america tiktokஅமெரிக்கா - சீன இவ்விரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தகம், ராஜதந்திர உறவின் பின்னடைவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக டிக் டாக்கை குறிவைத்து இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவில் பயன்படுத்திவரும் டிக்டாக் பயனாளிகளின் விவரங்களை இந்த செயலி மூலம் சீனா எடுத்துக் கொள்கிறது, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதோடு அமெரிக்காவை உளவு பார்க்கும் வேலையையும் செய்கிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார்.

அதன் தொடர்ச்சியாக சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான டிக் டாக் மற்றும் அதோடு விசார்ட்ஸ் எனும் செய்தியையும் அமெரிக்காவில் தடை செய்யப்படலாம்? (விரைவில் அதற்கான சிறப்பு உத்தரவில் அதிபர் கையொப்பம் இடலாம்) என்ற நிலைக்கு வந்திருக்கிறது அமெரிக்கா. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் இயங்கிவரும் டிக்டாக்கின் செயல்பாடுகள் மற்றும் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கு அதற்கான ஆரம்பக்கட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் அமெரிக்காவில் நுழைந்த கதையை சுருக்கமாக பார்த்துவிட்டு சென்றால் நன்றாக இருக்கும். 2014ஆம் ஆண்டில் சாங்காய் நகரில் தலைமை இடமும், சாண்டா மோனிகா கலிபோர்னியாவில் அதன் முதன்மை அலுவலகமாக செயல்பட்ட Musical.ly என்ற அமெரிக்க வீடியோ சமூக வலைத்தளம். மிகக் குறைந்த வினாடிகளில் (15 வினாடிகளில்) ஏற்கனவே பதிவேற்றப்பட்ட பாடல்களுக்கு பயனாளிகள் உதட்டை மட்டும் அசைத்து அவர்கள் காட்சி வெளியிடுவது என்று ஆரம்பித்தார்கள்.

அமெரிக்கா சீன இளைஞர்களை மையப்படுத்தி வெளிவந்தாலும், அமெரிக்க இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக மாறியது. இதில் அப்படியே 2016ல் 90 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்துக் கொண்டார்கள். முறையே 2017ல் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் என அதிகரித்தது. இதன் வளர்ச்சி இப்படியே வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2017ல் சீனாவின் ByteDance நிறுவனம் இதை ஒரு பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது, அதோடு டிக் டாக் உடன் இதனை ஒன்றாக இணைத்து விட்டது. 2017ல் இந்த ஒப்பந்தம் நிகழ்ந்த சமயத்தில் இது ஒரு சர்ச்சையாக அமெரிக்காவில் பார்க்கப்பட்டது.

2018ல் டிக் டாக் என்பது ஒரு மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் தொழிலாக கருதப்பட்டது. இதே ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, "இது ஒரு உண்மையான சமூக வலைத்தளம் ஆகும், விளம்பரங்கள், செய்திகள் என எதுவும் இதில் இல்லை" என்றது. ஆனால், 2019க்கு பிறகு டிக் டாக் செயலியில் விளம்பரங்கள் வருவதாக காணப்பட்டது. விளம்பரங்கள் தானே அவர்களுக்கு வருமானம் கூட.

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாஃப்டின் முதன்மை நிர்வாகி நாடெல்லா அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விவரங்களை தனது வலைப்பூவில் வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட், "அதிபரின் நிலைப்பாட்டை நாங்கள் புரிந்து கொள்கிறோம், அமெரிக்க பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். இந்த ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் இது வழிவகுக்கும். டிக் டாக்கின் முதன்மை நிறுவனமான (Parent company) ByteDance நிறுவனத்திடம் நாங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பித்துவிட்டோம். எனினும் செப்டம்பர் 15க்குள் இதுகுறித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் ஏற்கனவே பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறது. இதில் குறிப்பிடும் படியாக சொல்வதேயானால் லிங்க்ட்இன், எக்ஸ்பாக்ஸ், ஸ்கைப், போன்ற நிறுவனங்களை குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் தனது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆஃபிஸ் போன்றவைகள் பரவலாக அனைத்து கணினிகளிலும் காணப்படுவதாக இருக்கிறது. மைக்ரோசாஃப்டின் ஒட்டு மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 1.5 டிரில்லியன் டாலர்கள் ஆகும். 

இவையெல்லாம் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிலைபாடு. டிக் டாக் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் வேலையில் இளைஞர்கள் மத்தியில் மைக்ரோசாஃப்டின் பயன்பாடு அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் (கேமிங்) கணினியில் விளையாடுவது போன்ற எக்ஸ்பாக்ஸ் சேவையில் தொண்ணூறு விழுக்காடு இளைஞர்களே நிரம்பி இருக்கிறார்கள்.

இந்த பயனாளிகளை அப்படியே தன்வசப்படுத்திக் கொண்டு, அவர்களிடத்தில் டிக் டாக் கொண்டு சேர்க்கும் பட்சத்தில் மைக்ரோசாஃப்டின் மதிப்பு மேலும் கூடும் என்பதே எதிர்பார்ப்பு. ஒருவேளை இந்த ஒப்பந்தம் முடிவாகும் பட்சத்தில் டிக் டாக் பயனாளிகளின் தகவல்கள் எல்லாம் அமெரிக்காவிலேயே இருப்பதாக கட்டமைக்கப்படும். இதுவரை பயன்படுத்தி வந்த பயனாளிகளின் தகவல்கள் வேறு ஏதாவது நாட்டில் இருக்கும் பட்சத்தில் அதனை அப்படியே நீக்கிவிட்டு புதிய தகவல்களை எல்லாம் அமெரிக்காவில் இருக்கும்படியாக வசதி செய்து தரப்படும், என்கிறது மைக்ரோசாப்ட்.

