கொரோனா வைரஸ் - இதனை 'zoonosis' என வகைப்படுத்துகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். அதாவது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோயினை அப்படி அழைக்கிறார்கள். "மருத்துவ ஆய்வாளர்கள் இதை ஆய்ந்து பார்த்ததில் ஒருவேளை 'horseshoe bats' என்ற வவ்வால்கள் மூலம் பிற விலங்குகளுக்குப் பரவியிருக்கும். பின்னர் நாம் உண்ட உணவுகள் மூலம் அது மனிதர்களுக்குத் தொற்றி இருக்கலாம்" என்கிறார் 'Spillover - Animal Infections and the Next Human Pandemic' என்ற புத்தகத்தை எழுதிய அறிவியல் எழுத்தாளர் David Quammen.

கொரோனா வைரஸ் பற்றிய வானொலி கலந்தாய்வில் அவர் மேலும் கூறியது, "நாம் மக்களுக்கு இதைப் பற்றி சரியான வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களுக்குத் தேவையான உதவிகளையும், ஊக்கத்தையும் உடனடியாக அவர்களுக்கு சரியாக வழங்க வேண்டும். மாறாக முகமூடியை அணிவிப்பது சரியான தீர்வு ஆகாது. மேலும் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடாது".

பொதுவாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகை வைரஸ் நோய்கள் உருவாகின்றன. குளிர்காலத்தில் நோயின் தாக்கம் அதிகம் இருக்கும், மெல்ல மெல்ல கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் அந்த நோய் அழிந்து விடும். கடந்த 2003 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நோய் சீனா முழுவதும் பரவியது, அது Severe Acute Respiratory Syndrome (SARS) என்ற நோய் ஆகும். பின்னர் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது. (பார்க்க: https://www.npr.org/sections/goatsandsoda/2020/02/05/802938289/new-coronavirus-wont-be-the-last-outbreak-to-move-from-animal-to-human)

சீனாவின் நிலைமை

2019 டிசம்பர் 31ஆம் தேதி சீனாவின் ஊஹான் (Wuhan) மாகாணத்தில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் (COVID -19) வேகமாகப் பரவத் தொடங்கியது. உலக சுகாதார நிறுவனத்தின் பிப்ரவரி 28 -ஆம் தேதி தகவலின் படி 57 நாடுகளில் பரவியுள்ளதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸின் தாக்குதல் வேகம் அதிகமானதால், ஜனவரி 31 -ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் 'மருத்துவ அவசர கால நிலை' (public health emergency) என அறிவித்தது. பல நாடுகளும் தங்களது குடிமக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தின. ஆனால், உலக சுகாதார நிறுவனம் அன்றைய தினம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் தடை பற்றி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்ட நாளிலிருந்து இதுவரை, சீனாவில் மட்டும் 78,959 பேருக்கு தொற்றிக் கொண்டதாகவும், அதில் 2791 பேர் இறந்து விட்டார்கள் என WHO தெரிவிக்கிறது.

corona virus victimசீனாவைத் தவிர்த்து பிற நாடுகளை ஒப்பிடுகையில் 4351 பேருக்கு தாக்குதல் இருப்பதாகவும் அதில் 67 பேர் இறந்து விட்டார்கள் எனவும் தெரிவிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக தாக்குதலுக்கு உண்டான நாடுகள் ஈரான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்றவைகள் ஆகும். சீனாவிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களும் இப்போது பாதுகாப்பாக இருக்கின்றார்கள். குறிப்பாக கேரள அரசாங்கம் மருத்துவ அவசரநிலை என அறிவித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்தார்கள். (பார்க்க: https://www.who.int/dg/speeches/detail/who-director-general-s-opening-remarks-at-the-media-briefing-on-covid-19---28-february-2020)

பிப்ரவரி 29-ஆம் தேதி அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தில் குரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நபர் பலியானதின் மூலம், அங்கு ஏற்பட்ட முதல் பலி எனப் பதிவாகியது. தற்போதைய தகவலின் படி 100 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதில் (மார்ச் 2) ஆறு பேர் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

சரிந்த பங்குச் சந்தை

பிப்ரவரி 28-ஆம் தேதி நியூயார்க் பங்குச் சந்தையில் முக்கிய வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின. குறிப்பாக டவ் ஜோன்ஸ் கெமிக்கல் (Dow Jones) நிறுவனப் பங்குகள் 375 புள்ளிகள் குறைந்தது, பிப்ரவரி 12-க்குப் பிறகு அதன் மொத்த சரிவு 16.3% சதவிகிதம் ஆகும். மற்றொரு முக்கிய பங்கு நிறுவனமான Blue chip-ன் பங்குகள் 3583 புள்ளிகள் குறைந்தது. இதேபோல் S&P 500 என்ற நிறுவனமும் அதன் பங்குகளில் 14.6% சதவிகிதம் குறைந்தது. இதற்கு முக்கிய காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களின் அளவு குறைந்தது ஆகும். இதனை நம்பியிருக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காமல் சென்றது, supply chain management தடைபடும் சூழல் ஆகியவை காரணமாக முதலீட்டாளர்கள் முக்கிய பங்குகளை அதிகம் வாங்கவில்லை என்கிறார்கள்.

