மீண்டும் கச்சதீவு பிரச்சினை தேர்தலில் திமுகவுக்கு எதிராக பாஜகவால் ஊதிப் பெருக்கம் படுகிறது. உண்மையிலேயே கச்சதீவை மீட்கும் எண்ணம் இருந்திருந்தால் தனது 10 ஆண்டுகால ஆட்சியில் இது குறித்து ஏதாவது செய்திருக்கலாம். மீட்பது நோக்கமல்ல.. அரசியல் ஆதாயத்துக்காகப் பயன் படுத்திக் கொள்கிறது பாஜக. திமுகவுக்கு எதிராக மூன்று பிரச்சினைகளை இது மாதிரி சந்தர்ப்பங்களில் எடுப்பார்கள். திமுக எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். காவிரி, ஈழம், கச்சதீவு என்பவையே அவை. இவற்றில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.. எனினும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடப் பயன்படுத்துவது வழக்கம்.

எவ்வாறாயினும் கச்சதீவு பிரச்சினை பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

வரலாறு

kachatheevuநாயக்க மன்னர்களால் இராமநாதபுரம் சேதுபதி அரச மரபு 1605 இல் உருவாக்கப்பட்டது. சேதுபதி அரசின் கீழ் குருசடி தீவு, இராமசாமி தீவு, மண்ணலித் தீவு, கச்சதீவு, நெடுந்தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும் 69 கடற்கரை கிராமங்களும் இருந்தன. 

ஆங்கிலேயர் ஆட்சியில் 1803 இல் ஜமீன்தாரி முறை கொண்டு வரப்பட்டது. அப்போது சேதுபதி மன்னர் உயிரோடு இல்லை. எனவே அவரது சகோதரி இராணி மங்களேசுவரி நாச்சியார் ஜமீன்தாரியாக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார்.

கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்று இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி பிரகடனம் செய்தது குறித்து, இலங்கை அமைச்சரவை செயலாளர் பி.பி.பீரிஸ் பதிவு செய்துள்ளார். இவர் 1936 முதல் 1940 வரை இப்பதவியில் இருந்தார்.

சான்றுகள்

கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என்பதற்கு பலவகையான சான்றுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

ஏ.ஜெ ஸ்டூவர்ட் 1899 இல் வெளியிடப்பட்ட "திருநெல்வேலி மாவட்ட மேனுவல்" எனும் வெளியீட்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இதன் சர்வே எண் 1250 ஆகும். இதன் பரப்பளவு 285.2 ஏக்கர். இத் தீவு இராமேஸ்வரம் கண்டத்தின் நிர்வாக எல்லைக்குள் உள்ளது. இத் தீவை இராமநாதபுரம் அரசர் பல தனி நபர்களுக்குக் குத்தகைக்கு விட்டுள்ளார்.

1915, 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் மாவட்டப் புள்ளிவிவரங்களில் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது.

ஒப்பந்தம் 

இலங்கை - இந்திய அரசுகள் இடையே 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு உரிமையானது.

இந்த ஒப்பந்தங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் பன்னாட்டுக் கடல் சட்டங்களுக்கு எதிரானவை என்பதை பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவையாவன:

1.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 368 திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

2.சட்டப்படி மாநில எல்லை மாற்றியமைக்கப்படவில்லை.

3.ஐ.நா. பன்னாட்டுக் கடல் பிரகடனம் 1958 ( UN Convention on Continental Sholf 1958) இன் படி, இருநாடுகள் தம் கடல் எல்லையை வகுக்கும் போது கடல் பரப்பை சரிசமமாகவே பிரித்துக் கொள்ள முடியும்.