டிக் டாக்கில் தற்போது இருக்கும் வடிவமைப்பு முறைகளை விட அமெரிக்க பயனாளிகளின் தேவைக்கு ஏற்ப புதிய வடிவமைப்பு முறையை மேம்படுத்தி மைக்ரோசாப்ட் வெளியிட ஆயத்தமாக இருக்கிறது. அதோடு உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு, தனிபர் சுதந்திரம், மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளப்படும் என்கிறது மைக்ரோசாப்ட்.

எந்த ஒரு நிறுவனமும் பொது வெளியில் இயங்குவதற்கு தேவையான வழிமுறைகளையும் அரசின் ஆதரவையும் பெறும். அதற்கு மைக்ரோசாப்ட் மட்டும் விதிவிலக்கு அல்ல. இணையதள பாதுகாப்பு குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையும் அதிபரின் ஆர்வத்தையும் மைக்ரோசாப்ட் வெகுவாக பாராட்டியது. இது டிக் டாக் நிறுவனத்தை வாங்குவதற்கு சொல்லப்பட்டச் சொற்களாக கூட இருக்கலாம்.

சமீப காலமாக அதிபர் டிக் டாக் நிறுவனத்தை தடை செய்வோம், அதனை பிளாக் லிட்டில் இணைத்து விடுவோம் என்று கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீன நிறுவனத்தை எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் வாங்க முன்வரக் கூடாது என்று வெளிப்படையாக அறிவித்தார். எனினும் அப்படி நிகழும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட பங்குகளை (இடைத்தரகர்கள் போல) தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், டிக் டாக் கூறுவது என்னவென்றால், "அமெரிக்க பயனாளிகளின் தகவல்கள் எல்லாம் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள டேட்டா செண்டர்களிலும் அதன் பேக்கப் சிங்கப்பூரிலும் இருக்கிறது, சீனாவில் எந்த ஒரு தகவல்களும் வைக்கப்படவில்லை" என்றது. டிக் டாக் நிறுவனத்தின் முதன்மை அலுவலகம் (Corporate office/head quarters) சீனாவின் பீஜிங் நகரில் இருக்கிறது. இங்கிருந்து அமெரிக்க பயனாளிகளின் தகவல்களை நேரிடையாக பெற்றுக் கொள்ளும் வசதி இல்லை என்று ஆணித் தரமாக கூறுகிறது. 

அமெரிக்காவில் டிக் டாக் செயலி 180 மில்லியன் கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. இதுவே உலகளவில் 1.5 பில்லியன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பெருவாரியாக இளைய தலைமுறையினரை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். டிக் டாக்கின செயல்பாடுகளை அமெரிக்காவில் மட்டும் வாங்குவதாக மைக்ரோசாஃப்ட் அறிவிக்கவில்லை அதோடு, கனடா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போன்ற நாடுகளிலும் வாங்குவதாக அறிவித்து இருக்கிறது.

டிக் டாக் போன்ற செயலிகளை மைக்ரோசாப்ட் அல்லது வேறு பெரிய அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாங்குவது சாத்தியப்படலாம் என்கிறார்கள் தகவல் தொழில்நுட்ப வர்த்தகத்தைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள். ஏனென்றால் சீன நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் நவீன செல்போன்களில் பெரும்பாலும் Android அல்லது iOS இயங்கு தளங்களில் இயங்குவதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு கூகுள் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் அந்நிறுவனங்களோடு இருக்கின்றது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அமெரிக்க நிறுவனங்களோடு ஒத்துப்போக வில்லை என்றால் அமெரிக்க நிறுவனங்களால் இந்த சேவைகள் நிறுத்தப்படலாம்‌.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் டிக் டாக் மற்றும் பிற 59 சீன இணையதள /சமூக வலைத்தள நிறுவனங்களைத் தடை செய்திருந்தது இந்தியா. இதற்கு இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறப்பட்டாலும், மறுபுறத்தில் சீனா, இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தடையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று கருதப்பட்டது. பெருவாரியான தேசிய வாதிகள் இந்த தடையை ஆதரித்தார்கள். ஒருவேளை நாளை இந்தியாவில் டிக் டாக் சேவையை மைக்ரோசாஃப்ட் வாங்க வரும் நிலையில் டிக் டாக் தடை நீக்கப்படுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஒரு நிறுவனத்தை தடை செய்வதும் பிறகு அந்தத் தடையை நீக்குவதும், அதையே ஒரு அமெரிக்க நிறுவனம் வாங்குவதும் தொடரும் எனில், தகவல்கள் பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம் என்பதையும் கடந்து, இதற்குப் பின்னர் பெரும் வணிகம் இருப்பதாகவே கருதப்படுகிறது. 

(நன்றி: https://www.npr.org/2020/08/02/898415881/microsoft-consults-with-trump-about-ongoing-talks-to-buy-tiktok-from-chinese-fir)

- பாண்டி

Pin It