தமிழகத்தில் தேர்தல் அரசியலில் பங்கு பெறும் கட்சிகள் தவிர்த்து, தி.க, திவிக உள்ளிட்ட பெரியார் அமைப்புகளும் தாங்கள் தான் மாற்று அரசியல் என்று மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, ம.ஜ.இ.க, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட மேலும் பல இடதுசாரி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் பெரியாரிய அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், மே 17 பிஜேபியை எதிர்ப்பதாகவும் நல்ல வேட்பாளர்கள் சிலரை மட்டும் ஆதரிப்பதாகவும் அறிவித்திருந்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பு தாங்கள் வழக்கம் போல தேர்தல் புறக்கணிப்பு, கட்டமைப்பு நெருக்கடி, மாற்று கட்டமைப்பு என்று தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது.

Election bycott posterஅதேபோல திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தங்களை முன்னெடுத்திருக்கிற கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. பொதுவாக அவர்களுடைய குற்றச்சாட்டு என்பது 50 ஆண்டு கால திராவிட ஆட்சி தமிழகத்தைச் சீரழித்து விட்டது என்பதும், பிற மொழி பேசக்கூடிய ஆட்சியாளர்களால் தமிழகத்திற்குத் தீங்கு என்பதுவுமாகும். திராவிடத்தால் வீழ்ந்தோம், பெரியார் வந்தேறி உள்ளிட்ட அவர்களுடைய அரசியல் புரட்டுப் பேச்சுக்கள் எல்லாம் ஓரளவுக்கு அரசியல் கவனிப்பவர் அறிந்ததே.

அதேபோல புதிதாக இத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையம் களமிறங்கி இருக்கிறது.

அடுத்ததாக தினகரனின் அமமுக அணி.

திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக வேறு ஒரு புதிய நபரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற மனநிலையில் இருந்த பெரும்பான்மை வாக்காளர்களின், குறிப்பாக இளைஞர்களின் தேர்வாக நாம் தமிழர் கட்சி முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இளைஞர்கள் ஆதரவை கணிசமாக அமைப்பு ரீதியாகவும், தேர்தல் வாக்குகளாகவும் பெற்று அக்கட்சி பலம் பெற்றிருக்கிறது.

அடுத்ததாக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு எதிராக கட்சியில் உள்ள ஆதரவாளர்களின் வாக்குகளையும், தென் மாவட்டங்களில் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள் வாக்குகளையும் நம்பிக்கையையும் ஆதரவையும் அமமுக பெற்றிருக்கிறது

இது இரண்டையும் தவிர்த்து ஓரளவு வாக்குகளை கமலின் மக்கள் நீதி மையம் பெற்றிருக்கிறது.

புதிதாக தேர்தலில் பங்கு பெறும் கட்சி என்ற வகையில் தினகரன் அணி பெற்றிருக்கும் ஆதரவும் வாக்குகளும் நமக்குப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக எந்தவொரு அரசியல் போராட்டத்திலும் தன்னை முன்னிறுத்தாத கமலின் கட்சி மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றிருப்பதும், திராவிட சித்தாந்தங்களுக்கு எதிராக, பெரியாருக்கு எதிராக, சாதி ஆதிக்கக் கருத்தை தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக பிற்போக்கான தமிழ்த் தேசிய கருத்துக்களை, தான் பேசிய பேச்சுக்களையே மாற்றி மாற்றிப் பேசி வருகின்ற தமிழ் ஆர்எஸ்எஸ் கும்பலான நாம் தமிழர் கட்சி பெரும்பான்மையான இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதும் வாக்குகளை பெற்று இருப்பதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஏற்பட்டபின் நாடெங்கும் நடைபெற்ற இந்துத்துவா நிகழ்ச்சி நிரல்கள், தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், மக்கள் போராட்டங்கள் இவை எல்லாம் ஒரு புதிய நெருக்கடியான நிலையை உருவாக்கி இருக்கின்றன. மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக நீட், ஹைட்டோகார்பன், ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை ஆகியவற்றுக்கெதிராகப் போராடக் கூடிய மக்களை மிகத் தீவிரமாக அரசு ஒடுக்கியும் வருகிறது. முன்எப்போதையும் விட கைதும், வழக்கும், மக்கள் கொடூரமாக தாக்கப்படுவதும் அதிகரித்திருக்கிறது. இப்போது எதிர்க்கப்படும் இந்தத் திட்டங்கள் எல்லாம் மாநிலக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டு கட்சிகளும் மக்கள் விரோதத் திட்டங்களை அமுல்படுத்தி இருக்கின்றன. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காரணத்தினாலே தி.மு.க அதை எதிர்க்கிறது; நாளை ஆட்சிக்கு வந்தாலும் தி.மு.க வும் இதே தான் செய்யும் எனவும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே இந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதிதாக வரும் எதேனும் ஒரு நபர் நல்லது செய்வார் என நம்புகின்றனர்; எதிர்பாக்கின்றனர். அப்படி புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவும் கொடுக்கின்றனர். அப்படி ஒரு நம்பிக்கையைப் பெறும் நிலையில் தேர்தலில் பங்கு பெறாத அமைப்புகள் இல்லை.

