ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலிகொள்ளப்பட்டு, மூன்று லட்சம் பேர் இன்னமும் வாழ்விடத்திற்கு அனுப்பப்படாமல், சொந்த நாட்டிலேயே முள்வேலிச் சிறையில் அகதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், அவர்களின் ரணங்களை மீறி உலகத் தமிழ் மாநாடு நடத்த தமிழாராய்ச்சிக் கழகம் அனுமதி அளிக்காத இத்தருணத்தில், சினிமா செட்டிங் போட்டு படப்பிடிப்பு நடத்துவது போல், அவசரஅவசரமாக, கோவையைத் தூசிதட்டி வெள்ளையடித்து, 10 கோடியில் போடப்பட்ட தோட்டாதரணியின் செட்டிங்குடன், உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்பதுபோல், உலகத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாக செம்மொழி மாநாடு ஏறத்தாழ 400 கோடி செலவில் அரங்கேறியிருக்கிறது. மாநாட்டு அழைப்புகளில் கூட சூன் 23 முதல் 27 வரை என்றுதான் அறிவித்தார்களேயொழிய, ஆனி 9 முதல் 13 முடிய என்று தமிழ் மாதங்களின் பெயர்கள் கூடஇடம் பெறாமல் பார்த்துக் கொண்டார்கள்.

semmozhi_meeting

வளர்ப்பு மகன் திருமணத்திற்கு சற்றும் குறைவில்லாமல், மடித்துக்கட்டிய வேட்டியுடன் அமைச்சர்கள் வேலைபார்க்க, அதிகாரிகள் எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு கோவையில் டேரா போட, அந்த ஐந்து நாள் அபத்தம் ஆடம்பரமாய், அமர்க்களமாய் அரங்கேறியது. தமிழுக்கு யாராலும் சேர்க்க முடியாத பெருமையைச் சேர்த்ததாக தமக்குத் தாமே மகுடம் சூட்டிக்கொண்டார் கலைஞர்.   

இந்திரனே, சந்திரனே, செம்மொழி வேந்தே, வாழும் வள்ளுவரே, முத்தமிழ் வித்தகரே, ஐந்தமிழ் அறிஞரே, பத்துத்தமிழ் பாவலரே என்று சால்ரா கோசத்தில் காது சவ்வு கிழிந்து தொங்கிவிட்டது. விருது கொடுத்து, விருந்து கொடுத்து தமிழ் அறிஞர்களைக் குளிர்வித்தனர். அவர்களும் பதிலுக்கு தமிழைச் செம்மொழி ஆக்கியதே கலைஞர்தான் என்று புகழ்ந்து பாடிவிட்டுப் போயினர்.

ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே ‘வந்தே மாதரம்’ என்று மூச்சடைக்க தேசிய முழக்கம் செய்தது போல் இப்போதும் ‘தமிழ்ச் செம்மொழி’ என்று உச்சக்குரலில் ஒலித்து ஓய்ந்தார். தமிழ் மூதாட்டி கனிமொழியின் ஒருங்கிணைப்பால் நிகழ்வுகள் சிறப்புற நடந்தேறின.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க, மழை வாழ் மக்கள் மீது வான்வழித்தாக்குதல் நடத்த வேண்டும் என்று அறிவுரை நல்கிய சீதாராம் யெச்சூரி போன்ற அறிவுஜீவித் தமிழ் அறிஞர்களைக் கூட்டி வந்து ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்று கருத்தரங்கு நடத்தினார்கள். எஸ்.வி. சேகர், சந்திரசேகர், லியோனி, ஆ.ராசா, செகத்ரட்சகன் போன்ற தமிழ் பேரறிஞர்கள் பேருரை ஆற்றி, செம்மொழித் தமிழுக்கு தங்கள் பங்களிப்பைச் செவ்வனே செய்தார்கள்.

பாரி மகளிர் அங்கவை, சங்கவையின் வரலாறு நன்றாய்த் தெரிந்தும் அவர்களை, கேவலம் ஒரு சினிமா வாய்ப்புக்காய் கூட்டிக்கொடுத்த தமிழாசான்கள், ‘தமிழ் தழைத்தது சினிமாவாலா, டிவியாலா’ என்று பட்டிமன்றம் நடத்திச் சென்றார்கள். தமிழால் பிழைப்பு நடத்தும் வாலி, வைரமுத்து போன்ற கவிப் பேரரசர்கள் வழக்கம் போல், பொற்கிழிக்காக மன்னனைப் பாடுவது போல் கவிதை பாடிவிட்டு மறுபுறம் “ஓமகசியா, நாக்கு மூக்கு நாக்கு, டோலாக்கு டோல் டப்பி” போன்ற கருத்துச் செறிவு மிக்க பாடல்களுடன் இலக்கியச் சேவை செய்யக் கிளம்பி விட்டார்கள்.

அறிஞர்கள் (!?) ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் குமரிக் கண்டத்தில் தமிழன் கும்மியடித்தான், பஃறுளி ஆற்றில் தமிழன் படகு ஓட்டினான் என்று ஜல்லியடித்துவிட்டு ஆய்வரங்கத்தில் பங்கு பெற்ற கௌரவத்துடன் தம் வேலைகளுக்குத் திரும்பிவிட்டார்கள். கருணாநிதியின் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும், திருமதி கனிமொழியைப் பற்றிய “கனிமொழியான செம்மொழியே” என்று ஆய்வரங்கங்களும், திருமதி கயல்விழி அழகிரியின் கவியரங்கமும், கலைஞர் பேத்தியின் வீணைக் கச்சேரியும் செவ்வனே நடந்து முடிந்தன.

சிறப்பு “மானாட மயிலாட” தவிர மற்ற எல்லாவிதமான கலைக் கூத்துகளும் (!?) அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. நிகழ்வைப் படம்பிடித்து கலைஞர் டிவியும் சன் டிவியும் லைவ் டெலிகாஸ்ட், அசார்ட்டர்டு லைவ் என்று ஒளிபரப்பி பெருமைப்பட்டனர். முழுநீளத் திரைப்படம் பார்த்த நினைப்பில் ‘டாஸ்மாக் தமிழர்கள்’ ஆடிக்களைத்து ஓய்ந்து போனார்கள். அவர்கள் சிரமப்படக்கூடாது என்று, அரசு ஊழியர் எல்லோருக்கும் 5 நாட்கள் தற்செயல் விடுப்பு அளித்த கலைஞர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மட்டும் அவசர விடுப்பு கூட வழங்கவில்லை.

