பாஜக அரசு சில நாட்களில் EWS இட ஒதுக்கீடு என்ற பெயரில் உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை சில நாட்களில் கொண்டு வந்துள்ளது. SC – ST வன்கொடுமைச் சட்டத்தை ரத்து செய்ய முயன்று தோல்வியடைந்த பாஜக அரசு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு வழங்குவதின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கும் மற்றொரு மோசமான செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. 

நடைமுறையில் இருக்கும் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கையை நீர்த்துப்போகச் செய்யவும், அகற்றவும் பாஜகவினர் முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி பாஜக அரசு உயர் சாதியினரையும் இட ஒதுக்கீடு முறையில் சேர்த்து, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது. பொருளாதாரத்தின் பின் தங்கியவர்கள் என்ற பெயரில், உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்க முயல்கின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை அழிக்கும் நோக்கில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கின்றனர். பாஜக அரசால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை எப்பாடு பட்டாலும் நிறுத்த வேண்டும், இல்லையெனில் நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முற்றிலும் ஒழித்து உயர் சாதியினருக்கு பெரும் நன்மையை கொண்டு வரும் கல்வி, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் உயர் சாதியினரின் ஏகபோக உரிமைக்கு உட்பட்டுள்ளன என்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இப்போது, ​​இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் SC, ST, OBC மக்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவத்தை உயர் சாதியினர் பறிக்க நினைக்கிறார்கள்.Mayawatiஉயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புத் திருத்தம் சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் மரண அடி தரும். காலனித்துவ இந்தியாவில் உயர் சாதியினரே இட ஒதுக்கீடு பெற்று வந்தனர். சாகு மகாராஜ் போன்ற தலைவர்கள் தீண்டத்தகாத சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தொடங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சாதி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்கள், SC, ST மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பெற்றுத் தந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கை வறுமை ஒழிப்புக்கான திட்டம் அல்ல. எனவே பொருளாதார அளவுகோல் அதில் இடம் பெறவில்லை. தலித்துகளும் பழங்குடி மக்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைத்து அரசு நிறுவனங்களிலிருந்தும் விலக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் தடை செய்யப்பட்டன. அவர்கள் மனிதர்களாகக் கூட கருதப்படவில்லை.

மூன்று குறிப்பிட்ட காரணங்களுக்காக SC, ST சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முதலாவதாக, இந்துக்கள் அவர்களுக்கு இழைத்த வரலாற்று அநீதியின் காரணமாக. இரண்டாவதாக, இந்தச் சமூகங்களை அனைத்து நிறுவனங்களிலிருந்தும் முழுமையாக விலக்கி வைத்திருந்தனார். மூன்றாவதாக, அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதற்காக.

முட்டாள்களும் மதவெறியர்களும் நிரம்பி உள்ள தற்போதைய ஆட்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினர் என்று அழைக்கப்படும் EWS பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருகின்றனர். உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி இயக்கத்தையே அவமதிக்கும் செயலாகும். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோடிகளுக்கு எதிரான செயல்.

உயர்சாதியினர், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராகவும், SC, ST, OBC மக்கள் மீதும் ஆழ்ந்த வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளனர். இதனால், இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்று உயர்சாதியினர் நாடு முழுவதும் விவாதம் நடத்தியும், அதைச் செய்ய முடியாமல் போனதால், ​​பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். பிஜேபி அரசிற்கு அதன் முக்கிய வாக்கு வங்கியான உயர் சாதியினரை ஏமாற்ற வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ராமர் கோவில் விவகாரத்தை பாஜக கொண்டு வர முயற்சித்தது. ஆனால் அது அவர்கள் விரும்பும் வழியில் செல்லவில்லை. கறுப்புப் பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பது, வளர்ச்சியைக் கொண்டு வருவது போன்ற மோடியின் வாக்குறுதிகள் படுதோல்வி அடைந்துள்ளன. பொய்யர்கள், மதவெறியர்கள், பித்தர்களால் ஆளப்படும் இந்த நாடு, தனது குடிமக்களுக்கு நிலையான பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க ஒருபோதும் கவலைப்படவில்லை. 

இந்தச் சூழலில், உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு என்பது மிகவும் தந்திரமான விளையாட்டுகளில் ஒன்றாகும். பாஜகவும், உயர்சாதியினரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் இப்பொழுது, காங்கிரசும் தனது உண்மையான நிறத்தைக் காட்டி, பாஜக அரசின் EWS இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளது. முற்போக்கு, பிற்போக்கு சக்திகள் என வேறுபாடின்றி அனைவருமே உயர் சாதி இட ஒதுக்கீட்டை வெளிப்படையாக ஆதரித்துள்ளனர். CPI(M), காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், AAP, RLSP, RLD உள்ளிட்ட பல கட்சிகளும் இயக்கங்களும் இதில் அடங்கும். இந்த உயர்சாதி இட ஒதுக்கீட்டை, இந்தக் கட்சிகள் உட்பட அனைத்து உயர் சாதிக் கட்சிகளும் இயக்கங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றன. அவர்களின் எடுபுடிகள், எஜமானர்களை விட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். உண்மையில், எடுபுடிகள் உயர் சாதி இட ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிடத் தொடங்கியுள்ளனர். 

உதித் ராஜ், அத்வாலே போன்ற எடுபுடிகளுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சரியான பாடம் தேவை. இந்த விஷயத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் ஆதரவு துரதிர்ஷ்டவசமானதும், வருத்தமளிப்பதும் ஆகும். இருப்பினும், 2011 ஆம் ஆண்டில் மாயாவதி உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க விரும்பியதால், இப்போது அவர் செயலைக் கண்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. EWS இட ஒதுக்கீட்டை பாஜகவின் தேர்தல் வித்தை என மாயாவதி சொன்னாலும், பாஜக அரசின் EWS இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை ஆதரித்துள்ளார். மாயாவதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைப்பதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அக்கட்சியில் ஏதோ பெரிய குறை உள்ளது. அதற்காக பகுஜன் சமாஜ் கட்சி எதிர்காலத்தில் மிகப் பெரிய விலையை கொடுக்கும்.

சில மாதங்களுக்கு முன் பாஜக அரசு SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயன்றது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தனர். இந்தியா முழுவதும் பரவிய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானர். பாஜகவுக்கும், அவர்களின் எடுபுடிகளுக்கும், தங்கள் பலத்தை காட்ட வேண்டிய நேரம் இது. SC, ST, OBC மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் இது. 

தற்போதுள்ள மோசமான சூழ்நிலையில் பாஜக அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் எந்த அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் இன்றைய உண்மையான நிலவரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் சமூக மக்கள் நிச்சயமாக அமைதியாக இருக்கக் கூடாது.

- ஜிதேந்திர சுனா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் Study of Discrimination and Exclusion ஆய்வு மையத்தில் M.Phil ஆராய்ச்சியாளராக உள்ளார். Birsa Ambedkar Phule Students Association உறுப்பினராகவும் உள்ளார்.

நன்றி: The Round Table India இணைய தளம் (2019, ஜனவரி 8 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: ஆயிஷா உமர்

Pin It