தேர்தலில் பங்குபெறாத புரட்சிகர அமைப்புகள் இந்த நிலைமையைஜ் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. பெரியாரிய, இடது சாரி, புரட்சிகர அமைப்புத் தோழர்கள் அன்றாடம் அரசியலில் மக்களுடன் அரசுக்கு எதிராகப் பேசுகிறார்கள்; போராடுகிறார்கள்; சிறை செல்கிறார்கள்; தியாகம் செய்கிறார்கள். ஆனால் தங்களுடைய உழைப்பின் பயனைப் பெறவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடும் விஷயம்.

மாறாக இவர்களுடைய பிரச்சாரங்கள், போராட்டங்கள், உழைப்பு எல்லாம் எங்கே அறுவடை செய்யப்படுகிறது? நிச்சயமாக அது இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நபரான முற்போக்கு முகமுடி தரித்த சீமானின் நாம் தமிழர் கட்சி தான் அறுவடை செய்கிறது.

எப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சட்டப்படி இல்லாத ஊழலை, இருப்பதாகக் காட்டி நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் திமுகவிற்கு ஊழல் முகமூடி அணிவித்து ஆட்சியைக் கைப்பற்றினார்களோ, அதேபோல கடந்த கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் அவலங்களை மிகைப்படுத்தி அதிகமாக பொய்யையும் பரப்புவதன் மூலம் ஒரு புதிய மாற்றத்தையும் ஒரு தேர்தல் கட்சியும் இங்கே உருவாகி இருப்பதுடன், அக்கட்சி முக்கியமான இடத்தையும் பெற்றிருக்கிறது.

 2009 ஈழப் படுகொலைக்குப் பிறகு கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம், இங்கே போராடியவர்களின் மீதான ஒடுக்குமுறையையும் திமுகவை இனத் துரோகியாகவும் திராவிடத்தால் வீழ்ந்தோம் எனவும் பரப்பப்பட்டு, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலையும் ஏதாவது ஒரு புதிய கட்சியைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற சிந்தனையும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

2014 இல் நடந்த தேர்தலில் கூட மிகக் குறைவான ஆதரவு பெற்று வந்த நாம் தமிழர் கட்சி அதற்குப் பின்பு ஏற்பட்ட மக்களுடைய போராட்டங்களான நீட், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டுப் போராட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரச்சனைகளில் கலந்து கொண்டதன் மூலமும் அந்தப் பிரச்சனைகளில் பங்களிப்பை ஏற்படுத்தாத கட்சி என்ற அடிப்படையிலும் திராவிட கட்சிகளுக்கு எதிராக மாற்று அரசியலாக நாம் தமிழர் தம்மை முன்னிறுத்துகின்றனர். அதாவது இத்தனை ஆண்டுகாலம் புரட்சிகர அரசியல் பேசுபவர்கள் பேசிய தற்சார்புப் பொருளாதாரம், தனியார்மய, தாராளமய, உலகமய எதிர்ப்பு, விகிதாச்சார தேர்தல் முறை, கம்யூனிசம், சோசலிசம் உள்ளிட்ட கலவைகளைக் கலந்து பேசும் சீமான் ஒரு புதிய மீட்பராக இளைஞர்களாலும் மக்களாலும் இனங்காணப்படுகிறார்.