இலவச டிவி வாங்கியவர்களும், ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு விசுவாசமாய் வாக்களித்த பொதுமக்களும், நேரிலும் தொலைக்காட்சியிலும் மாநாட்டைப் பார்த்து ‘தமில் வால்க’ என்று முழங்கினார்கள். இவர்கள் ‘இனியவை நாற்பது’ என்ற ஊர்வலம் நடத்தும் பொழுது நமக்கென்னவோ கூடவே ‘இன்னா நாற்பதும்’ நினைவுக்கு வந்து தொலைக்கின்றது.

ஈழத்தின் சிவத்தம்பியைக் கூட்டி வந்து, “ஈழத்திற்கு தாம் செய்த துரோகத்தை தமிழர்கள் மறந்து விட்டார்கள், மன்னித்து விட்டார்கள். எல்லாத் தமிழர்களும் தன் பின்னால்தான் இன்னமும் இருக்கிறார்கள்” என்று மாநாடு போட்டு நிரூபித்துவிட்டதாக கலைஞர் மகிழ்ச்சியாய் உறங்கப் போயிருப்பார். (ஆனால் என்னதான் கலைஞரைப் புகழ்ந்தாலும் சிவத்தம்பி, மனசாட்சி உறுத்தியதோ என்னவோ, தன் உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தி, தான் தமிழனாய் இங்கு வரவில்லை என்று உணர்த்தி விட்டுப் போனது தனிக்கதை.?) ஆனால் தமிழின் உண்மை நிலை என்ன?

காலங்காலமாய் மொழிக்கும், வெகுமக்களுக்கும் உள்ள தொடர்பைக் குறைத்து, அவர்களைப் புறந்தள்ளி, சமுதாயத்தின் ஒரு பகுதி மக்களை, மொழியை கற்கவே விடாமல் தடுத்து, அதை தமக்கு மட்டுமேயான பிழைப்புவாதமாக வைத்துக் கொண்ட பண்டிதர்கள் கூட்டம் ஒன்று கூடி நடத்தும் எந்த மாநாடும், எத்தனை ஆராய்ச்சிகளும் மொழியை வளர்ப்பதற்கு ஒரு அங்குலம் கூட உதவாது. இன்னும் சொல்லப்போனால் மொழியைக் கற்காத பாமரக் கூட்டமும், கல்வியறிவு பெறுவதிலிருந்து தள்ளி வைக்கப்பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான் தமிழை இன்றளவும் உயிருடன் காப்பாற்றி வருகின்றனர்.

உண்மையில் மொழியை உயர்த்திய ஆராய்ச்சிக்குச் சொந்தமானவர்கள், முதன் முதல் தமிழ் அகராதியைத் தொகுத்த வீரமாமுனிவர், எல்லீசன் துரை, கார்டுவெல் போன்ற அயல் நாட்டு அறிஞர்களும், பாவாணர், மறைமலையடிகளார், பரிதிமாற்கலைஞர், உ.வே.சா, மு.வ, பெருஞ்சித்திரனார் போன்ற சென்ற தலைமுறை தமிழர்கள்களும் தான். பெயர் வெளியே தெரியாமல் பெருந் தொண்டாற்றிய பலர் உண்டு. ஆனால் படோபட வெளிச்சம் மின்ன தமிழை தாங்கள்தான் காப்பாற்றியதாக தம்பட்டம் அடிப்பவர்களால் தமிழ் ஒருபோதும் வளர்ந்ததில்லை என்பது நிரூபணம்.மற்றபடி தமிழை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ‘பாவலா’ வுடன் கோடிகளில் சம்பாதிக்கும் குமுதம், கல்கி, விகடன், சோ,  குங்குமம் வகையறாக்கள் பாழ்படுத்துவதிலிருந்து தமிழைக் காப்பாற்றினாலே போதும். தமிழ் நீண்ட காலம் உயிர் வாழும்.

‘மொழி’ என்பது பேசுவதற்கான ஒரு ஊடகம் மட்டுமே. அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை’ என்று திருவாய் மலர்ந்த ஈ.வி.கே.எஸ் போன்ற பெரும் அறிவாளிகளை பெறும்பேறு படைத்தது இந்த தமிழினம். உண்மையில் நம் மீதான பண்பாட்டுத் தாக்குதலின், இன அழிப்பின் முதற்படிதான், மொழி மீதான தாக்குதல் என்பதை நாம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. மொழிவழி தனித்துவம் இல்லாத ஒரு கலப்பினமாக தமிழர்களை மாற்றி நம் தேசிய இன உணர்வுகளை, உரிமைகளை மோசமான வகையில் நசுக்கி வெறும் வயிற்றுக்காய் பிழைக்கும் கூட்டமாக நம்மை மாற்ற டில்லி அரசும், வல்லாதிக்கங்களும் பன்னாட்டு நிறுவனங்களும், முயலும் ஒரு சதித்திட்டத்தை நாம் இன்னமும் புரிந்து கொண்டோமில்லை. அதனால்தான் வாழ்வின் அடிப்படையாம் கல்வியில் தாய்மொழிவழி, தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணித்து, ஆங்கிலம் படித்தால் அறிவு வளரும், இந்தி படித்தால் வேலைகிடைக்கும் என்ற கல்வி வியாபாரிகளின் மாய்மாலத் தந்திரங்களில் மயங்கி ஆங்கிலவழி மெட்ரிக் பள்ளிகளில் 25,000/- 50,000/- என்று பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் டாடிக்களும், மம்மிக்களும். தாய்மொழிக் கல்வி மூலம்தான் சுயசுந்தனை வளரும். அறிவு வளரும் என்பதை யார் ஒப்புக் கொண்டாலும் நம் தமிழர்கள் மட்டும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிட்டனிலும், அமரிக்காவிலும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதையம், இந்தியை தாய்மொழியாய்க் கொண்ட பல பேர் பிழைக்க வழியின்றி வேறு மாநிலங்களுக்கு ஓடி வந்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது.

