(சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20, 2011 அன்று பெரியார் திராவிடர் கழகம் நடத்திய '3 தமிழர் உயிர் காப்போம் பயணத் தொடக்க பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு)

ramesh_630

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மக்கள் எழுச்சிக்கு பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு அடிபணிய நேர்ந்தது. அதேபோன்றதொரு மக்கள் எழுச்சி இன்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள், அனைத்துக் கட்சியினர், இயக்கத்தினர் ஒன்றுதிரண்டி போராடினார்கள். மக்கள் போராட்டத்திற்கு இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா செவிசாய்த்து, மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார். அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நம்மீது திணித்த மத்திய காங்கிரஸ் அரசுதான், இன்று மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தையும் நம்மீது திணித்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலை இழந்தது காங்கிரஸ் கட்சி. இன்று நிரபராதித் தமிழர்கள் மூவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றத் துடிப்பதன் மூலம், தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்கிறது காங்கிரஸ் கட்சி.

indra_rajiv_soniaபேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நடந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்ந்தவர்களோடு எந்த அமைப்பையும் சாராத, சமூக நலனில் அக்கறை கொண்ட பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். அந்த மக்கள் திரளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், அரசியல் கட்சித் தலைவர்கள் நிரம்பிய இந்த மேடையில் எனக்கும் ஒரு இடம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். அதற்கு முதலில் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று நிரபராதித் தமிழர்களின் விடுதலை குறித்து நாம் பேசும்போதெல்லாம், காங்கிரஸ்காரர்கள் 'இராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு விடுதலையா?' என்று கூக்குரலிடுகிறார்கள். இராஜீவ் காந்தியை 'இந்தியாவை வல்லரசாக்க வந்த மகான்' என்கிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் குற்றவாளிகள் என்கிறார்கள். சரியை தவறு என்பதும், தவறை சரி என்று குழப்பிக்கொள்வதும்தான் காலங்காலமாக காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கும் பிரச்சினை. அதன் தொடர்ச்சிதான் இராஜீவ் காந்தியை யோக்கியர் என்பதும், மூன்று நிரபராதிகளையும் குற்றவாளிகள் என்பதும்.

இராஜீவ் காந்தி கொலைக்கு மொத்தத் தமிழினமே குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறது. அப்படி நாம் வருந்தும் அளவிற்கு இந்த இராஜீவ் காந்தி என்ன பெரிய மகானா?

ஒரு நாடு வல்லரசாக வேண்டுமானால் அந்த நாட்டின் படைகள் வலிமைமிக்கதாக இருக்க வேண்டும்; படைக்கருவிகள் திறன்மிகுந்ததாக இருக்க வேண்டும். ஆனால் படைக்கருவிகள் வாங்குவதில் ஊழல் செய்த 'யோக்கியர்'தான் இராஜீவ் காந்தி. போபர்ஸ் ஊழலில் ஈடுபட்ட இராஜீவ் காந்திதான் இந்தியாவை வல்லரசாக்க வந்தவர் என்றால், அப்படிக் கூறுபவர்களின் யோக்கியதையையும் நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, தனது தாய் இந்திரா காந்தியின் படுகொலைக்கு காரணமானவர்களைக் கூட காப்பாற்றி, பாதுகாப்பு கொடுத்தவர்தான் இராஜீவ் காந்தி. இந்திரா காந்தி கொலை குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட தாக்கர் கமிஷன், இந்தக் கொலையில் 'அரண்மனை சதி' இருக்கிறது என்றதோடு, இந்திரா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.தவானை விசாரித்தால் உண்மைகள் வெளிப்படும் என்றும் கூறியது. யாரை தாக்கர் கமிஷன் குற்றம் சுமத்தியதோ, அதே ஆர்.கே.தவானை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தியவர்தான் இராஜீவ் காந்தி. பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது, தாக்கர் கமிஷன் அறிக்கையை மக்களவையில் வைக்காமல் இருப்பதற்காக, புதிதாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்தவர்தான் இந்த 'உத்தமபுத்திரன்'.

பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சிய மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியவர்தான் இராஜீவ் காந்தி. மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்றியதற்காக வி.பி.சிங் அரசினைக் கவிழ்த்தவரும் இந்த இராஜீவ் காந்திதான்.

