தேசிய கல்விக் கொள்கை - 2019 வெளியிடப்பட்டது பற்றி...

சென்ற ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் குழுவின் தொடர்ச்சியாகவே இப்போது வெளியிடப்பட்டிருக்கும் கஸ்தூரி ரங்கன் குழு வகுத்திருக்கும் கல்விக் கொள்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 2018 டிசம்பரில் அரசிடம் அளிக்கப்பட்ட இந்த வரைவு இந்த ஆறு மாதங்களில் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்படாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரியாதவர்கள் இதன் மீது கருத்து சொல்லக்கூடாது என்று இந்த அரசு நினைக்கிறதா? அதிலும் ஒரு மாத காலத்திற்குள் எப்படிக் கருத்துச் சொல்ல முடியும்? குறைந்தபட்சமாக அட்டவணை 8 இல் இருக்கும் 22 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். கால அவகாசத்தை 6 மாதங்களாக அதிகரிக்க வேண்டும்.

prince kajendra babuமும்மொழிக் கொள்கையைத் தாண்டி இக்கல்விக் கொள்கையில் இருக்கும் அபாயங்கள் என்னென்ன?

ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்கள் 3 வயதிலிருந்தே முறைப்படியான கல்வி என்று ஆரம்பிக்கிறார்கள். இது நியாயமற்ற அணுகுமுறை. L.K.G தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி என்று சொல்கிறார்கள். இந்த அடிப்படைக் கல்வி முடிந்த பிறகு ஒரு தேர்வு. அதற்குப் பிறகு 5 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு, 8 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு என்கிறார்கள். இப்படிப்பட்ட தேர்வுகள் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை. ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு பன்னிரண்டாம் வகுப்பு வரை 8 பருவத் தேர்வுகள். இதை இடைநிலைக் கல்வி என்று மாற்றுகிறார்கள்.

இந்த கல்வி முறை தான் மாணவர்களின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு உதவும் என்று சொல்லிவிட்டு, பள்ளிக் கல்வி என்பது கல்லூரியில் சேர்வதற்கான தகுதி இல்லை என்று சொல்கிறார்கள். கல்லூரியில் சேரவேண்டும் என்றால் தேசியத் தேர்வு முகமை(NTA) நடத்தும் திறனறியும் தேர்வு எழுதி அந்த மதிப்பெண்ணின் அடிப்படையிலே கல்லூரியில் இடம் அளிக்கப்படும். சிந்தனைத் திறனோடு மாணவர்களை வளர்க்கும் கல்விக் கொள்கை என்று அவர்களே சொல்லும் பட்சத்தில் மாணவர்கள் ஏன் அதன் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கப்படக்கூடாது? எதற்காக இன்னொரு திறனறியும் தேர்வு? இவர்களுடைய நோக்கமெல்லாம் மூன்றாம் வகுப்பு தொடங்கி தொடர்ந்து மாணவர்களை வடிகட்டுவது. பள்ளிக் கல்வியின் போதே தொழிற்கல்வியைப் பயிலச் சொல்கிறார்கள். கல்லூரியில் அனைத்துத் தரப்பினரும் சேருவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடுகள்.

இதே போல் போதுமான கட்டுமான வசதிகள் இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களோடு இணைத்துவிடுவது. பட்டப் படிப்புக்கான காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றியிருப்பது என கல்வியைச் சீர்குலைக்கும் நோக்கோடு இக்கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது.

பாடத்திட்டங்கள், பாடநூல்கள் இவை பற்றி இந்தக் கல்விக் கொள்கை என்ன சொல்லியிருக்கிறது?

பாட நூலைப் பொறுத்த வரையில் தேசிய அளவில் ஒரு பாட நூலை உருவாக்கிக் கொடுத்துவிடுவார்கள். மாநிலங்கள் வேண்டுமென்றால் கூடுதலாக சிலவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மாநிலங்கள் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல், பாட நூல்களை உருவாக்குதல் என எல்லா உரிமைகளும் போய், ஒற்றை இந்தியா, ஒற்றைக் கல்வி, ஒற்றைப் பாடநூல், ஒற்றைத் தேர்வு என உருவாக்குவதே இந்தக் கல்விக் கொள்கை. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இந்தியா போன்ற பரந்துபட்ட பன்மைத்துவம் கொண்ட நாட்டில் மொழி அழிப்பை, பண்பாட்டு அடையாள அழிப்பைத்தான் இது ஏற்படுத்தும்.

சமஸ்கிருதத்திற்கு இதில் எவ்வள்வு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது?

சமஸ்கிருதத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்பது இந்த கல்விக் கொள்கையில் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவினுடைய மொழி வளர்சிக்கும், பன்முக ஒருமைப்பாட்டிற்கும் அளப்பறிய பங்களிப்பு செய்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இது ஏற்கத் தகாத வாதம். வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழிகள் இருக்கும் நாட்டில், சமஸ்கிருதம் எப்படி எல்லா மொழிகளையும் வளர்ப்பதற்குப் பங்களிப்புச் செய்திருக்க முடியும். பள்ளிக்கல்வி தொடங்கி கல்லூரி வரைக்கும் சமஸ்கிருதத்தைச் சிறப்பாகப் பயிற்றுவிக்க அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 க்கு எதிரானது. எப்படி ஒரு மொழிக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியும்? மற்ற மொழிகளை அழித்து சமஸ்கிருதததை இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக மாற்றுவது, எல்லோரையும் ஹிந்தி பேசச் செய்வது போன்றவற்றை இந்தக் கல்விக் கொள்கை உள்ளடக்கியிருக்கிறது.

சமூக நீதி எந்த அளவிற்குப் பாதிக்கப்படும்?

இக் கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது. இட ஒதுக்கீடு பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. கல்வியியல் கல்லூரி பற்றி பேசும்போது மட்டுமே இடஒதுக்கீடு பற்றி சொல்கிறார்கள். மற்ற எல்லா இடங்களிலும் “தகுதி”(Merit) பற்றியே பேசியிருக்கிறார்கள். அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் தொடரும் என்று எந்த உத்தரவாதத்தையும் இந்தக் கல்விக் கொள்கை தரவில்லை.

ஒட்டு மொத்தமாக இந்தக் கல்விக் கொள்கையை நாம் எப்படிப் பார்ப்பது?

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் பொதுச் சேவையின் கீழ் கையெழுத்தான ஆவணத்தின் சரத்துகளுக்கு ஏற்ப இந்தக் கல்விக் கொள்கை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் இந்தக் கல்விக் கொள்கை இல்லை. சந்தைப் படுத்தும் பார்வையில் தான் இந்தக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது.

நேர்காணல் - மா.உதயகுமார்

Pin It