தனக்கு இரண்டாவதாய் ஒரு மொழி தெரியும் என்ற கர்வத்தில் தமிழில் பேசினால் தரமில்லை, கௌரவமில்லை என்ற போலி மயக்கத்தில் உடைசல் ஆங்கிலத்தில் உளரிக் கொண்டிருக்கிறார்கள். பிறமொழியைக் கற்பது வேறு, பிற மொழியிலேயே எல்லாப் பாடங்களையும் கற்பது வேறு என்பதை என்றைக்கு புரிந்து கொள்ளப் போகிறார்கள் இந்த ஆங்கிலப் புத்திரர்கள். தங்கள் பெயரின் முன்னெழுத்துக்களைக் கூட (initials) ஆங்கிலத்தில்தான் போடும் இந்த டாடிகளிடமும், மம்மிகளிடமும் மாட்டிக் கொண்ட குழந்தைகளின் கதி.?    

இன்னொருபுறம் தமிழ்வழிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த எதுவுமே செய்யாமல், அங்கு காலியாயுள்ள ஆசிரியப் பணியிடங்களைக் கூட நிரப்பாமல் மென்மேலும் அவற்றை அழிப்பதிலேயே கவனமாயுள்ளது தமிழ்நாடு அரசும், கல்வித்துறையும். அரசுப்பள்ளியின் ஆசிரியர்களைப் பற்றி குறை கூறி எழுதுவதற்கு நாம் விரும்பவில்லை. எந்த அரசு ஊழியர்கள் ஒழுங்காக, உண்மையாக வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் தமக்கு இருக்கும் குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டு மாநில அளவில் அதிக மதிப்பெண்களை அரசுப் பள்ளிகள்தான் பெற்று வருகின்றன என்பதும், தமிழ் வழிக்கல்வி பயில்வோர்களில் பெரும்பான்மை, வறிய, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற குழந்தைகளே என்பதும் அதற்கு உறுதுணையாயிருப்பது அந்த ஆசிரியர்களின் உழைப்புதான் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளாக, கல்லூரி மற்றும் அரசுப்பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர் பணியிடங்கள் இன்னமும் காலியாகவே உள்ளது. மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழாசிரியர்களை நியமிக்க தடையாணை இன்னமும் நடைமுறையில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழால் உயர்ந்தவர்கள் தமிழை உயர்த்த மாட்டார்கள். தமிழால் அரியணை ஏறியோர் தமிழை அரியணை ஏற்ற மாட்டார்கள் என்பது பலமுறை நிரூபணமாகியிருக்கிறது. தமிழே படிக்காமல் அடிப்படைக் கல்வியிலிருந்து, உயர்நிலைக்கல்வி வரை தமிழ்நாட்டில் முடித்துவிடலாம். ஆனால் ஆங்கிலம் படிக்காமல் அது நடக்காது. 1968ல் தி.மு.க. அரசு கொண்டு வந்த இருமொழிக் கொள்கை அப்படித்தான் சொல்கிறது.

தமிழர்கள் ஆங்கிலத்தை கட்டாயம் பயில வேண்டும். இரண்டாவது மொழியாக தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, குஜராத், சமஸ்கிருதம், அரபி, பெர்சியன், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் ஆகிய மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். தமிழர்களின் தலையெழுத்தைப் பார்த்தீர்களா. இதன் விளைவாகத்தான் தமிழர்கள் ‘தமிங்கிலர்கள்’ ஆனார்கள்.

தமிழ் ஆர்வலர்களின் தொந்தரவு பொறுக்க முடியாமல், மிகத் தாமதமாக 1999ல் இதில் ஒரு திருத்தத்தை திமுக அரசு அறிவித்தது. ஆனால் அதில் கூட தமிழ் கட்டாயப் பாடமில்லை. தமிழ் அல்லது தாய்மொழியை தேர்வு செய்ய வேண்டும் என்று அரசாணையை வெளியிட்டது. இதைக்கூட சட்டமாக வெளியிடாமல் தெரிந்தே அரசாணையாக வெளியிட்டதால் நமது மெட்ரிக் கல்வி வியாபாரிகள் எதிர்த்து நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார்கள். வழக்கு இதுவரை நிலுவையில் உள்ளது.

தமிழில் படித்தால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற ஒரே சட்டம் போதும், தமிழ்வழிக் கல்விக்கு உயிர் கொடுக்க. அதைச் செய்யத்தான் இங்கு ஆளில்லை. ஆனால் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற பரிந்துரை நாடகம் மட்டுமே இங்கு அரங்கேறியுள்ளது. தமிழ் படிக்க வாய்ப்பே கொடுக்காத நீங்கள் இப்போது இரண்டு தலைமுறை கழித்து, புதிதாக தமிழ் மீது அக்கறைப் படுவது விசித்திரம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) யின் தேர்வுகளை தமிழ் தெரியாமலேயே ஒருவர் எழுதி வேலையும் பெற்று விடலாம். அரசுப் பணியில் சேரும் தமிழ் தெரியாதவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வாணையம் நடத்தும் அடிப்படைத்தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று கண்துடைப்பு விதிமுறை ஒன்று, தமிழர் அல்லாதோரைக் காப்பாற்ற நடைமுறையில் உள்ளது.

ஆங்கிலம் படித்தால் பார்ப்பன‌ர்களுக்கு இணையான வேலை வாய்ப்பு, பொருளாதார உயர்வை, சூத்திரர்கள் என்று ஒதுக்கப்பட்ட அனைவரும் பெறலாம் என்ற காரணத்திற்காக பெரியாரால் பரிந்துரை செய்யப்பட்ட மொழிக்கொள்கையும், நேரு இணைப்பு மொழியாக இந்தியைக் கொண்டு வந்த போது அதற்கு மாற்றாக முன் மொழியப்பட்ட ஆங்கிலமும் இனத் துரோகிகள் கையில் சிக்கி இன்று ‘கத்தியை விட அதிகக் காயம் செய்த கேடயமாய்’ மாறி விட்டது.

