"குடிமைச் சமூகத்திற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வரும் சூழலில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விவாதத்தை உருவாக்கவும் - கருத்துரிமையும் வாழ்வுரிமையும் - என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்றினை 14.06.08 அன்று சென்னையில் நடத்தியது காலச்சுவடு" - இது காலச்சுவடில் வெளிவந்த விளம்பரம். இக்கருத்தரங்கில் தியாகு, கிருஷ்ணானந்த், சதானந்த மேனன், பேராசிரியர் கல்யாணி, இன்குலாப், பா.செயப்பிரகாசம், இராசேந்திர சோழன், ஒவியா, அனிருத்தன் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

திடீரென்று கருத்துரிமையின் பால் காலச்சுவடுக்கு காதல் வந்த மர்மம் என்ன? 2003ஆம் ஆண்டிலிருந்து நூலகத்துறை சிறு அளவில் காலச்சுவடை வாங்கி வந்ததாம். 2006 ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க ஆட்சியேற்ற பின் 1500 பிரதிகள் வாங்கப்பட்டனவாம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒரு வாய்மொழி உத்தரவின் மூலம் காலச்சுவடு வாங்குவது நிறுத்தப்பட்டதாம். உடனே கருத்துரிமைக்கு ஆபத்து வந்து விட்டதென களத்தில் இறங்கிவி்ட்டது காலச்சுவடு.

நூலகத்துறை வாங்கியபோது சுமார் ஏழாயிரம் பிரதிகள் அச்சடித்த காலச்சுவடு தற்போது ஐந்தாயிரம் பிரதிகள் மட்டும் வெளியிடுகிறார்கள் என்று கருதுகிறோம். இதழ் வாங்குவது நிறுத்தப்பட்டதால் ஏதோ தமிழகத்திற்கு மாபெரும் ஆபத்து வந்துவிட்டதாகக் காலச்சுவடு பதறுகிறது. அந்தப் பதற்றத்தில் கருத்துரிமைக்கு கல்லறை கட்டப்பட்டதாக எண்ணுவதை என்னவென்று சொல்ல? தமிழகத்தின் பண்பாடு, கல்வி, அறிவு அத்தனைக்கும் தான்தான் அத்தாரிட்டி என்று ஒரு ஆதீனத்தின் மனநிலையில் காலச்சுவடு இருப்பதுதான் இந்தப் பதற்றத்திற்கு காரணம்.

நூலகத்துறை வாங்கி நிறுத்திய விவகாரத்தை "காலச்சுவடுக்குத் தடை" என்ற சொல்லாடல் மூலமாக ஒரு மாபெரும் போராட்டமாக காலச்சுவடு முன்னெடுத்திருக்கிறது. இதற்காக பல இந்திய எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், த.மு.எ.ச, க.இ.பெ.மன்றம் என அனைவரும் காலச்சுவடுக்காக பரிந்துபேசி கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்கள் அனைத்தும் "கருத்து" அமைப்பின் கார்த்தி சிதம்பரம், கனிமொழிக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாம். நியாயமாக இந்த கடித வினைகள் நூலகத்துறை சார்ந்த அமைச்சருக்குத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். கருத்து அமைப்பிற்கு அனுப்பவேண்டிய காரணமென்ன?

உங்களுக்கோ, எனக்கோ ஒரு பிரச்சினை என்றால் போலீசில் புகார் கொடுப்போம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். இதைவிடுத்து தமிழகத்தின் மனித உரிமை மீறல்களுக்கு யாரும் கருத்து அமைப்பிடம் செல்வதில்லை. அது மேட்டுக்குடியின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட வெற்று மனிதாபிமான அமைப்பு. கருத்துரிமைக்காக அது எதையும் பிடுங்கியதில்லை. ஆனால் காலச்சுவடு இவர்களிடம் புகார் கொடுத்தற்குக் காரணம் இந்த மேட்டுக்குடி குலக் கொழுந்துகளை வைத்து பல காரியங்கள் சாதித்திருப்பதுதான். நண்பர்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை பொது மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறது காலச்சுவடு.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இதன் ஆசிரியர் கண்ணன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார், "காலச்சுவடின் நடுநிலைமையை யாரும் சந்தேகப்பட முடியாது. பதிப்பகத் துறைக்கு முதல்வர் செய்திருக்கும் உதவிகளைப் பாராட்டித் தலையங்கம் எழுதினோம். மூன்றாவது பாலினத்தாருக்கு நலவாரியம் தொடங்கியது, சென்னை சங்கம விழாவை நடத்தியது என பாராட்டத்தக்க விசயங்களைப் பாரட்டினோம். அதே சமயம், கடந்த மே மாதம் மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் தி.மு.க தரப்பை விமரிசித்து எழுதிய எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக தி.மு.க ஏற்பாடு செய்த கூட்டத்தையும் விமர்சித்தோம். கனிமொழியின் அணுசக்தி ஆதரவு உரையைப் பதிவு செய்து, அதற்கு விமர்சனமாக வந்த வாசகர் கடிதங்களையும் வெளியிட்டோம்.