ஆனால் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே உள்ள கடல் 30 கடல் மைல் நீளம் உடையது. இதனை சமமாகப் பிரித்தால் இராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமாகக் விடும். ஆனால் கச்சதீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் இந்திய கடல் எல்லை 10 கடல் மைலாக நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த "சம தொலைவுக் கோட்பாடு" (Equidistant Principle) பின்பற்றப்படாததால் கச்சத்தீவு மட்டுமின்றி 5 கடல் மைல் நீளமுடைய இந்தியாவுக்கு சொந்தமான கடல்பகுதி இலங்கைக்கு உரிமையாகிவிட்டது.

மேலும், இந்த சம தொலைவுக் கோட்பாடு பின்பற்றப்படாததற்கு தக்க சிறப்பானக் காரணம் குறிப்பிட்டப்பட வேண்டும் என்று ஐ.நா பிரகடனம் கூறுகிறது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் அத்தகைய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது ஒரு சட்ட விரோத ஒப்பந்தம் ஆகும்.

பெருபாரி வழக்கு

அன்றைக்கு கிழக்குப் பாகிஸ்தான் - இன்றைய வங்காள தேசத்துடனான இது போன்ற பெருபாரி என்ற இடம் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது

" ஒரு நாட்டின் எந்த ஒரு பகுதியையும் இன்னொரு நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும் போது, அதற்காக உடன்பாடு, சம்பந்தப்பட்ட நாடாளுமன்றங்களின் ஒப்புதல் பேறப்பட்டால் மட்டுமே அந்த உடன்பாடு செல்லுபடியாகும். சட்டப்படி செல்லா இந்த கச்சத்தீவு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும்.

திமுகவும் கச்சத்தீவும்

அப்போது ஆட்சியில் இருந்த திரு மு.கருணாநிதி அவர்கள், கச்சத்தீவு பிரச்சினையில் துரோகம் செய்து விட்டதாகப் பரவலாகப் அவரது அரசியல் எதிரிகள் நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர். இந்நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தம் உருவான போது திமுகவின்.. கருணாநிதி அவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதை நாம் சற்றுப் பார்க்கலாம்.

கச்சத்தீவு ஒப்பந்தம் 28.06.1974 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தியின் ஆட்சியின் போது கையெழுத்திடப்பட்டது. மறுநாளே 29.06.1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களால் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

கச்சத்தீவு இந்தியாவுக்கு குறிப்பாக இராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது என்பதற்கு தேவையான ஆதாரங்களைத் திரட்டுமாறு பேராசிரியர் எஸ்.கிருஷணசாமி அவர்களை தமிழக அரசு நியமித்தது. அனைத்து ஆதாரங்களுடன் அப்போதைய சட்ட அமைச்சர் திரு செ.மாதவன் அவர்களுடன் முதல்வராக இருந்த திரு மு.கருணாநிதி அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தியை சந்தித்து கச்சதீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

மேலும், 21.08.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

"இந்தியாவுக்குச் சொந்தமானதும் தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது."

மீனவர் பிரச்சினை 

இலங்கைக் கடற்படையினர் 2020 முதல் 48 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். 619 பேர் கைது செய்யப்பட்டு 604 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 83 படகுகள் கைப்பற்றப்பட்டு 16 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2023 - 2024 இல் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 59 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.67 படகுகள் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகவே உள்ளது. மத்தியில் ஆட்சி செய்த எவரும் இதனைக் கண்டு கொண்டது கிடையாது. பத்தாண்டுகள் ஆட்சி செய்த பாஜக அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை. தேர்தலுக்காக இப்போது கடந்த கால சம்பவங்களைத் திரித்துக் கூறி வருகிறது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும் என்று பாஜக சொல்லவில்லை.

இந்திய அரசு நேரு காலம் முதலே இலங்கை விவகாரத்தில் தொடர்ந்து தவறான அணுகுமுறையையே கடைப்பிடித்து வந்துள்ளது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் முதலிய ஒப்பந்தங்கள் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. இனிமேலாவது இந்திய அரசு சரியான பாதையில் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- வழக்கறிஞர் தமிழகன், திருச்சி

Pin It