தஞ்சையில் தமிழுக்கென தனிப்பல்கலைக்கழகம் ஒன்று இருக்கிறது. அங்கு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சாதனைகள் என்ன தெரியுமா? 1960களில் சென்னைப் பல்கலைக்கழகத்தால் முனைவர் ஏ. சிதம்பரநாத செட்டியார் குழுவால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதிக்குப் பின் இன்று வரை அரசுத் துறையிலிருந்து எந்த அகராதியும் வெளிவரவில்லை. வந்தவை எல்லாம் தனியாரும், தனியார் நிறுவனமும் முயற்சி எடுத்து வெளியிட்டவையே.

1960களில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்திற்குப் பின் தமிழில் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களின் களஞ்சியம் வெளியிடப்படவேயில்லை. அறிவியல் தமிழ், புவியியல் தமிழ் என்று பல புதுத் தமிழ்களைப் பேசினாலும் ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட உறுதியான முழுமையான, விளக்கமான தமிழ் சொல்லகராதி வெளியிடப்படவில்லை. அப்படியான சொல்லாக்கத்திற்கான முயற்சிகளும் சமீபத்தில் நடைபெறவில்லை.   

புதிய தமிழ் சொற்களை ஆக்குவதற்கோ, அறிமுகப் படுத்தவோ, புதிய ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களை தமிழாக்கம் செய்யவோ, வக்கற்ற இந்தக் கூட்டம் தான் இப்போது ‘ஆ”வை ‘அh’ என்று எழுதலாமா, ‘ஈ’யை ‘இh’ என்று எழுதலாமா என்றெல்லாம் புதிய ஆராய்ச்சியுடன் புறப்பட்டிருக்கிறார்கள்.

கணினித்துறையில் தமிழர்கள் செய்துள்ள சாதனை மகத்தானது. தங்களால் இயன்ற அளவு ஒவ்வொருவரும் தமிழ் மென்பொருள்கள் உருவாக்கத்திலும், தமிழை கணிணிப் படுத்துவதிலும் சிறப்பான பங்காற்றியிருக்கிறார்கள். ஆனால் இவர்களை ஒருங்கிணைத்து தமிழுக்கென்று ஒரு பொதுவான மென்பொருள், விசைப்பலகை ஆகியவற்றை அங்கீகரித்து ( universal sofware, keyboard) அறிமுகப்படுத்த வேண்டிய அரசு நெடிய தூக்கத்திலிருக்கிறது. ஏற்கனவே தயாநிதி மாறன் காலத்தில் வெளியிடப்பட தமிழ் மென்பொருள் பல கணிணிகளில் வேலை செய்யவேயில்லை. அதற்குப்பின் அது தொடர்பாக வேறு முயற்சிகள் ஏதும் அரசால் எடுக்கப்படவில்லை. (பில்கேட்ஸ் கூட தம் எம்.எஸ் நிறுவன மென்பொருளை தமிழில் கொண்டு வந்துவிட்டார்.) 1986ல் முதன்முதலாக தமிழில் எழுத்துருவை (font) உருவாக்கிய ஈழத்து பூராடனார் இன்னும் கனடாவில் வாழ்கிறார். செம்மொழி மாநாடு நடத்தியவர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்.

கணினிக்காக குறில், நெடில் குறியீடுகளைத் திருத்த வேண்டும் என்று குழந்தைத் தனமாக பேசும் அறிஞர்கள் அதே இணையத்தில் சீனமொழியும், சப்பானியமொழியும் 3000க்கும் மேற்பட்ட யுனிகோட் இட ஒதுக்கீடுகளுடன் வலம் வருவதை அறிவார்களா? யுனிகோட் இட ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துக்களை இப்போது இருக்கும் வடிவத்திலேயே கொண்டு வருவதற்கு 314 இடங்கள் ஒதுக்கீடு தேவை. ஆனால் அந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கு கோட்டை விட்டுவிட்டு வெறும் 128 இடங்கள் மட்டுமே பெற்று, இன்று செருப்புக்காக காலை வெட்டுவது போல், தமிழைச் செதுக்க ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது. இணையத்தைப் பொறுத்தவரை மற்ற மொழிகள் எல்லாம் 16bit வடிவத்திற்கு மாறிவிட, தமிழ் மட்டும் இன்னும 8bit வடிவத்திலேயே இருக்கிறது. (செம்மொழி மாநாட்டின் உருப்படியான ஒரே சாதனையாக font இனி 16bit வடிவத்தில் இருக்கவேண்டும் என்ற அரசின் அறிவிப்பை வேண்டுமானால் சொல்லலாம்.)

நவீனத் தமிழைத்தான் இந்த லட்சணத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால் பண்டிதர்கள் போற்றும் சங்கத் தமிழையாவது சாதாரண மக்களிடம் கொண்டு சோர்த்தார்களா என்றால் அதுவும் இல்லை.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலான நூல்களை, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் சந்தி பிரித்து, உரையுடன் மலிவு விலை மக்கள் பதிப்பாக வெளியீட்டு மொழியை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சி எதுவும் இதுவரை நடக்கவேயில்லை. (தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய கலைஞர் கூட அதை ரூ.300/-க்கு தான் விற்பனை செய்தார்.)  ஆனால் இன்னும் செம்மொழி என அறிவிக்கப் படாத கன்னடத்தில், உலகக் கன்னட மொழி மாநாட்டையொட்டி, கன்னட செவ்வியல் இலக்கியங்கள் மக்கள் பதிப்புகளாக மலிவு விலையில் வெளியிடப்பட்டன.

இதுவே இப்படியென்றால் வட்டார வழக்குகளைப் பற்றியோ, சொற்களைப் பற்றியோ அரசு கண்டுகொள்ளக் கூட இல்லை. வெகுமக்கள் நெருங்காத ஒரு மொழி எப்படி வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதை அந்தப் பண்டிதர்கள் தான் விளக்க வேண்டும்.

