கீற்றில் தேட...

மூலதனமும் கூலியுழைப்பும் உலகமயமாகியதன் தவிர்க்கவியலாத விளைவும், தெளிவான விளக்கமும்தான் இன்றைய கொரோனா தொற்று நோய் நிலை.

உற்பத்தி, வர்த்தகம் உலகமயமாக்கப்பட்டதால்... ஊர், மாவட்டம், மாநிலம், தேசிய இனம், நாடு, நாடுகளின் கூட்டமைப்பு என அனைத்து எல்லைகளையும் உடைத்து உழைப்பாளர்கள் உலகெங்கும் பரவலாக்கப்பட்டனர். கொரோனாவால் உலகமே லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் உழைப்பாளர்கள் (migrant workers) ஒவ்வொரு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நகர்வதும், நகர முடியாமல் இருப்பதும் பெரும் சிக்கலாகி உள்ளது.

corona migrant workers march 600வெளிநாட்டிலிருப்போர் இந்தியாவிற்கு வர முடியாத பிரச்சினையும், ராஜஸ்தான் - உ.பி. - பீகார் மாநிலத்திற்கு ஊர் திரும்ப முடியாமல் நூற்றுக்கணக்கான மைல் நடந்து அவதிப்படும் புலம்பெயர் உழைப்பாளர்கள் பிரச்சினையும், புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்களைக் கண்டறிந்து கொரோனா சோதனை நடத்த முடியாத சிக்கலும் இன்று பெரிதாகி இந்திய ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக இருக்கிறது.

வழக்கம் போல் மூலதனத்தைப் பாதுகாத்த முதலாளித்துவம், உலகமயமான கூலியுழைப்பை அம்போ என்று விட்டுவிட்டது. ஆனால் லாக்டவுன் - ஊரடங்கு அனைத்தும் உழைப்பாளர்கள் - மக்கள் நன்மைக்காக செய்வதாக நாடகமாடுகிறது.

வெளிநாட்டிற்கும் உள்நாட்டிற்குள்ளும் புலம்பெயர்ந்த உழைப்பாளர்கள் வாழ்க்கைக்கான பாதுகாப்பை முதலாளித்துவம் பணிபுரியும் இடத்திலேயே உறுதி செய்து தராததால்தான் உயிர்ப் பாதுகாப்பு நெருக்கடி காலத்தில் சொந்த ஊர் திரும்ப விரும்புகிறார்கள் / முனைகிறார்கள். வெளிநாட்டிலிருந்து நோய்த் தொற்றோடு வந்தவர்களைத் தடுக்க முடியாமலும், உள்நாட்டில் சொந்த பகுதிக்கு நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பாக செல்ல வசதி செய்து தர முடியாமலும் இருப்பது உலகமயமாகி நிற்கும் முதலாளித்துவத்தின் தோல்வியே.

எனினும், கொரோனா நோய் தாக்கத்தால் அனைத்து நாட்டு அரசுகளும் வெளியும் உள்ளும் எல்லைகளை லாக்டவுன் செய்தும், ஊரடங்கை பிறப்பித்தும் உள்ளன என்பதன் பொருள், முதலாளித்துவம், உற்பத்தியையும் வர்த்தகத்தையும் தற்காலிகமாக முடக்கி உலகமயமான மூலதனத்தைப் பாதுகாக்கிறது என்பதேயாகும்.

***

கொரோனா (SARS- COVID 19) என்பதே அமெரிக்கா அல்லது சீனாவால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கிருமி (ஆயுதம் - weapon) என்றும், நடப்பது உயிரியல் போர் (biological war) - மூன்றாம் உலக யுத்தம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பரப்பப்படுகிறது. குறிப்பாக வலதுசாரிகள் உலகளவில் சீனாவுக்கு எதிராகவும், இடதுசாரிகள் அமெரிக்காவிற்கு எதிராகவும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா இதுவரை உள்ள தரவுகள்படி இயற்கையாக உருவான கிருமி என்றே கருத வேண்டியுள்ளது. அதே நேரம் இத்தகைய கிருமிகளை செயற்கையாக உருவாக்குகிற ஆராய்ச்சி வேலைகளும் நடந்து வருவதால் அதை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்றில்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம். அதேபோல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் - காப்பு உரிமை பெறுவதில் உள்ள போட்டி / மோதல்களைப் பார்த்தால்... சந்தைப்படுத்தல் நோக்கத்திற்கானது மட்டுமல்லாது, மேலாதிக்க நோக்கத்திற்கானது என்பதும் உண்மையே. ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்காமல் சவாலாக இருக்கிறது இந்த நாவல் கொரோனா வைரஸ்.

இந்த வைரஸ் RNA வகையைச் சார்ந்ததாகவும், மனித செல்களில் நுழைந்து புரதத்தை எடுத்துக் கொண்டே விரைவாகப் பல்கி பெருகுவதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தி அணுக்களை புதிய முறையில் தாக்குவதால் தடுப்பது சிக்கலாகி விடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். விரைந்து பரவும் தன்மையும், பல்கிப் பெருகி இயங்கும் விதமும் இதுவரையுள்ள வைரஸ்களைக் காட்டிலும் புதிதாக இருப்பதால் மருந்து கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. இதுவரை கடைபிடிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகளையே மாற்றக் கோருகிற அளவிற்கு சவாலாக இருப்பதும் தெரிகிறது.

