கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அன்பார்ந்த தோழர்களே!

மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஓர் அமைப்பாகிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் திருவாளர் சுப. தங்கராசு அவர்கள் பெல் நிறுவன ஒய்வு பெற்ற தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு மனை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களிடம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 29.07.2020 அன்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டது. அப்படி வெளியான செய்தியில் சுப.தங்கராசு என்று குறிப்பிடாமல் வெறுமனே தங்கராஜ் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அவர் புஜதொமு மாநில பொதுச் செயலாளர் என்பதையும் குறிப்பிடவில்லை. ஆனாலும் நக்கீரன் குறிப்பிடும் அந்த நபர் சுப.தங்கராசுதான் என்பது எங்களுக்குத் தெரியும். இதனோடு நக்கீரன் செய்தி வெளியான பின்னர், மக்கள் அதிகாரம் குழுமத்தின் புஜதொமு தலைமை சுப.தங்கராசுவை தற்காலிக இடைநீக்கம் செய்து தமது அணிகளுக்கு அனுப்பிய ரகசிய சுற்றறிக்கை பற்றிய செய்தியும் எமக்குக் கிடைத்தது.

எனவே, மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில், எமது ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு 04.08.2020 அன்று “சீரழிவு சகதியில் மூழ்கிவிட்ட புஜதொமு மற்றும் அதன் சகோதர அமைப்புகள்” என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் வெளியிட்டோம். எமது அந்தக் கட்டுரையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவாளர் ராஜு அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1 கோடி ரூபாய் சொத்து வாங்கிய விவகாரத்தில் அப்பகுதி தோழர்கள் விளக்கம் கேட்டதற்கு, அந்த அமைப்பின் அரசியல் தலைமையின் அணுகுமுறை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில் திருவாளர் ராஜு பற்றிய பகுதிக்கு மட்டும் முதலாவதாக புஜதொமு அமைப்பினர், தமது இணைய தளமான வினவில் மறுப்பும், கண்டனமும் தெரிவித்து பத்திரிக்கைச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதில் மக்களுக்காகப் போராடும் புரட்சிகர அமைப்புகளின் தலைவர்களைப் பற்றி இப்படியான செய்திகள் வரும்போது, அதற்கான அடிப்படை ஆதாரத்தைக் கேட்டுப் பெறாமல் செய்தி வெளியிடக் கூடாது என்று கீற்று ஆசிரியருக்கு மிரட்டலும் விடுத்திருந்தனர்; அதற்கான ஆதாரத்தையும் கேட்டிருந்தனர். அவர் எங்களிடம் உரிய ஆதாரத்தைத் தருமாறு கேட்டிருந்தார். எமது பதில் கட்டுரையைத் தருவதில் ஏற்பட்ட சிறிது கால தாமதம் காரணமாக திருவாளர் ராஜு பற்றிய பகுதியை நீக்கிய கீற்று ஆசிரியர், மக்கள் அதிகார குழுமத்தின் அணுகுமுறை பற்றிய தனது கருத்தையும் பின்னூட்டமாக வெளியிட்டிருந்தார்.

அதில், "நீண்ட நாட்களாக இக்குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில், கட்சித் தலைமையின் சர்வாதிகாரப் போக்கில் அதிருப்தியுற்று தோழர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி வருவதும், தலைமையின் மீதான விமர்சனங்கள் பொதுவெளியில் அதிகரித்து வருவதுமான நிலையில், தேர்தல் கட்சிகளுக்கு நிகரான ஊழல் குற்றச்சாட்டில் தற்போது கட்சி அணி ஒன்றின் பொதுச் செயலாளரே சிக்கியிருக்கும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜனநாயகத் தன்மையையும், வெளிப்படைத் தன்மையையும் கடைபிடிப்பது மட்டுமே அமைப்பின் மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கும். அமைப்பிற்குள் இருக்கும் ஒருவர் எவ்வளவு சொத்து சேர்க்கலாம் என்பதையும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினரின் சொத்து மதிப்பு என்ன, source of income என்ன என்பதையும் கட்சி இணையதளத்தில் வெளியிட்டு விட்டால் இத்தகைய விமர்சனங்களை எளிதாகத் தவிர்க்க முடியும். பொதுவெளியில் வைக்கப்பட்ட விமர்சனங்களை பொதுவெளியில் சந்திப்பதே சரியான அணுகுமுறையாகும். அதை விடுத்து 'என் ஏரியாவுக்கு வா' என்று பதில் சொல்வது ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அழகல்ல. குற்றம் சாட்டியவர்கள் கட்சியின் முன்னாள் தோழர்கள் எனும்போது, இத்தகைய பதில்கள் கட்சி மீதான நம்பகத் தன்மையைக் குலைக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

கீற்று இணைய தள ஆசிரியரிடம் கையாண்ட அவர்களின் அணுகுமுறையின் ஊடாக மக்கள் அதிகாரம் குழுமத்தினர் தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளனர்.