சரி! தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாகவாவது ‘தமிழ்’ உள்ளதா என்றால் அதுவும் முழுமையாக இல்லை. மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர்மாற்றக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாநிலை இருந்து உயிர்நீத்தது இங்கு வரலாறு. உள்ளாட்சி, கிராமப்புற அரசுத் தொடர்புகள் வேண்டுமானால் தமிழில் உள்ளதேயொழிய நகர், மாநகராட்சியின் பல கடிதங்கள், வேலைப்புள்ளிகள் இன்னமும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஆனால் அரசு ஊழியர் ஊதியம் வாங்கக் கையொப்பமிடும்போது மட்டும் அனைவரும் தமிழில் இடுகிறார்கள். அதுவும் 1978ல் கட்டாய அரசாணை வந்த பின்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

1956ல் தமிழகச் சட்டமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் என்று ஒன்று நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்திலேயே சில சமயங்களில் தேவைக்கேற்ப ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்ற விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைவிட வேடிக்கை இச்சட்டத்தை குறித்து அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள் கூட ஆங்கிலத்தில்தான் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் கூட தமிழ் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்கும் போது 6 கோடித் தமிழர்கள் உள்ள இந்தியாவில் தமிழ் வெறும் அட்டவணை மொழிகள் 18ல் ஒன்றாக மட்டுமே உள்ளது.

போகட்டும். பாரதிதாசன் தேடியதுபோல் தமிழ்நாட்டின் தெருக்களிலாவது தமிழ் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் உண்மையில் நம் கடைவீதிகள், லண்டன் மாநகர வீதிகள் போன்று பெயர்ப்பலகைகளும், விளம்பரப் பலகைகளும் ஆங்கிலத்தில்தான் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் பெயார்கள் கூட ஆங்கிலத்தில்தான் வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் வணிக நிறுவனத்தின் பெயர்ப்பலகைகளை தமிழில்தான் வைக்க வேண்டும் என்று 1967லிருந்து 2004 வரை ஒன்பது அரசாணைகள் வந்தும் கூட என்டர்பிரைசஸ், லிமிடெட் என்றுதான் தமிழ் வடிவம் பெற்றதே தவிர தமிழ்ப் பெயர்களை காணவே காணோம். பிற மொழியினரின் (சேட்டுகளும், சேட்டன்களும் [நன்றி : ஈழச் சுடர் முத்துக் குமார்]) ஆதிக்கத்திலிருக்கும் வாணிபம் தமிழருக்கும் பயனளிக்கப் போவதில்லை. தமிழுக்கும் பயனளிக்கப் போவதில்லை.

தமிழ்நாட்டின் அரசாவது தம்மிடம் தணிக்கைக்காக காட்டப்படும் வணிகவரிக் கணக்குகள் தமிழில்தான் இருக்க வேண்டும் என உத்திரவிடலாம். காலங்காலமாக பற்று, வரவு எழுதிக் கொண்டிருந்தவர்கள்தானே இவர்கள். ஆனால் ஆள்பவர்களின் கவனம் அதிலெல்லாம் இல்லை. அவர்களுக்கெல்லாம் வேறு வேலை இருக்கிறது.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதையும், திரைப்பட விழாக்களுக்கு தலைமைதாங்கி அவார்களின் ஐஸ் மழையில் நனைவதையும் தமிழுக்கு ஆற்றும் சேவையாகக் கொண்ட முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளிலேயே மிக முதன்மையானது தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் 2 லட்சம் பரிசு என்பதுதான். பாவம் தமிழ்ப்பட இயக்குனர்கள். 2 லட்சம் ரூபாய்க்காகவாவது தமிழில் பெயர் வைக்க வேண்டிய கட்டாயத்தில் திணறிப் போனார்கள். மற்றபடி திரைப்படத்திற்குள் தமிழைப் பயன்படுத்துவதோ, தமிழ்ப் பண்பாட்டைக் காட்டுவதோ கட்டாயமாக்கப்படாததால் பிழைத்தார்கள். அதிலும் திரைப்படங்கள், தமிழுக்கும் நம் தமிழாசிரியார்களுக்குத் தேடித்தந்த பெருமையைப் போல் வேறு யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு நம் தமிழாசிரியார்கள் தான் சீரியசான காமெடியன்கள்.

ஆனால் தமிழை அடுத்த தலைமுறைக்கு அற்புதமாய் கொண்டு வந்து சேர்த்த பெருமைக்குரியவர்கள் தமிழ்த்தொலைக்காட்சிகள்தான். அவர்கள் வடிவமைக்கும் நிகழ்ச்சிகளிலும் அதன் பெயர்களிலும் நல்ல தமிழ் என்பதே வராமல் பார்த்துக் கொண்டார்கள். அந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் தொகுப்பாளார்கள் பேசும் தமிழோ, நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை இலவசமாகவே வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கின்றன.

       இவை போதாதென்று இவர்கள் ஒளிபரப்பும் சுழல் எடுத்துச் செய்திகளிலும் அறிவிப்புகளிலும் காணப்படும் ரகர, றகர, லகர, ளகரப் பிழைகள், ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகளைப் பார்க்கும்போது, தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எவ்வளவு பஞ்சம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

       மிகக் குறிப்பாக ஐந்துமுறை தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த கலைஞர் குடும்பத்திற்குச் சொந்தமான சன், சன் நியூஸ், சன் மியூசிக், கலைஞர் போன்ற நிறுவனங்கள் தமிழை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்களிப்பு நல்கியது இங்கு நன்றியுடன் நினைவு கூறத்தக்கது.

       திரைத்துறையினருக்கு 2 லட்சம் கொடுப்பதற்குப் பதில், தம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பெற்றோருக்காவது ஏதாவது குறைந்த பட்ச பரிசுத் தொகை கொடுத்திருக்கலாம். ஜ,ஸ,ஷ,ஹ என்ற வடமொழி உச்சரிப்பு வந்தால்தான் பெயர் ‘மாடர்னா’க இருக்கும் என்று மாய்ந்து மாய்ந்து பெயர் வைக்கும் கூட்டத்திடமிருந்து தமிழ்க் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கலாம். பெயர் வைக்கும் பிரச்னைகளுக்கு நடுவில் மதங்கள் வேறு. கிறித்தவவர்களும், இசுலாமியவர்களும் தமிழ்ப் பெயர் வைப்பதற்கு இன்னமும் முன்வருவதில்லை. மதம் என்பது வேறு. இனம் என்பது வேறு என்பதை யார் இவர்களுக்கு விளக்குவது.

