save educationகொரொனா காலத்தில்:

1. கொரோனா தடுப்பூசியை கல்லூரி மாணவர்களுக்கு கால நிர்ணயம் செய்து விரைவாக அந்தந்தக் கல்லூரிகளிலேயே தடுப்பூசி மையம் அமைத்து செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டுகின்றோம்..

2. ஒவ்வொரு கல்லூரியும் அதற்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுக்க வேண்டுகிறோம்.

3. கொரொனா காலத்தில் ஒவ்வொரு கல்லூரியும் தங்கள் விருப்பத்திற்கேற்ற முறையில் தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதைத் தவிர்த்து தரமான ஒரே மாதிரியான தேர்வு முறையை அரசு முன் வைக்கக் கோருகின்றோம்.
பணி நியமனங்கள் & ஆசிரியர் நிலை மேம்பாடு

4. தமிழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர் பொறுப்புகளுக்கான காலிப் பணியிடங்கள் கல்வியக நிர்வாகத்தினராலும், அரசைச் சார்ந்தவர்களாலும் பல இலட்சம் இலஞ்சம் பெற்றே நிரப்பப்பட்டுள்ளன. இது குறித்து ஒரு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.

5. சுயநிதிக் கல்லூரிகளிலும் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற கட்டளையிட வேண்டுகின்றோம்.

6. கெளரவ விரிவுரையாளர்களாக தகுதியற்ற பலர் நியமிக்கப் படுவதை தடுக்க நடவடிக்கைத் தேவை.

7. கல்லூரி, பல்கலை ஆசிரியர் அலுவலர் நியமனங்களில் இடைத் தரகர்கள் எண்ணற்றவர்கள் இலஞ்சம் பெற்று விதி மீறல்கள் செய்து வருகின்றனர். இடைத் தரகர்களாக சில ஆசிரியர்களாக இருப்பது வருந்தத் தக்க விஷயம். அவர்கள் மேலும் பதவி உயர்வும் பெறுவதற்கு முயல்கின்றனர். இதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகின்றோம்.

8. தற்போது பல்கலைகளில் பின் பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையில். சமூக நீதியை மறுக்கும் நிலை உள்ளது. துறை வாரியாக ரோஸ்டர் பின்பற்றப்படுகின்றது. இதனால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றன. எனவே தற்போது பின்பற்றப்பட்டு வரும் துறை வாரியான இட ஒதுக்கீட்டு முறையைக் கைவிட்டு, பல்கலைக் கழகத்திற்கு முழுவதுமான ரோஸ்டர் (SINGLE UNIT) முறை பின் பற்ற கோருகின்றோம்.

9. பலகலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் தங்களின் விருப்பப்படி ஆட்சிகுழு உறுப்பினர்களை நியமிக்கும் போக்கு உள்ளது. அது தடுக்கப்பட்டு, நியமன ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் பணி மூப்பின் அடிப்படையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுகின்றோம்.

10. பல சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்களிடம் முழு கல்விக் கட்டணத்தைப் பெற்ற பின்னும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமலும், சிலர் அரை குறை ஊதியம் வழங்கியும் வருகின்றனர். பல சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்க்கைக் கேள்விக் குறியாக ஆகியுள்ளது. ஊதியங்களும் சரியாக வழங்கப்படுவதில்லை. அரசு இதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உடனடியாக முறையான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற செயல் பட வேண்டுகிறோம்.

11. சுயநிதிக் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பணி வரன் முறை செய்ய கட்டளையிட வேண்டுகின்றோம்.

12. சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் பணிச் சூழல் மேம்பட சுயநிதிக் கல்லூரிகள் ஒழுங்காற்று சட்டம் ஒன்றை நிறைவேற்றக் கோருகின்றோம்.

13. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இலஞ்சம் பெற்றுத் தேவைக்கு அதிகமாக பணியிலமர்த்தப்பட்ட பேராசிரியர்களைத் தமிழகத்தின் பிற கல்விக் கூடங்களில் திணிப்பதை நிறுத்தவேண்டும். இதனால் அந்தந்தப் பல்கலைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் புதியவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. பணியிலமர்த்த அண்ணாமலைப் பல்கலையில் இலஞ்சம் வாங்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

14. .தமிழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நேர்மையான, வெளிப்படையான முறையில் விரைவாக நிரப்ப வேண்டுகின்றோம்..

15. தற்காலிகப் பணியில் அமர்த்தப் படும் பல்லாயிரக் கணக்கான கெளரவ விரிவுரையாளர்கள் மிகவும் குறைந்த ஊதியத்தையேப் பெறும் அவல நிலை உள்ளது. பல்கலைக் கழக மான்யக் குழு பரிந்துரைகளின் படி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 50,000 ரூபாய் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

16. அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதில் பல்கலைக் கழக மான்யக்குழுவின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாகக் கடை பிடிக்கவேண்டும். அதை விடுத்து இலஞ்சம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பின் கதவு வழியாக பணியிலமர்த்தும் முயற்சி தடுக்கப்படவேண்டும்.