சீரழிவு சகதியில் மூழ்கிவிட்ட புஜதொமு மற்றும் அதன் சகோதர அமைப்புகள்’ என்ற எமது கட்டுரைக்கான அவர்களின் பத்திரிக்கை செய்திக்கு, நாங்கள் 11.08.2020 அன்று ‘மக்கள் அதிகாரம் குழுமத்தின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும்’ என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் வெளியிட்டோம். அந்தக் கட்டுரையில் மக்கள் அதிகாரக் குழுமமும், அதன் அரசியல் தலைமையும் பாட்டாளி வர்க்க அமைப்புகள் அல்ல; அவை உடைமை வர்க்கங்களின் கைப்பாவைகள் என்பதை அரசியல், சித்தாந்த ரீதியாக நிறுவியிருந்தோம்.

எமது அந்த கட்டுரை வெளியாவதற்கு முன்பாக 08.08.2020 அன்று, புஜதொமு மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர் சுப.தங்கராசு அவர்களை தாங்கள் அமைத்த விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், அவர் வீட்டுமனை முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருக்கிறது; எனவே நக்கீரன் செய்தி வந்த அன்றே, அவரை எமது அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், புஜதொமு மாநில பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக இடை நீக்கம் செய்திருப்பதாக மக்கள் அதிகாரம் குழுமத்தினர் தமது இணைய தளத்தில் பத்திரிக்கைச் செய்தியாகக் கூறியிருந்தார்கள்.

அதனோடு, “எந்த கட்டுரையை வெளியிடுவது என்பது கீற்று இணையதளத்தின் உரிமை என்ற போதிலும், பல்லாயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புரட்சிகர தொழிற்சங்க அமைப்பான புஜதொமு மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு வெளியிடுவதுதான் ஊடக தர்மம்”, என்று தமது ஆள் பலத்தைக் காட்டி மிரட்டிடும் பார்ப்பன பாசிஸ்டுகளின் குணாம்சத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆட்களின் எண்ணிக்கைதான் ஓர் அமைப்பின் நம்பக தன்மைக்கான, நேர்மைக்கான தகுதி என்றால் மத்திய, மாநில அரசுகள் அனைத்துமே பெரும்பான்மை பலத்துடன் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கறை படியா கரத்திற்கு சொந்தக்காரர்கள் என்று பொருளாகி விடுகிறது. அதிலும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

மக்கள் அதிகாரக் குழுமத்தின் எந்த ஒரு அமைப்பு தலைமையையும், அந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்வதில்லை. அதற்கு மாறாக அதன் அரசியல் தலைமைதான் அவர்களை நியமனம் செய்கிறது. அதன் அரசியல் தலைமையோ, அமைப்பு மாநாட்டைக் கூட நடத்தாமல் தம்மால் முடிந்த அளவுக்கு தவிர்க்கும் உத்திகளைக் கையாண்டு வந்துள்ளது. இதன் மூலம் தமக்குத் தாமே தலைமை என்ற மகுடத்தை சூட்டிக் கொள்வதில் கைதேர்ந்த திறமைசாலிகள் என்பதை நிரூபித்து வந்திருக்கிறது.

இவர்களை விட, இவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று கூறப்படும், தேர்தல் பாதையில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பல நூறு மடங்கு அளவுக்கு தொழிலாளர்களை தமது சங்கத்தில் உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இவர்கள் புனிதமானவர்களாகத் தானே ஏற்க வேண்டும். அப்படி அல்லாமல் 1.திரிபுரா மாநில சிபிஎம் கட்சியின் சமர் ஆச்சார்யாவின் கழிவறை ஒப்பந்த ஊழல். 2.தமிழகத்தின் திருப்பூர் சிபிஎம் கோவிந்தசாமி மூன்று கோடி ரூபாய்க்கு வீடு கட்டிய ஊழல் ஆகியவற்றை 2013 அக்டோபரில் தமது வினவு இணையதளத்தில் வெளியிட்டு அவர்களை ஊழல்வாதிகள் என்று கூறுவது இவர்களின் வரையறுப்புக்கு முரணாகத் தெரியவில்லையா?