       சரி! மதமாவது தமிழை வளர்த்ததா என்றால் அதெல்லாம் long long ago என்கிறார்கள் நம் பிரதோச பக்தர்கள். இப்போதெல்லாம் குடமுழுக்கை ‘கும்பாபிஷேகம்’ என்றும், அண்ணாமலையை ‘அருணாசலம்’ என்றும் தான் தமிழர்கள் சொல்கிறார்கள். தமிழ்க் கோயில்களில் “தமிழிலும் அர்ச்சனை (கவனியுங்கள் வழிபாடு அல்ல) செய்யப்படும்” என்றுதான் அறிவிப்பு வைத்திருக்கிறார்கள்.

       சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழ் பாடப்போய் உதை வாங்கிய கதை ஆறுமுக சாமியிடம் கேட்டால் விளக்கமாகச் சொல்லுவார். கோயில் கருவறைகள் அன்றிலிருந்து இன்றுவரை தமிழுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் திறக்கப்படவே யில்லை. நீசபாசை இன்றுவரை தேவபாசையாக ஆக முடியவேயில்லை.

       கடவுளே கதவை மூடியபின் கலைஞர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பாடகர்கள் இசையில் தெலுங்கில் மட்டுமே கீர்த்தனைகளை பாடினார்கள். கடவுள் சமஸ்கிருதத்தில் மட்டுமே வேண்டுதல்களை புரிந்து கொள்வார். தெலுங்கில் மட்டுமே இசையை ரசிப்பார் என்று, கடவுளின் நெருங்கிய உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் தமிழை, தமிழிசையைப் புறந்தள்ளினார்கள். தமிழ்நாடு மேடைகளில் தமிழ்பாடுவது ஒரு புரட்சி என்று சொல்லுமளவிற்கு தமிழிசையின் தலையெழுத்து ஆகிப்போனது.

அரண்மனைகளும் அரங்குகளும் தொடக்கத்திலிருந்து தமிழைப் புறக்கணித்தே வந்தன. இசைத் தமிழை உயிருடன் காப்பாற்றி வைத்திருப்பது நாட்டுப்புறக் கலைகளும், சோற்றுக்கில்லாவிட்டால்கூட அவற்றைச் சொத்தாக மதிக்கும் நாட்டுப்புறத்தான்களும் தான்.

       தமிழுக்கு தமிழ்நாட்டிலேயே இடமில்லையா! நீதி கேட்டு எங்கு போவது? நீதிமன்றத்துக்கா?. அவர்கள் நிலைமையோ மிகப் பரிதாபம். தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் (மாவட்ட நீதிமன்றங்களானாலும், உயர்நீதிமன்றங்களானாலும்) தமிழில் வாதிட உரிமை வேண்டும் என்று காலங்காலமாய் கேட்டு.. கேட்டு... கடைசியில் சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள் வழக்கறிஞர்கள். இறுதியில் போராடியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுதான் மீதம். செம்மொழி கொண்டாட்டத்திலிருந்த அரசு கடைசிவரையும் இந்த தமிழ் வழக்கறிஞர்களைக் கண்டு கொள்ளவேயில்லை. குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்தது போல் போராடியவர்களைக் கண்டு கொள்ளாதது மட்டுமின்றி அவார்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.

மெட்ராஸ் ஹைகோர்ட் என்பதை தமிழில் பெயர்ப்பலகை மாற்றக் கூட இங்கு ஒரு பெரும் போராட்டம் தேவைப்படுகிறது என்பதுதான் யதார்த்த நிலைமை. வழக்கம் போல் எல்லாம் தெரிந்த நம் அறிவாளிகள் ‘தமிழ் தெரியாத நீதிபதிக்கு எப்படி தமிழில் வாதிடுவது புரியும்’ என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள். “தமிழ்நாட்டு உயர்நீதிமன்றங்களில், தமிழ் தெரிந்த நீதிபதியை நியமிப்பதுதானே. ஒரே ஒரு தமிழ் தெரியாதவருக்காக மற்ற அனைவரும் ஏன் வேற்று மொழி ஆங்கிலம் தெரிந்து கொள்ள வேண்டும்?” என்ற நமது நியாயமான கோரிக்கைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

       விழாவில் முதல்வர் தம்மருகே அமர்ந்திருந்த, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடம் லேசாகத் திரும்பி “நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்ற 2006ம் ஆண்டு சட்டமன்ற தீர்மானம் உங்கள் கையெழுத்துக்காக நிற்கிறது. உடனே கையெழுத்திட்டு தமிழை அங்கீகரியுங்கள்” என்று கேட்டிருக்கலாம். ஆனால் அவரோ அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சரியாகச் செய்தார்.

       தமிழைத்தான் வெளியே கொண்டுபோய் சேர்க்கவில்லை, பரவாயில்லை. வேறு மொழி இலக்கியங்களையாவது தமிழில் கொண்டு வந்தார்களா என்றால் அதுவும் இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக நோபல் பரிசு பெற்ற எந்தப் பிறமொழி இலக்கியமும் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்து வந்த தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் 1960க்குப் பிறகு அப்பணிகளைச் செய்யவேயில்லை. தமிழ் இலக்கியங்களை ஆளுக்கொரு விதமாய் மொழிபெயர்த்து ஆளுக்குத் தகுந்தவாறு வெளியிட்டுக் கொள்வதுதான் இங்கு நடைமுறையாக இருக்கிறது.

       மக்களுக்கு தம் மொழியின், பண்பாட்டின் அருமை தெரியாதவாறு பார்த்துக் கொள்வதில் காங்கிரசு அரசு ஆனாலும் சரி, திராவிட அரசுகள் ஆனாலும் சரி, ஆரம்பம் முதல் கடைசி வரை மிகக் கவனமாகவே இருந்து வந்துள்ளன.

       உலகிலேயே மிக அதிகமான கல்வெட்டு ஆதாரங்களும் தொன்மங்களும் (கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேல்) கிடைக்கப்பெற்ற ஒரே இனம் தமிழினம்தான். ஆனால் அந்த தமிழினத்தின் வரலாறு இதுவரை தெளிவான முறையில் உரிய ஆய்வாளார்களைக் கொண்டு அதிகாரபூர்வமாக எழுதப்படவேயில்லை.