முற்போக்கு இயக்கங்கள் தவறவிட்ட இந்திய அரசின் காவேரி முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர்க் கொள்ளையில் தமிழர் விரோதப் போக்கு, 2009 ஈழப்படுகொலை அதன் பின் எழுந்த தமிழர் உரிமை உள்ளிட்ட உணர்வுகளை அரசியலாக்கி தேர்தல் கட்சி மூலம் நாம் தமிழர் கட்சி அறுவடை செய்து வருகிறது

தமிழக மக்களுடைய வாழ்வாதாரப் போராட்டங்களான நீட் தேர்வு, ரயில்வே உள்ளிட்ட அரசுப் பணிகளில் பிற மாநில நபர்களை சேர்ப்பது போன்ற எண்ணற்ற தமிழர் விரோதப் பிரச்சினைகளை மேற்படி திராவிட இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசி வந்தாலும், இந்தப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு, என்ன மாற்று என்று அவர்களால் மக்களுக்குப் புரியும் வண்ணமும் ஏற்றாற்போலவும் முன்வைக்க முடியவில்லை. அதற்கு இத்தேர்தலில் அவர்கள் எடுத்த நிலைபாடுகளே சாட்சி.

திமுக பல தவறுகளைச் செய்திருந்தாலும் மேற்கண்ட மக்கள் விரோதத் திட்டங்களை தங்கள் ஆட்சியில் இவர்கள் நடைமுறைப்படுத்தி இருந்தார்கள் என்றபோதிலும் இனி வரக்கூடிய ஆட்சிகளில் இவற்றையெல்லாம் சரி செய்வதாக தேர்தல் அறிக்கையில் சில வாக்குறுதிகளைக் கொடுத்ததால் பாரதிய ஜனதாவுக்கு அதிமுகவுக்கு மாற்றாக திராவிட இயக்கங்கள் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருந்தனர்.

 ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இத்திட்டங்களை அவர்கள்தான் நடைமுறைப்படுத்தினார்கள். இனி ஆட்சிக்கு வந்தால் அதையெல்லாம் சரிசெய்வார்கள் என நம்பச் சொல்கிறார்கள். இதனால் இதுவரை இவர்கள் மக்களோடு இருந்து போராடி வந்திருந்தாலும் தேர்தலில் இவர்களின் தி.மு.க ஆதரவு நிலைபாடு இவர்கள் மீதான மதிப்பை குறைக்கத்தான் செய்கிறது.

ஒவ்வொரு மக்கள் விரோதத் திட்டமும் அந்தந்த ஆட்சிக் காலத்தில் பதவியில் இருக்கும் தேர்தல் கட்சியின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்படுவதோடு, தேர்தலில் பங்கு பெறும் கட்சிகளின் mla, mp மற்றும் அவர்களின் பினாமிகளின் உதவியோடும் அரசு அதிகாரிகளின் துணையோடும் தான் பொதுச் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுகின்றது; தரகு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது; இதை நேரடியாக பார்க்கும் மக்கள், இளைஞர்கள் அரசாங்கப் பதவிகளுக்கு நேர்மையானவர்கள், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் மாற்றம் நிகழும் என நம்புது இயல்பே. அந்த நம்பிக்கை தான் புதிய தேர்தல் கட்சிகள் மீது நம்பிக்கை கொள்ளவும், சோசலிச தற்சார்பு பொருளாதாரம் பேசி வருகின்றசீமான் உள்ளிட்ட இனவாதிகளைத் தீவிரமாக ஆதரிக்கவும் தூண்டுகிறது. 

அடுத்ததாக புரட்சிகர அரசியல் பேசும் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள். இதில் புரட்சிகர இளைஞர் முன்னணி திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்து இருந்தது. மக்கள் அதிகாரமும் வழக்கம்போல தேர்தல் புறக்கணிப்பு, தேர்தல் பாதைக்கு மாற்றாக மாற்று கட்டமைப்பு என்று அறிக்கை விட்டு இருந்தது. ஆனால் தேர்தல் பாதையை தவிர்த்து இவர்கள் கூறும் மாற்று அதிகாரம் என்பதெல்லாம் வெறும் கற்பனைவாதமாகவே இருந்து வருகிறது. இவர்கள் கூறுவது போலவே அரசு, அரசாங்கம் என்று இரண்டு இருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் அரசாங்கத்திற்கான பதவிகளைப் பெறுவதுதான் தேர்தல் வழிமுறை.