17. பல்கலைக் கழக மற்றும் கல்லூரி பேராசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற விண்ணப்பதாரரின் பல்வேறு பங்களிப்புகளுக்கு மதிப்பெண்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அவற்றை கட்டாயமாக பின்பற்றுவதுடன் விண்ணப்பதாரர் பெறும் மதிப்பெண்களையும் வெளிப்படையாக வெளியிடவேண்டும் மேலும் நேர்முகத் தேர்வில் அவர்களுக்கு மதிப்பெண் அளிப்பதற்கான வரையறைகளும், அவற்றிற்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் உடனடியாக அறிவிக்கப்படவேண்டும். வெளிப்படைத் தன்மையே நேர்மையான நியமனத்திற்கு வழி வகுக்கும்.

நிதி & கட்டணங்கள்

18. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட நடவடிக்கைகள் வேண்டும்.

19. பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் ரூசா (RUSA), எனும் நிதி வரவு சரியான முறையிலே செலவிடப்படுவதில்லை. அதைச் செலவிடும் முறையில் வெளிப்படைத் தன்மை கண்டிப்பகத் தேவை. மேலும் பத்தாண்டுகளுக்கு மேலாக சில பேராசிரியர்களே இதன் பொறுப்பாளர்களாக செயல்படுவதும் தவிர்க்கப்பட்டு சுழற்சி முறையில் பொறுப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். இம்மாதிரியான முக்கியமான துறைகளுக்கானப் பொறுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படுவது கட்டாயமயமாக்கப்படவேண்டும்.

20. RUSA நிதி ஒவ்வொரு பல்கலையிலும் எப்படி இதுவரை செலவு செய்ய்யப்படுள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை ஒவ்வொரு பல்கலைக் கழகமும் வெளியிடவேண்டுகின்றோம்.

21. கலைஞரின் ஆட்சிக் காலத்தில் உயர்கல்வியில் பயிற்றுவிக்கும் கட்டணம் (tuition fee) வசூலிக்கக்கூடாது என்று அரசாணை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெவ்வேறு பெயர்களில் பெரும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்,.

22. பல பல்கலைகளில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படாமலே இருக்கின்றன. அதை உடனடியாக வழங்க நடவடிக்கைத் தேவை.

23. உதவி பெறும் கல்லூரிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு வசூல் செய்து வருகின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்தி மாணவர்களுக்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்தும் வகை செய்யவேண்டும்.

24. பல பல்கலைகளில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப்பெறாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். இதை சரி செய்ய போதிய நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு பல்கலைக் கழங்களுக்கு வழங்க வேண்டும்.

கல்வியில் ஜனநாயகச் சூழல் மேம்படல்

25. இட ஒதுக்கிட்டில் டி.ஆர்.பி மூலம் ஒரு கல்லூரிக்கு பணியில் சேர்ந்து விட்டு பின் சிபாரிசின் மூலம் தாங்கள் விரும்பும் கல்லூரிக்கு இடம் பெயரும் சூழலும் உள்ளது. அவ்வாறு இடம் பெயரும் போது, செல்லும் கல்லூரியின் ரோஸ்டர் முறை புறம் தள்ளப்படுகின்றது. எனவே இடமாற்றம் என்பதும் இட ஒதூக்கீட்டு முறையிலேயே நடை பெறவேண்டுகின்றோம்.

26. டிரான்ஸ்பர் கவுன்சிலின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை (TRANSPARENCY) உருவாக்கக் கோருகின்றோம்.

27. தமிழகப் பல்கலைக் கழகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கல்வி குழு, ஆட்சிக்குழு போன்றவற்றில் இடம் பெறும் வகையில் தேர்தல்கள் நடத்தி ஜனநாயக மாண்பைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

28. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தை தமிழ் வளர்ச்சித்துறை பொறுப்பிலிருந்து விடுவித்து தமிழக அரசு உயர்கல்வித் துறையின் பொறுப்பிற்கு கொண்டுவர வேண்டும்.

29. Central Institute of Classical Tamil எனும் செம்மொழி நிறுவனம் சரியான முறையில் இயங்காமல் இருந்து வருகின்றது. தற்போது சென்னையில் உள்ள இந்த நிறுவனத்தை மைசூருக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் நடைபெறுகின்றன.

அம்முயற்சிகள் தடுக்கப்பட்டு, இவ்வமைப்பு தமிழகத்திலேயே செவ்வனே இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

30. மத்திய அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர்கல்வியை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர போராட வேண்டும்.

தகுதித் தேர்வு

31. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வுகளை இல்லாமல் ஆக்கவேண்டும்.