இந்த சரிவை 2008-ஆம் ஆண்டு பங்குச் சந்தை சரிந்ததுடன் ஒப்பிடுகிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள். அமெரிக்காவின் முக்கிய வங்கியான Wells Fargo வங்கியின் வர்த்தக தலைமை அலுவலர் Paul Christopher கூறியது என்னவென்றால் "இப்போது இருக்கும் பங்குச் சந்தை சரிவானது வழக்கத்திற்கு மாறானது. பங்குச் சந்தை 10% -க்கும் கீழ் சரிந்தாலே அதை மீட்டெடுப்பது சிரமமாக இருக்கும்" என்றார். கடந்த வாரம் பங்குச் சந்தை சந்தித்த சரிவு, 2008ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.

உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனாவில் தற்போது பல நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துள்ளன. ஆனால், முழு அளவில் இன்னும் வரவில்லை. காரணம், வேலையாட்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாததே ஆகும். இதனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் உலக வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. சில முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். (பார்க்க: https://www.npr.org/2020/02/28/810295350/financial-markets-shudder-around-the-world-as-coronavirus-tightens-its-grip)

ஒலிம்பிக் போட்டிகள்

இந்த ஆண்டு ஜூலை 24 -ஆம் தேதி டோக்கியோவில் நடக்கவிருக்கும் 'கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் 2020' நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போட்டிகளை நடத்தும் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்தது என்னவென்றால், "நாங்கள் தொடர்ந்து வைரஸ் பரவுவதைக் கண்காணித்து வருகிறோம். மேலும் அது பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம். எங்களது முக்கிய நோக்கமே போட்டிகளை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதே ஆகும்" என்றார்கள். மற்றொரு புறம் IOC வெளியிட்ட அறிக்கையில் 'ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்' என்கிறார்கள்.

இதனிடையே பிப்ரவரி 26-ஆம் தேதி ஜப்பான் பிரதமர் சின்சோ அபி, Big sport and cultural events என்ற அமைப்பிடம் "தற்போதைய ஜப்பானின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. போட்டிகளை நிறுத்தி வைக்கலாமா அல்லது மாற்றுத் தேதிகளை அறிவிக்கலாமா என்று இரண்டு வாரங்களில் பதில் அளிப்போம்" என்றார்.

ஒரே நேரத்தில் மக்கள் அதிகமாக கூடுவதால் நோய்த் தொற்று எளிதில் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஜப்பானில் மட்டும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஐந்து பேர் இறந்து விட்டார்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு புஃகோஷிமா நகரில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலால் பாதிப்படைந்த அணு உலையைச் சுற்றி கதிர்வீச்சு இன்னும் இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் புஃகோஷிமாவும் ஒரு இடம். அதனால், இதையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர்.

1916 முதல் உலகப் போர் காலத்திலும். 1940, 1944ல் இரண்டாம் உலகப்போர் காலத்திலும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சீனாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் F1 (Formula one) அதிவேக கார் பந்தயம் போட்டிகளை நடத்த வேண்டாம் என நிறுத்தி வைத்துள்ளனர். இதே மார்ச் மாதம் 13-15 தேதிகளில் திட்டமிடப்பட்ட தடகள உள்விளையாட்டுப் போட்டிகளும் (World athletic indoor championship) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. (பார்க்க: https://www.npr.org/2020/02/27/810154917/olympic-officials-dismiss-speculation-that-coronavirus-could-disrupt-tokyo-games)

கடைசியாக வெளிவந்த WHO-வின் அறிக்கையின் படி 'சீனாவில் பதிவாகிய கொரோனா வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளின் எண்ணிக்கை 61 -ஆக உயர்ந்ததோடு பலி எண்ணிக்கை 127 ஆகப் பதிவாகியுள்ளது (சீனாவைத் தவித்து).

சீனாவில் பதிவாகும் எண்ணிக்கையை விட 9 மடங்கு அதிகமாக பிற நாடுகளில் வைரஸ் தாக்குதல் உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சியான தகவல்.

கொரோனா வைரஸ்க்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தொற்று ஏற்பட்டாமல் இருக்க WHO-ன் பாதுகாப்பு வழிமுறைகள் கூறுவது என்னவென்றால், கைகளை சுத்தமாக தண்ணீர் அல்லது ஆல்கஹால் கொண்ட நோய் எதிர்ப்பு சாதனங்கள் மூலம் கழுவுதல்; கைகளை சூடான காற்றின் மூலமோ அல்லது ஒரு முறை பயன்படுத்தும் காகிதங்கள் மூலமோ துடைக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை கவனித்துக் கொள்ள மட்டுமே உங்களுக்கு முகமூடிகள் தேவை. மேலும் உங்களுக்கு இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே முகமூடி தேவை. பயன்படுத்திய முகமூடியை பாதுகாப்பாக மருத்துவக் கழிவுகளில் சேர்த்து விட வேண்டும்.

- பாண்டி

Pin It