anna_karunanidhiதனி ஈழம் ஒன்றே நிரந்தர தீர்வு என்று பெரும்பான்மை ஈழத்தமிழர்களும் பெரும்பான்மை தமிழக தமிழர்களும் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், பெரும்பான்மை வாக்கு முறை தேர்தலில் வென்று பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு காட்டி சனநாயக ஆட்சி அமைப்பில் நம்பிக்கை கொண்டிருக்கும் காங்கிரசும் தி.மு.க.வும் சற்றும் ஒவ்வாத முறையில் இவர்களே ஒரு முடிவெடுத்து தன்னிச்சையாக ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி என்று எப்படிதான் பிதற்ற முடிகிறதோ தெரியவில்லை.

அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக துரோகம் ஒன்றையே சந்தித்து வரும் ஈழத்தமிழர்கள் இனியும் சிங்களவர்களுடன் ஒன்றுபட்டு வாழ இயலுமா? அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தமிழர்கள் தமிழகத்தில் இன்னுமா உள்ளார்கள்? அல்லது அங்கு நொந்து போய் அகதியாக தமிழகத்திற்கு வரும் அவர்களுக்கு இந்திய குடியுரிமைதான் வாங்கி தர வக்கிருக்கிறதா? வாய்ப்பிருக்கிறதா?

தி.மு.க. இயற்றிய தீர்மானமானது ராமதாசுக்கும், செயலலிதாவுக்கும் வீம்பாக தயாரித்த தீர்மானம் போல் தெரிகிறது. இவர்கள் இயற்றிய தீர்மானத்தால் ஏற்கனவே குழம்பியுள்ள தமிழர்கள் (தி.மு.க. தொண்டனும்தான்) இன்னும் குழம்பி போயிருக்கிறார்கள். ராமதாசும் செயலலிதாவும் எதிராகவே சதி செய்தாலும் அதை முறியடிக்கும் திறமையில்லாத இயக்கமா, தி.மு.க.? இவர்களின் தீர்மானம் மூலம் அ.தி.மு.க. வின் நிலைதான் தங்கள் நிலையென்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

பொங்கியெழுந்த தமிழரின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும் இல்லை, மருந்தாகவும் அமையவில்லை, தி.மு.க. வின் தீர்மானம். மாறாக, உணர்வுகளை மரத்துப்போக செய்துள்ளது. இப்படி ஈகோ பார்க்கும் விசயமாகிப் போனதா ஈழத்தமிழர் விசயம்?

கலைஞரின் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தி.மு.க.வின் நிலைக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். அதே போல் தி.மு.க. தொண்டர்களும் தைரியமாக கலைஞருக்கு கடிதம் எழுத வேண்டும். அவர் எடுத்த நிலையானது வரலாற்று பிழையானது என்பதை எடுத்துக்கூற வேண்டும். குறளோவியம் தீட்டிய கலைஞர் அறியாதது அல்ல, வள்ளுவன் கூறியதை அவருக்கு நாம் நினைவு படுத்த,

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

உலகத்தமிழர்கள் கலைஞரை தமிழினத் தலைவராக நினைத்துக் கொண்டிருக்கையில் அவருடைய செயல்பாடுகள் இன்னமும் தாம் முதலில் ஒரு அரசியல்வாதிதான் என்பதை பறைசாற்றுவதாகவே உள்ளது. அதுவே அவருக்கு விருப்பம் போலவும் தெரிகிறது. பன்முக தன்மை கொண்டு பரிமளிக்கும் கலைஞரென்று அறிவுசீவிக்கள் நினைத்துக்கொண்டிருக்க வரலாறு அவரை சாதாரண ஒரு முழுநேர அரசியல்வாதியாகத்தான் பதிவு செய்யும்.

கலைஞர் அனுதாபிகளும் ஆதரவாளர்களும் அவர் எடுக்கும் நிலைகளுக்கு தாங்களாகவே ஏதாவது ஒரு கற்பிதம் செய்து கொண்டு மற்றவர்களையும் எவ்வளவு நாட்கள்தான் சமாளித்து வருவது. எனவே அவரது அபிமானிகள் அவருக்கு எடுத்துரைக்க முன் வர வேண்டும். அவர் செயல்பாடுகளை நியாயப்படுத்தி ஒத்து ஊதுவார்களேயானால் அவரை வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவு செய்ய துணை போன செயலாகும்.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று முரசொலி விளம்பரம் கூறுகிறது. அது உண்மையாக வேண்டுமானால் பதவி, ஆட்சி போன்றவற்றை துச்சமென துறந்து, காங்கிரசாரையும் உதறி தள்ளி இன்றைய செய்தியாக்கி நாளைய வரலாறாக்க வேண்டும்.

தமிழனின் ஆட்சியை கவிழ்க்க சதி என்று கூறும் முதல்வரே, தமிழின தலைவர் என்று கூறி கொண்டு தமிழனுக்கு நல்லது செய்ய முடியாமல் ஆட்சியில் இருந்துதான் என்ன? இல்லாமல் போனால்தான் என்ன? அழிந்து பட்டு போகும் தமிழினத்தை தடுக்க முடியாத இப்படியொரு ஆட்சியும் பதவியும் தேவைதானா? மனமிருந்தால் கலைஞர் இதனை தனது வாழ்நாள் சாதனையாக கூட நினைத்துச் செய்யலாம். முதல்வரே, தாங்கள் செய்யாத அரசியலா? வகிக்காத பதவியா? ஆளாதா ஆட்சியா? தங்களுக்கு உரைக்கிறதோ இல்லையோ எங்களுக்கு உரைக்கிறது.

தமிழக தமிழர்கள் மட்டுமல்லாது உலக தமிழர்களும் யாரும் சரியில்லையென்று விரக்தியின் விளிம்பில் நின்றுள்ளனர். இத்தருணத்தை தக்க வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவரவர் திறமையை பொருத்தது.

அரசியல் ஆதாயாம் பார்க்காத பெரியார் நடத்திய திராவிட கழகத்தின் தாக்கத்தினாலேயே தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. முதல்வரே, தி.மு.க. கட்சியானது தங்களது காலத்திலேயே மூழ்கும் கப்பலாவதை அனுமதிக்காதீர்கள். ஆளுங்கட்சியாக இருந்துக் கொண்டு யாருக்கு எதிராக கூட்டம் நடத்துகின்றீர்களோ தெரியவில்லை. அரசியல் ஆதாயத்தை மட்டுமே பார்க்காமல் தி.மு.க.வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகவேண்டிய சூழ்நிலையில் இப்படி தடுமாறி நிற்பதை காண சகிக்கவில்லை.

கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்து பயனுமில்லை.

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It