குமரிக் கண்டத்தையும் பூம்புகாரையும் ஆராய்ச்சி செய்ய ஆரவாரமான அறிவிப்புகள் நாள் தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உலோக படிமங்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆராய்ச்சி செய்த ஜெர்மானிய அறிஞர்கள் கூறியும் அந்த அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடத்தப்படவோ, ஆராய்ச்சியின் முடிவுகள் இன்றுவரை அறிவிக்கப்படவோ இல்லை. தன் வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வமில்லாத ஒரு இனம், தன் பண்பாட்டையோ தன் மொழியையோ காப்பாற்ற எவ்வாறு இயலும். ஆனால் பழம்பெருமை பேசுவதில் தமிழனுக்கு நிகர் தமிழன்தான். ஆட்சியாளர் நம்மை வளர்த்தது அப்படி. இறந்த காலப் பெருமைகளைச் சொல்லி மயக்கியே நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பதைத் தடுத்தனர்.

கல்லணை கட்டிய கரிகால்வளவனின் புகழ் பாடும் சத்தத்தில், காவிரியில் தண்ணீர் மறுக்கப்படுவதை மறைத்தார்கள். இராஜராஜசோழனின் புகழ் பாடும் பெருமையில், அதே தஞ்சை பெரிய கோயிலின் தக்காராக ஒரு வடநாட்டு போன்ஸ்லே இருப்பதை மறைத்தார்கள். கண்ணகியின் புகழ் பாடும் கூச்சலில், அந்த கண்ணகி கோயிலில் தமிழரின் உரிமை மறுக்கப்படுவதை மறைத்தார்கள். கனக விசயரின் தலையில் கல்கொணர்ந்த செங்குட்டுவன் கதை சொல்லியே, அம்பானிகளையும், மிட்டல்களையும், டாட்டா பிர்லாக்களையும் வரவழைத்து நம்மை விழுங்க வைத்தனர். உட்காந்திருந்த திருவள்ளுவர் சிலையை எழுந்து நிற்க வைத்த இவர்கள், தமிழை மட்டும் படுக்க வைத்ததுதான் உண்மை.

       போனதெல்லாம் போகட்டும். கலைஞர்தான் தமிழைச் செம்மொழி ஆக்கிவிட்டாரே. இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்று பதிலுரைக்கும் அப்பாவிகளுக்கு:

முதலாவதாக தமிழ் ஒன்றும் புதிதாக செம்மொழி ஆகிவிடவில்லை. உலகளவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே யுனெஸ்கோ போன்ற அமைப்புகளும், பல மொழி ஆராய்ச்சி நிறுவனங்களும் தமிழை செம்மொழி என்று அங்கீகரித்து விட்டன. அதை ஒப்புக் கொள்ள இந்தியாதான் இவ்வளவு காலதாமதம் செய்தது. மேலும் செம்மொழிக்கான தகுதி 2000 ஆண்டுப் பழமையாய் இருந்ததை 1500 என வரையறை செய்து தமிழை அவமானப் படுத்தியது இந்திய அரசின் செம்மொழி அறிவிப்பு.  

இரண்டாவதாக சமஸ்கிருதத்துக்கு வழங்கப்பட்ட செம்மொழித் தகுதி போன்ற சமமான தகுதி தமிழுக்கு வழங்கப்படவில்லை. சமஸ்கிருதம் பண்பாட்டுத் துறையின் கீழும், செம்மொழித் தமிழ் கல்வித்துறையின் கீழும் கொண்டு வரப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் இன்றி மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே நடத்தப்படுகிறது. இந்தச் செம்மொழி அறிவிப்பால் சமஸ்கிருதத்தில் இலக்கியங்களை ஆய்வு செய்ய, மொழி வளர்க்கக் கிடைத்த வாய்ப்புகளோ, நிதியோ ஒரு போதும் தமிழுக்குக் கிடைக்கப் போவதில்லை.

மொத்தத்தில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவப் போவதில்லை.

செம்மொழி அறிவிப்பாலேயே எந்த பயனும் விளையப் போவதில்லை என்றிருக்க, செம்மொழி மாநாட்டால் மட்டும் தமிழுக்கு என்ன பயன் விளையப் போகிறது. முதலில் இது உலகத்தமிழ் மாநாடு அல்ல. உலகத்தமிழ் மாநாடுகளுக்கும் இந்தச் செம்மொழி மாநாட்டிற்கும் பெரிய அளவிலான வேறுபாடுகள் உள்ளன. முதன் முதலாக உலகத்தமிழ் மாநாடு தொடங்கப்பட்டதே ஒரு தனிக்கதை.

1964ல் டெல்லியில் அகில இந்திய கீழ்த்திசை மாநாடு நடைபெற்றது. அதில் மொழியியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பெரும்பாலும் சமஸ்கிருதம் சார்ந்த ஆய்வுகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் கண்டு கொள்ளப்படவில்லை. வேறுவழியின்றி தமிழுக்கென தனியாக உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு தனிநாயகம் அடிகள் போன்ற தமிழறிஞர்களின் முயற்சியில் தொடங்கப்பட்டது.

இந்த தமிழாராய்ச்சிக் கழகத்தின் சார்பில்தான் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறுகின்றன. இந்த உலகத் தமிழ் மாநாட்டில் தான் ஐராவதம் மகாதேவன் முதன்முதலாக “சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகமே. அங்கு காணப்படும் குறியீடுகள் நமது பண்பாட்டுக் குறியீடுகளே” என்னும் கருத்தை முன்வைத்தார். இப்படி ஆரம்பித்த உலகத் தமிழ் மாநாடுகளே பின்னாளில் வெறும் சிலை திறக்கும் விழாக்களாகவும், கூடிக் கலையும் கும்பமேளாக் கொண்டாட்டங்களாகவும் (நன்றி: தந்தை பெரியார்) மாறிப்போயின.

இந்த உலகத்தமிழ் மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. அது இதுவரை மக்களைச் சென்றடையவில்லை. அதைப்பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை.