குறிப்பாக செம்மொழி மையம் ஆரம்பிக்கப்படப் போவதாக அறிவிப்பு வந்தபோது, அதற்குத் தலைவராக முதல்வர் கருணாநிதி இருந்தால், அரசியல் சார்பு என்பது போன்ற சர்ச்சைகள் வரும் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இதெல்லாம் ஆளும் தி.மு.க அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டதோ என்னவோ தற்போது காலச்சுவடு இதழ் நூலகங்களில் நிறுத்தப்பட்டிருக்கிறது. எந்தக் காரணமும் சொல்லாமல் பத்திரிகைகள் மீது விரோதம் பாராட்டுவதை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தினகரன் பத்திரிகைக்குப் பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுத்தவர்கள், இப்போது அதை நிறுத்தி இருக்கிறார்கள். தேவைப்படும்போது வரம்பு மீறி வாரி வழங்குவதும், ஆகாத போது அரசு விளம்பரங்களைக் கொடுக்காமல் தவிக்கவிடுவதும் அரசின் வாடிக்கையாகி விட்டது. அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையே சட்ட ரீதியான நெறிமுறைகள் பிறப்பிக்கப்படவேண்டும். மாற்றுக் கருத்துக்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால்தான் அரசு இப்படி நடந்து கொள்கிறது".

ஏதோ காலச்சுவடைப் பார்த்து தி.மு.க அரசு கதிகலங்கி பயம் பிதுங்கி நிற்பதைப் போல கண்ணன் பேசுகிறார். தினகரன் அலுவலகத்தில் புகுந்து அடித்தவர்களுக்கு காலச்சுவடெல்லாம் எம்மாத்திரம்? உலகத் தமிழ் இதழ் என்ற அடைமொழியோடு காலச்சுவடு வருவதால் தன் தகுதியை மீறி தன்னை மிகப்பெரிய அறிவுத்துறை ஆதினமாக கருதுவதுதான் நகைப்பிற்குரியது.

காலச்சுவடு நூலகங்களுக்கு வாங்கப்பட்டது நிறுத்தப்பட்ட உடன்தான் அரசின் மனப்பக்குவம் கண்ணனுக்குத் தெரிகிறது. அ.தி.மு.க ஆட்சியில் முரசொலி நிறுத்தப்படுவதும், தி.மு.க ஆட்சியில் நமது எம்.ஜி.ஆர் நிறுத்தப்படுவதும் இங்கு காலங்காலமாக நடந்து வரும் நெறிமுறைதான். மற்றபடி தினத்தந்தி, தினமலர், தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ், வாரப் பத்திரிகைகள், வாரமிருப்பத்திரிகைகள் அனைத்தும் எப்போதும் வாங்கப்பட்டுதான் வருகின்றன. இவற்றில் அரசை விமரிசித்து செய்திகளோ, கட்டுரைகளோ வந்தால் அதற்காக நிறுத்தப்படுவதில்லை.

இதையே இந்தப் பிரச்சினை குறித்துக் கேட்ட்போது அமைச்சர் தங்கம் தென்னரசும் (ஜூ.வி) கூறியிருக்கிறார். "தி.மு.கவுக்கு எதிராக எத்தனையோ செய்திகளை காலச்சுவடு மட்டுமல்லாமல் பல இதழ்களும் இன்றைக்கும் வெளியிட்டுத்தான் வருகின்றன. அதற்காகவெல்லாம் இதழை நிறுத்த வேண்டும் என்றால், அந்த இதழ்களையும்தானே நிறுத்தியிருக்க வேண்டும். வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான் காலச்சுவடு பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். இது புரியாமல் அரசியல் காரணங்களுக்காக காலச்சுவடு நிறுத்தப்பட்டதாக திசை திருப்புகிறார்கள்."