மாற்று அரசியல், மாற்று கட்டமைப்பு என்று பேசுபவர்கள் அதற்கு மாற்றாக கட்டமைப்போ அமைப்புவடிவமோ இல்லாமல் இருக்கிறார்கள். தேர்தல் பாதை குறைந்த அதிகாரம் தான். இருந்தபோதிலும் இது தேர்தல் கட்சியாக திராவிட இயக்கங்களைத் தவிர்த்து தேர்த்தலில் பங்கு பெறும் புதிய அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மக்களின் ஆதரவையும் அவர்களைத் திரளாக அமைப்பாக்குவதற்க்கும் பெரிதும் பயனளிக்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தி.க மற்றும் அமைப்புகள், இடதுசாரி இயங்கங்கள் தங்களுக்கான தேர்தல் கட்சிகளைத் தோற்றுவித்து மக்களின் ஆதரவையும் அவர்களை அமைப்பாக்கும் வேலையையும் தவற விட்டதோடு, இத்தனை ஆண்டுகாலம் ஊழலில் அராஜகத்தில் ஊறிய கட்சிகளில் எதையேனும் ஒன்றை ஆதரிக்கும் நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது. அவர்கள் ஆதரிக்கும் தி.மு.க வின் கடந்த காலத் தவறுகளுக்கும் சேர்த்து அந்த அமைப்புகள் முட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளிவிட்டிருக்கிறது. பாசிசம் வந்துவிடும் என்ற பூச்சாண்டியெல்லாம் எடுபட்டதாகத் தெரியவில்லை. மக்கள் அதிகாரம் பேசும் மாற்றுக் கட்டமைப்பு என்பதெல்லாம் அந்த இயக்கத்தை ஆதரிப்பர்களுக்கே கூட புரிந்துகொள்ளக் கூடியதாக, அதன் சாத்தியப்பாட்டை ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லாதவை.

இந்நிலையில்தான் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என, தனித்து தேர்தலில் பங்குபெறும் சீமான் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் திராவிடக் கட்சிகள் செய்த தவறையெல்லாம் சரி செய்வதாகவும் தமிழகத்தை சொர்க்கமாக மாற்றுவதாகவும் தமிழ்த் தேசியம், சோசலிச ஜனநாயக குடியரசு என்று வாய்க்கு வருவதையெல்லாம் அடித்து விடுவதோடு மரபு வழி விவசாயம், ஆடுமாடு மேய்க்குறது அரசு வேலை, நீர்வழி மேலாண்மை உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் பேசாத தத்துவங்களையும், அரசியலையும் பேசி மக்களின் பெரும் மதிப்பை பெற்றும் இருக்கிறார். அது ஒரு வலதுசாரி தமிழ்த் தேசியமாக இருந்த போதிலும் மக்களும் இளைஞர்களும் சீமானைப் பெருவாரியாக ஆதரிக்கவே செய்கின்றனர். நாம் தமிழர் கட்சி அவர்களை மிகப்பெரிய அளவில் அமைப்பாக்கவும் செய்திருக்கிறது. சீமானுடைய பாசிசக் கொள்கைகளுக்கு பாதுகாப்பு அரணாகவும், கட்சியை மக்கள் மயப்படுத்துகின்ற பெரும் திரளான மக்கள் ஆதரவைப் பெறுகின்ற நோக்கத்திற்கு சாதகமாகவும் தேர்தல் பாதை பெரிதும் உதவியிருக்கிறது.

ஆனால் மேல் சொன்ன இயக்கங்களும் புரட்சிகர அமைப்புகளும் எப்போதும் ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கும்போது, அது பெரும்பான்மை பலமுள்ள அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியைக் கைப்பற்ற காத்திருக்கும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான பிரச்சாரமாவே முடிகிறது. 

ஏற்கனவே ஊழலில் உழன்று மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு புரட்சிகர அமைப்புகள் இலவசப் பிரச்சாரங்களையே செய்திருக்கிறது. ஆளும் கட்சிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது மக்களின் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் செயல் தான். அதற்கு மாறாக இவர்கள் முன்வைக்கும் புரட்சி தான் தீர்வு என்பதோ, யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் புரியாததாகவும், தற்போது சாத்தியமில்லாததாகவும் இருக்கிறது.

