இன்று இந்தியாதான் ஈழத்தில் போரை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிங்களனே விட்டாலும் இந்தியர்கள் விடப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த 'விதி'யை நொந்துகொண்டிருக்கும்போது பளிச்சென்று மின்னியது ஒரு உண்மை!

prabakaranவரலாறு மீண்டும் மீண்டும் புதிய வடிவங்களிலே நிகழ்கிறதென்று மார்க்ஸ் சொன்னார். ஆம், சற்றே நாம் கூர்ந்து நோக்கினால் தற்போது ஈழ யுத்தமும் ராமாயணத்தின் வரலாற்றுச் சுழற்சி என்பது புரியும். இப்போது நடப்பது ராமாயணத்தின் மறுபதிப்பு என்பது எப்படி என்பதை நாம் அலசும் முன்பு, சில தெளிவுகளை ஏற்படுத்திவிட்டு முன்செல்வோம்.

ராமாயணம் எப்போது நடந்தது, எங்கே நடந்தது, ராமன் என்பவன் யார் என்பதெல்லாம் இன்னும் தீர்க்கப்படாத சிக்கல்கள் என்றாலும் அது ஆரிய ராமணுக்கும், திராவிட ராவணனுக்குமான போர் என்பது தான் பரவலான நம்பிக்கை. அதை ஜவகர்லால் நேருவே உறுதிபடுத்தியுள்ளார். அது நடந்தது இலங்கையில் என்பதும் பொதுவான நம்பிக்கை.

ராஜீவ் காந்தியை யார் கொன்றார்கள் என்பதும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை. தற்கொடைக் கொலையாளி தாணு என்ற ஈழத்துப் பெண் என்பதைத் தவிர, இதற்கு உடந்தையாக யார் இருந்தார் என்பது போன்ற மற்றவை எல்லாம் உறுதிசெய்யப்படாத செய்திகளே! ஆனால், விடுதைப்புலிகள் தான் கொன்றனர் என்பது பரவலாக ஆளும் வர்க்கத்தால் நம்பப்படும் செய்தி. இவற்றின் அடிப்படையில் தான் இந்த புதிய ராமாயணத்தின் கூறுகளை இங்கு நாம் அலசப் போகிறோம்.

ராமாயணத்தின் முகாமையான பாத்திரங்கள் ராமன், லட்சுமணன், சீத்தா, சூர்ப்பநகை, ராவணன், விபீடனன், வாலி, சுக்கிரீவன், அனுமான். இந்த பாத்திரங்களின் புதிய அவதாரங்களும் அவை நடத்தும் இந்த புதிய ராமாயண அரங்கேற்றத்தையும் காண்போம்.

காட்சி 1.

சூர்ப்பநகை ராம, லட்சுமணர்களை அணுகி தன்னை மணஞ்செய்ய கோருகிறாள். தன்னை நேசித்து வந்தவளை அவர்கள் மூக்கை அறுத்து அவமானப்படுத்துகின்றனர்.

மறு பதிப்பில்;

தங்களைக்காக்க வேண்டி ஈழத்தமிழர், தாங்கள் நேசித்த ராஜீவைக் கோருகிறார்கள். ராஜீவ் அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொல்வதோடல்லாமல், ராணுவ அட்டூழியங்களால் தமிழ்ப் பெண்கள் கற்பும், உயிரும் சூறையடப்பட்டது தான் மிச்சம். தமிழர்களின் மூக்கறுக்கிறார் ராஜீவ்!

காட்சி 2.

தன்னைக் காதலிக்க கேட்ட தன் தங்கையை மூக்கறுத்து அவமானப்படுத்திய ராமனின் மனைவியான சீதையை கவர்ந்து செல்கிறான் ராவணன். ஆனால், சீதையிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்கிறான். தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோராத ராமன், ராவணனை பழிதீர்க்க முற்படுகிறான். ராமாயணம் ராவணனை ஞாய உணர்வுள்ளவனாகத் தான் காட்டுகிறது.

மறுபதிப்பில்;

தஞ்சம் புகுந்த தம்மக்களை சீரழித்த ராஜீவை, ராவணனாகிய பிரபாகரன் 'தூக்கி' விடுகிறார். மற்றபடி, இந்தியாவுக்கெதிராக எள்ளளவும் செயல்படாமல் கண்ணியத்தோடு நடந்து கொள்கிறார் பிரபாகரன். தனது தவறை உணரத் திராணியில்லாத சோனியாவின் இந்தியா, பிரபாகரனை பழிதீர்க்கிறேன் என்று ஈழ மக்களைப் பழிதீர்க்க முற்படுகிறது. அனைத்துலகமும், LTTE is the most disciplined army என்று தான் சொல்கிறது..