முதலாளி வர்க்கத்தின் உயிருக்கும் பாதுகாப்பு தேவைப்படுவதால் கொரோனாவிற்கு அழிப்பு அல்லது தடுப்பு மருந்து ஏதோ ஒரு வகையில் உலக சுகாதார நிறுவனமே (WHO) அங்கீகரித்து வந்துவிடும் என்றே எதிர்பார்ப்போம். ஆனால், ஏகாதிபத்தியங்களும் அவர்களது மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களும் தடுப்பு மருந்துகளின் காப்புரிமையைப் பெறுகிற மோதலில் மட்டுமே இதுவரை கவனம் செலுத்தியுள்ளனர். ஆதலால் கொரோனா பாதிப்பிலிருந்து ஏகாதிபத்தியங்கள் கற்கும் பாடம் கீழுள்ள ஆபத்தாகவும் இருக்கலாம்:

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் - vaccines மனிதனுக்கு சில சுய தேர்வுடையதாகவும் ஒரு/சில முறை பயன்படுத்தினாலே போதும் என்றளவிற்கே இருந்து வருகின்றன. ஆனால் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா, நிபா, ஷைகா, ஹெச்ஐவி, சார்ஸ், மெர்ஸ், நாவல் கொரோனா போன்ற நுண்ணுயிரிகளின் தொடர் தாக்குதல்களால் vaccines என்பது உயிர் வாழவே அடிப்படைத் தேவையாகி விடலாம். அதுவும் கணிப்பொறிக்கு online anti virus updates இன்றியமையாதது போல்*** (*** கீழுள்ள இதற்கான விளக்கத்தோடு ஒப்பிட்டும் புரிந்து கொள்ளலாம்), மனிதனுக்கும் தொற்றுநோய் காலத் தேவைக்கேற்ப vaccines போடுவதை update செய்து கொண்டால்தான் உயிர் வாழ முடியும் என்றாகிவிடும். அதாவது ஏகாதிபத்தியங்கள் - பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் (Vaccine providers), உலகளவில் தமது பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட வாடிக்கையாளர்களை (Vaccine Licensed Customers or Vaccinated Identity Persons) உருவாக்குவார்கள். Vaccine providers தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தாம் கண்டு பிடிக்கும் கொரோனா போன்ற புதிய கிருமிகளுக்கு எதிரான vaccine updates அல்லது பாதுகாப்பு மருந்துகளைத் தருவார்கள். அப்படி பணம் கட்டி வாடிக்கையாளராக இல்லாதவர்கள் அல்லது vaccineஐ தனியே வாங்க முடியாதவர்கள் சாக நேரிடும் என்ற நிலை ஏற்படலாம். Vaccinated Persons மட்டுமே அதன் தரத்தைப் பொருத்து நாட்டுக்குள்ளும் வெளியேயும் புலம்பெயர அனுமதிக்கப்படுகிற நிலை வரலாம்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் ஏகாதிபத்தியங்கள் தமது வீழ்ந்த மூலதனத்தை வளர்க்க, இனி உற்பத்தியை - வணிகத்தை குறைந்தபட்ச பாதுகாப்போடு நடத்த.... உயிர் உத்தரவாதப்படுத்தப்பட்ட கூலியுழைப்பாளர்களை உருவாக்குவது தேவையாகக் கருதும். கூலியுழைப்பைச் சுரண்ட இனி மூலதனம், தொழில்நுட்பம் என்பதோடு vaccinated labour என்கிற உயிர்ப் பாதுகாப்புடைய உழைப்பாளர்களும் தேவை என்பதை உணரும். செயற்கையான வைரஸ்களை உருவாக்கி உயிரியல் உலக யுத்தம் நடத்துவதற்கு இது முன்தேவையும்கூட.

கொரோனாவால் பீதியுற்ற பலர் ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையே இனி இதுபோன்ற உயிரியல் யுத்தம் மூலம் மட்டுமே உலகை மறு ஒழுங்கமைப்பு செய்து கொள்ளும் என்கிறார்கள். அரும்பாடுபட்டு உருவாக்கிய அணு ஆயுதங்களை எல்லாம் வெறுமனே கடலில் தூக்கிப் போட... அணு ஆயுத யுத்த மோதலை - அச்சுறுத்தலைக் கைவிட ஏகாதிபத்தியங்களுக்கு என்றும் மனம் வராது. எதிர்காலத்தில் அடுத்த உலக மறு ஒழுங்கமைப்பிற்கான போர் எப்படி இருந்தாலும், தொற்று நோய் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்ட மனித உயிரின் இன்றியமையாத தேவையை நாவல் கொரோனா உணர்த்தியிருப்பதால், கூடுதலாக அதற்குரியதை திட்டமிட்டு செயல்படுவார்கள் அவ்வளவே.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி இந்திய ஆட்சியாளர்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதோடு, தொற்று நோயிலிருந்து பாதுகாக்கப்பட்ட தடுப்பூசியிட்ட சிறப்பு கூலி உழைப்பாளர்களையும் உருவாக்கி இனி சேவை செய்வார்கள்.