 மக்களிடம்அம்பலப்பட்டு நிற்கும் தி.மு.க, காங்கிரஸ், பிஜேபி, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அரசியல் கட்சியை எதிர்பார்த்திருக்கும் மக்கள், தாமாகவே நாம் தமிழர், மக்கள் நீதி மையம் போன்ற மக்கள் விரோத சக்திகளிடம் தஞ்சம் அடைகின்றனர்.

 நாம் தமிழர், மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளின் போலி தமிழ்த் தேசியத்தையும், பிஜேபி ஆதரவையும் கேள்வி எழுப்புவதும், பொய்யை அம்பலப்படுத்துவதும் இனவெறி பாசிசக் கருத்துகளை எதிர்ப்பதும் இத்தனை ஆண்டுகளாக மக்கள் விரோதமாக செயல்பட்ட திராவிடக் கட்சிகள் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் ஆட்சியையே மீண்டும் தொடர விரும்பி செய்யப்படும் பிரச்சாரமாகப் பார்க்கப்படுகிறது.

 மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் ஆண்டாண்டு காலமாக செய்த பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தல்களையும் இந்த புதிய அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறுவடைக்காக நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

அதாவது இதுவரை ஆட்சியை மாறி மாறி கைப்பற்றிய ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தும் போது மக்களிற்கு இவர்களுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியோ, மக்கள் நீதி மையமோ மாற்றாகத் தெரிகிறது. 

தேர்தல் பாதையில் திராவிடக் கட்சிகளின் தாராளவாத கொள்கையை அமுல்படுத்தியதன் விளைவால் அரசியல் மீது நம்பிக்கையின்மையும் வெறுப்பும் ஏற்பட்ட மக்கள் கூட்டம் புதிய நம்பிக்கையான தனியார்மய, தாராயமய, உலகமய எதிர்ப்பு பேசிவரும் சீமானை மீட்பராக கருதுவது இயல்பு.

சீமான் மட்டுமல்ல நாளை ரஜினி வந்தாலும் மக்கள் இப்படியே தங்கள் பிரச்சனைகளை தேர்தல் அரசியலால் தீர்க்க முடியும் என்றும், ரஜினி தீர்ப்பார் என அவரைஆதரிப்பதும் அவர் கட்சியின் பின்னே திரளுவதுமான சூழலும் ஏற்படும். சீமானுக்குப் பொருந்தும் அதே விசயங்கள் ரஜினி, விஜய் என்று அடுத்ததடுத்த நபர்களின் மீது புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தும்.

இத்தனை ஆண்டு காலமாக இவர்களுடைய உழைப்பு, தேர்தல் பாதை பயனளிக்காது என்பதெல்லாம் மக்களிடம் எந்த ஒரு புரட்சிகர மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. ஆளும்அரசாங்க அதிகாரத்தில் உள்ளவர்களையே எதிர்ப்பவர்களாகவும், நல்ல நேர்மையானஅமைப்பு என்ற ரீதியிலும் போராடக் கூடியவர்கள் என்ற ரீதியில் தான் மிககுறைந்த பட்ச மக்களின் மதிப்பை பெற்றிருக்கிறார்களே தவிர, மிகப்பெரியஅமைப்பு பலம் பெற்று எங்கேனும் ஒரு பகுதியில் தங்கள் தேர்தல் புறக்கணிப்பைக்கூட செய்ய முடியாத நிலையில் தான் உள்ளனர். உடனடியாகக் கிடைக்கக் கூடிய அதிகாரத்தில் அமர்ந்து அதனைப் பயன்படுத்த முடியாத இவர்கள் கூறும் புரட்சி, மாற்றுக் கட்டமைப்பு என்பது எல்லாம் ஆளும் கட்சி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பதோடு சுருங்கிப் போகிறது.

 பகுதிக்கு 100 பேர் கூட இல்லாத அமைப்பை வைத்துக் கொண்டு மாற்றுக் கட்டமைப்பு, அரசு அரசாங்கத்தைக் கைப்பற்றனும் என்று பேசிவரும் இவர்கள் செயலானது எட்டாத தூரத்தில் தயாராக இல்லாத மக்களை மலையைத் தோளில் தூக்கி வைக்கச் சொல்லும் செந்தில் காமெடிக்கு இணையாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் பழைய கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் போது புதிய புதிய நபர்களை ஆளும் வர்க்கம் முன்நிறுத்துகிறது. சுயேச்சையாக முன்வரும் நபர்களும் ஆளும் வர்க்கத்தின் கருத்துகளையே பேசிவருகின்றனர். மக்களை புதிய புதிய அமைப்புகள் கட்சிகளின் பின்னே அமைப்பாக்குகின்றனர்.