காட்சி 3.

sonia_gandhiசீதையை மீட்க தெற்கே வரும் ராமன் தனது இலங்கை பழி தீர்ப்பிற்கு சுக்கிரீவன் துணையை நாடுகிறார். சுக்கிரீவன் தனது ஆட்சிக்கு குறுக்கேயுள்ள வாலியை வதம் செய்ய உதவினால், ராமனோடு சேர்ந்தியங்க இசைகிறார். ராமன் வாலியை முதுகில் குத்திக் கொல்கிறார்.

மறு பதிப்பில்;

தனது ஆட்சிக்கு ஆபத்தாயுள்ள தமிழ்த்தேசிய அமைப்புகளை இந்திய இறையண்மை என்ற 'ராஜீவை மீட்கும் சோனியா'வின் நட்பாயுதத்தால் ஒடுக்குகிறார், கருணாநிதி என்ற சுக்கிரீவன். சோனியாவின் தலைமையில் ஆரியக் கூட்டம், தமிழனை ஒழிக்க, திராவிடனையே பயன்படுத்துவதுதான் 'முதுகில் குத்தும் ஆரியத் தந்திரம்'. இங்கு வாலியின் பாத்திரத்தில் தமிழ்த்தேசிய அமைப்புகள், சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் போன்றோர்கள் தான்.

காட்சி 4.

ராவணனின் தம்பி விபீடணன், ஆட்சியைப் பிடிக்க ராமன் பக்கம் வந்து இன துரோகியாகிறான். ராவணனின் பலம், பலகீனங்கள் ராமனுக்கு தெரிகிறது.

மறு பதிப்பில்;

பிரபாகரனின் தம்பி போன்ற கருணா சோனியாவின் இந்திய ஒற்றனாகிறான். புலிகளைக் காட்டிக் கொடுக்கும் விபீடனன் ஆகிறான்.

காட்சி 5.

அனுமான் வான்வழிச் சென்று இலங்கையில் உளவு பார்க்கிறான். இலங்கைக்கு எதிரான போரில் ஈடுபடுகிறான்.

மறு பதிப்பில்;

தஞ்சையிலிருந்து இந்திய விமானதளம் ஈழத்தில் வான்வழி, தொடர்ந்து உளவுபார்க்கிறது, அனுமன் செய்தது போல. ஆயுதங்கள் வழங்கி போரில் ஈடுபடுகிறது.

காட்சி 6.

உக்கிரமான ராம, ராவண யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மறு பதிப்பில்;

உக்கிரமான ஈழ இறுதிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.


ராமனின் இலங்கைப் போர் சீதையை மீட்கத்தான். ஆனால், சோனியாவின் இந்தப் போர் எதற்காக என்று கேட்கலாம். ராஜீவை மீட்கமுடியாதென்று சோனியாவுக்கு தெரியாதா என்ன? ஆனால், சற்று உற்று நோக்கினால் இந்த இரண்டு யுத்தங்களுமே பழிவாங்கும் யுத்தங்களே. எப்படி என்கிறீர்களா? சீதை, தனது தூய்மையை தீக்குளித்து நிறுவியிருந்தாலும், ராமனின் மனப்புழுக்கம் அடங்கவில்லை. சிறிது காலமே கூடிவாழ்ந்த அவன் சீதையைக் காட்டிற்கு அனுப்பிவிடுகிறான். அவளோடு அவன் வாழவில்லை. ஆக, ராமனது உண்மையான நோக்கமே பழிவாங்கல் தான். அதைத்தான் இன்று சோனியாவும் செய்கிறார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது, சமஸ்கிருத எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, கோயிலில் தமிழில் அர்ச்சனை, இட ஒதுக்கீடு, 27% உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, பகுத்தறிவு இயக்கம், தனித்தமிழ்நாடு கோரிக்கை என்று, ஆரியர்களை மனக்கலக்கம் செய்த தமிழரது போராட்டங்களுக்கு, பழி வாங்கும் செயல் தான் இந்த ஈழப் படுகொலையும், யுத்தமும். இந்தியத் தமிழர் மீதுள்ள கோபத்தை, எந்தப் பாவமும் அறியாத ஈழத் தமிழரிடம் காண்பிக்கின்றனர், சோனியா தலைமையிலான இந்திய ஆரியக் கூட்டம்.

