mask mobileமனித குலம் தொடர்ந்து சந்தித்து வரும்.. மாற்றம் என்ற இந்த இயல்பைத் தவிர்த்து நாம் எங்கும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. தொடர் மாற்றங்களினால் உருவானது தான் இந்த பூமியும் இந்த மனித உயிரினமும்.

நிறையப் பலிகள் கொடுத்து தான்... அடுத்தடுத்த கட்டத்துக்கு இந்த மானுடம் நகர்ந்திருக்கிறது. ஒவ்வொரு புது அத்தியாயங்களும் பலிகளின் மேல் தான் எழுப்பப்பட்டிருக்கின்றன. அலசி ஆராய்ந்து பார்த்தால் எல்லாவற்றுக்குமான காரண கர்த்தாவாக இருந்திருக்க வேண்டியது விழிப்புணர்வு என்ற அடிப்படை உணர்வு.

அதன் பற்றாக்குறை.... அல்லது போதாமையே தான் இவ்வாழ்வின் ஓட்டம் தடைப்பட காரணமாகி இருக்கிறது. மேம் போக்காக விழிப்புணர்வு சுத்தமாக இல்லை என்றும் சொல்லி விட இயலாது. அந்தந்த காலக் கட்டத்துக்கு தேவையான விழிப்புணர்வு காலம் தாழ்த்திப் பெற்றுக் கொண்டிருப்பதில் தான் சிக்கல். அதை அந்தந்த காலத்திலேயே குறிப்பிட்ட சதவீதம் பெற்றுக் கொண்டிருந்தாலும்.... பாதிக்குப் பாதி காலம் தாழ்த்தி தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த தூரத்தை தான் சுருக்க வேண்டும்... என்று போராடுகிறோம்.

மலை மேல் இருந்து குதித்தால் இறந்து விடுவோம்..... என்பதே அந்த நிகழ்வு நடந்த முடிந்த பிறகு தான்... ஆதி மனிதனுக்குத் தெரிய வந்திருக்கும். அதன் வாயிலாகவே பயம் என்ற ஒன்று அவன் உடலில்... பரிணமித்திருக்கும்.பின் அதற்குத் தகுந்த மாதிரி தன் பயணத்தை... மாற்றிக் கொண்டிருப்பான்.

மலை கண்டால்..... நின்று நிதானமாக யோசித்து.. மாற்று வழி ஒன்றைத் தேடி இருப்பான். அப்படி ஒரு மாற்றம் தான் ஒவ்வொரு காலத்திலும்... நிகழ்ந்திருக்கும். இதோ இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றம் கூட.... நிறைய நாம் தவறவிட்ட பழைய வழக்கத்தினால் ஏற்பட்ட, தொடர் சங்கிலியின் அறுபட்ட இடைவெளி தான். இது ஓர் அலார ஓசை.

பொதுவாக கால இடைவெளியில் இம்மாதிரி மாற்றங்கள் நிகழ்கையில்... ‘பை ப்ரோடக்ட்’ மாதிரி இன்ன பிற தேவையில்லாத மாற்றங்களும் வந்து சேர்ந்துக் கொள்ளும். டெக்னாலஜி வளர்ந்தது சரி தான். ஆனால் அதன் அதீத செயல்பாடுகள்... மன உளைச்சலை.. மானுட உளைச்சலை.... தூக்கமின்மையை....... இதய நோயை.... ஈகோவை.... பிபியை...... சர்க்கரையை.... குழு மனப்பான்மையை....... தனி மனித சுய விளம்பரத் தன்மையை...... என்று தனக்கென்று தனியாக ஒரு உலகைக் கட்டமைத்துக் கொண்டு தான் தோன்றியாக திரிவது போன்ற பல... பை ப்ரோடக்ட்ஸ்களும் வளர்ந்திருப்பதை மாற்றத்தின் ‘ட்ரா பேக்ஸ்’ ஆகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

விர்ச்சுவல் வாழ்வுக்கும் நிஜ வாழ்வுக்குமான இடைவெளி குறைந்துக் கொண்டே வருவதை மாற்றத்தின் மிக மோசமான மாற்றம் என்று தான் சொல்ல முடியும். வழி தப்பும் எல்லா ஆடும்... புதிய உலகைக் கண்டு பிடிப்பதில்லை. புதிய உலகை கண்டுபிடிக்கும் ஆட்டின் வழி தப்புதல்.... ஆட்டு மந்தையை பாதிக்காது.