32. சில பல்கலைகள் இது காறும் தமிழகத்தில் நடத்தியுள்ள ஸ்லெட் தேர்வில் சிலர் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்துள்ளதாக குற்ற சாட்டுகளும். மனக் குமுறல்களும் உள்ளன. இந்தக் குறையை நீக்கும் வண்ணம் ஸ்லெட் (SLET) நுழைவுத் தேர்வு நடத்துவதற்கென தனி அமைப்பை (BOARD) உருவாக்குவது அவசியம்.

33.TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை தேவை. மேலும் பல்கலைக் கழகங்களுக்கான ஆசிரியர் நியமனகளையும் ஆசிரியர் தகுத் தேர்வின் அடிப்படையிலேயே செய்ய பரிந்துரைக்கப்படுகின்றது.

மாணவர் நலனும், ஆரோக்கியமான கல்வி சூழலும்

34. தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் கல்வியை காவிமயமாகவும், கார்ப்பேரட் வசமாகவும் ஆக்க முயற்சிப்பதை முற்றிலும் தடுக்கவேண்டும். தற்போதைய தேசியக் கல்விக் கெள்கையை நிராகரிப்பதுடன், நமது மாநிலத்திற்கான உயர்கல்விக் கொள்கையை கல்வியாளர்கள்,கல்விச் செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சங்கங்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து உருவாக்க வேண்டும்.

35. CHOICE BASED CREDIT SYSTEM என்கின்ற விருப்பப் பாடத்தேர்வு கொண்ட கல்வித் திட்டம் அதற்குரிய நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை. கல்லூரிகளில் கட்டாயமாக திணிக்கப்படும் கல்வித் திட்டங்களையே விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யும் சூழல் உள்ளது. எனவே இது குறித்த விரிவான உரையாடலும், தகுந்த செயல்பாடும் தேவை.

36. அரசு கல்லூரிகளிலும் வருடாவருடம் வேலை வாய்ப்பு வழங்கும் வளாக நேர்காணல்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுகின்றோம்.

37. பாட திட்டங்களிலேயே போட்டித் தேர்விற்கான தாள்களை இடம்பெறச் செய்து சிறப்புப் பயிற்சியும் அளிக்கலாம்.

38. கல்லூரிகளிலும் வசதியற்ற மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை அமல் படுத்தக் கோருகின்றோம்.

39. தேசீயத் தர மதிப்பீட்டு நிர்ணய குழுவின் பரீசிலனைக்கு தனியார் கல்லூரிகளின் வசதிகளுக்கும் அரசு கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளுக்க்கும் பெரும் வேறுபாடுகள் இருப்பதால் அரசு கல்லூரிகள் பாதிக்கப்படுகின்றன. தனியார் கல்லூரிகள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். இந்த வேறு பாட்டை நீக்காவிடில் எப்போதும் அரசு கல்லூரிகள் பின் தங்கியே இருக்க நேரிடும்.

40. ஒவ்வொரு கல்லூரியிலும் பட்டியிலின மற்றும் பழங்குடி மாணவர்களின் குறை தீர்க்கும் வகையில் தனியாக ஒரு SC &ST Cell உருவாக்கப்பட வேண்டும்.

41. பல பல்கலைக் கழகங்களில் ஆளுநரின் மூலம் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் பலர் பல கெளரவப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மூலம் உயர் கல்வி காவிமயமாக்கும் செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே இதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் தேவை.

42. தமிழகத்தின் பண்பாடு, அறிவியல் சிந்தனை, சமூக நீதிக்கான வரலாறு, பகுத்தறிவு இயக்கங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்த பாட திட்டங்கள் உயர்கல்வியின் எல்லா துறை படிப்புக்களிலும் கட்டாயப் பாடமாக ஆக்கப்படவேண்டுகின்றோம்.

43. உயர்கல்வி மாணவர்கள் சீரிய முறையில் தமிழ்நாட்டின் பண்பாடு, கலை, இலக்கிய மேம்பாட்டிற்கான ஆய்வுகளை மேற்க்கொள்ளும் வகையில் சிறப்பு நிதி உதவி வழங்கவும் கோருகின்றோம்.

44. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறைகளை தீர்க்க தனியாக குறை தீர்க்கும் அதிகாரம் கொண்ட ட்ரிப்யூனல் போன்ற உயர்மட்ட அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

45. திருவள்ளுவர் பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை கைவிடவேண்டும்.

46. மாணவர் பேரவைத் தேர்தல்களை முறையாக ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்த ஆணையிடவேண்டும்.

47. உயர் கல்வி மேம்பட மக்களின் ஆலோசனைகளைப் பெற வகை செய்ய வேண்டுகின்றோம்

- இரா.முரளி, மாநில அமைப்பாளர்

Pin It