இந்திரா காந்தி கொலை வழக்கை முழுமையாக விசாரிக்காமல், அன்றைய காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்த சீக்கிய இனத்தையும் குற்றவாளிகளாக்கிக் கொன்று குவித்தது. டெல்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்; சீக்கியப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். ஆனால் அந்தப் படுகொலைகளை நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்திப் பேசியவர்தான் இந்த இராஜீவ் காந்தி.

அதுமட்டுமல்ல, இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பி, 6000 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும், 1000 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதற்கும் காரணம் இந்த இராஜீவ் காந்திதான்.

இந்தச் செய்திகள் எல்லாம் பலரால் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வந்தவைதான். ஆனால் இதை வலிமையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லத்தவறியதால்தான், இன்னும் காங்கிரஸ்காரர்கள் 'இராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கா...' என்று இழுக்கிறார்கள்.

யாரைக் காப்பதற்காக ஆர்.கே.தவானை விசாரிக்காமல் இராஜீவ் காந்தி விட்டுவிட்டார் என்றால், அதற்கு ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் ஒரு பதில் சொல்கிறார்.

காலிஸ்தான் பிரிவினை கோரிக்கை பஞ்சாப்பில் உச்சத்தில் இருந்தபோது, இந்திரா காந்தியைக் கொல்வதற்கு சோனியா காந்தி திட்டமிட்டார் என்று அவர் கூறுகிறார். சீக்கியர்களால் இந்திரா காந்தியின் உயிருக்கு ஆபத்து என்று இந்திய உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து தனது பாதுகாவலர்களாக இருந்த சீக்கியர்களை மாற்ற விரும்பினார் இந்திரா காந்தி. ஆனால் அந்த நடவடிக்கையை தனது வற்புறுத்தலால் சோனியா காந்தி தடுத்து நிறுத்தினார். இறுதியில் இந்திரா காந்தி அஞ்சியதுபோலவே, அவரது பாதுகாவலர்களாக இருந்த பியான் சிங், சத்வந்த் சிங் என்ற இரண்டு சீக்கியர்களாலேயே கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தன்று ராஜீவ் காந்தி டெல்லியில் இல்லை. பிரச்சாரத்திற்காக மேற்கு வங்கம் சென்றிருந்தார். இந்திரா காந்தியுடன் இருந்தது ஆர்.கே.தவான் மற்றும் சோனியா காந்தி. அன்றைய தினம் இந்திரா காந்தி பாதுகாப்பு கவசம் அணியவில்லை என்பதை உள்ளே இருப்பவர்கள் சொல்லித்தான் பாதுகாவலர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இது தொடர்பாகத்தான் ஆர்.கே.தவானை விசாரிக்க வேண்டும் என்று தாக்கர் கமிஷன் கூறியிருந்தது. அந்த அரண்மனை சதிகாரர் யார்?

கே.எஸ்.சுதர்சன் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். குண்டடிபட்டு உயிருக்குப்  போராடிக் கொண்டிருந்த இந்திரா காந்தியை அருகிலிருந்த ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோனியா காந்திதான் கொண்டு சென்றார். சிகிச்சையை தாமதப்படுத்துவதற்கான முயற்சிதான் இது என்று கூறுகிறார்.

அதோடு அவர் நிறுத்தவில்லை; திருப்பெரும்புதூரில் இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட காலகட்டத்தில் சோனியாவின் கோரிக்கையின்படிதான், இராஜீவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும், சோனியா அமெரிக்க உளவு நிறுவனத்தின் உளவாளி என்றும் குற்றஞ்சாட்டினார்.

இராஜீவ் கொலையில் சோனியாவின் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இராஜீவ் கொலை வழக்கு விசாரணையே ஒரு முழுமை பெறாத விசாரணை. இராஜீவ் கொலையில் சு.சுவாமிக்கும் சந்திராசாமிக்கும் இருக்கும் தொடர்புகள் குறித்து சு.சுவாமியுடன் அக்காலகட்டத்தில் இருந்த திருச்சி வேலுச்சாமி பலமுறை விரிவாகப் பேசியிருக்கிறார். இந்த இருவரையும் விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்று ஜெயின் கமிஷனும் கேட்டிருந்தது. ஆனால் அனுமதிக்கப்படவில்லை.

இராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இன்னும் பல மர்மங்கள் முழுமையாக அவிழ்க்கப்படாமல் இருக்க அவசரம் அவசரமாக 26 அப்பாவித் தமிழர்களைப் பிடித்து குற்றவாளிகளாக்கியது ஏன்?