       உலகத்தமிழ் மாநாடுகளின் நிலையே இப்படியிருக்க புதிதாக செம்மொழி மாநாடு என்று புதிதாகக் கூட்டுவதில் என்ன பயன் விளையும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

       நாற்பது விழுக்காடுக்கும் அதிகமான மொழிக்கலப்பு நடந்திருக்கும் ஒரே மொழி என்ற பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு. தமிழ் படிக்காத, தமிழ் எழுதத் தெரியாத, இன்னும் சொல்லப்போனால் தமிழ் பேசவே தெரியாத ஒரு புதிய தலைமுறைத் தமிழர்கள் உருவாகி வருகின்றனர். உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பிடித்துள்ளது. ஆம்! பயன்பாட்டில் இல்லாத மொழிகளும், பண்பாடும் அழிந்தே தீரும் என்பது உலகின் விதி. கிரேக்கமும், லத்தீனும் நம் கண்முன்னே உள்ள கடந்த கால உதாரணங்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரை,

எது நடந்ததோ அது நன்றாக நடந்ததில்லை

எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கவில்லை

எது நடக்குமோ அதுவும் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கையில்லை.

ஆம்.

ஒற்றுமையின்மையால் தமிழரை இழந்தோம்

ஒற்றுமையின்மையால் தமிழ் நிலத்தை இழந்தோம்

ஒற்றுமையின்மையால் தமிழையும் இழக்கிறோம்.

       நம்மைப் பொறுத்தவரை, 1995ல் தஞ்சை உலகத்தமிழ் மாநாட்டுக்கு ஈழத்திலிருந்து வந்த இதே சிவத்தம்பியையும் பிற தமிழறிஞர்களையும் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பிய ஜெயலலிதாவுக்கும், கெஞ்சிக் கதறி சிவத்தம்பியை அழைத்து வந்தாலும் கூட உலகெங்கும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெரிய அங்கீகாரமும் மரியாதையும் தேடித் தந்த ஈழத்தமிழர்களின் பங்கேற்பு இல்லாமலேயே, ஒரு மாநாடு நடத்தும் கலைஞருக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

       “தமிழுக்கு நாங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டும்? ஆணையிடுங்கள்!” என்று மாநாட்டில் கலைஞர் கேட்டதுதான் மிகப்பெரிய சோகமான நகைச்சுவை.

       நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். தமிழை விட்டுவிடுங்கள். தமிழ் தானே பிழைக்கும். உங்கள் அரசியலை தமிழை விட்டு, தமிழனை விட்டு தள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிற்கு உள்ளே உள்ள ஒகனேக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நீங்கள்,

தமிழ்நாட்டின் 999 வருட முல்லைப் பெரியாறு அணை நீர் உரிமையை பாதுகாக்க முடியாத நீங்கள்,

தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கு உயிர்நீர் தரும் காவிரியை காப்பாற்ற முடியாத நீங்கள்,

இராமேசுவரத்தில் 500க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையில் சுட்டுக் கொல்லபட்ட போது அது “நம்மவர்களின் எல்லை தாண்டிய பேராசையினால் வந்த விளைவு” என்று அக்கொலைகளை நியாயப்படுத்திய நீங்கள்,

அரைகுறையாய் நிறுத்தப்பட்ட சேதுக் கால்வாய் திட்டத்தை முடிக்க வக்கற்ற நீங்கள்,

 மொத்த தமிழகமே விவசாயம், நீர் இன்றி பாலையாவதைத் தடுக்காமல் ஐந்து வகை நிலங்களுக்கு அடையாளப் பூங்காக்கள் அமைக்கும் நீங்கள்,

ஒட்டு மொத்த தமிழகமே ஆர்த்தெழுந்து, தன் உறவான ஈழத்தமிழனை காப்பாற்றப் போராடியபோது, மூன்று மணி நேர உண்ணாவிரதமிருந்து வெற்று நாடகங்கள் மட்டுமே நடத்திய நீங்கள்,

கொத்துக் கொத்தாய் ரசாயனக் குண்டுகள் போட்டு தமிழர்களைக் கொன்றபோது, சகோதர யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நீங்கள்,

தமிழர்களுக்கு எதிராய் ஒரு பெரிய இனப்படுகொலை நடந்தேறிய போது, டெல்லியில் சொக்கத் தங்கம் சோனியாவிடம் மந்திரி பதவி கேட்டுக் கொண்டிருந்த நீங்கள்,

ஒன்றரைலட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொலைசெய்யப்பட்டதை கடைசி வரையிலும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நீங்கள்,

 உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைக்கு வந்த ஒரு 80 வயது மூதாட்டிக்கு, அவர் பிரபாகரனின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் மண்ணை மிதிக்க விடாமல் அலைக்கழித்த நீங்கள்,

அமைதியாயிருந்த ஐ.நா. மன்றமே ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க தனி குழு அமைத்திருக்கும் இந்நேரத்தில் கூட, ஈழப்படுகொலைகளைப் பற்றி வாயே திறக்காது மௌனமாய் இறுகியிருக்கும் நீங்கள்,

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கொலைகாரன், ஹிட்லர் ராஜபட்சேவுக்கு சால்வை போர்த்தி, கைகுலுக்கி, அவனுடன் விருந்துண்ட நீங்கள்,

தமிழை வளர்ப்போம் என்று மாநாடு கூட்டுவது தமிழுக்கே கேவலம்.

நீங்கள் இன்னும் எத்தனை மாநாடுகள் போட்டாலும், எவ்வளவு நாடகங்கள் ஆடினாலும், வருங்கால வரலாறு துரோகிகள் யார் என்பதை தெளிவாகவே வரையறை செய்யும். காலத்தின் கணக்கை மாற்ற யாராலும் முடியாது.

தமிழனை பலிகொடுத்து விட்டு தமிழுக்கு விழா எடுப்பது, தமிழினத்திற்கே பெரும் மானக்கேடு.

இது புரியாதவர்களும் தலையை ஆட்டிக்கொண்டு, இந்த மாநாட்டால் தமிழ் உயரும் என்று பேசிக் கொண்டிருப்பது அதை விட பெரும் வெட்கக்கேடு.

- சு.தளபதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It