ஆனால்... இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக மாற்றத்தை ஒவ்வொருவரும் உற்று நோக்க வேண்டும் என்பது தான் அடிக்கோடிடுதல்.

ஒரு வகையான பொது ஈர்ப்புக்கு அலைந்த மனித மனம் வெட்கம் கிட்கம் பாராமல்.. முகக்கவசம் அணிந்து கொண்டு ஒரு பொது மாற்றத்துக்கு உள்ளாகி இருப்பது ஏற்றுக் கொள்ள இயலாததாகத்தான் இருக்கிறது.

ஆனாலும்... ஏற்காதக் கணத்தில் இழக்க நேரிடும். இழப்பு என்பது எவையெல்லாம் நாம் என்று நினைத்தோமா அவையெல்லாம். எது எப்படியோ காலம் கடந்து கொண்டே தான் இருக்கும். காலத்துக்கு கர்ண கொடூர பார்வை தான் எப்போதும். அதற்கு இவன் பெரிய புடுங்கி எல்லாமே ஒன்று தான்.

மீண்டும் தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் தான் பார்முலா.

வேறு வழியில்லாத போது இருக்கும் வழி தான் வழி. அப்படித்தான் இந்த பூமி அச்சு பிறழாமல் சுழன்று கொண்டிருக்கிறது.

மனிதனுக்கான இயல்பை..... வெகு தூரத்தில் எங்கேயோ விட்டு விட்டதன் அறிகுறிகள் தான் இவைகள். அந்த இயல்பு ஒன்று தான் வருவதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு நம்மை மாற்றும். செல்வதை விட்டு விடும் பக்குவத்துக்கும் நாம் மாறுவோம். மனித இயந்திரத்தில் இருந்து மனிதனாகும் தருணம்..... பாசம்... நேசம்... கருணை.... கண்ணீர்..... சிரிப்பு இவைகளில் இருந்து தான். இவைகளோடு தொடர்புடைய இழப்புகளைத்தான் நாம் மீண்டும் மீண்டும் நினைவுக்குள் போட்டு கும்மி எடுக்கிறோம்.

எதிர்த்து நிற்பவனுக்குத்தான் எதிர்காலம். கருணையற்று கூறுகிறேன்.

ஆற்றோடு செல்பவனுக்கு கரையும் உண்டு. கல்லறையும் உண்டு. இது கால காலமாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தொடர் சங்கிலி தான். ஆனால் இம்முறை.. ஒரு குறிப்பிட்ட வியாதியின் பெயரால்... மிகபெரிய அச்சுறுத்தலை இன்னதென தெரியாத புள்ளியில் இருந்து எல்லாரும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

பிரச்சனைகள் புதிதல்ல, அதை அணுகும் முறை தான் புதிதாக இருக்கிறது. வியாதி பரவுவதை விட வியாதி பற்றியச் செய்திகள் பரவியது தான்.... இன்றைய இந்த மோசமான கட்டத்துக்கு காரணம். இந்த வியாதியின் பின்னும் அரசியல் இருப்பதை நாம் பெரும்பாலும் அறிந்தே இருக்கிறோம்.

அதே நேரம் உயிர் பயம் நம்மை சூழ்ந்து அடக்கி வைக்க மிக அற்புதமான திட்டத்தை வரையறுத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டி இருக்கிறது. அதற்காகக் கொரோனோவை விளையாட்டாக எடுத்துக் கொள்ள சொல்லவில்லை. அது அதன் தீவிரத்தில் இருக்கிறது. நாம் நம் தீவிரத்தில் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் பரிணாமத்தின் நகர்வு.

மூளை ஆட்சி செய்யும் தந்திர உடலில்.... மனமே மந்திரம். இரண்டு கைகள் போனால் கூட வாழ்ந்து விடலாம். மனம் போனால்.... பிணம் தான். மனதை பலப்படுத்த உடலைப் பலப்படுத்த வேண்டி இருக்கிறது. தேன் எடுக்க செல்கையில் எப்படி தன்னை காத்துக் கொள்வோமோ. மலை ஏறுகையில் எப்படி நம்மைக் காத்துக் கொள்வோமா..... அப்படித்தான்..... அலைபேசி மனிதனாகவும் இந்த பூமியில் நடமாடுவதற்கு நம்மைக் காத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இஞ்சியும் மிளகும்... திப்பிலியும்... சுக்கும்..... அதிமதுரமும் மஞ்சளும்... ஓமமும் கிராம்பும்... சித்திரத்தையும் உடற்பயிற்சியும்...... நாம் மறந்து போனோம் என்பதை நினைவூட்ட தான் காலனின் கால்கள் நொண்டி அடித்துக் கொண்டிருக்கிறதா...?