சிபிஐ யாரையெல்லாம் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியதோ, அதில் 19 பேரை நிரபராதிகள் என உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இராஜீவ் கொலை செய்யப்படப் போகிறார் என்பது இவர்கள் யாருக்கும் தெரியாது; சிவராசன், தணு, சுபாவுக்கு மட்டுமே அது தெரியும் என்று வழக்கு விசாரணையில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த மூவரும் இறந்து விட்டார்கள். கொலைச் சதியில் ஈடுபட்டவர்கள் என்று யார் மீது குற்றம் சுமத்தப்பட்டதோ, அவர்களை மத்திய குற்றப் புலனாய்வுக் குழுவால் நெருங்கக் கூட முடியவில்லை. சோனியா, சு.சுவாமி, சந்திராசாமியின் பங்கு, அன்னிய நாடுகளின் சதி குறித்து முழுமையாக விசாரணை முடியவில்லை.

rajiv_soniaஇந்திரா காந்தி கொலையின்போது உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு, அப்பாவி சீக்கியர்கள் 3000 பேரைக் கொன்று குவித்தது காங்கிரஸ் கட்சி. இராஜீவ் கொலையிலும் அதேபோல் விசாரணையை முழுமையாக நடத்தாமல், அப்பாவிகளைத் தூக்கிலிட்டு உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது.

பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன? பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது. இந்தப் பொய்யை ஜோடிப்பதற்கு சிபிஐ கொடுத்த ஆதாரம் என்ன? பேட்டரி வாங்கியதற்கான இரசீது. சூப்பர் மார்க்கெட்களில்தான் பேட்டரி வாங்கியதற்கு இரசீது கொடுப்பார்கள். 20 வருடங்களுக்கு முன்பு சூப்பர் மார்க்கெட்கள் கிடையாது; எல்லாம் பெட்டிக் கடைகள்தான். எந்த பெட்டிக் கடையிலாவது பேட்டரி வாங்கியதற்கு இரசீது கொடுப்பார்களா? அப்படியே இரசீது வாங்கியிருந்தாலும் அதை ஒரு மாத காலத்திற்கு மேலாக யாராவது சட்டை பையிலேயே வைத்திருப்பார்களா? இந்தக் கதையைத்தான் சிபிஐ புனைந்து, பேரறிவாளனை குற்றவாளியாக்கியது. அனைவர் மீதான குற்றச்சாட்டுக்களும் இதுபோன்றவைதான்.

பஞ்சாப்பில் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்ததற்காக இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களை சீக்கிய சமூகம் கொண்டாடுகிறது. பியான் சிங்கின் மனைவி பிமல் கவுர் கல்சா, அப்பா சுச்சா சிங் இருவரையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். பியான் சிங்கும், சத்வந்த் சிங்கும் சீக்கிய தேசத்தின் மாவீரர்கள் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு பொற்கோயிலில் மரியாதை செலுத்தப்படுகிறது. அவர்களை சிறுமைப்படுத்திவிட்டு, அங்கு எந்த அரசியல் கட்சியும் வாக்கு சேகரிக்க முடியாத நிலை இருக்கிறது.

நாம் என்ன செய்தோம்? ஈழத்திற்கு அமைதிப் படை அனுப்பி 6000 தமிழர்களைக் கொன்று குவித்த இராஜீவ் காந்தி இன்னும் தமிழ்நாட்டில் மாபெரும் தலைவராகக் கொண்டாடப்படுகிறார். இராஜீவ் பெயரைச் சொல்லி இங்கு அரசியல் நடத்தமுடியாத நிலையை நாம் உருவாக்கவில்லையே! அந்த தைரியத்தில்தானே காங்கிரஸ்காரர்கள் இன்னும் தமிழ்நாட்டில் வாய்க்கொழுப்புடன் பேசித் திரிகிறார்கள். இராஜீவ் காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் என்பதற்காக சென்னை பொது மருத்துவமனைக்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் போராடி சாதித்தார்கள். ஆனால் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் பெயர் வைப்பதற்கு நாம் என்ன செய்தோம்?

திருப்பெரும்புதூரில் வீரப்பெண் தணுவிற்கு அல்லவா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்? நாம் செய்யத் தவறிவிட்டோமே!

