தமிழ் என்றாலே நம்மில் பலருக்கு ஓவ்வாமை. அது போன்றவர்களை கண்டால் எனக்கு ஒவ்வாமை. உண்மையில் அவர்களின் உள் மனதில் உள்ளதைக் கூறவேண்டுமானால் அது ஒவ்வாமை அல்ல, அது அத்தனையும் வெளிவேடம். யாருக்கும் அறிவுரை கூறும் நோக்கமோ ஆவலோ நமக்கில்லை. இது போன்ற உடன்பிறப்புக்களால் நம் அன்னைத்தமிழுக்கு வந்து சேரும் இழுக்கைத்தான் நம்மால் அனுமதிக்க முடியவில்லை. தமிழைப் புகழுங்கள் என்று கூறவில்லை. குறைந்தது அன்னைத்தமிழை அவமதிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழென்றாலே உணர்ச்சி வசப்படக்கூடியவன் நான். அதனாலேயே என் உள்ளக்கிடக்கிற்கு வடிகால் தேட முயற்சித்ததன் விளைவாக விளைந்ததே கீழ் காணும் வரிகள் சில என் கவிதை தொகுப்பிலிருந்து,

  உண்மையில், துயிலும் எரிமலையாய்
  உள்நின்று கனறும் நின்(தமிழ்) மேல்
  உள்ளப்பற்று எந்நாளும் எமக்கு.

    மேலும்

  வரங்கொடு இறைவா என் தமிழ்
  மீதுள்ள ஆர்வம் குறையாமலிருக்கஸ்ரீ

என நீள்கின்றன.

தமிழர்களுக்குத்தான் எத்தனை தாழ்வு மனப்பான்மைகள். தமிழில் பேசினால் கவுரவக் குறைச்சல், தமிழில் பெயரிட்டால் சங்கடம். மொத்தத்தில் தமிழ் என்றாலே ஏதோ தீண்டத்தகாத ஒரு பண்டமாகவே கருதுவது சகிக்கவில்லை.

தமிழ்ப்பற்றாளன் என்றாலே ஒரு தீவிரவாதியை போன்று கருதுபவர்களின் மனநிலை மாற வேண்டும். தமிழ் என்று சற்று அழுத்தமாக உச்சரித்தாலே அருவெறுப்பு அடையும் நிலை மாற வேண்டும். நாம் விரும்புவது, நேசிப்பது அனைத்தும் தமிழைத்தான், ஆனால் மற்ற மொழியையோ மொழியினரையோ அவமதிப்பது நமது நோக்கமன்று.

தமிழனுக்கு பெயர் சூட்டுவதில் கூட உரிமையோ சுதந்திரமோ இருக்கக் கூடாதா? அப்படியே ஆசையிருந்தாலும் ஏனோ தமிழர்களே ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். இன்றைய நிலையில் தமிழ் பிள்ளைகளுக்கு 75 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே மற்ற மொழிப் பெயர்கள் சூட்டி பெருமைப்படுகிறார்கள். அவைகளே அதிகம் பெருகியுள்ளன. நான் முன்பு கூறிய உரிமை, சுதந்திரம் இவர்கட்கு கூடாதோ? என்று சிலர் கேட்கலாம். அதுவல்ல என் கூற்று. தமிழில் பெயர் சூட்ட ஆவலோடு இருப்பவர்கள் அல்லது தமிழில் பெயர் சூட்டியவர்கள் போன்றவர்களை, ஊக்கப்படுத்தக்கூட சொல்லவில்லை. ஏன், வேறு பெயர் தோன்றவில்லையா என்று கேட்காமலிருந்தாலே போதுமானது. அவர்கட்கு உள்ள கொஞ்சநஞ்ச தமிழ்பற்றையும் தங்களின் சொல் மூலம் காயப்படுத்தாமல் இருப்பதே, இவர்கள் செய்யும் மிகப்பெரிய தமிழ் தொண்டாகும். தமிழ் என்றால் இளக்காரம், தமிழன் என்றால் இளைத்தவன் என்றாகிப் போனதன் விளைவுதான் இம்மாதிரியான போக்குகள்.