மக்களால் காரிய சாத்தியமான வழி எனப் பெரிதும் நம்பப்படும், யதார்த்தத்தில் இவர்கள் கூறும் சிறிதளவேணும் அதிகாரம் இருக்கும் தேர்தல் அரசியலில் மாற்றை முன்வைக்காமல் சீமானை அப்புறப்படுத்த நினைக்கும் எந்த முயற்சியும் தோல்வியையே தழுவும்.

 மக்களின் மனநிலையை கருத்திற்கொள்ளாமல், தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்ற பழைய கோசத்தையே இன்னும் நம்பிக் கொண்டிருப்பது நாம் தமிழர் போன்ற இனவெறுப்பு பாசிசக் கட்சிகளை நோக்கி மக்களை பயணிக்கச் செய்யும். புரட்சிகர அமைப்புகள் கூறும் மாற்றுக் கட்டமைப்பு அல்லது மக்கள் அதிகாரத்தை நிறுவுவது என்பது தற்போதுள்ள நிலைமைகளில் எந்த சாத்தியமும் இல்லாததாக இருப்பதோடு களநிலைமையும் அவ்வாறு புரட்சிகரமானமானதாக இல்லை; மக்களுடைய போராட்டங்கள் புரட்சிகரமான நிலையை எட்டவில்லை.

புரட்சிகர அமைப்புகளின் வழிமுறை முதலாளித்துவ ஜனநாயகம் வரையறுத்த, அனுமதிக்கின்ற வழிமுறைகளாக மட்டும் இருக்கிறபோது மக்களுடைய போராட்டம் முதலாளித்துவ ஜனநாயக வரையறைக்குள் இருக்கும்போது தீர்வை மட்டும் தொடர்பற்ற ஒரு அமைப்பு வடிவில் கூறி வருகிறார்கள்.

மிகத் தீவிரமாகப் போராடி வரும் மக்கள் பகுதியினர் கூட இந்த அமைப்புகளின் பிரச்சாரத்தை, போராட்டத்தை, பங்களிப்பை தங்களுடைய போராட்ட வெற்றிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர இவர்கள் கூறும் தேர்தல் புறக்கணிப்பு, மாற்றுக் கட்டமைப்பு, மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்ற நிலைப்பாட்டிற்கு வந்தபாடில்லை. ஆனாலும் தங்கள் நிலைப்பாடு குறித்து எந்த ஒரு மாற்றுத் திட்டத்திற்கும் முற்போக்கு அமைப்புகள் வருவதும் இல்லை

இத்தனை ஆண்டுகாலம் செய்த, இனி செய்யப் போகும் எண்ணற்ற பிரச்சாரங்கள், போராட்டங்கள், சிறை, வழக்கு உள்ளிட்டவை இந்த திராவிட, முற்போக்கு, இடதுசாரி அரசியல் அமைப்புகளின் வேலைத் திட்டங்கள், தியாகங்கள் எல்லாம் தங்கள்ஆதரவையும் உழைப்பையும் தோழர்களையும் துளியும் மதிக்காத தி.மு.க உள்ளிட்டதேர்தல் கட்சிகளிடம் சரணடையச் செய்கிறது. இவர்களின் கொள்ளைக்கு முற்றாக எதிராக உள்ள கட்சிகளை மக்களை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளி விடுவதோடு, யாருக்காக போராடினார்களோ அம்மக்களே, மேற்படி புரட்சிகர அமைப்புகள்ஆதரிக்கும் கட்சியை விருப்பாததோடு இவர்களையும் அக்கட்சிகளுடைய கூட்டாளிகளாகக் கருதி, இவர்களுடைய உழைப்பு, தத்துவங்கள் அனைத்தையும் ஒதுக்குகின்றனர். இவ்வமைப்புகள் விருப்பாத நபர்களே தேர்தல் பாதையின் மூலம் மீண்டும் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தும் தீர்வார்கள். இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு ஆளும் வர்க்கம் முன்னிறுத்தும் நபர்களோடு மோதிக் கொண்டு "புரட்சி" பேசுவார்கள்.

- திருச்செல்வம்

Pin It