சரி அவர்களை விடுங்கள், அவர்கள் ‘போலி கம்யூனிஸ்டுகள்’. இவர்களின் வரையறுப்பின் படியே இவர்கள் மக்களுக்காகப் போராடும் புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொள்வதால், இந்த அமைப்புகளின் தலைமையில் உள்ளவர்கள் உத்தமர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அதற்கு மாறாக அவர்களே ஊழல்வாதி என்று கூறுவதற்கான முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிடும் திருவாளர் சுப.தங்கராசு எப்படி அவர்களின் தொழிற்சங்கத் தலைமை பொறுப்பில் இருக்க முடிந்தது? அப்படியானால் அவர்களின் வரையறுப்பு தவறானது என்பது புலனாகிறது. இதன் மூலம் மக்கள் அதிகாரம் குழுமத்தினர் தமது ஆள் பலத்தைக் குறிப்பிட்டிருப்பது அவர்களின் நேர்மையை அளப்பதற்கான அளவுகோலாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகி விடுகிறது. இப்போது அந்த ஆள்பலம் என்பது அந்த குழும அமைப்புகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோரை மிரட்டிப் பணிய வைப்பதற்கான கருவி என்பதும் தெரிந்து விட்டது. இப்படிப் பட்டவர்கள்தான் புரட்சியாளர்களாம்! கேழ்வரகில் நெய் வடிகிறது நம்புங்கள் என்கிறார்கள்!

ஊடக தர்மம் பற்றி பேசும் இவர்கள் நக்கீரன் பத்திரிக்கை செய்தி வெளியிடுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே சுப.தங்கராசு பற்றி விசாரணைக் குழு அமைத்து, அவர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும், அதுபற்றி ஊடகங்களில் அப்போதே அதை வெளியிட்டு தமது நேர்மையை நிரூபித்துக் கொண்டிருக்கலாமே? ஏன் அதைச் செய்யவில்லை? அப்படி வெளியிட்டிருந்தால் நக்கீரன் போன்ற இதழ்களும், எம்மைப் போன்றவர்களும் அதைப் பற்றி பேச வேண்டிய தேவையைத் தவிர்த்திருக்கலாமே. அதற்கு மாறாக அந்த அறிக்கையை ஏழு மாதமாக தமது அணிகளிடம் கூட இருட்டடிப்பு செய்ததுதான் புரட்சியாளர்கள் என்பதற்கான அடையாளமா?

நக்கீரன் குறிப்பிட்டுள்ள தங்கராஜ் தான் சுப.தங்கராசு என்ற உண்மை தெரிந்த தமது அணிகளுக்கு மட்டுமே, அவரை அமைப்பு பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்திருப்பதாக ரகசிய சுற்றறிக்கை மூலம் தெரிவித்து தாங்கள் உத்தமர்கள் என்று அவர்களிடம் நாடகம் ஆடியுள்ளனர்.

ஆனால் நாங்கள் 04.08.2020 அன்று கீற்றில் வெளியிட்ட கட்டுரையின் மூலம் நக்கீரன் குறிப்பிட்டுள்ள தங்கராஜ் என்பவர்தான் புஜதொமு மாநில பொதுச்செயலாளர் சுப.தங்கராசு என்றும், அதனோடு அவர்களின் புதிய கதாநாயகன் திருவாளர் ராஜு அவர்கள் சொத்து வாங்கிய விவகாரத்தில், அந்த குழுமத்தின் அரசியல் தலைமையின் அணுகுமுறை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். இதன் மூலம் இவர்களின் முகத்திரையை நாங்கள் கிழித்திருந்தோம்.

இதன் பிறகுதான் - வேறு வழியேதும் இல்லாத கையறு நிலையில்தான் – பத்து ஆண்டுகளாக சீந்துவாரற்றுக் கிடந்த செய்திக்கும், ஏழு மாதமாக இவர்களால் இருட்டடிப்பு செய்து வைத்திருந்த விசாரணைக் குழு அறிக்கைக்கும் வினவு இணைய தளத்தில் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை இவர்களுக்கு நாங்கள் ஏற்படுத்தி விட்டோம். ஆனால் இந்த உண்மைகளை மூடி மறைத்து விட்டு, தாங்களே வகுத்துக் கொண்ட விதிகளுக்கு ஏற்ப சுப.தங்கராசு மீது நடவடிக்கை எடுத்து விட்டதாக வினவு இணைய தளத்தில் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் அவர்கள் சவடால் அடித்துள்ளனர். இதன் மூலமும் தமது நேர்மையற்ற தனத்தை அவர்கள் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளனர்.