அமைச்சரின் இந்தக் கூற்றில் பாதிதான உண்மை. அரசுக்கு ஆதரவாக இருக்கும் பல அனாமதேயப் பத்திரிகைகள் நூலகத்திற்கு வாங்கப்படுவதும், அவைகளுக்கு விளம்பரம் வழங்கப்படுவதும், அந்த விளம்பரங்களுக்காகவே பல பத்திரிகைகள் 500, 1000 பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்படுவதும் எல்லா ஆட்சிகளிலும் நடக்கும் விசயம்தான்.

நாம் எழுப்பும் கேள்வி என்னவென்றால் காலச்சுவடைப் போல பல சிறு பத்திரிகைகள் மாதந்தோறும் வெளிவந்தாலும் காலச்சுவடு மட்டும் நூலக ஆணையைப் பெற்றதன் மர்மம் என்ன? காலச்சுவடு நூலகத்துறையால் நிறுத்தப்பட்டதை விட அது ஏன் வாங்கப்பட்டது என்பதைத்தான் அமைச்சரும், கண்ணனும் தெரிவிக்கவேண்டும். இதை தெரிந்து கொள்ள நமக்கு கருத்துரிமை இருக்கிறதல்லவா?

அதேபோல பாசிசத்திற்கு பேர்போன புரட்சித் தலைவியில் ஆட்சியில் சிறு அளவில் காலச்சுவடை நூலகத்துறை வாங்கியதற்கு என்ன காரணமென்பதை கண்ணன் அறிவிக்கத் தயாரா? தி.மு.க ஆட்சியில் 1500 படிகள் வாங்கப்பட்டதன் பின்னணி என்ன? முன்னது அதிகாரவர்க்கத்தின் சிபாரிசிலும் பின்னதில் கனிமொழியின் சிபாரிசும்தானே காரணம்? ஆக காலச்சுவடு நூலகத்துறைக்குள் நுழைந்ததற்கும் மற்ற அனாமதேயப் பத்திரிகைகள் நுழைந்ததற்கும் எந்த வேறுபாடுமில்லை.

இதைவிடுத்து ஜெயலலிதாவும், கருணாநிதியும் வேலை மெனக்கெட்டு காலச்சுவடை வாங்குவதற்கு தீவிர முயற்சி எடுத்தார்களா என்ன? எல்லாம் பெரிய இடத்துத் தொடர்பும், சிபாரிசும், பழக்கமும்தானே வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதில் கருத்துரிமைக்கு ஆபத்து எங்கே இருக்கிறது? அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கனிமொழியின் பேச்சை காலச்சுவடு வெளியிட்டது ஐஸ்வைக்கத்தானே அன்றி வேறு என்ன காரணமிருக்கமுடியும்? அணு ஒப்பந்தம் குறித்தும் அதன் கேடுகள் பற்றியும் பல முன்னாள் விஞ்ஞானிகள், அறிஞர்கள் காத்திரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விடுத்து மன்மோகன் சிங்கிற்கு முதுகு சொறியும் தி.மு.கவின் நிலைப்பாட்டை முதல் உரையில் வாந்தியெடுத்த கனிமொழியின் பேச்சை அப்படியே வெளியிட்டதன் அரசியல் நோக்கமென்ன? எல்லாம் எலும்புத் துண்டுகளை கவ்வத்தானே?

செம்மொழி மையத்தில் கருணாநிதியை விமர்சித்ததால் அரசின் வெறுப்புக்கு ஆளாகி விட்டோமென கண்ணன் கருதுகிறார். புற்றீசல் போல ஆங்கிலக் கான்வென்டுகள் பெருக்கெடுத்து மக்களை அறியாமைக் கவர்ச்சியில் இழுத்து வரும் நிலையில் தமிழ் செம்மொழி மையமா பிரச்சினை? உழைக்கும் தமிழனுக்கு உய்வில்லாமல் தமிழ் மட்டும் உயர்ந்து விடுமா என்ன? தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தி.மு.க அரசியலுக்கு இந்த செம்மொழி மையம் ஒரு அலங்கார நடவடிக்கைதானே ஒழிய இதனால் தமிழுக்கு ஒன்றும் வாழ்வு கிடைத்து விடப்போவதில்லை.

கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார் போன்ற இலக்கியவாதிகள் அரசியலுக்குள் நுழைந்ததை காலச்சுவடு பொதுவில் ஆதரித்துத்தானே எழுதியது? பண்பாட்டுத் துறையில் பண்பட்டவர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் நல்லது பல நடக்கும் என்று எதிர்பார்த்து விட்டு தனக்கு நல்லது நடக்கவில்லை என்பதால் மோசம் என்பது கடைந்தெடுத்த சுயநலமில்லையா?

இவர்களுக்கெல்லாம் அரசியலுக்குள் நுழைவதற்கு என்ன தகுதியிருக்கிறது? மற்றவர்களை விடுங்கள் கனிமொழியை எடுத்துக் கொள்வோம். சில கவிதைகள் எழுதியதைத் தவிர இவருக்கு அரசியலைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ என்ன தெரியும்? எல்லாம் ராஜாத்தி அம்மாள் தனது பங்குக்காக கருணாநிதியிடம் சண்டை போட்டு பெற்றதுதானே இந்த அரசியல் வாழ்வு? கனிமொழி ராஜ்ஜிய சபா உறுப்பினர் தேர்வுக்காக தனது சொத்துப்பட்டியலில் பத்து கோடி இருப்பதாக வெளியிட்டாரே? இந்த பத்துகோடி எப்படி வந்தது என்று காலச்சுவடுக்குத் தெரியாதா என்ன?

கனிமொழியை வைத்து எல்லாம் சாதித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே அவரிடம் நட்பு பாராட்டிய காலச்சுவடு பின்பு அதே கனிமொழி செம்மொழி பிரச்சினைபற்றி காலச்சுவடு எழுதியதற்காகச் சினம் கொண்டு நூலகத்துறை ஆணையை நிறுத்திவிட்டார் என்பதில் மட்டும் கருத்துரிமையைத் தேடவேண்டிய அவசியமென்ன? கனிமொழிதான் காலச்சுவடை நிறுத்திவிட்டார் என்று எழுதுவதற்குக்கூட கண்ணனுக்கு பயம். ஒருவேளை நாளை மீண்டும் சேர்ந்து விட்டால் பிழைப்பை ஓட்டவேண்டுமென்ற பாதுகாப்பு உணர்வுதான் காரணம்.

நூலகத்துறையின் குழுவில் காலச்சுவடின் ஆதரவாளர்கள் வெங்கடாசலபதி போன்றவர்கள் இடம்பெற்றது கனிமொழியின் கருணையில்லையா? இதன் மூலம் காலச்சுவடு தனது பதிப்பக புத்தகங்களை நூலகத்துறைக்குள் தள்ளவில்லையா? அந்தக் கணக்கு பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறீர்கள்? இப்படிப் பெரிய இடத்து தொடர்பின்றி நூலகத்துறைக்குள் தமது புத்தகங்களை அனுப்பமுடியாமல் பல ஏழைப் பதிப்பகங்கள் இருக்கின்றனவே அவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.

பொதுவில் இடதுசாரிப் பத்திரிக்கைகள் மற்றும் அவர்களது வெளியீடுகள் நூலகத்துறைக்குள் வாங்கப்படுவதில்லை. தி.மு.க அரசுடன் கூட்டணியில் இருந்த போதும் செம்மலர், தாமரை போன்ற பத்திரிகைகள் அரசால் வாங்கப்படவில்லை. இவர்களைவிட வெளிப்படையாகவும், கூர்மையாகவும் அரசை அம்பலப்படுத்தும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் முதலான பத்திரிகைகளும் அவற்றின் வெளியீடுகளும் அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவர்களும் அதை சட்டை செய்வதில்லை. இது போக பெரிய இடத்துப் பழக்கமில்லாத பல பதிப்பகங்களும் தமது நூல்களை நூலகத்திற்கு விற்கமுடியாமல் திணறித்தான் வருகின்றன.