சுக்கிரீவனான கருணாநிதி அன்று எல்-திமோர் போல ஈழத்திற்கு தீர்வு வேண்டும் என்றார். ஆனால், இன்று அதைப் பற்றி அணுவளவும் பேசுவதில்லை. மாறாக, ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வென்கிறார். பார்ப்பனீயமும், பதவியும், பணமும் ஒருவனுக்கு என்னவெல்லாம் கெடுதல் செய்யும் என்பதற்கு இதைத் தவிர வேறு சான்றும் வேண்டுமோ?

1948 முதல் இலங்கையில் அரசின் ஆதரவோடு தமிழினப் படுகொலை தொடர்ந்து நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்களும் இந்த சுக்கிரீவன் அரசின் கைதுகளால் ஒடுக்கப்டுகிறது அல்லது திட்டமிட்டே முனைமழுக்கப்படுகிறது. இந்த துரோகம் கருங்கல்லில் பொறிக்கப் படவேண்டியது. நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தும் பார்ப்பனீயத்தின் 'சாணக்கியம்' இது தான். இந்தப் புதிய ராமாயணப் பதிப்பில் கடைசிக் காட்சி என்ன என்பது தான் நமது எல்லோரின் எதிர்பார்ப்பு. பழைய ராமாயணத்தில் ராவணன் அழிக்கப் படுகிறான்.

கார்ல் மார்க்ஸ் சொன்னார், வரலாறு என்பது சுழற்படி போன்றது என்று. வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பித் திரும்பி நிகழும், ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு படி மேலே சென்றிருக்கும் என்றார். அப்படியென்றால், அந்த மேல் படி என்பது என்ன? ராவணனாகிய பிரபாகரனின் வெற்றியா?

வேறு பல மாற்றங்களும் இந்த இரண்டு ராமாயணங்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளது. அன்று போல் இன்று தமிழர் அனைவரும் ஆரியர்களைக் கடவுளாகக் காண்பதில்லை. தமிழரிடம் படிப்பறிவுள்ளது. மிகப் பெரும்பாண்மையானவர்கள் ஈழ விடுதலையை ஆதரிப்பவர்களே! அன்று தமிழகத்தில் ஆரியர்கள் இல்லை! ஆனால், இன்று கணிசமான ஆரியர்கள் உள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் ஈழ எதிரிகள்! ஈழ சிக்கலைக் கொச்சைப்படுத்தி, நம்மக்களையே ஈழத்திற்கெதிராக நிலைப்பாடு எடுக்கும் அளவுக்கு, நமது பணத்தை வைத்தே, பத்திரிகை மூலமாக பரப்புரை செய்பவர்களும் இவர்களே!

இந்த மாறுபட்ட சூழல்கள் வரலாற்றுச் சுழல்படியை, மார்க்ஸ் சொன்னது போல மேல் நோக்கி எடுத்துச் செல்லுமா? அல்லது மாறாக கீழ் நோக்கி எடுத்துச் செல்லுமா? அப்படிக் கீழ் நோக்கிச் சென்றால் அதன் விளைவுகள் எப்படிப் பட்டதாக இருக்கும்? ஆனால், ஒன்று புரிகிறது. தனித்துவமான பண்பாடும், மொழியும், வரலாறும் கொண்ட தமிழினம் ஆரியனுக்கு அடிமையாய் இந்தியத்தில் அடைபட்டுக் கிடக்கும் வரை இந்த ராமாயணங்கள் மீண்டும், மீண்டும் நிகழ்த்தப்படும். தமிழ் ராவணர்கள், ஆரியர்களால் அநியாயமாக வீழ்ந்து கொண்டிருப்பார்கள்! முடிவிருக்காது!!

இந்தியா ஒரு பல்தேசிய நாடு என்பது தான் உண்மை. ஆனால், இந்தியாவெங்கும் பரவி வாழும் ஆரியர்களுக்கு இது ஒரு தேசம் தான். இது ஆரியரால், ஆரியருக்காக இயக்கப்படும் ஆரிய தேசம் தான். மனு நீதிக்கு சொந்தமான ஆரியரிடம், பொது நீதியை எதிர்பார்க்க முடியாது!

- முனைவர். வே. பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It