற்பட வாய்ப்பு உண்டு... அமைதி காலங்களில் சமாதானத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள் தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டு சமாதானம் பேசுவது பலன் அளிப்பதில்லை.
முள்ளிவாய்க்காலோ, தண்டகாருணியமோ, தமிழ்நாடோ அல்லது உலகத்தின் வேறு எந்த பகுதியோ சொல்லுவது இதுதான், உங்களுக்கு மூச்சு விட நேரம் இருக்கும்போதே அமைதி காலங்களிலேயே உங்களை குறித்து நீங்கள் பரிசீலனை செய்யுங்கள் மாற்றுக் கருத்துக்களை காது கொண்டு கேளுங்கள், மதிப்பளியுங்கள் பதில் சொல்லுங்கள் அல்லது நடைமுறை நமக்கு முடிவு கட்டும் வரை நாம் காத்திருப்போம் எதற்கும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்கின்ற இருமாப்பும், திமிர்த்தனமும் ஜனநாயக விரோத போக்கும் உங்களிடம் இருக்குமானால் உங்களை நீங்களே அழிவு எனும் படுகுழிக்குள் தள்ளிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்களை நம்பி உங்களுடன் இருக்கும் அப்பாவி சக தோழர்களையும், மக்களையும் சேர்த்து தள்ளிக் கொ(ல்)ள்வீர்கள்.
எந்த ஒரு அரசியல் அமைப்புகளிலும் இருக்கும் தோழர்களே தயவுசெய்து ஒவ்வொருவரும் பரிசீலியுங்கள், கேள்வி கேளுங்கள் தலைமை பார்த்துக் கொள்ளும் என நீங்கள் இருந்தால் தலைமையில் இருக்கும் யாரோ சிலரின் முட்டாள்தனத்திற்கு நீங்களும் உங்கள் உழைப்பும் ,உடல்நிலையும்,வாழ்வும்,உங்கள் குடும்பமும், பலியாக வேண்டி இருக்கும், எனவே தோழர்களே உண்மையாக, நேர்மையாக, உடனடியாக ஒவ்வொரு விஷயத்தையும் படியுங்கள், சிந்தியுங்கள், பரிசீலியுங்கள்.
- திருச்செல்வம்