பொதுவில் ஒரு வர்க்கம் தனது நலனுக்காக பரிந்து பேசுவதற்கு மற்ற வர்க்கங்களின் நலனும் இதில் கலந்திருப்பதாக சொல்லிக் கொண்டு அதை ஒரு பொதுப்பிரச்சினையாக்கி தனது ஆதாயத்தைத் தேடும். காலச்சுவடுக்கு அந்த சாமர்த்தியம் கூட இல்லை. மற்ற சிறுபத்திரிகைகளையும் நூலகத்துறை வாங்கவேண்டும் என்று காலச்சுவடு பேசவில்லை. தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது. அதனால் அதன் கருத்துரிமை போராளி வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது.

தி.மு.க அரசைப் பற்றி காலச்சுவடுக்கு பொதுவான கருத்து என்று எதுவுமில்லை. நடுநிலையில் நின்று நல்லவைகளை ஆதரித்து, கெட்டவைகளை எதிர்ப்பார்களாம். முதலில் நடுநிலை என்ற கூற்றே ஒரு மோசடியாகும். எல்லாப் பத்திரிகைகளும் ஒரு கருத்தில் ஒரு நிலையெடுத்தே செய்திகளை வெளியிடுகின்றன. ஒரு அரசியல் நிலைப்பாடு மக்களுக்கு ஆதரவானதா, எதிரானதா என்பதைத் தாண்டி மூன்றாவதாக நடுநிலையென்பதாக ஒரு நிலையில்லை. உலகமயமாக்கத்தை தீவிரமாக மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் அமுலாக்கி வரும் தி.மு.க அரசின் கொள்கைகளால் விவசாயிகள் வாழ்விழந்து நகரங்களுக்கு கூலி வேலைக்காக ஓடி வருகிறார்கள். கல்வி, சுகாதாரம் அனைத்தும் தனியார் மயமாகி நடுத்தர மக்கள் கூட அவற்றை பயன்படுத்தமுடியாத சூழ்நிலையை நோக்கி தமிழகம் நகர்ந்து வருகிறது.

இதில் அடுத்த ஆட்சியில் வருவோமா, வரமாட்டோமா என்று தி.மு.க தளபதிகள் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியோ தனது கட்சியையும், ஆட்சியையும், சொத்தையும் தமது வாரிசுகளுக்குப் பங்கிடும் வேலையை செய்து வருகிறார். இப்பேற்பட்ட மக்கள் விரோத அரசை நூலகத்துறை பிரச்சினையை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது காலச்சுவடு. இதுதான் இலக்கியவாதிகளின் அற்பவாதம். தனக்கு ஒரு குறை என்றால் உலகமே சரியில்லை என்று சாபமிடுவது சுந்தர ராமசாமியின் குருகுல மரபு. அந்த மரபின் படி காலச்சுவடும் தனது அற்பவாத அம்மணத்தைக் கூச்சமில்லாமல் காட்டிக் கொள்கிறது.

எல்லா எழுத்தாளர்களையும் "கருத்து" அமைப்பின் அமைப்பாளர்களான கார்த்தி சிதம்பரம், கனிமொழி இருவருக்கும் கடிதம் எழுதச் செய்திருக்கும் காலச்சுவடு இந்த இளவரசர்களின் யோக்கியதையை வானளாவ உயர்த்தியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றிவரும் மத்திய அரசின் முக்கிய அமைச்சரான ப.சிதம்பரம் இந்தத் துரோகச் செயலுக்கு கைமாறாக பல ஆதாயங்களை அனுபவித்து வருகிறார். அதில் முக்கியமானது இவரது மகன் கார்த்தி சிதம்பரம் பல பன்னாட்டு நிறுவனங்களில் கௌரவ ஆலோசகராகப் பணியாற்றி பல கோடி சம்பளம் வாங்கி வருவது.

தற்கொலைக்கும், வேலையின்மைக்கும் ஆளாகிவரும் விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை பிழைப்பதற்காக நாடோடிகளாக மாறி வருவதற்குக் காரணமான முழுமுதற் குற்றவாளிகளுக்கு சன்மானம் இப்படித்தான் வழங்கப்படுகிறது. இந்த சிகாமணிதான் கருத்து அமைப்பின் அமைப்பாளர் என்பதும் இவரிடம் மண்டியிட்டு கருத்துரிமைக்காக காலச்சுவடு கையேந்துவதும் இனம் இனத்தோடு சேரும் என்பதைத்தான் காட்டுகிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான கூட்டத்தோடுதான் காலச்சுவடு நட்பு வைத்திருக்கறது என்பதற்கு இதுவே எடுப்பான செய்தி.