------------------------------------------------------------------

*** கணிப்பொறியின் உயிர் அதாவது இயக்கத்திற்கு தேவையான software என்பது ஒரு / பல programming language (simply program) அடங்கியதாகும். இந்த program இயங்காமல் தடுப்பதற்காக எழுதப்படும் Anti program / malicious software என்பது கம்ப்யூட்டர் வைரஸ் ஆகும். இது removable storage devices என்ற கணிப்பொறியின் உடல் உறுப்புகளான floppy disk முதல் USB drive வழியோ, இ-மெயில்/file transfer மூலமோ உயிருக்குள் (software) சென்றுவிட்டால் அதிலுள்ள malicious virus code என்பது replication மூலம் executable files-களில் தொற்றி கணிப்பொறியின் வேகத்தைக் குறைக்கும் அல்லது பகுதியளவிற்கு இயக்கத்தை நிறுத்திவிடும் அல்லது மொத்தமாக சாகடித்துவிடும். இந்த வைரஸ்களை Spyware, malware, adware.... என வகை பிரித்திருக்கிறார்கள். Creeper, Elk Cloner, CryptoLocker, Sasser & Netsky, MyDoom, Storm Worm, Anna Kournikova, Slammer, Stuxnet.... என்பவை சில புகழ் பெற்ற வைரஸ்களாகும்.

இந்த வைரஸ் தோற்றுவாய் பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. என்னுடைய பார்வையில் பல தனிநபர்களுக்கு இக்கிரிமினல் புத்தியைத் தந்தது, முதலாளிகளின் வர்த்தக வெறியாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது. தன்னுடைய softwareஐ போட்டி கம்பெனி நகல் (copy) எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும் போட்டி கம்பெனி softwareஐ முடக்கி பெயர் கெட வைப்பதற்காகவும் என்ற இரண்டு காரணங்களுக்காக முதலாளிகளால் தமது தொழிலாளர்களைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டவைதான் software virus - malicious code ஆகும். பின்னரே... programming பயிற்சி பெற்ற பல தனிநபர்களும் சந்தைப் போட்டிக்காக என்றில்லாது, தான் பெயரெடுப்பதற்காகவும், விளையாட்டாகவும் கம்யூட்டர் வைரஸ்களைத் தோற்றுவித்தார்கள். இன்றைய இன்டர்நெட் உலகில் வேண்டாதவரின் கணிப்பொறிகளை முடக்கும் ஹேக்கர்ஸ்களுக்கு சிறந்த ஆயுதமாக இருப்பதும் இவ்வைரஸ்கள்தான்.

கணிப்பொறிகள் முடங்கி வேலையைக் கெடுப்பது அடிக்கடி நடந்ததால்... அதையும் வணிகமாக்கியது முதலாளித்துவம். Anti Virus என்ற பெயரில் "கண்டுபிடிப்பு (detect), பாதுகாப்பு (protection), விலக்கிவைப்பு (quarantine), அழிப்பு (delete)" ஆகிய செயல்களைச் செய்யும் programs எழுதி விற்பனையைப் செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் இந்த anti virus softwares, offlineல்தான் விற்கப்பட்டன; குறிப்பிட்ட காலத்திற்கு கணிப்பொறி தடங்கலின்றி இயங்க உறுதி செய்தன. ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கணிப்பொறி வைரஸ்கள் புது புது வகைகளில் உருவெடுத்து பல்கி பெருகி கொண்டே இருந்ததால்.... அடிக்கடி அல்லது தினமும் அவற்றிற்கு எதிரான anti virus code / programs update தேவைப்பட்டதால் - இன்டெர்நெட் பரவலாகியதால் இவை online முறைக்கு மாற்றப்பட்டன. இன்டர்நெட்டோடு இணைக்கப்படாத கணிப்பொறி இன்று அரிதாகி விட்டது; அதனால் அவற்றின் இயக்கத்திற்கு Anti Virus software என்பது அடிப்படைத் தேவையாகிவிட்டது / இன்றியமையாததாகி விட்டது.

மேலுள்ளவை இத்துறை பயன்பாட்டாளர் பலருக்குத் தெரிந்திருக்கலாம். சிலவற்றை பாடப்புத்தகத்திலும் படித்திருக்கலாம். இவற்றை நாம் மனிதர்களின் உயிர்க்கொல்லி வைரஸ்களுக்கும், தடுப்பு - காப்பு மருந்துகளுக்கும் (vaccines - medicines) நேர்நேராக அல்லாமல் (not like one to one match) பொதுவகையில் பொருத்திப் பார்க்க வேண்டிய காலகட்டமிது.

- ஞாலன்