வெளியே சென்றால்.. முகத்தை மூடிக் கொள்வது இயல்பாகவே நல்ல விஷயம் தானே. காற்றில்....எத்தனை வகையான கிருமிகள் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகவே தெரியும். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல.

விலங்குகள்.. பூச்சிகள்..... இருக்கும் இன்ன பிற உயிரினங்கள்... எல்லாவற்றுக்கும் தான். நுட்ப உயிருக்கும் சேர்த்து தான் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. மனிதனை இந்த பக்கம் வைத்து பூச்சிகளை அந்த பக்கம் வைத்தால்...... பூச்சிகளின் பக்கம் தராசு இறங்கும் என்பது செய்தி. அத்தனையும் தாண்டி தான் இந்த பூமியை கெட்டியாக பிடித்துக் கொண்டு நகர வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு நாளும்.. சவால் நிறைந்ததுதான் இந்த வாழ்க்கை. அது இயற்கையோ... செயற்கையோ.... எல்லா விதமான அச்சுறுத்தல்கள்..... ஆபத்துகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எப்போதுமே விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம் என்பது தான் நாம் மறந்து விட்ட செய்தி.

டெக் உலகம் வியாபாரத்தைத் தான் பெருக்கும். மனித உயிரை எப்படி காக்கும். மனித உயிரை மனம் நிறைந்த மனிதன் தான் காக்க முடியும். இந்த உலகம் ஒரு மிகப்பெரிய காடு. தினமும் வித விதமான வியாபார வேட்டை நடக்கும். அப்படி எதிர்பாராத நேரத்தில் எதிர் பக்கமிருந்தும் எதிர் தாக்குதல் நடக்கும். அது தான் இப்போது நடக்கிறது.

வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தால் குளிப்பது ........ இரண்டு அடி இடைவெளி விட்டு பழகுவது .... கைக் கூப்பி இருத்தலை தெரிவிப்பது ...... பசித்துப் புசிப்பது ....... உடல் உழைப்பு ........ உள்ளம் அமைதி ....... .உடல் சுத்தம் ...... உள்ள சுத்தம் .... புறம் கூறாமை .....நல்ல எண்ணத்தோடு இருப்பது ..... வாசலைச் சாணம் போட்டு மொழுகுதல் .... சாம்பிராணி போடுதல் .... வேப்பிலை ...... மஞ்சள் .... கருமிளகு .... பூண்டு உபயோகம் ..... இவை எல்லாமே வழக்கத்தில் இருந்த பழக்கம் தான்.

இடையே எங்கோ திசை மாறியதன் விளைவு... எதிர்ப்பு சக்திக் குறைந்து எதிர்க்கும் சக்தியைக் குறைத்திருக்கிறது. இப்போதைய தேவை அதை கூட்டுவது தான். மன உறுதி இருந்தால்........ மயானத்தை கேலியோடு கடந்து விடச் செய்யும். "உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" திருமூலர் வாக்கே துணை.

எல்லம் தாண்டி ஒரு கட்டத்தில் அவரவர் மரணம் அவரவர்க்கு நிகழும் என்பது எழுதப்பட்ட விதி. அதுவரை... மாற்றத்தின் வாயிலில் நின்று விழிப்புணர்வோடு போராடுவதை இந்த பூமியில் விட்டு விடவே கூடாது என்பது தான்.... மதி.

இப்போது எல்லார் முகத்திலும் மாற்றம் முகக் கவசமாக மாறி இருக்கிறது. கண்கள் மட்டும் தான் பேச்சைத் தாண்டி பரிமாற்றத்துக்கு வழி கோலுவது. சிரிப்பற்ற சோகமற்ற பாவனையற்ற மனிதனைக் காண சகிக்கவில்லைதான். இது தான் மாற்றம் என்றால்.... அதிலிருந்தும் ஒரு மாற்றம் உருவாகும் என்று நம்புவோம்.

கால மாற்றம் மனிதனைச் செதுக்கிக் கொண்டே செல்லும் பரிணாமம் என்பதை புரிந்து கொள்கையில்.... முகக் கவசம் தாண்டியும் நம்பிக்கை ஒளி கண்களில் சுடர் வீசும். அதுவும் விழிப்புணர்வின் ஒரு பகுதி தான்.

- கவிஜி

Pin It