மூன்று நிரபராதித் தமிழர்களைத் தூக்கிலிட காங்கிரஸ்காரர்கள் துடிக்கிறார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் அறவுணர்வு மிக்கவர்கள். தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னையே எரித்துக் கொள்பவர்கள். தன் மீதான அடக்குமுறையைக் கண்டிப்பதற்கு வன்முறையைக் கையிலெடுக்காமல் தன்னையே மாய்த்துக் கொண்டு நீதி கேட்பவர்கள். தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்தால், அதற்காக உடல் கூசி உயிரை மாய்த்துக் கொள்ளுமளவிற்கு அறநெறிகளில் தோய்ந்தவர்கள். ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு. ஒரு கூட்டத்தை தொடர்ந்து நெருக்குதலுக்கு உள்ளாக்கிக் கொண்டே வந்தால் ஒரு நாள் அவர்கள் நிச்சயம் கிளர்ந்தெழுவார்கள். ஈழத்தில் தமிழர்கள் பொங்கியெழுந்து, ஆயுதம் தூக்கியது அப்படித்தான். நாளை தமிழகத் தமிழர்களும் அத்தகைய ஒரு முடிவை எடுத்தால் அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்கும். உள்ளத்தில் பொங்கும் கோபத்தை அடக்கிக் கொண்டுதான், தமிழன் தன்னை எரித்துக் கொல்கிறான். நாளை கோபம் எல்லை மீறி, அதே நெருப்பை எதிரிகள் மீது வைக்க அவன் முடிவெடுத்தால் அதற்கான பொறுப்பு எதிரிகளையே சேரும். தன்மீது நெருப்பு வைத்துக் கொள்ள ஒரு நொடி என்றால், எதிரியை சேர்த்து பிடிப்பதற்கும் ஒரு நொடிதான். இன்று தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள் தனித்து இயங்க முடியாத நிலை இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் காங்கிரஸ்காரர்கள்தான். நாளை அவர்கள் தமிழகத்தில் நடமாடவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அதற்குக் காரணமும் அவர்களாகத்தான் இருப்பார்கள்.

தமிழர்கள் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக காலமெல்லாம் உழைத்தார் பெரியார். என்ன ஒரு கெடுவாய்ப்பு பாருங்கள்! அவர் குடும்பத்திலேயே ஒருவர் அந்த இரண்டு குணங்களும் கெட்டு, டெல்லி காங்கிரஸ் தலைமையை நக்கிப் பிழைப்பதையே வாழ்வாகக் கொண்டிருக்கிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்கிறார், 'வேலூர் சிறைக் கதவுகளை உடைத்து, மூன்று பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும்' என்று. இளங்கோவன் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் இருப்பது அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். நாளை வாக்கு சேகரிக்க தெருவிற்குத்தான் வந்தாக வேண்டும். கூட நிற்கும் கூட்டம் ஒன்றும் கொள்கைக்காக நிற்கும் கூட்டம் அல்ல, ஆதாயத்திற்காக வந்த கூட்டம்; ஒரு கல் விழுந்தால் தெறித்து ஓடிவிடும். தன் தசைகளை நெருப்பு பொசுக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், மூன்று பேரையும் காப்பாற்றுங்கள் என்று முழங்கிய வீரப்பெண் செங்கொடி போன்ற கொள்கை உறுதி மிக்கவர்கள் இங்கே ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு பேசுங்கள்.

இது வெறுமனே மூன்று பேரின் உயிரைக் காப்பது மட்டுமல்ல, கண்முன்னே நடக்கும் அநீதியைத் தடுப்பது; ஒரு கொடுஞ்செயலுக்கு மௌனசாட்சிகளாக இல்லாமலிருப்பது. மனசாட்சியுள்ள நம் அனைவரின் கடமை இது. மூவர் விடுதலையை வென்றெடுக்கும் வரை நாம் ஓயக்கூடாது. நமது போராட்டத்தின் வெற்றி, காஷ்மீரில் அப்சல் குருவையும், பஞ்சாப்பில் புல்லாரையும் விடுவிப்பதற்கு அந்தந்த மாநில மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கட்டும்.

சான்றுகள்:

http://daily.bhaskar.com/article/sonia-planned-indira-rajiv-assassination-sudarshan-1537747.html

http://v-s-gopal.sulekha.com/blog/post/2007/10/sonia-gandhi-versus-dr-subramanian-swamy.htm

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16640:-13&catid=1367:2011&Itemid=615

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2009:2010-01-17-06-24-53&catid=25:tamilnadu&Itemid=137

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It