நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், தனக்கான மார்க்கெட் முடியும் முன்பே தொடங்கியது பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

சிலர் அதை தியாகமாகவும், மக்களின் மீதான விஜயின் அக்கறையாகவும் கூறுகின்றார்கள். விஜயின் அரசியல் கணக்கை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, அது தியாகமா அல்லது சமூக அக்கறையா என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

அதற்கு முன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையை நாம் பார்த்து விடுவோம். அந்த அறிக்கையில்,

"அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். 'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.vijay speechதற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்' ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்' மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக் கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப் பற்று உடையதாகவும் இருக்க வேண்டும்" 

அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால்தான் சாத்தியப்படுத்த முடியும். என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மால் அவரின் அடுத்த கட்ட அரசியலை மதிப்பிட முடியாது என்றாலும், குறைந்த பட்சம் இந்த அறிக்கையில் இருக்கும் போதாமையை சுட்டிக் காட்ட வேண்டி இருக்கின்றது.

 அதில் முதன்மையானது தன்னலமற்ற, வெளிப்படையான, லஞ்சம், ஊழலற்ற திறமையான நிர்வாகம் போன்றவை எல்லாம் ஒரு சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான அடிப்படைக் கருத்தியலா என்பதுதான்.

 உலகில் லஞ்சம், ஊழலற்ற நாடு என்று ஏதாவது இருக்கின்றதா? அப்படி எதுவும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. உண்மையில் லஞ்சம், ஊழல் போன்றவை எந்த சமூக அமைப்பில் கொடிகட்டிப் பறக்கின்றது என்பதுதான் முதன்மையானது.

 டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

 அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிடுகிறது

மேற்கொள்ளப்படும் ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்ணைப் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அதில், 90 மதிப்பெண்ணுடன் ஊழல் மிகவும் குறைந்த நாடாக டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் 87 மதிப்பெண்ணுடன் பின்லாந்தும், 85 மதிப்பெண்ணுடன் நியூசிலாந்து 3-ம் இடத்திலும் உள்ளன. மேலும், கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்தைப் பெற்றுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 133-வது இடமும், இலங்கை 115-வது இடமும், சீனா 76-வது இடமும் பிடித்துள்ளன.     

எந்த ஒரு நாடும் முழு அளவிலான மதிப்பெண்ணைப் பெறாமல் இருக்கக் காரணம், அந்த நாட்டில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றாலும் வெளிநாடுகளில் தொழில் செய்யும் அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அரசு எந்திரங்கள் அனைத்துமே ஊழலில் திளைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நிலைமை இப்படி பட்டவர்த்தனமாக இருக்கும் போது திரும்பத் திரும்ப ஊழல், திறமையான நிர்வாகம் போன்ற வார்த்தைகளையே ஏன் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள்?.

 இந்த ஊழல் எதிர்ப்பு, தூய்மையான நிர்வாகம் போன்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்னா ஹசாரே போன்ற டம்மி பீஸ்களை வைத்து ஏற்கெனவே பிஜேபியே செய்து பார்த்து இருக்கின்றது.

 நாங்கள் எதிர்ப்பார்ப்பதெல்லாம் இந்தியாவை மொத்தமாக அழித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தைப் பற்றிய உங்களின் பார்வையைத்தான்.

 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக ஜனவரி 16, 2023 அன்று வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை (Survival of the Richest: The India Supplement) கூறுகிறது. இதை பற்றிய விஜய் அவர்களின் பார்வை என்ன என்பதுதான் நமக்கு முதன்மையானது.

வெறும் ஊழல் ஒழிப்பு வேசமட்டும் தேர்தலில் வெற்றி பெறப் போதாது. ஏற்கெனவே இங்கிருக்கும் கார்ப்ரேட் அரசியல் கட்சிகள் ஊழலைத் தாண்டி சிலவற்றை மக்களுக்கு செய்திருக்கின்றார்கள். அதனால்தான் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கின்றது.

அப்படி என்றால் விஜய் எதிர்க்க வேண்டியது ஊழலை மட்டுமல்ல, அந்த ஊழலுக்குக் காரணமான முதலாளித்துவத்தைதான்.கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் விஜய் அவர்கள் அதைத்தான் முதலில் பேச வேண்டும்.

 மற்றபடி 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற விஜயின் அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. சமூக சமத்துவம் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு பொருளாதார சமத்துவமும் முக்கியம்.

 இன்றிருக்கும் அரசியல் சூழலில் விஜய் அவர்களின் அரசியல் வரவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால் நிச்சயம் அதற்கு வாய்ப்பு அதிகம். அதிமுக இரண்டாக உடைந்து கவுண்டர் அணி, கள்ளர் அணி என மாறியிருக்கின்றது. சீமான் அப்பட்டமாக குடி அரசியல் பேசும் சாதிவெறியராக இருப்பதோடு கடந்த பல தேர்தல்களில் தோல்வியை மட்டுமே பரிசாகப் பெற்றவர்.

 ஆனால் விஜய்க்கான அரசியல் களம் இதிலிருந்து வேறுபட்டது. எந்தவித சமூக அக்கறையுமற்ற சினிமா பைத்தியம் பிடித்த லும்பன்களைச் சார்ந்து அது இருக்கின்றது. இவர்களுக்கு விஜய் கடவுளுக்கு நிகரான ஒரு பிம்பம். அந்த பிம்பத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்.

 தமிழக அரசியல் வரலாறு சினிமாக்காரர்களால் தீர்மானிக்கப்படும் இழி நிலையில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. மக்களுக்கு இந்த மண்ணுக்காக போராடுபவர்களைவிட சினிமாவில் குத்தாட்டம் போடும் கூத்தாடிகளையே நன்றாகத் தெரிந்திருக்கின்றது.

 அவர்கள் தமக்கான விடுதலையை சினிமாக்காரர்களால்தான் கொடுக்க முடியும் என ஆழமாக நம்புகின்றார்கள். ஒரு வழிபாட்டு மரபின் தொடர்ச்சியாக நாயக பிம்பம் கடவுள் பிம்பமாக கட்டமைக்கப்படுகின்றது. அதனால்தான் கடவுளுக்கு இணையாக கதாநாயகனுக்கும் பாலபிசேகம் செய்யப்படுகின்றது.

 முற்போக்கு இயக்கங்கள் அப்படியான பண்பாட்டை இங்கு மாற்றுவதற்கு வேலை செய்ததைவிட, திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் வளர்த்துவிட்ட சினிமா அரசியலை தூக்கிப் பிடிக்கவே பெரும்பாலும் வேலை செய்தன.

 இரண்டு கட்சிகளிலும் உள்ள சினிமாக்காரர்களை பட்டியல் இட்டாலே இதைத் தெரிந்து கொள்ள முடியும்.

 அதுமட்டுமல்ல இன்று விஜயை எதிர்க்கும் பலபேர் உதயநிதியை மட்டும் எதிர்க்காமல் இருப்பது அவர்களின் சொம்புதூக்கி தனத்தைத்தான் காட்டுகின்றது.

விஜயின் அரசியல் வருகை நிச்சயம் தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றத்திற்கு வேறு யாரும் காரணமல்ல. திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது.

 போலியான முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் பங்கெடுப்பவர்கள் யாரை நோக்கி சுட்டுவிரலை நீட்டினாலும் மற்ற விரல்கள் தங்களை நோக்கி இருப்பதைப் பார்த்து அச்சப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

 இறுதியில் மக்கள் முடிவு செய்து கொள்வார்கள் பேயிக்கு ஓட்டு போடுவதா, இல்லை பிசாசுக்கு ஓட்டு போடுவதா என்று.

- செ.கார்கி

Pin It