உச்ச நீதிமன்றத்தில், இதரப் பிற்படுத்தப்பட்டவர்களைக் உச்ச நீதிமன்றத்தில், இதரப் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறியும் கணக்கெடுப்பு நடத்துவது கடினம் என்று ஒன்றிய அரசு கைவிரித்துள்ளது.
அரியவகை ஏழைகளைப் (EWS) போகின்ற போக்கில் கண்டுபிடிக்கத் தெரிந்த ஒன்றியத்திற்கு இது மட்டும் முடியாதா? NRC-CAA, குடியுரிமை போன்றச் சிக்கலானக் கணக்கெடுப்புகளை எடுக்க விரையும் ஒன்றியத்தால், இந்தக் கணக்கெடுப்பை எடுக்க இயலாதா? அது சிக்கலானது சிரமானது என வர்ணனைகள் மட்டுமே தொடர்கதை ஆகின்றன..
ஒரு நாட்டில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையாக இருக்கும் இதரப் பிற்படுத்தப்பட்டவர்களை இன்னும் எத்தனை நாள்களுக்குப் பார்வையாளராகவே வைத்திருக்கப் போகிறார்கள்?
ஆதார் அட்டையை அனைவருக்கும் கொடுக்க முயலும் அரசிடம் இந்த அட்டை எதற்கு என்று கேட்டால், எதற்கும் கட்டாயம் கிடையாது என்று சொல்கிறது. எதற்கும் கட்டாயத் தேவையில்லாத ஆதார் அட்டைக்குச் செலவு செய்ய முடிகிற அரசால், அவசியமான சாதிவாரிக் கணக்கெடுப்பைச் செய்ய முடியவில்லை.
விழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்?
பிற்படுதத்தபட்டச் சமூகங்கள் யார் என்று தெரிந்து கொள்வதில் சிக்கல் இருப்பதாக ஒன்றிய அரசு கூறுகின்றது, ஆனால் அது குறித்து இதரப் பிற்படுதத்தபட்ட மக்களிடம் ஒரு உரையாடலைக் கூடப் பார்க்க முடியவில்லை என்பது கூடுதல் வருத்தம். இட ஒதுக்கீடு என்பதைக் கௌரவக் குறைச்சலாகப் பார்க்கும் மக்களின் மனநிலை மாற வேண்டும். இட ஒதுக்கீடு குறித்துப் பேசினாலே அது பட்டியலின மக்களுக்கானது, தகுதி திறமைக்கு எதிரானது என்பன போன்ற மேம்போக்கான பேச்சுகளுடன் நகருகின்றனர்.
இட ஒதுக்கீடு இதரப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இருக்கிறது; அது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் இட ஒதுக்கீடு குறித்து பேசினாலே, பட்டியலின இட ஒதுக்கீட்டை இகழும் இதரப் பிற்படுத்தப்பட்டவர்கள் மனநிலை என்பது, தனக்கு இரு கண் போனாலும் பரவாயில்லை, பட்டியலின மக்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்ற மனநிலையையே காட்டுகின்றது. இழப்பு தனக்குத்தான் அதிகம் என்பதைக் கவனிக்க மறுக்கின்றனர்.
யார் EWS-க்கு தகுதியானவர்கள் என்று தெரிந்தால், முன்னேறிய சமூகத்தினர் யார் என்று தெரிந்ததாகவே பொருள். யார் பட்டியலினத்தவர்கள் என்று சரியாக வரையறுக்கப் பட்டுவிட்ட நிலையில், மீதம் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை என்று ஒன்றிய அரசு தொடந்து கூறி வருகின்றது. மாநில அரசு முயற்சித்தால், உடனே வழக்குத் தொடந்து அதை முடக்கி விடுகின்றார்கள்.
நாடு தழுவிய அளவில் ஒன்றிய அரசே இதனைச் செய்ய வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து வேடிக்கைப் பார்க்கிறது. மக்களும் ஒன்றிய அரசைத் தொடர்ந்து வேடிக்கைப் பார்கிறார்கள்.
இடஒதுக்கீடே பாதுகாப்பு:
இதரப் பிற்படுத்தப்பட்டவர்கள் தாங்கள் ஒதுக்கப்படும் அடிப்படை புரியாமல் இருக்கின்றனர். IIT போன்ற ஒன்றியத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் பார்ப்பனர்கள் தவிர, OBC, SC/ST அனைவரும் சாதியப் பாகுபாட்டுக்கு உள்ளாகிறார்கள். மாணவர்கள்/ஆசிரியர்கள் இடை நின்றுவிடுகின்றனர். சிலர் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இங்கு கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், இந்த நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரிவர பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றப்பட்டால், இந்த மக்கள் அதிக அளவில் இடம் பெறுவார்கள். எண்ணிக்கையே இவர்களுக்கானப் பாதுகாப்பைக் கொடுக்கும்.
ஏன் சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை?
இதரப் பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லை. பெரு நிலக்கிழார்கள், ஏழை குடியானவர்கள், சிறு உழவர்கள், உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் என சமூகத்தில் பல நிலைகளில் இருக்கும் மக்களை ஒரே அளவில் வைத்துப் பார்ப்பது அநீதியாகும். ஒவ்வொருவரின் கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகிய நிலைகளை அறிந்து, அனைத்து மக்களின் பங்களிப்புடனான நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும். அப்படிப்பட்ட நாடே வளர்ச்சி அடையும்.
- மதிவாணன்