கருத்துரிமை என்பது மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டது. பறிக்கப்பட்ட தமது உரிமைகளுக்காக மக்கள் போராடும்போதுதான் ஆளும் வர்க்கம் அவற்றை ஒடுக்கி அந்தக் கருத்தையே பேசவிடாமல் செய்கிறது. காலச்சுவடு உலகப் பிரச்சினைகள் தொடங்கி உள்ளூர் பிரச்சினைகள் வரை எல்லாவற்றிலும் தமது கருத்துக்களைப் பதிவு செய்வதை வைத்துக் கொண்டு தன்னை மாபெரும் கருத்துரிமைப் போராளியாக சித்தரிக்கிறது. இது புரட்சித் தலைவி தனது கட்அவுட்டைப் பார்த்து தனது அதிகாரத்தை பிரம்மாண்டமாக உணருவதற்கு ஒப்பானது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் அற்றைத் திங்கள் என்னும் தலைப்பில் அருங்காட்சியக அறிஞர்களை வைத்து மாதம் ஒரு கூட்டத்தை நடத்தியது காலச்சுவடு. ஆனால் இதே கோவையில்தான் இந்து மதவெறியர்களை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் கூட்டம் நடத்துவதற்குத் தடை இருக்கிறது. கோவை ஆர்.எஸ் புரத்தில் இந்து மதவெறியர்களைக் கண்டித்தும், அப்பாவி முசுலீம்களை சிறையில் வைத்திருப்பதை எதிர்த்தும் காலச்சுவடு ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தியதில்லை. அப்படி ஒரு கூட்டம் நடத்தியிருந்தால் கருத்துரிமையின் வலியை கண்ணன் உணர்ந்திருப்பார். காலச்சுவடு தலைமை அலுவலகம் இருக்கும் நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் நெல்லையில் கோக் நிறுவனத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு புரட்சிகர அமைப்புகளுக்கு அனுமதியில்லை. நெல்லையில் வாசகர் வட்டம் நடத்தும் காலச்சுவடு கோக் கம்பெனிக்கு எதிராக பொதுக்கூட்டம் வேண்டாம், ஒரு அரங்கக் கூட்டத்தைக்கூட நடத்தியதில்லை.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் தனது நூல்களுக்கு விரிவான சந்தையை உருவாக்கியிருக்கும் காலச்சுவடு ஈழத்தமிழர்களுக்காக - அவர்களை ஒடுக்கும் இந்திய அரசு, இலங்கை அரசைக் கண்டித்து ஏதாவது கூட்டம் நடத்தியிருக்கிறதா? புரட்சித் தலைவி ஆட்சியில் நடத்தியிருந்தால் கண்ணன் கோஷ்டி பொடாவில் கைதாகி புரட்சிப் புயலோடு சிறையில் வாலிபால் விளையாடிக் கொண்டுயிருந்திருக்கும். இதழின் அட்டையில் ஈழத்துக்காக கண்ணீர் விடும் காலச்சுவடு களத்தில் இறங்கியிருந்தால் உண்மையில் கருத்துரிமை என்றால் என்ன என்பதை தன் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டிருக்கும்.

புக்கர் பரிசு வென்றாலும் அருந்ததிராய் நர்மதா மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதற்காக அவர் எழுதிய கட்டுரைக்காக நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொண்டு ஒரு நாள் நீதிமன்றக் காவலில் இருந்தார். குடியுரிமைக்காக போராடிய பினாயக் சென் சட்டீஸ்கர் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்பாவி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை கொடுத்ததை எதிர்த்து பொது அரங்கில் விவாதத்தை எழுப்பினார். தற்போது காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு காஷ்மீருக்கு விடுதலை தரப்பட வேண்டுமென எழுதுகிறார். இவையெல்லாம் ஒரு அறிவுஜீவியின் நேர்மையான கருத்துரிமைப் போராட்டம் என்று மதிப்பிடலாம். ஆனால் காலச்சுவடின் வரலாற்றில் இப்படி ஏதேனும் ஒரு சம்பவம் உண்டா?

