கீற்றில் தேட...

இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் தங்களுடைய கேவலமான சாதி வெறியையும் பிற்போக்குத்தனங்களையும் கூடவே எடுத்துச் செல்கின்றார்கள். சாதியைப் பற்றியும் சனாதனத்தைப் பற்றியும் அறிந்திராத மக்களிடம் தாங்கள் இந்தியாவில் உயர்குடியில் பிறந்தவர்கள் என்றும், தங்களுக்கான சிறப்புச் சலுகைகள் அங்கே கொடுக்கப்பட்டதாகவும் கதையளந்து, அதே போல இங்கேயும் தங்களுக்கு சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றார்கள்.

உண்மையில் இந்தியாவிற்கு வெளியே சாதியைப் பற்றிய பெரிய புரிதல் இல்லை என உறுதியாகச் சொல்லிவிட முடியும். குறிப்பாக சாதிவெறியர்கள் அதை புனிதமான ஒன்றாகக் கட்டமைத்து வைத்திருக்கின்றார்கள். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி எப்படி கடவுளின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை உழைப்புச் சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் உள்ளாக்கியது என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொண்டிருந்தால் இந்த சாதிவெறி பிடித்த நாய்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றி இருப்பார்கள்.

இப்படி சாதிவெறியை புனிதப்படுத்தி, பிழைக்கப் போன இடத்திலும் தீண்டாமையைக் கடைபிடித்த நாய்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கின்றது அமெரிக்காவின் சியாட்டில் நகர சபை.

சியாட்டில் நகர சபையானது அதன் பிரதிநிதி ஷமா சாவந்த் என்பவர் சாதிக்கு எதிராக கொண்டுவந்த முன்மொழிவை ஏற்று வாக்களிப்பு நடத்தியது. 6-1 என்ற விகிதத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த சாதிக்கு எதிரான அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் சாதிப் பாகுபாடு சட்டவிரோதமாக அறிவித்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியிருக்கின்றது.

தொடர்ச்சியாக அமெரிக்காவில் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சாதி தீண்டாமைக் கொடுமைகள் அங்கு சாதிக்கு எதிராகப் போராட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.seattle against casteஅமெரிக்காவில் வாழும் பார்ப்பனர்கள் உள்பட ஆதிக்க சாதிக் கும்பல்கள் இந்தியாவில் இருந்தது போன்றே நாடு கடந்தும் தமது ஆதிக்க சாதி அகம்பாவத்தைக் காட்ட முற்படும் போது அவர்களை சட்டப்படியே எதிர்கொள்ள அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தயாராகி விட்டனர்.

ஏற்கெனவே 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதல் முறையாக சாதி ரீதியான பாகுபாட்டை எதிர்த்து ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளிகள் யார் தெரியுமா? ஒருவர் சுந்தர் ஐய்யர், மற்றொருவர் ரமணா கொம்பெல்லா. இவர்களிருவரும் சேன் ஜோஸில் உள்ள சிஸ்கோ தலைமையகத்தில் பணிபுரிந்து வந்தனர். அங்குதான் தனது பார்ப்பன சாதிவெறி அகம்பாவத்தைக் காட்டினார்கள்.

இது சம்மந்தமாக கலிபோர்னியா அரசு வெளியிட்ட அறிக்கையில் “குறிப்பிட்ட நிறுவனம் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த தலித் ஊழியர் அவரது மதம், வம்சாவளி, தேசியம், தோற்றம், இனத்தின் அடிப்படையில் குறைவான அந்தஸ்தைப் பெற்றார், குறைந்த ஊதியத்தைப் பெற்றார், குறைவான வாய்ப்புகள் மற்றும் பிற தரமற்ற விதிமுறைகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலைமைகளைப் பெற்றார். தலித் ஊழியர் பணியிடத்திற்குள் ஒரு சாதி வரிசை முறையை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்த்ததாகத்” தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக சிஸ்கோ நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்கள் மீதும் இனம், நிறம், மதம், பாலினம், பிறந்த தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிமனையில் பாகுபாடு காட்டுவதைத் தடுப்பதற்கான சட்டப் பிரிவு VIIஇன் கீழ் வழக்கு பதிவு செய்தது கலிபோர்னியா மாகாண அரசு.

சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில், சாதிப் பாகுபாடு சட்ட விரோதமானது அல்ல என்று சிஸ்கோ நிறுவனம் நினைத்துள்ளது என்றும், அதனால் தலித் ஊழியருக்கு அவர்கள் தொடர்ந்து தொல்லை தந்துள்ளனர் என்றும், தலித் ஊழியரைத் தனிமைப்படுத்தி, நல்ல வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்காவிற்குப் போயும் தங்களது சாதி ஆணவப் போக்கை அக்கிரகாரத்து அம்பிகள் கடைபிடிப்பது ஒன்றும் புதிதல்ல. 2018 ஆம் ஆண்டு தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த 1200 நபர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 26 சதவீதம் பேர் தாங்கள் சாதி காரணமாக உடல் ரீதியான தாக்குதலைச் சந்தித்ததாகவும், 59 சதவீதம் பேர் தாங்கள் சாதி ரீதியான இழிவான நகைச்சுவைகளால் இழிவு செய்யப்பட்டதாகவும், தாங்கள் தலித் என்பதற்காகவே வேலை பார்க்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படுவோம் எனப் பயந்ததாகவும் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியாவில் தங்களுக்கு அடிமை சேவை செய்து வந்த சாதியைச் சேர்ந்தவர்கள், இன்று கல்வி கற்று தங்களுக்கு இணையான வேலைகளில் பணிபுரிவது அம்பிகளை வயிற்றெரிச்சல் படவும் செய்துள்ளது. இத்தனைக்கும் இந்தியாவிலிருந்து அப்படி கல்வி கற்று அமெரிக்கா செல்லும் தலித்துகளின் எண்ணிக்கை என்பது அக்கிரகாரத்தில் இருந்து போகும் அம்பிகளின் எண்ணிக்கையைவிட மிக மிகக் குறைவுதான்.