வேறு யாரைப் பற்றியாவது ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியானால், அதற்கு அடுத்த நிமிடமே அவர்களைப் பற்றி பொரிந்து தள்ளும் இவர்கள், அப்படியான செய்திகளின் நம்பகத் தன்மையைப் பற்றி எப்போதாவது அடிப்படை ஆதாரங்களை திரட்டிக் கொண்டுதான் அதுபற்றி செய்திகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டார்களா அல்லது இனி அப்படித்தான் வெளியிடப் போகிறார்களா?

உதாரணத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 இதழில் (வினவில் இருக்கிறது) பின்வருமாறு எழுதினார்கள்:

"அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை. தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது. இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை."

இதை எந்த ஆதாரத்தை வைத்து எழுதினார்கள் என்பதை மக்கள் அதிகாரக் குழுமம் சொல்ல முடியுமா? அல்லது காமன்வெல்த் ஊழல், வியாபம் ஊழல் என எந்த ஊழல் பற்றிய ஆதாரங்களை மக்கள் அதிகாரம் குழுமத்தினர் புலனாய்வு செய்து எழுதினார்கள்? வெறும் பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில்தானே… அதே போன்று, நக்கீரன் பத்திரிக்கை செய்தியை ஆதாரமாகக் கொண்டு இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டினை விமர்சித்தால் அது மட்டும் அவதூறாம்!?

ஆளுக்கொரு நீதி என்பதுதான் பார்ப்பனியத்தின் தர்ம கோட்பாடு. அந்த தர்மக் கோட்பாட்டினை பிசகில்லாமல் கடைபிடிக்கும் புனிதப் பிறவிகள் தாங்கள் என்பதையும் கூட நமக்கு உணர்த்தி விட்டார்கள் மக்கள் அதிகாரம் குழுமத்தினர்.

புரட்சிகர அமைப்பு என்றாலே அவர்கள் நிதிமுறைகேடுகளில் ஈடுபட மாட்டார்கள், நேர்மையாகத்தான் வாழ்வார்கள் என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அவர்கள் கீற்று ஆசிரியருக்கு அறநெறி போதனை செய்துள்ளனர். ஆனால், அதே கட்டுரையில், அவர்களின் மாபெரும் தொழிற்சங்க அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளரும், புரட்சியாளருமான திருவாளர் சுப.தங்கராசு அரசு நிலத்தை முறைகேடான வழியில் அபகரிக்க முயன்றதன் மூலம் மக்கள் விரோத, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். புரட்சிகர அமைப்பு மற்றும் அதன் தலைவர்கள் என்றாலே அவர்கள் நேர்மையானவர்களாகவும், உத்தமர்களாகவுமே இருப்பார்கள் என்பதுதான் அவர்களின் வரையயறுப்பு. எந்த அடிப்படையில் புரட்சிகர அமைப்புகளுக்கான இந்த அவர்களின் வரையறுப்பு, அவர்களுக்கே பொருந்துவதாக அவர்கள் கருதுகிறார்கள்? அவர்களின் அமைப்பு புரட்சிகர அமைப்பு என்றும், அவர்களெல்லாம் புரட்சியாளர்கள் என்றும் உலகின் எந்த பல்கலை கழகம் அவர்களுக்கு பட்டம் கொடுத்தது? அல்லது எந்த திருச்சபை அவர்களைப் புனிதர்களாக அறிவித்தது?

அவர்களுக்கு, அவர்களே புரட்சியாளர்கள் என்று பட்டம் கொடுத்துக் கொண்டால் அதை மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். சமூக மாற்றத்திற்கும், வளர்ச்சிக்குமான புரட்சிகர சித்தாந்தம், அதற்கான அமைப்புகள், அப்படியான புரட்சிகர அமைப்புகளின் நடைமுறை, அவைகளின் முரணற்ற, செயல்பாடுகளில் இருந்து, மக்கள் தான் யார் புரட்சியாளர்கள் என்பதைத் தீர்மானிப்பவர்கள். பல்கலை கழகங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. புரட்சியாளர்கள் என்ற பட்டத்தை எம்.ஏ பட்டத்தைப் போன்று மக்களிடம் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.