அவ்வளவு ஏன்? 2002 குஜராத் கலவரத்திற்கு நிவாரணம் என்ற பெயரில் காசு வசூலித்த காலச்சுவடு இந்து மதவெறியர்கள் என்ற சொல்லைக்கூட பயன்படுத்தவில்லை. அப்போது இந்த வசூலுக்கு கனிமொழியும் உதவி செய்தார். அந்த நேரம் தி.மு.க கட்சி, பா.ஜ.க அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்தது. இந்த துரோகத்தை அம்பலப்படுத்தியோ, இது குறித்து கனிமொழியிடம் ஒரு கேள்விகூட காலச்சுவடு கேட்டதில்லை. பதிவும் செய்ததில்லை. 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்த இந்து மதவெறியர்களின் பெயரைக்கூட சொல்லாமல் செயல்பட்டதுதான் காலச்சுவடின் சாமர்த்தியம். அதனால்தான் மலர்மன்னன் போன்ற இந்துமதவெறியர்கள் அதன் வாசகர்களாக இருக்கிறார்கள்.

இப்படி பாதுகாப்பான அரங்குகளில் பாதுகாப்பான தலைப்புக்களில் யாரையும் கேள்விக்குள்ளாக்காமல் கூட்டம் நடத்துவதாலேயே காலச்சுவடு தன்னை கருத்துரிமைப் போராளியாக கருதிக்கொள்கிறது. இவற்றையெல்லாம் விட காலச்சுவடின் புரவலர்களாக இடம்பெறும் விளம்பரதாரர்கள் பலரும் மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானவர்கள்தான். நல்லி சில்க்ஸூம், ஆர்.எம்.கேவியும் காஞ்சிபுரத்தில் நெசவாளர்களைக் கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கிக்கொண்டுதான் தனது பட்டுச்சேலைகளை விற்றும், விளம்பரமும் செய்து வருகின்றன. ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனமோ பல ஏழைகளிடம் சீட்டுப் பணம் வாங்கிக் கடன் கொடுத்து அசலைவிட வட்டியை அதிகமாகக் கொள்ளையடித்து பின்பு வசூலிக்க அடியாட்களை அனுப்பி இறுதியில் வழக்கும் போட்டு அந்த மக்களை அலைக்கழிக்கிறது.

தினமலரைப் பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. பார்ப்பனியத்தின் அடியாளாகச் செயல்படும் இப்பத்திரிக்கை புரட்சிகர அமைப்புக்கள், இசுலாமிய அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் பற்றி வெளியிட்டுள்ள அவதூறுகள், வன்மங்கள், துவேசங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம். ஆக பல பிரிவு மக்களின் வாழ்வுரிமையைப் பிடுங்கும் நிறுவனங்களின் பிச்சையோடுதான் காலச்சுவடின் பொருளாதார அடிக்கட்டுமானம் கட்டப்பட்டிருக்கிறது. காலச்சுவடு மேற்கண்ட நிறுவனங்களை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வெளியிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? அந்த நிறுவனங்கள் விளம்பரங்களை ரத்து செய்யும். இதுவும் கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று காலச்சுவடு பேசுமா?

அப்படிப் பேசாது. ஏனெனில் அந்த விளம்பரப் பணம் அந்த நிறுவனங்களின் சொந்தப் பணம். அவற்றைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என காலச்சுவடு வாதிடலாம். கருணாநிதி அரசு காலச்சுவடை நிறுத்தியது மக்களின் சொந்தப் பணம். ஆகையால் இது கருத்துரிமைக் கணக்கில் வரும். இப்படி காலச்சுவடின் தருக்கத்தின்படி பார்த்தால் கருணாநிதிக்கு ஒரு நீதி, நல்லி குப்புசாமி செட்டியாருக்கு ஒரு நீதி என்றே வரும்.

இந்த அக்கப்போரைப் பார்க்கும்போது புரட்சித் தலைவி ஆட்சி வந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. அப்போதுதான் கருத்துரிமை என்னவென்பதை காலச்சுவடு தனது சொந்த அனுபவத்தில் கற்றுக்கொள்ளும். ஆனால் அம்மா அவர்கள் காலச்சுவடு போன்ற இலக்கியக் கோமாளிகளையெல்லாம் தனது தரத்திற்கேற்ற எதிரியாகக் கருதும் வாய்ப்பில்லை என்பதால் கருத்துரிமை பற்றி காலச்சுவடு தெரிந்து கொள்ளமுடியமலே போகலாம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

- வினவு

Pin It