2003 ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர்களில் 1.5 சதவீதம் மட்டுமே தலித்துகள் என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியாவின் மேம்பட்ட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமாகக் குடியேறியவர்கள் உயர் அல்லது ஆதிக்க சாதி என்று தங்களை கருதிக் கொள்கின்றவர்கள்தான்.

இத்தனைக்கும் அமெரிக்காவில் இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம்தான். மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே இந்துக்கள் ஆவார்கள். இந்த ஒரு சதவீத அமெரிக்க இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் தெற்காசியாவிலிருந்து முக்கியமாக இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் போன்றவற்றில் இருந்தும், இன்னும் பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்றவற்றில் இருந்தும் சென்றவர்கள் ஆவார்கள்.

இதே போல 2021 ஆம் ஆண்டில், இந்து அமைப்பான போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS), தலித் தொழிலாளர்களை பல்வேறு இடங்களில் கோயில்களைக் கட்டுவதில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக் குறைவாகவே சம்பளம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இப்படி பிழைக்க வழியற்று போன இடத்தில் கூட தங்களது சாதி அரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றார்கள் சனாதனிகள்.

சாதியைத் தெரிந்து கொள்வதில் பல வகையான உத்திகளை சாதிவெறியர்கள் கடைபிடிக்கின்றார்களாம். நேரடியாக சாதியைக் கேட்பதற்கு கூச்சப்பட்டுக் கொண்டு தட்டிக் கொடுப்பது போன்று முதுகைத் தடவிப் பார்ப்பது, அப்பாவின் வேலையை விசாரிப்பது, ஊர்பெயரை விசாரிப்பது, தனக்குத் தெரிந்த நபர்களின் பெயரைச் சொல்லி அவர்களைத் தெரியுமா எனக் கேட்பது, சம்மந்தப்பட்ட நபரை ‘நாம் நீந்தலாம்' என்று வரவழைத்து அவர்கள் சட்டையைக் கழற்றியபின் பூணூல் அணிந்திருக்கிறார்களா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்துவது என நுட்பமான வழிகளில் சாதியைக் கண்டுபிடிக்கின்றார்கள்.

அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளுக்க்ச் செல்லும் இந்தியர்களும் அங்கு தீவிரமான சாதி வெறியைக் கடைபிடிப்பது பெரும் பிரச்சினையாகி இருக்கின்றது.

இலண்டனில் உள்ள கவன்டிரி நகரத்தில் சீக்கியர்களின் குருத்துவாராக்களில் சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு காட்டும் போக்கு இருந்ததும், அதற்கு எதிராக 2010-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சமத்துவச் சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதற்கான அடிப்படையான கூறுகளில் ஒன்றாகச் சாதியையும் சேர்ப்பதற்கு பிரபுக்கள் அவை ஒப்புதல் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ‘தலித் ஒற்றுமை இணையம்’ என்கிற அமைப்பு கோயில்கள், பணியிடங்கள், அரசியல், உடல் நலவாழ்வு சேவைகளைப் பெறல், கல்வி முதலானவற்றில் சாதி காரணமான ஒதுக்கல்கள், ஒடுக்குமுறைகள் குறித்து ஆராய்ந்தது.

அந்த அறிக்கைக்கு முன்னுரை எழுதிய அவ்வமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெரிமி கோர்பைன் “சாதியமைப்பும் உணர்ச்சியும் இந்தியர்கள் வழியாக இங்கிலாந்துக்கு இறக்குமதியானது. அதனால் இங்கிலாந்தில் வாழும் தெற்காசிய மக்களிடையே பிறவியில் உயர்வு-தாழ்வு, புனிதம்-தீட்டு என்கிற கருத்தோட்டங்கள் வாழ்வியல் நடை முறைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டார்.

சாதியக் கொடுங்கோன்மை இந்தியாந்த் தாண்டியும் ஒரு தொற்று நோயைப் போல மற்ற நாடுகளுக்கும் பரவுவதற்கு சனாதன சாக்கடைகள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றார்கள்.

சாதி இந்தியாவின் புனிதம், வேலைப்பிரிவினை, பாரதப் பண்பாடு என சொல்லிக்கொண்டு சாதிவெறி பிடித்த நாய்கள் அதற்கு உலகம் முழுவதும் அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

பெரு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் உட்கார்ந்து கொண்டு சம்மந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுக்கு போலியான தகவல்களைக் கொடுத்து தீண்டாமையை நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் சியாட்டில் நகர சபையின் முடிவானது பாராட்டத்தக்க ஒன்று. அமெரிக்கா முழுவதும் அனைத்து மாகாணங்களிலும் இது போன்ற சட்டத்தை இயற்றி சாதிவெறியோடு செயல்படும் காலிகளை கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முடிந்தால் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற உத்திரவிடலாம். இல்லை என்றால் அமெரிக்காவையும் தன்னுடைய சாதிய மலத்தால் நாறடித்து விடுவார்கள் சனாதனிகள்.

- செ.கார்கி