மக்களில் ஒருவரான கீற்று ஆசிரியர், இவர்கள் புரட்சியாளர்களா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை உள்ளவர். அவரை மிரட்டுவதன் மூலம் அந்தத் தகுதியை அவர் அவர்களுக்கு வழங்கி விட மாட்டார். அதற்கு மாறாக அவர்கள் தாங்கள் யார் என்பதை, அவரும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பையே தமது மிரட்டல்கள் மூலம் வழங்கியிருக்கிறார்கள். தமது மிரட்டல்கள் மூலம் அவர்கள் தமது முகத்திரையை தாங்களே கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக கீற்று ஆசிரியர், அவர்களுக்கு நன்றி சொல்கிறாரோ இல்லையோ நாங்கள் எமது ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல மனித சமூகத்திற்கே தமது உழைப்பின் மூலம் உணவிலிருந்து, உயிர் வரை அனைத்தையும் அளிப்பவர்கள் உழைக்கும் மக்கள்தான். எனவே ஒரு கம்யூனிஸ்டுக்கு மக்கள் மன்றத்தின் தீர்ப்பே அனைத்திலும் மகத்தானதும் இறுதியானதுமாகும். மக்களின் நலனே தனது நலன் அவர்களின் நேர்மையும் தன்மானமுமே தன்னுடையது என்று கருதுவதே ஒரு கம்யூனிஸ்டின் பண்பாக, வாழ்வியலாக இருக்க முடியும். மக்கள் தங்களைப் புரட்சியாளர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஏற்பதுதான், ஒரு கம்யூனிஸ்டுக்கான உயிரினும் மேலான உயரிய பட்டமாகும்.

மாபெரும் புரட்சியாளர்களாக தம்மை பீற்றிக் கொள்ளும் மக்கள் அதிகாரம் குழுமத்தினரோ, அந்தப் பட்டத்தை நிலவுகிற சொத்துடைமை சமூகத்தின் பாதுகாவலனான நீதிமன்றத்தின் மூலம் வாங்கப் போவதாக ஊடகவியலாளர்களை மிரட்டுகிறார்கள். அவதூறு வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கும் பணம் அவர்களின் புரட்சிகர நேர்மைக்கு சமமானதாக, ஈடு செய்யக்கூடியதாகக் கருதும் அவர்களின் பார்வையே, இவர்கள் கம்யூனிச விரோதிகள், மக்கள் விரோதிகள் என்பதற்கான சிறந்த உதாரணமாகவும், அவர்கள் சொத்துடைமை வர்க்கத்தின் அடியாட்கள் என்பதையும் கூட வெளிப்படுத்தி விட்டது.

இவர்களின் முறைகேட்டை அம்பலப்படுத்துகிறவர்கள் மீது, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக கூறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை தங்களைத் தாங்களே அவர்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மல்லாந்து படுத்துக் கொண்டு மார்பில் துப்பிக் கொள்வது அவர்களுக்கு அவ்வளவு சுகமாய் இருக்கிறது போலும்! என்னதான் குப்புற விழுந்தாலும் தங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.

தமது தவறுகளை ஒப்புக் கொண்டு விட்டால், போட்டி நிறைந்த இந்த சமூகத்தில் அது தமது வாழ்வாதாரத்திற்கான அடிப்படையாக விளங்கும் ஒன்றை இல்லாமல் செய்து விடுவதைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தின் மூலம், தான் நேர்மையானவன் என்று சான்று பெறுவது என்பது உடைமை வர்க்கத்தின் பண்பாகும். அவர்களின் அந்த உடைமை வர்க்கப் பண்புதான் மக்கள் அதிகாரக் குழுமத்தினரையும் நீதிமன்றக் கதவுகளைத் தட்டத் தூண்டுகிறது.

மிகத் திறமையாக உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டுகிறவன் எவனோ அவனே மிகச் சிறந்த முதலாளி என்ற பட்டத்தைப் பெறுகிறான். மிக நேர்த்தியாக யார் மக்களை ஒடுக்குகிறார்களோ அவர்களே மிகச் சிறந்த ஆட்சியாளர்களாக இவ்வுலகில் வலம் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் காலை நக்கிப் பிழைக்கும் மக்கள் அதிகார குழுமத்தினரிடம் உடைமை வர்க்கத்தின் வாடை அடிப்பதில் அதிசயிப்பதற்கு ஏதுமில்லை.

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு