யாரோ போட்டு வைத்த ஒற்றையடி 40 வயது வரைதான் வருகிறது. அதன்பிறகு தனக்கான பாதையை தானேதான் போட வேண்டி இருக்கிறது. அதுதான் மிச்ச வாழ்வின் தத்துவமும்.

சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளில் நிறைய யோசிக்க வைத்தது இந்த 40 வயது. 
 
"நாப்பது வயசாச்சுங்க...உங்களோடல்லாம் நான் பழகவே கூடாது..." 
 
"நீங்க நினைக்கற மாதிரி இல்லைங்க. வயசு 40 தாண்டிருச்சு.. அப்டில்லாம் ரிஸ்க் எடுக்க முடியாதுங்க..."

"ஐயோ வயசு 42 ஆச்சுங்க... வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகிறது..."
 
"எனக்கு நாப்பது வயசு..." என்று மீசை நடுங்க... கண்கள் உருள... கன்னச்சதை திரள அவன் சொன்ன போது எதிரே இருந்தவர்கள் ஸ்தம்பித்தார்கள். பேசிக் கொண்டிருந்தவர்கள் தடுமாறினார்கள். பேச்சு இழந்து பார்த்தார்கள். தன் கருத்தை முன் வைக்க அல்லது ஒரு பேச்சுவார்த்தை தோல்வியில் இருந்து தப்பிக்க... 40 வயதை ஒரு தகுதி போல ஆக்கி குமைகிறான். உடல் தொடர்பான கேலிகளுக்கு உள்ளாவதை தவிர்க்க சொந்த பந்த நிகழ்வுகளைத் தவிர்க்கிறான்.
 
திரும்ப திரும்ப இந்த 40 வயதை ஒரு 40 வயதுக்காரன் ஒப்புக்கொள்ள மறுக்கிறான். அவனால் 30 வரிசையில் இருந்து 40 வரிசைக்கு அப்படி சட்டென வந்து விட முடிவதில்லை. முடிந்தளவு 39 லேயே இருக்க முயற்சிக்கிறான். அதில் ஓர் இலகுவான வசதி இருப்பதாக நம்புகிறான். அதுவே பாதுகாப்பென்றும் நினைக்கிறான். என்ன பேசினாலும் வயது 40 என்பதில் வந்து நின்று சுழலுகையில்... எதிர் பேச்சுக்கு மொழி மழுங்குவதைக் காண்கிறேன். எந்த ஒரு இயலாமையையும் அவன் 40 வயது கொண்டே சரி செய்ய பார்க்கிறான். தனது தோல்விக்கு 40 வயதையே காரணமாக்கிக் கொள்கிறான். அதில் ஒரு கம்போர்ட் நிலையை எய்துகிறான். சுய கழிவிரக்கத்திற்கு 40 வயதை கவசமாக்கிக் கொள்கிறான். 

இப்படி இந்த 40 வயது... சுற்றி சுற்றி எதையோ சொல்ல வந்து கொண்டே இருக்கிறது. அல்லது சொல்ல ஆரம்பித்து விட்டது. அல்லது சொல்லிக் கொண்டிருக்கிறது. 
 
சட்டென உடல்நிலையில் மாற்றம். மனநிலையில் மாற்றம். சிந்தனையில் மாற்றம். பார்க்கும் பார்வை... பழகும் விதம் என ஏகப்பட்ட மாற்றங்களை இந்த 40 வயது தரத்தான் செய்கிறது. ஆணோ பெண்ணோ... நரை கூட தொடங்குவது கூட இந்த வயதில் தான். பார்க்க பார்க்க நரை கூடிய மீசை தாடியை கண்ணாடியும் தான் எத்தனை நாளைக்கு மறைக்கும். பளிச்சென வெள்ளை இறகு சிரிக்க வேடிக்கை பார்க்கும் பிம்பத்தை காட்டுவது 40 வயது கண்ணாடி என்பது மெய்தானே. 
 
எடுத்தோம் கவிழ்த்தோம் பேச்சு இல்லை. சாலையில் பக்கம் வந்து உரசிப் போகிறவனைக்கூட போ போ என்று விட்டு விடும் பக்குவம். இதுவரை வாழ்ந்த நாட்கள் எல்லாம் சட்டென மறைந்து விட.... இன்னும் பத்தே வருசத்துல 50 வயசாகிடுமே என்ற பதற்றம். கனிவுக்கு பதிலாக கடிக்கும் பொழுதுகளும் உண்டு. எதற்கெடுத்தாலும் கோபம் வரும் காரணமற்ற சூழல்களும் இருக்கின்றன. வெளியே வெளி வராத கோபங்கள் எல்லாம் வீட்டுக்குள் தலை தெறிக்க தவிப்பதை நினைத்தாலே கசக்கிறது.
 
உடையில் சமாதானம் செய்ய வேண்டி இருக்கிறது. தொப்பைக்கு கவலைப் பட வேண்டியிருக்கிறது. 20 வயசுக்காரனோடு நிற்கையில்... எங்கிருந்தோ வந்து சூழ்ந்து கொள்ளும் காம்ப்ளெக்ஸ் வேறு. எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவனுக்கு இன்னும் கூடுதல் சுமை. அவன் பழைய நினைவுகளில் புத்தம் புது பூ போல இருந்த காலங்களை நினைக்க நினைக்க... நிதானம் இழக்கிறான். அதனால் நம்பிக்கை குறைகிறது. அதனால் உலகை விட்டு ஒதுங்கி கொள்கிறான். 50 நெருங்குகிறவர்களை கவனியுங்கள். பெரிதாக பேசவே மாட்டார்கள். அவர்களுக்கு தேவைக்கு மீறிய பதில்கள் கிடைத்து விட்டன. 
 
20 to 30 கூட நினைவில் இருக்கிறது. 30 to 40 ஓடியே ஓடி விட்டது. வயது ஏற ஏற காலத்தின் வேகம் அதிகரிக்கிறது. எல்லாவற்றையும் விட இந்த தலைமுடி பெரும் போராட்டம். வயது ஆக ஆக.. புத்தி வருகிறதோ இல்லையோ... தலையில் முடி கொட்டி சொட்டை ஆவது சரியாக நடந்து விடுகிறது. கோடி கோடி யுகத்தில் 40 வயசெல்லாம் ஒரு வயசா என்று வியாக்கியானம் பேசலாம். ஆனால் சொட்டைக்கு எந்த கணக்கும் இல்லை. அதற்கு 40 தான் கொண்டை ஊசி வளைவு. வளைந்தே தீரும்.
 
முகத்தில் சதை கூடி.. கண்களில் ஒளி குறைய தொடங்கி விடுகிறது. பார்வை மங்குகிறது. பரவசம் பின் தங்குகிறது.
 
ஒரு கழுகு கதை இருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்திருக்கும். 40 வயதுக்கு மேலே ஒரு புது வாழ்வை அது பிரசவிக்கும். தன்னைத் தானே வருத்தி... செதுக்கி மீண்டும் ஒரு வாழ்வைக் கட்டமைக்கும். அப்படித்தான் நாமும்... 40 வயதுக்கு மேலே இருக்கும் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்ள தயாராக வேண்டும். தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி. மனதைத் திடமாக்க மௌன பயிற்சி. புலம்பலை விட்டொழிக்க புத்தி சுத்தம். சலம்பலை விட்டகல தன்னை அறிதல்.  
 
எல்லாரையும் நேசிப்பது பிறகு. முதலில் தன்னை நேசிக்க பழகு. மனம் விரிய விரிய மகத்துவம் உள்ளே குடிபுகும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு படைப்பு. ஒருவரைப் போல ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த வயதுக்கு ஒரு வாழ்வு இருக்கிறது. அதை புரிந்து உணர்வது தான் அந்தந்த வயதின் வாழ்வு. 
 
நாற்பதில் வாழ்வு தொடங்குவதாக ஒரு சொற்றொடர் உண்டு. அதை முழுதாக உணர... நாற்பதில் வாழ்வு முடிவதில்லை என்று நம்புவது முக்கியம்.
 
40 என்பது நின்று நிதானிக்க கிடைத்த ஒரு நிறுத்தம். அதில் இருந்து எழும் பயணம் மிகத் தூய்மையானதாக இருக்க வேண்டும். எவ்ளோ தூரம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் துக்கப்பட துயரப்பட இல்லை வாழ்வென்பது தான் 40 சொல்லும் நம்பிக்கை. நாற்பது ஆச்சுங்க... அவ்ளோ அனுபவம் கொண்டிருக்கிறேன் என்பது தான் சொற்றொடரின் கட்டமைப்பாக இருக்க வேண்டுமே தவிர... 40 ஆச்சு என்பதை மெல்ல சொல்லி மென்று முழுங்குவதாக இருக்க வேண்டியதுமில்லை. சத்தம் போட்டு சொல்லி கழிவிரக்கத்துள் தடுமாற வேண்டியதுமில்லை. 
 
- கவிஜி
Pin It