இன்று தமிழகத்தில் உள்ள தமிழரிடத்தில் கூட தமிழ் மீதான தாழ்வு மனப்பான்மை மிகுந்துள்ளது என்றால், ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழில் புலமை பெற வேண்டும் என்று கூறவில்லை, சாதாரண வாக்கியங்களில் கூட சற்றே உற்று கவனித்தால் வடமொழிச் சொற்களின் ஆதிக்கத்தை காணலாம்.

எடுத்துக்காட்டாக இனி இங்கிருந்து தொடங்கும் என் சொற்றொடர்களில் முடிந்த மட்டும் தமிழ் சொற்களையே பயன்படுத்துகிறேன் பாருங்கள். மேலே உள்ள பத்திகளில் அடங்கிய சில சொற்களுக்கு உண்மையான தமிழ்ச் சொல் கீழ்க்கண்டவாறு தருகிறேன்.

மனம் - உள்ளம்
வேடம் - கோலம்
சுதந்திரம் - விடுதலை
அதிகம் - மிகுதி
ஆசை - ஆவல், அவா
அனாதை - ஆதரவற்றோர்
ஆச்சரியம் - வியப்பு
சாதாரணம் - எளிய
வாக்கியம் - சொற்றொடர்
விஷயம் -  விடயம் 
    
இதன் வாயிலாக, நாம் அன்றாடம் வழங்கும் பேச்சிலே எவ்வளவு கலப்படம் என்று எளிதாக அறியலாம். கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு. நமக்குத் தெரிந்தே இவ்வளவு உள்ளதென்றால் தெரியாதது எவ்வளவோ? ஆகையால்தான் முடிந்த மட்டும் மற்ற மொழிச் சொற்களை பயன்படுத்தாமல் இருக்க முயல்கின்றேன்.

இது போன்ற கலப்படத்தினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் ஏராளம். தாய்மொழி வழிக் கல்வி பெற உலகில் அனைவரும் பாடுபட வேண்டும். ஆங்கில வழிக் கல்விதான் சிறந்தது எனும் மாயத்தோற்றம் மறைய வேண்டும். தாய்மொழியின் வாயிலாக கற்பவனின் அறிவாற்றல் மற்றும் புரிந்துணர்வு மேம்படும்.

எடுத்துக்காட்டாக, புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைதான் என்னை நிலை குலைய வைத்தது. இங்கு குசராத் மாநிலத்தில் படித்து பட்டம் பெற்ற பெருவாரியான தமிழர்களுக்கு ஒரு மொழியும் உருப்படியாகத் தெரிவதில்லை. தமிழ், இந்தி, குசராத்தி, ஆங்கிலம் என பலமொழிப்பாடங்களை படிக்கும் மாணவர்கள் ஒரு மொழியிலும் தேறுவதில்லை. தமிழ் தெரியாது என்பதைப் பெருமையாக கூறும் இவர்கள் மற்ற மொழியில் எவ்வளவு புலமை பெற்றுள்ளார்கள் என்பதனை எண்ணிப்பார்ப்பதில்லை.

அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய சூழ்நிலையில் முடியாதது என்று ஒன்றும் இல்லை. எண்ணமும் முயற்சியும்தான் அவசியம். ஆகையால் மைய அரசும் மாநில அரசும் அவரவர் தாய்மொழி வழிக்கல்விக்கு விரைவில் ஆவன செய்தால் குப்பனும் சுப்பனும் கூட விஞ்ஞானி ஆகலாம்.

மேலும் தமிழில் புதிய அறிவியல் சொற்கள் இல்லையென ஒரு வாதம். மேலை நாட்டுச் சொற்களை அப்படியே பயன்படுத்தினால்தான் மொழி வளம்பெறும் என்றும் ஒரு கருத்து.

தமிழ்ச்சொற்கள் மிக ஏராளம். ஆனால் வழக்கில்தான் இல்லை. பழம்பெரு இலக்கியங்களில் நல்ல பல சொற்கள் உள்ளன. அவற்றை அறிந்து அப்படியே பயன்படுத்தினால் தவறென்ன? முயற்சியாவது செய்யலாம் அல்லவா?

தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, இணையம் என பல புதிய சொற்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. இவ்வாறு புதியன படைத்தலும் பழைய சொற்களை புதுப்பித்தலும் எவ்வகையில் குற்றமாகும். மொழி வளர இவையன்றோ சான்றுகள்.

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It